மருத்துவக் கழிவுகள், அணுக் கழிவுகள், மின்னணுக் கழிவுகள், வெடிமருந்துக் கழிவுகள், நஞ்சு கக்கும் ஆலைகள் ... அனைத்தும் பாரதத் தாயின் வயிற்றில் ... வந்தே மாதரம்!

கடந்த 2005 ஆம் ஆண்டில், உ.பி. மாநிலத்திலுள்ள காசியாபாத் நகரிலுள்ள இரும்பு உருக்குத் தொழிற்சாலையில், இரும்பை அழுத்தி நசுக்கும்போது அது வெடித்துச் சிதறி பணியிலிருந்த பத்து தொழிலாளர்கள் பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர். அந்த ஆலை, ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து மறுசுழற்சிக்கான உலோகங்களை இறக்குமதி செய்து அவற்றை நசுக்கி, உருக்கித் தகடாக்குகிறது. போர் நடக்கும் மேற்காசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெடிகுண்டுக் கழிவுகள் - போர்க்களத்தில் வெடித்த பிறகு கிடக்கும் குண்டுகள், ஏவுகணைகள், கவச வண்டிகளின் கழிவுகள் முதலானவை ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து ஏழை நாடுகளில் கொட்டப்பட்டு வருகின்றன. மறுசுழற்சிக்கான உலோகங்கள் என்ற பெயரில் கொட்டப்படும் இக்கழிவுகளை நசுக்கியபோதுதான், வெடிக்காத குண்டுகள் வெடித்து இக்கோர விபத்து ஏற்பட்டது.

இத்தகைய கழிவுகளை இறக்குமதி செய்வதை மேலை நாடுகள் தடைசெய்துள்ளன. ஆனால், இவை மறுசுழற்சிக்கான பொருட்கள் என்ற பெயரில் ஏழை நாடுகளில் இறக்குமதி செய்யப்படுகின்றன. போர் நடத்துவதும் ஆயுத வியாபாரம் செய்வதும் ஏகாதிபத்திய நாடுகள். ஆனால் வெடிகுண்டுக் கழிவுகளுக்கான குப்பைத் தொட்டியாகி விபத்துகளையும் விபரீதங்களையும் எதிர்கொள்வதோ ஏழை நாடுகள்.

பேசல் ஒப்பந்தப்படி, ஒரு நாட்டின் கழிவுகளை அந்நாட்டு எல்லைக்குள் மட்டுமே அழிக்க வேண்டும் என்றும், நச்சுக்கழிவுகளை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி - இறக்குமதி செய்யக் கூடாது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆஸ்பெஸ்டாசின் தீமைகளை உலகமே அறிந்துள்ளதால், பிரான்சு உள்ளிட்டு பல நாடுகளில் அது தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், ஆஸ்பெஸ்டாஸ் கழிவுகள் நிறைந்த பிரான்சு நாட்டின் கிளமென்சியே என்ற பழுதடைந்து செயலிழந்த கப்பல், இப்போது குஜராத்தின் அலாங் தளத்தில் உடைக்கப்படுவதற்காக நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதேபோல உடைக்கப்படுவதற்காக டென்மார்க்கிலிருந்து வந்த நச்சுக் கப்பலும், 1240 டன் அளவுக்கு கொடிய நச்சுக் கழிவுகளோடு ஆஸ்பெஸ்டாஸ், பாலி க்ளோரினேட் பைபினைல்ஸ் முதலான நச்சு இரசாயனப் பொருட்களுடன் பயணத்துக்குத் தகுதியற்றதென கைவிட்டப்பட்ட எஸ்.எஸ். நார்வே என்ற கப்பலும், ஆபத்தில்லாத கழிவுகள் கொண்டவையாக இந்திய ஆட்சியாளர்களால் சித்தரிக்கப்பட்டு அலாங் கப்பல் உடைப்புத் தளத்தில் உடைக்கப்படுகின்றன.

இத்தகைய நச்சுக் கழிவுகள் போதாதென்று, பாஸ்போ ஜிப்சம் என்ற அபாயகரமான கழிவுப் பொருள், கட்டுமானப் பணிகளுக்கானது என்ற பெயரில் பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் ரேடியம் 226 என்ற நச்சு வேதிப் பொருள் அடங்கியுள்ளது. இது கதிரியக்கத்தை ஏற்படுத்தி புற்றுநோயை உருவாக்கும் என்று உலக சுகாதார நிறுவனமும் அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கழகமும் அறிவித்துள்ளன. ஆனாலும், இக்கழிவுகள் ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து தாராளமாக இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.

பசுமை அமைதி இயக்கத்தின் அறிக்கையின்படி, ஓராண்டுக்கு 1,00,000 டன் நச்சுக் கழிவுகள் ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகின்றன. உலகின் 101 நாடுகள் இவற்றைத் தடை செய்திருந்த போதிலும் இந்தியாவில் அவை தாராளமாகக் கொட்டப்படுகின்றன. 1996-லிருந்து 2002 வரை இந்தியாவில் கொட்டப்பட்ட பாதரசக் கழிவுகள் 6 மடங்கு அதிகரித்துள்ளது. ஜப்பானிய வல்லரசு 100,000 டன் பிளாஸ்டிக் கழிவுகளையும் 20,000 டன் அலுமினியக் கழிவுகளையும் கடந்த ஆண்டில் ஏழை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது என்று அந்நாட்டின் சுற்றுச்சூழல் வாதிகளே குற்றம் சாட்டுகின்றனர்.

இவை தவிர, ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து பல்லாயிரம் டன் மின்னணுக் கழிவுகள் இந்தியப் பெருநகரங்களில் கேள்விமுறையின்றிக் குவிகின்றன. பயன்படுத்தப்பட்ட கணினி, காலாவதியான டிவி, கணினி விசைப் பலகை, பழைய செல்போன்கள், லேசர் நகலெடுக்கும் சாதனங்கள், கணினி அச்சுக்கான மை, ஒயர்கள் என பெருமளவில் குவியும் இவற்றால் பாதரசம், காட்மியம், காரீயம் முதலான அபாயகரமான நச்சுப் பொருட்களும் குவிகின்றன. பல ஏழை நாட்டு மக்கள் இவை கழிவுகளா அல்லது மறுபயன்பாட்டுக்கான பொருட்களா என்றுகூடத் தெரியாமல் அவற்றைப் பயன்படுத்துகின்றனர்.

டெல்லியின் மாயாபுரி பகுதி இத்தகைய கழிவுகளால் நாசமாகிப் போயுள்ளது. வயிற்றுப் பிழைப்புக்காக இக்கழிவுகளைப் பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபடும் ஏழைகள் இனம்புரியாத நோய்களால் படிப்படியாகக் கொல்லப்பட்டு வருகிறார்கள். கடந்த ஏப்ரலில் டெல்லி-மாயாபுரியில் கோபால்ட் கதிரியக்கம் கொண்ட கழிவுப் பொருளாக வீசியெறியப்பட்ட மருத்துவ சாதனத்தை, ஒரு தொழிலாளி விவரம் தெரியாமல் உடைத்தபோது கதிரியக்கம் தாக்கி மாண்டுபோனார். ஏழு தொழிலாளிகள் மருத்துவமனையில் கிடத்தப்பட்டனர்.

மேலை நாடுகளில் கழிவுகளை அகற்றுவதையே தொழிலாகக் கொண்டுள்ள பல நிறுவனங்கள் உள்ளன. அவை இக்கழிவுகளை ஏழை நாடுகளில்தான் கொட்டி வருகின்றன. கடந்த 2004-ஆம் ஆண்டில் சோமாலியாவை சுனாமி தாக்கியபோது, ஏற்கெனவே பல ஆண்டுகளாக இரகசியமாகக் கடலில் கொட்டப்பட்டிருந்த நச்சுக் கழிவுகள் மலைபோல கரை ஒதுங்கின.

சோமாலியா மட்டுமின்றி, நைஜீரியா, கினியா பிசாவ், ஜிபொடி, செனகல் முதலான பல ஆப்பிரிக்க ஏழை நாடுகளிலும் அணு உலைக் கழிவுகள் மட்டுமின்றி, கொடிய நச்சுக் கழிவுகளை ஏகாதிபத்திய நிறுவனங்கள் கொட்டி வருகின்றன. இந்நச்சுக் கழிவுகளை வெளியேற்றி செயலிழக்கச் செய்வதற்கு ஏகாதிபத்திய நிறுவனங்கள் பல்லாயிரம் கோடிகளைச் செலவிட வேண்டியிருப்பதால், அதைவிட மலிவான முறையில் இரகசியமாக ஏழை நாடுகளில் கொட்டும் நோக்கில் இந்நிறுவனங்கள் நச்சுக்கழிவு ஏற்றுமதியைச் செய்து வருகின்றன. தனியார்மயம்-தாராளமயத்தால் ஏழை நாடுகளின் அரசுகளது கட்டுப்பாடுகளும் கண்காணிப்புகளும் நீக்கப்பட்டுள்ளதால், இந்நச்சுக் கழிவு ஏற்றுமதி வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது. சாக்கடையையும் மலத்தையும் அள்ளவைத்து, தாழ்த்தப்பட்டோரை சேரிகளில் இருத்தி வைத்து தீண்டாமையை நிலைநாட்டுகிறது, பார்ப்பன இந்து மதம். ஏழை நாடுகளை நவீன சேரிகளாக்கி நவீன தீண்டாமையை நிலைநாட்டுகிறது, ஏகாதிபத்தியம்.

இந்த நச்சுக் கழிவுகள் தோற்றுவிக்கும் பயங்கரத்தைவிட, இப்போது பயன்பாட்டில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்துகள் பத்து மடங்கு நஞ்சானவை. ஏகாதிபத்திய நாடுகளின் பூச்சிக் கொல்லி மருந்து நிறுவனங்களின் ஏற்றுமதி 1961-இலிருந்து 2001 வரையிலான காலத்தில் 12 மடங்கு அதிகரித்துள்ளது. ஆண்டுதோறும் ஏழை நாடுகளின் 2.5 கோடி விவசாயக் கூலிகள் பூச்சி மருந்துகளால் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், இவர்களில் 20,000 பேர் மரணத்தைத் தழுவுகிறார்கள் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. டி.டி.டி, என்ட்ரின், குளோர்டேன்,பாரத்தியான், அல்டிரின் முதலான பூச்சி மருந்துகளை 90-க்கும் மேற்பட்ட நாடுகள் தடைசெய்துள்ளன. ஆனால் அவை ஏழை நாடுகளில் இன்னமும் தாராளமாக விற்பனை செய்யப்படுகின்றன.

கோஸ்டரிகா, நிகரகுவா முதலான மத்திய அமெரிக்க நாடுகளில், டௌ கெமிகல்ஸின் டி.பி.சி.பி. என்ற பூச்சி மருந்தைத் தெளிக்கும் வேலையில் ஈடுபட்ட, ஸ்டாண்டர்டு ஃபுருட் நிறுவனத்தின் வாழைத்தோட்டத் தொழிலாளர்கள் மலட்டுத் தன்மைக்கு ஆளானார்கள். ஆனாலும் அந்தப் பூச்சி மருந்து வேறு பெயர்களில் ஏழை நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. கேரளத்தின் பாலக்காடு மாவட்டம் பிளாச்சிமடாவிலுள்ள கோகோகோலா நிறுவனம் அப்பகுதியின் நிலத்தையும் நீரையும் நஞ்சாக்கியுள்ளதோடு, நச்சு இரசாயனங்கள் கலந்துள்ள தனது ஆலைக் கழிவுகளை உரம் என்று கூறி விவசாயிகளிடம் தடையின்றி விற்பனை செய்து வருகிறது. டௌ கெமிகல்ஸ் தயாரிக்கும் டர்ஸ்பன் என்ற பூச்சிக் கொல்லி மருந்து குழந்தைகளின் மூளையைத் தாக்கிச் செயலிழக்கச் செய்துவிடும் என்பதால், அது அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இன்னமும் அது இந்தியாவில் விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து விரட்டப்பட்ட - சுற்றுச்சூழலை நஞ்சாக்கும் பல இரசாயன ஆலைகளும், அங்கே அனுமதிக்கப்படாத தோல் பட்டறை - சாயப் பட்டறைகளும், யூனியன் கார்பைடு நச்சு ஆலையை விஞ்சும் கொலைகார டௌ கெமிகல்ஸ், ஸ்டெர்லைட் உள்ளிட்டு பலவகையான அபாயகரமான நச்சு ஆலைகளும், மக்களின் வாழ்வையும் வளத்தையும் பறிக்கும் சுரங்கங்களும் குவாரிகளும் அணு உலைகளும் இந்தியாவில் ‘தொழில் வளர்ச்சி’ என்ற பெயரில் தொடங்கப்படுகின்றன. சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் தொழிற்பேட்டைகளும் நச்சுக் கழிவுக் கிடங்குகளாக மாறி நிற்கின்றன. எல்லா வகையான உணவு தானியப் பயிர்களுக்கான மரபணு மாற்ற ஆராய்ச்சிகளையும் களப் பரிசோதனகளையும் செயல்படுத்திப் பார்க்கும் சோதனைச்சாலை எலிகளாக இந்தியா உள்ளிட்டு ஏழை நாடுகளும் மக்களும் மாற்றப்பட்டுள்ளனர். பி.டி. பருத்தியிலிருந்து தொடங்கி, கடுகு, கத்தரிக்காய், சோளம் என அனைத்து மரபணு மாற்ற உணவு தானியப் பயிர்களும் இங்கு களப்பரிசோதனை செய்யப்படுகின்றன.

இந்திய மண் மட்டுமின்றி, ஏகாதிபத்திய மருந்துக் கம்பெனிகளால் மக்களும் சோதனைக்கூட எலிகளாக மாற்றப்பட்டுள்ளனர். திருவனந்தபுரத்தில் நோயாளிகளிடம் நடத்தப்பட்ட புற்று நோய்க்கான புதிய மருத்துவ ஆராய்ச்சி, டெல்லியிலுள்ள அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தில் (எய்ம்ஸ்) பச்சிளம் குழந்தைகளுக்கு ஏகாதிபத்திய மருந்துக் கம்பெனிகளின் புதியவகை மருந்துகளைக் கொடுத்து நடத்தப்பட்ட சோதனை, ஆந்திராவில் பில்கேட்சின் உதவியுடன் செயல்பட்டு வரும் மஞ்சள் காமாலை நோய் (ஹெப்பாடைடிஸ் பி) தடுப்பூசி சோதனை, ஆந்திராவின் கம்மம் மாவட்டத்தில் இளஞ்சிறுமிகளுக்கு கருப்பை புற்றுநோய் தடுப்பூசி போடப்பட்டு நடத்தப்பட்ட சோதனை - என எவ்விதக் கட்டுப்பாடுமின்றி ஏகாதிபத்திய மருந்துக் கம்பெனிகளின் இலாபவெறிக்காக இந்திய மக்கள் சோதனைக்கூட எலிகளாக மாற்றப்பட்டு வருகின்றனர். இத்தகைய சோதனைகளில் மாண்டவர்கள் ஏராளம். சோதனைக்குப் பிறகு முடமாகிக் கிடப்பவர்களும் ஏராளம்.

யூனியன் கார்பைடு நிறுவனத்தின் பயங்கரவாத பேரழிவால் முடமாகிவிட்ட மக்களும், போபாலிலுள்ள அந்த நச்சு ஆலையின் கழிவுகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவரும் மக்களும், துயரத்தை நெஞ்சில் சுமந்துகொண்டு இன்றுவரை போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கோருவதெல்லாம் இனியும் இதுபோன்ற கொடூரங்கள் உலகில் எங்குமே நடக்கவே கூடாது என்பதுதான். ஆனால், இந்தியா உள்ளிட்டு பல ஏழை நாடுகளில் ஏகாதிபத்திய நிறுவனங்கள் தோற்றுவிக்கும் பயங்கரத்தால் இன்னும் பல நூறு போபால்கள் வெடிக்கக் காத்திருக்கின்றன.

நிலமும் நீரும் கடலும் காற்றும் வாழ்வும் வளமும் மட்டுமல்ல, இயற்கையின் உன்னதப் படைப்பான மனிதனும் ஏகாதிபத்தியங்களின் இலாபவெறிக்காக சூறையாடப்பட்டு வருகிறான். வேட்டுச் சத்தம் எதுவுமில்லாமல் இரகசியமாக ஒரு பயங்கரவாதப் போர் ஏழை நாடுகள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இனி ஏழை நாடுகளும் மக்களும் சுதந்திரமாக உயிர் வாழ்வதற்கான ஒரே வழி, இலாபவெறிபிடித்த ஏகாதிபத்திய பயங்கரவாதிகளுக்கும் அவர்களின் அடியாட்களான ஏழை நாடுகளின் ஆளும் வர்க்கங்களுக்கும் எதிராக விடுதலைப் போரைத் தொடங்குவதுதான்! போபால் உணர்த்தும் படிப்பினையும் இதுதான்!

*குமார்