அந்த நள்ளிரவில் கொல்லப்பட்டவர்களுக்கு அது மரண தண்டனை. ஓடி உயிர் தப்பியவர்களுக்கு உயிர் மட்டுமே மிச்சம். உடல் முழுவதும் ஊனம். அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களது சந்ததிகளுக்கும் இது ஆயுள் தண்டனை.

போபாலிலுள்ள சுல்தானியா ஜனதா மருத்துவமனையில் 1985-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரசவத்துக்குச் சேர்க்கப்பட்டிருந்த மும்தாஜ் என்ற அந்தக் கர்ப்பிணிப் பெண் வலியால் துடித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அவருக்கு குழந்தை பிறந்தது. தாதிகள் அக்குழந்தையைத் தூக்கிக் காட்டி, ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று மகிழ்ச்சியுடன் கூறினர். அக்குழந்தையின் முதுகில் தட்டிய பிறகும் அது அழவில்லை. கண் விழிக்கவுமில்லை. தலைமை மருத்துவர் ஓடோடி வந்தார். அதற்குள் அந்தக் குழந்தை நீல நிறமாக மாறி மரணமடைந்தது. பிறந்த குழந்தை அடுத்த நொடியிலேயே மரணமடைந்துவிட்ட துயரம் தாளாமல் மும்தாஜும் அவரது கணவரும் கதறினர். கடந்த இருபத்தாறு ஆண்டுகளில் இதுபோன்ற துயரங்கள் ஏராளமாக நடந்துள்ளன.

போபால்-சாந்தி நகரில் ஒடுக்கமான வீடொன்றில் வாழ்ந்து வருபவர், லீலாபாய். நச்சு வாயுத் தாக்குதலிலிருந்து தப்பிய இவருடைய மகள், ஒரு வயதுக் குழந்தையை விட்டுவிட்டு இனம் கண்டறியப்படாத நோயால் இறந்துவிட்டார். 24 வயதாகும் மகனோ வயதுக்கேற்ற வளர்ச்சி அடையாமல் சிறுவனைப் போலவே இருக்கிறார். "நாங்கள் உயிர் பிழைத்த துர்பாக்கியசாலிகள். அன்றே என் பிள்ளைகள் இறந்திருக்கலாமே! பல துயரங்களுக்கிடையே இத்தனை வருடம் ஆளாக்கி, பிள்ளையைப் பறிகொடுப்பது எவ்வளவு கொடுமை? என்ன நோயென்று கண்டறியக் கூட முடியாத மருத்துவமனை இருந்து என்ன பயன்? இழுத்து மூடிவிடுங்கள். நாங்கள் வீட்டிலேயே கிடந்து சாகிறோம்" என்று வேதனையில் குமுறுகிறார் லீலாபாய்.

பதினான்கு வயதாகும் அடில் என்ற அந்தச் சிறுவனால் கைகளையும் முட்டிகளையும் தரையில் தேத்தபடியே ஊர்ந்துதான் நகர இயலும். போபால் பயங்கரத்துக்குப் பின் பிறந்த நூற்றுக்கணக்கான குழந்தைகளில் அடிலும் ஒருவன். போபால் பேரழிவு நடந்தபோது அடிலின் அம்மாவுக்கு அப்போது பத்து வயது. அவரது இருபதாவது வயதில், அதாவது 1994-இல் அவருக்குத் திருமணமானது. அவர் கருத்தரித்ததே அதிசயம்தான்.

ஏனெனில், விபத்தில் தப்பிய பல பெண்களின் மாதவிலக்கு சுழற்சியே கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. விபத்து நடந்த சிலநாட்களில் 400 பெண்களுக்குக் கருச்சிதைவேற்பட்டமை கண்டறியப்பட்டது. பிறந்த 2250 குழந்தைகளில் செத்துப் பிறந்தவை: 52; மிகக் குறைந்தநாட்கள் வாழ்ந்து செத்தவை:132; ஊனத்தோடு பிறந்தவை:30. போபால் பேரழிவுக்குப் பின்னர் பிறந்த பல குழந்தைகளுக்கு கண்களுக்குப் பதில் குழிகள் மட்டுமே இருக்கின்றன. கை-கால் இல்லாமலோ, பிளந்த உதடுகளுடனோ, வீங்கிய மண்டை-இரட்டைத் தலைகளுடனோ கோரமாகப் பிறக்கின்றன. மூன்று கண்கள் கொண்ட குழந்தைகள் பிறக்கின்றன. கைவிரல்கள் தனித்தனியாக இல்லாமல் ஒன்றோடொன்று சதைகளாகப் பிணைந்துள்ளன, அல்லது ஆறு-ஏழு விரல்களுடன் பிறக்கின்றன. ஆண்டுகள் பலவாகியும் மெத்தில் ஐசோ சயனேட் நச்சு வாயுவின் தாக்குதலால் தாயின் கருவிலேயே குழந்தைகளின் மரபணுக்கள் சிதைகின்றன என்று தொடரும் பேரழிவைப் பட்டியலிட்டுள்ளது, "லான்செட்" என்ற மருத்துவ அறிவியல் இதழ்.

அன்று தப்பிப் பிழைத்தவர்களோ புற்று நோய், கண்பார்வை இழப்பு, வலிப்பு, நினைவிழத்தல், உணர்வுகள் மரத்துப்போதல் உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளோடு நடைப்பிணங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த நள்ளிரவில் கொல்லப்பட்டவர்களுக்கு அது மரணதண்டனை. ஓடி உயிர் தப்பியவர்களுக்கு உயிர் மட்டுமே மிச்சம். உடல் முழுதும் ஊனம். அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களது சந்ததிகளுக்கும் இது ஆயுள் தண்டனை.

1985-இல் மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கை, 90 சதவீதப் பெண்களுக்கு கருப்பை சம்பந்தமான நோய்களும், 79 சதவீதப் பெண்களுக்கு இடுப்பெலும்பு வீக்க நோயும், 35 சதவீதப் பெண்களுக்கு அதிக ரத்தப் போக்கும் இருப்பதை ஏற்றுக் கொண்டது.

நச்சுவாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கவனத்தை ஒருமுகப்படுத்தவோ, எதையும் ஞாபகம் வைத்துக்கொள்ளவோ முடியவில்லை. பாதிக்கப்பட்டவர்களில் பலர் மூட்டை தூக்குவது போன்ற வேலைகளை செய்யும் கூலித் தொழிலாளர்கள். நச்சுவாயுவால் பலவீனமடைந்துவிட்ட அவர்கள், அந்த வேலையையும் செய்யமுடியாமையால் வறுமையில் உழல்கின்றனர். மாதத்தில் பாதிநாட்கள் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

மெத்தில் ஐசோ சயனேட் நச்சுவாயுவால்தான் மக்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பது நிரூபிக்கப்பட்டால் யூனியன் கார்பைடு மீது பழிவந்துவிடும் என்பதால், இதற்கான நச்சுமுறிப்பு மருந்தான சோடியம் தயோ சல்பேட்டை நோயாளிகளுக்குச் செலுத்தக்கூடாது என ம.பி. மாநில சுகாதாரத் துறை இயக்குநரான டாக்டர் நாகு என்ற துரோகி 1984 டிசம்பரில் உத்தரவிட்டார். அதையும் மீறி ஊசி போட்ட தனியார் மருத்துவமனைகளுக்கு அம்மருந்து நிறுத்தப்பட்டது. மருத்துவமனைக்கு பெயிண்ட் அடிக்கவில்லை என்பதைப் போன்ற காரணங்கள் காட்டி, அவை சீல் வைக்கப்பட்டன.

ஆன்டர்சனை அமெரிக்காவுக்குத் தப்பி ஓட உதவிய அரசு, ஆலையை மூடி விசாரணை நாடகமாடி ஆலையையும் அந்த இடத்தையும் தனது பொறுப்பிலெடுத்துக் கொண்டது. ஆனால் அங்குள்ள நச்சுக்கழிவுகளை அகற்றாமல் அப்படியே கிடப்பில் போட்டுக் கைவிட்டது. ஒரு பெரிய கல்லறை போலத் தோற்றமளிக்கும் யூனியன் கார்பைடு நிறுவனத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் நஞ்சாகியதோடு, இப்பகுதிவாழ் மக்களையும் கால்நடைகளையும் இன்னமும் பலிவாங்கி வருகிறது.

இந்த ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சூரிய ஒளியில் கழிவுகள் ஆவியாக்கப்படுவதற்காகக் கட்டப்பட்ட திறந்தவெளி கழிவுப் பொருள் குட்டைகளில் இன்னமும் நச்சுக் கழிவுகள் தேங்கியுள்ளன. மழைக்காலங்களில் இதில் தேங்கும் நீரைக் குடித்து கணக்கற்ற கால்நடைகள் மாண்டுபோயுள்ளன. ஆலையின் திறந்தவெளி கழிவுக் கிடங்குப் பகுதியில் பாதரசக் குடுவைகள் எந்தவிதப் பாதுகாப்பு ஏற்பாடுமின்றிக் குவிந்து கிடக்கின்றன. மிகவும் அபாயகரமான நச்சு இரசாயனப் பொருளாகிய பாதரசம் காற்றிலும், நிலத்தடி நீரிலும் தொடர்ந்து பரவும் வகையில் இருந்தால் மூளை, சிறுநீரகம் மற்றும் கருப்பையும், கருவும் நிரந்தரமாகப் பாதிக்கப்படும். கைவிடப்பட்ட யூனியன் கார்பைடு ஆலையின் இரசாயனக் கிடங்குப் பகுதியில் 1999 மார்ச், ஏப்ரல் மாதங்களில் அடுத்தடுத்து நடந்த பெரும் தீ விபத்துகள், மீண்டும் 1984-யை நினைவூட்டும் மிளகாய் எரியும் நெடியைப் பரப்பின; மக்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு ஏழை மக்கள் தீராத நோய்களுக்கு ஆளாகித் தொடர்ந்து பாதிக்கப்பட்டும் கூட ஆட்சியாளர்கள் நச்சுக் கழிவுகளை அகற்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

1999-இல் அப்பகுதி மண்ணையும் நீரையும் பரிசோதித்ததில் அவற்றில் கலந்திருந்த பாதரசத்தின் அளவோ, வரையறுக்கப்பட்ட அளவைவிட 60 லட்சம் மடங்கு அதிகமாக இருந்தது. 30 விதமான ரசாயனங்கள் நீரில் கலந்திருந்தன. அவற்றில் பல, குறைபாடான குழந்தைப் பேற்றையும் புற்றுநோயையும் உருவாக்கக் கூடியவை. 2001-இல் நடத்தப்பட்ட ஆய்வில் தாய்ப்பாலில் பாதரசமும், காரீயமும், ஆலைக் கழிவுகளின் நஞ்சும் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.

10,000-க்கும் மேற்பட்டவர்கள் வாழும் அண்ணு நகர், நவாப் நகர், ஆரிப் நகர் முதலான ஆலையைச் சுற்றியுள்ள குடிசைப் பகுதிகளில் அடிக்குழாத் தண்ணீரைக் குடிக்க வேண்டாம் என்று எச்சரிக்கைப் பலகைகளை மட்டும் வைத்துவிட்டு, குடிநீருக்கு மாற்று ஏற்பாடு எதுவும் அரசு செய்து தராததால், இம்மக்கள் நஞ்சாகிப் போன அடிக் குழா தண்ணீரையே குடிக்கின்றனர்.

"நச்சுவாயுவாலும் அதன் பின் பாதரசத்தால் மாசான நீரினைப் பருகியதாலும் உடல், மனரீதியாக உருக்குலைந்துள்ள குழந்தைகளில் 27 பேருக்கு சிகிச்சை அளிக்க அரசு 1997 வரை உதவியது. நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி அதனையும் நிறுத்திவிட்டது. சதைக்கோளமாக வெளித்தள்ளும் கண்களுடன் சிதைந்த மூளையுடன் பிறந்த குழந்தைகள், நஞ்சாக்கப்பட்ட குடிநீரின் சாட்சியங்கள். அக்குழந்தைகளுக்கும் இலவச சிகிச்சை மறுக்கப்பட்டுள்ளது" என அரசின் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்துகின்றனர், குழந்தைகளின் பெற்றோர்கள். போபால் பேரழிவின் அடுத்த தலைமுறையினரான குழந்தைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனினும், மைய அரசு அக்குழந்தைகளின் மருத்துவத்துக்கும் நல்வாழ்வுக்கும் சல்லிக்காசு கூட ஒதுக்கவில்லை.

பாதிக்கப்பட்ட மக்கள் உரிய நிவாரணம் கேட்டு 2000-க்கு பின்னர் பல கட்டங்களாக போபாலில் இருந்து தில்லியில் பிரதமர் அலுவலகத்துக்கு பாதயாத்திரை மேற்கொண்டனர். அவர்கள் பிரதமரை சந்திக்க வாய்ப்பு மறுக்கப்பட்டு அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்வதற்கென்று ஜந்தர் மந்தர் பகுதி ஒதுக்கப்பட்டது. இவர்கள் 600 கி.மீ. தூரம் நடையாக நடந்துகொண்டிருக்கையில், மன்மோகன் சிங்கோ 2005-இல் மேற்கொண்ட தனது அமெரிக்கப் பயணத்தில், யூனியன் கார்பைடை கையகப்படுத்தியுள்ள டௌ கெமிக்கல்ஸ் தலைமை அதிகாரியுடன் கைகுலுக்கிக் கொண்டிருந்தார்.

இருபதாண்டுகளுக்கும் மேல் போராடியதால் கிடைத்த சொற்பமான நிவாரணத்தொகையில் கட்டப்பட்ட போபால் நினைவு மருத்துவமனையின் ஆய்வு மையமோ, பாதிக்கப்பட்டவர்களையே சோதனைச் சாலை எலியாக பயன்படுத்தி வருகிறது. 2007-இல் 86 நோயாளிகளை இதயநோய்ப் பிரிவில் "ப்ரசோக்ரெல்" எனும் மருந்தைப் பரிசோதிப்பதற்கு சோதனைச்சாலை எலிகளாக்கியுள்ளனர்.

நச்சுவாயுவின் பக்கவிளைவால் 1991-க்கு பின்னர் இறந்தவர்களே 20 ஆயிரத்துக்கும் மேல் இருப்பார்கள் என்கின்றனர், போபாலில் செயல்படும் மருத்துவர்கள். கீழே தள்ளிய குதிரை குழியும் பறித்த கதையாக நியாயமான நிவாரணத்தைக் கூட 26 ஆண்டுகளாகியும் தராத அரசு, நகரை அழகுபடுத்துவதாகச் சொல்லி 90-களின் ஆரம்பத்தில் புல்டோசர்களைக் கொண்டு அந்த ஏழைமக்களின் குடிசைகளைப் பித்து எறிந்தது.

நிலம், நீர், காற்று என அனைத்தையும் நஞ்சாக்கி வரும் ஆலைக் கழிவுகளை அப்புறப்படுத்திடவோ, இதுவரை நஞ்சானவற்றை மீட்டு சரி செய்திடவோ அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை. ஆனால், டௌ கெமிக்கல்ஸ் இந்திய பங்குச் சந்தையில் கொட்டுவதாகச் சொன்ன ஆயிரம் கோடிக்குப் பல்லிளித்து, கழிவுகளை அகற்றக் கோரும் வழக்கிலிருந்து பின்வாங்க மன்மோகன் அரசு முடிவெடுத்தது. போபால் பேரழிவினாலும் தொடரும் துயரத்தாலும் தலைமுறை தலைமுறையாகப் பாதிக்கப்பட்ட மக்களோ, வெஞ்சினத்தை நெஞ்சிலேந்தி தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

*துரை