அமெரிக்காவில் அணுமின் நிலையங்களில் விபத்து ஏற்பட்டால் தரவேண்டிய இழப்பீடு 50,000 கோடி ரூபாய். இந்தியாவில் 2,300 கோடி ரூபாய் என்று நிர்ணயித்திருக்கிறது இம்மசோதா. போபால் படுகொலையில் ஆண்டர்சன் வகுத்த விதியைச் சட்டமாக்குகிறார் மன்மோகன் சிங்.

இந்த நாட்டின் மீதும் மக்களின் மீதும் தற்போதைய காங்கிரசு அரசு கொண்டிருக்கும் வெறுப்பும் துவேசமும் பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளுக்குக் கூட இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான். 26 ஆண்டுகளுக்கு முன் போபால் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் காட்டிலும் கொடிய அநீதி, தீர்ப்பாக வழங்கப்பட்டிருக்கும் சூழலில், இனி இத்தகைய அநீதிகள் நமது மக்களுக்கு இழைக்கப்படாமல் தடுப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்பதைத்தான் பாதிக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகக் கூறப்படும் ஒரு அரசு யோசிக்க முடியும்.

ஆனால் அதற்கு நேர் எதிராக, போபாலை விஞ்சும் படுகொலைகளை நிகழ்த்தினாலும், பைசா செலவில்லாமல் அமெரிக்க முதலாளிகளைக் காப்பாற்றுவதெப்படி என்று ஆண்டர்சனைப் போலவே சிந்தித்து மன்மோகன் அரசு தயாரித்திருப்பதுதான், அணுசக்தி கடப்பாடு மசோதா (Civil Nuclear Liability Bill).

மசோதாவின் மீது நிதியமைச்சகமும், சுற்றுச்சூழல் அமைச்சகமும் எழுப்பியிருந்த ஆட்சேபங்களைப் புறந்தள்ளி விட்டு, சென்ற நவம்பரில் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது மத்திய அமைச்சரவை. இந்த ஏப்ரல் மாதம் தனது அமெரிக்கப் பயணத்துக்கு முன்னதாக, பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதா தோற்றுவித்த களேபரத்துக்கு இடையில், காதும் காதும் வைத்த மாதிரி இதனை நிறைவேற்றுவதற்கு மன்மோகன் செய்த முயற்சியும் வெற்றி பெறவில்லை; இதற்கிடையில் போபால் தீர்ப்பு வந்து விட்டது.

போபால் தீர்ப்பு மக்களிடையே தோற்றுவித்திருக்கும் கோபம், அணுசக்தி கடப்பாடு மசோதாவுக்கு எதிராகத் திரும்பி விடக்கூடாது என்பதுதான் மன்மோகன் அரசின் உண்மையான கவலை. பத்தே நாளில் போபால் பற்றி அறிக்கை, உடனே நிவாரணம் என்பதெல்லாம் அந்தக் கவலையின் விளைவுகள்தான்.

போபால் வழக்கு யூனியன் கார்பைடுக்கு ஏற்படுத்திய தொந்திரவுகள் எதுவும், அணு உலையை விற்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு வந்துவிடாமல் உத்திரவாதம் அளிப்பதுதான் இந்த மசோதாவின் நோக்கம். போபால் வழக்கையும், இந்த மசோதாவையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இதனைப் புரிந்து கொள்ள இயலும்.

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக அடுக்கடுக்கான பொய்களை நாடாளுமன்றத்திலேயே அவிழ்த்து விட்ட மன்மோகன் அரசு, இப்போது இம் மசோதாவை சட்டமாக்கவில்லையென்றால் வெளிநாடுகளிலிருந்து அணு உலைகளையோ, யுரேனியத்தையோ நம்மால் வாங்க முடியாது என்று ஒரு பொய்யை திட்டமிட்டே பரப்பி வருகிறது. இப்படி ஒரு சட்டத்தை இயற்றவேண்டும் என்று யுரேனியம் விற்பனை செய்யும் நாடுகள் (Nuclear Suppliers Group) கோரவில்லை. இச்சட்டம் இல்லாமலேயே ரசியாவும் பிரான்சும் இந்தியாவுக்கு அணுஉலைகளை விற்பனை செய்துள்ளன. போபாலைப் போன்றதொரு தொந்திரவு தங்களுக்கு வந்து விடக்கூடாது என்பதை உத்திரவாதம் செய்து கொள்வதற்காக ஜெனரல் எலக்ட்ரிக், வெஸ்டிங்ஹவுஸ் போன்ற அமெரிக்க அணுஉலை தயாரிப்பு நிறுவனங்கள் கொடுத்துவரும் நிர்ப்பந்தம்தான், மன்மோகன் அரசு இந்த மசோதாவைக் கொண்டு வருவதற்கான காரணம்.

மேற்கூறிய நிறுவனங்களிடமிருந்து அணுஉலைகளை இறக்குமதி செய்து இந்திய அணுசக்திக் கழகம்தான் அணு உலைகளை இந்தியாவில் இயக்கப்போகிறது. எந்திரத்தின் வடிவமைப்பிலோ அல்லது இயக்கத்திலோ உள்ள கோளாறு காரணமாக ஒரு விபத்து நேர்ந்தாலும், பாதிக்கப்பட்ட மக்கள் இந்த அணுஉலைகளை விற்பனை செய்த நிறுவனத்திடம் இழப்பீடு கோர முடியாது. அணு உலையை இயக்குகின்ற இந்திய அணுசக்திக் கழகம்தான் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுகிறது இம்மசோதா. போபால் படுகொலைக்கு இந்திய நிறுவனம்தான் பொறுப்பேற்க வேண்டுமென்றும், எந்திரங்களையும் தொழில்நுட்பத்தையும் தந்து அங்கிருந்தே இயக்கியபோதிலும், அமெரிக்க நிறுவனம் பொறுப்பேற்க இயலாது என்றும் யூனியன் கார்பைடு வாதிட்டதை இங்கே நாம் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.

ஒருவேளை, அணு உலை விபத்துக்கு எந்திரக் கோளாறுதான் காரணம் என்று ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டு விட்டாலும், ஏற்படுகின்ற பேரழிவுகள் மற்றும் உயிரிழப்புகளுக்கான முழு ஈட்டுத்தொகையையும் இந்திய அணுசக்திக் கழகம் அமெரிக்க நிறுவனத்திடம் கோர முடியாதென்றும், விற்பனை ஒப்பந்தத்தில் தீர்மானிக்கப்படும் தொகையை மட்டுமே இழப்பீடாகக் கோர முடியும் என்றும் கூறுகிறது, இம்மசோதாவின் 17-ஆ பிரிவு. இந்த சட்டப்பிரிவையும் நீக்க வேண்டும் என்பது அமெரிக்க அரசின் ஆணை. எனவே, மசோதாவின் இந்தப் பிரிவையும்கூட நீர்த்துப் போகவைக்கும் சில திருத்தங்களை மன்மோகன் அரசு திருட்டுத்தனமாகச் செய்திருக்கிறது என்பதை பின்னர் நாடாளுமன்றத் தேர்வுக்குழு கண்டுபிடித்தது.

போபால் பிரச்சினையில் அமெரிக்க முதலாளிகள் சில பாடங்களைக் கற்றுக்கொண்டிருந்தனர். அன்று பாதிக்கப்பட்ட மக்கள் சிலர் நேரடியாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடத்தினால் மிக அதிகமான தொகையை யூனியன் கார்பைடு இழப்பீடாகத் தரவேண்டிவரும் என்பதால், இந்திய மக்களின் வழக்காடும் உரிமையை ரத்து செய்ய ஒரு சட்டம் இயற்றியது காங்கிரசு அரசு. பின்னர், அமெரிக்க நீதிமன்றத்திலிருந்து இந்தியாவுக்கு வழக்கை மாற்றி, கோரிய இழப்பீட்டுத் தொகையில் 15% மட்டும் பெற்றுக்கொண்டு வழக்கையே முடித்துக் கொண்டது.

நாளை அணுஉலை விபத்தால் பாதிக்கப்படுகின்ற யாரேனும் ஒரு இந்தியக் குடிமகன் இழப்பீடு கோரி அமெரிக்க நீதிமன்றத்தை அணுகக் கூடும் என்பதால், அதைத் தடுப்பதற்காக, இழப்பீடு தொடர்பான எல்லா வழக்குகளையும் இந்திய நீதிமன்றம்தான் விசாரிக்க முடியும் என்று கூறுகிறது இம்மசோதா. இதையும் மீறி அமெரிக்க நீதிமன்றத்தில் யாரேனும் வழக்குத் தொடுக்கும் வாய்ப்பைத் தடுக்கும் பொருட்டு, சர்வதேச அணுசக்தி முகமையின் ஈட்டுத்தொகை தொடர்பான ஒப்பந்தத்திலும் (IAEA's Convention on Supplementary Compensation) இந்திய அரசு கையெழுத்திடவிருக்கிறது. இதில் கையெழுத்திடும் நாடுகளுக்கு விபத்து ஒன்றுக்கு சுமார் 30 கோடி டாலரை சர்வதேச அணுசக்தி முகமை வழங்கிவிடும் என்பதால், அந்நாட்டு மக்கள் வேறு எங்கும் வழக்கு தொடுக்கும் உரிமையை இழக்கிறார்கள்.

விபத்துக்கான ஈட்டுத்தொகையை மதிப்பிடுகின்ற அதிகாரத்தையும் சுற்றுச்சூழல், சுகாதாரத்துறைகளிடமிருந்து பிடுங்குகிறது இம்மசோதா. இனி, அணு உலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் பொருளிழப்புகளை மதிப்பீடு செய்யும் அதிகாரம் "அணுசக்தி பாதிப்பு இழப்பீட்டுத்துறை ஆணையர்" என்ற அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும். அந்த ஆணையரின் முடிவை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் உரிமையையும் இம்மசோதா ரத்து செய்கிறது.

போபால் நச்சுவாயுவால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி, அவர்களது சந்ததியினரும் ஊனமுற்றவர்களாகப் பிறப்பது இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. போபாலில் இப்படிப் பாதிக்கப்பட்டவர்களில் 90% பேர் அரசு தயாரித்துள்ள பாதிக்கப்பட்டோர் பட்டியலிலேயே இல்லை என்பது போபாலின் அனுபவம். அணுக்கதிர் வீச்சு தலைமுறை தலைமுறையாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பது ஏற்கெனவே நிரூபிக்கப்பட்ட உண்மை. விபத்து நடைபெற்று 30 ஆண்டுகள் வரை ஏற்படும் பாதிப்புகள் கதிர்வீச்சினால் ஏற்படும் பாதிப்புகளாகக் கணக்கில் கொள்ளப்பட்டு, நிவாரணம் வழங்கப்படவேண்டும் என்பதுதான் வியன்னா மற்றும் பாரிஸ் கன்வென்சன்களில் முடிவு செய்யப்பட்ட சர்வதேச நெறிமுறை. இந்த மசோதாவோ, விபத்து நடந்ததிலிருந்து 10 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு கிடையாது என்று கூறுகிறது.

அதுமட்டுமல்ல; போர், உள்நாட்டுப்போர், ஆயுத மோதல், பயங்கரவாதத் தாக்குதல் ஆகியவற்றின் காரணமாக விபத்து ஏற்பட்டால் அதற்கு இழப்பீடு கிடையாது என்றும் மசோதா கூறுகிறது. அணுசக்தி நிறுவனங்கள் தங்களது தவறுகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு மட்டுமே இந்தச் பிரிவு பயன்படும் என்று சட்டவல்லுநர்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.

போபால் படுகொலைக்காக 300 கோடி டாலர் இழப்பீடு அரசால் கோரப்பட்டு, 47 கோடி டாலருக்கு மேல் தரமுடியாது என்று கார்பைடு மறுத்ததனால், அதுவே அறுதி இழப்பீட்டுத் தொகையாக அன்று முடிவு செய்யப்பட்டது. நாளை அணுஉலைகளில் விபத்து ஏற்பட்டு எத்தனை இலட்சம் உயிர்கள் போனாலும், இழப்பீடுக்கான உச்சவரம்பு 45 கோடி டாலர்தான் (சுமார் 2,300 கோடி ரூபாய்) என்று நிர்ணயித்திருக்கிறது இந்த மசோதா. அணுமின் நிலையத்தை இயக்கும் நிறுவனம் இந்தத் தொகையில் 500 கோடி ரூபாயை மட்டும் கொடுத்தால் போதுமானது என்றும் இம்மசோதா கூறுகிறது. அமெரிக்காவில் இத்தகைய விபத்து ஏற்பட்டால் அங்கு அணு மின் நிறுவனம் தரவேண்டிய இழப்பீடு 10 பில்லியன் டாலர்கள் (சுமார் 50,000 கோடி ரூபாய்) என்று இதற்காகவே இயற்றப்படுள்ள பிரைஸ் ஆண்டர்சன் சட்டம் கூறுகிறது. இது மிகவும் குறைவு என்றும், இதனை இரண்டு மடங்காக உயர்த்தவேண்டும் என்றும் அமெரிக்க வல்லுநர்கள் கூறிவருகின்றனர். இந்த இழப்பீட்டுத் தொகையின் கணக்குப்படி, ஒரு அமெரிக்க உயிருக்கு 20 இந்திய உயிர்கள் சமம் என்று ஒப்புக் கொள்கிறது இம்மசோதா.

ஒரு அணுஉலை விபத்து எத்தகைய உயிரிழப்புகள், பொருளிழப்புகள் மற்றும் நீண்ட காலப் பாதிப்புகளை உருவாக்கும் என்று அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து, இந்த இழப்பீட்டுத் தொகையை மன்மோகன் அரசு நிர்ணயம் செய்யவில்லை. 1997- இல் அமெரிக்க அரசு நிறுவனமான புரூக்ஹெவன் தேசிய ஆவகம் நடத்திய ஆவின்படி, ஒரு அணுஉலை விபத்து தோற்றுவிக்கும் மிகக் குறைந்தபட்ச பாதிப்பின் மதிப்பு 100 கோடி டாலர்கள். அதிகபட்சம் 70,000 கோடி டாலர்கள். விபத்துக்குப் பின் அதிகபட்சம் 7000 சதுர கி.மீ. பரப்புள்ள நிலத்தை என்றென்றும் கைவிடவேண்டிவரும் என்கிறது, இந்த ஆய்வு. மக்கள் நெருக்கத்துக்கு ஏற்ப உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் புற்றுநோய் பாதிப்பும் இருக்கும். இந்த அமெரிக்க அரசு நிறுவனத்தின் கணக்கின்படியே பார்த்தாலும், தற்போது இந்திய அரசு நிர்ணயித்துள்ள இழப்பீடு உண்மையாக ஏற்படக்கூடிய இழப்பின் 0.1% மட்டுமே.

இந்தியாவைத் தவிர உலகின் வேறு எந்த நாடும் அணுஉலை விபத்துக்கான கடப்பாட்டுக்கு (liability) உச்சவரம்பு நிர்ணயித்துக் கொள்ளும் இத்தகையதொரு சட்டத்தை இயற்றவில்லை. இந்தியாவிலும் கூட வேறெந்தத் தொழிற்துறைக்கும் இத்தகைய சிறப்புப் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. தற்போது அமெரிக்க நிறுவனங்களின் கொள்ளைக்காக இயற்றப்பட்டிருக்கும் இந்த மசோதாவின் விளைவாக பிரெஞ்சு, ரசிய அணுஉலை நிறுவனங்களும் இதே சலுகைகளைப் பெறும்.

அணுமின் நிலையங்கள் தற்போது அரசுத் துறையில்தான் இருக்கின்றன என்ற போதிலும், தனியார் அனல் மின் நிலையங்களைப் போல, தனியார் அணு மின் நிலையங்களையும் அனுமதிக்க மன்மோகன் அரசு திட்டமிட்டிருக்கிறது. எனவேதான் அணுஉலைகளை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்கின்ற பன்னாட்டு நிறுவனங்களை (suppliers) மட்டுமின்றி, அணுமின்நிலையங்களை இந்தியாவில் இயக்குகின்ற நிறுவனங்களையும் (operators) அவர்களுடைய கொள்ளை இலாபத்தையும் பாதுகாக்கும் விதத்தில் இம்மசோதா வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

அணு உலை விபத்துக் கடப்பாட்டுக்கு இவ்வாறு உச்சவரம்பு நிர்ணயிப்பதன் பொருள் இந்திய உயிரின் விலைக்கு உச்சவரம்பு நிர்ணயிப்பதாகும். இந்திய அரசியல் சட்டத்தின் 21- வது பிரிவு வழங்கும் உயிர் வாழும் உரிமைக்கே இது எதிரானது என்கிறார், முன்னாள் அட்டார்னி ஜெனரல். இது தற்கொலை என்கிறார், கடற்படையின் முன்னாள் வைஸ் அட்மிரல் அருண்குமார்சிங்.

"எங்களைக் கொல்லுங்கள், பொசுக்குங்கள். எது செய்தாலும் நாங்கள் எதிர்த்துக் கேட்க மாட்டோம், வழக்காட மாட்டோம்" என்று அமெரிக்க முதலாளிகளுக்கும், இங்குள்ள தரகு முதலாளிகளுக்கும் இந்திய மக்கள் சார்பில் மன்மோகன்சிங் எழுதிக் கொடுக்கும் செப்புப் பட்டயம்தான், நாடாளுமன்றத்தில் நிறைவேறக் காத்திருக்கும் இந்த மசோதா.

*அஜித்