அமெரிக்கா தனது கொள்ளைகளையும், அடக்கு முறைகளையும், அடாவடித் தனங்களையும் நியாயப்படுத்த ஆசியாவுக்கென்றே உருவாக்கி வரும் “வொய்ஸ் ஒவ் அமெரிக்கா” என்ற ஒலிபரப்பு நிலையத்தை, சிலாபம் - இரணவலையில் அமைத்து விஸ்தரித்தும் வருவது உலகறிந்த விடயமே.

கத்தோலிக்க திருச்சபையால் இம்மக்களின் நியாயமான போராட்டம் பல வகைகளிலும் குழப்பியடிக்கப்பட்ட போதிலும், இதைமீறிய மக்களின் தன்னெழுச்சியான தொடர்ச்சியான போராட்டத்தின் மீது அண்மையில் பொலிஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு ஒரு விவசாயி பலியானார் என்பதையும் சமர் முன்னர் எழுதியிருந்தது. கத்தோலிக்க திருச்சபை சார்பாக தலையிட்ட ஆயர் பிராங் மார்க்கஸ் பெர்னாண்டோ மக்களின் அத்துமீறலைக் கண்டித்ததுடன், மக்களை அமைதிகாக்க வேண்டுகோள் விடுத்து ஆசி வழங்கிய அதே கைகளால், அரச இராணுவத்திற்கும் ஆசி வழங்கியுள்ளார்.

கத்தோலிக்க திருச்சபையானது தனது கட்டுபாட்டுக்குள் போராட்டத்தை கொண்டுவர இன்றுவரை முனைந்த போதிலும், போலியான வழிநடத்திலின் மூலம்தம்மை ஏமாற்றுவதை உணர்ந்த மக்கள், தன்னியல்பான தமது, போராட்டத்தின் மூலம் “வொய்ஸ் ஒவ் அமெரிக்கா” ஒலிபரப்பு நிலையத்தைத் தாக்கினர். இத்தாக்குதலால் அரசுக்கு 2 இலட்சம் ரூபா பொருட்சேதம் ஏற்பட்டது. கத்தோலிக்க ஆயர் பெர்னாண்டோ இதை வன்மையாகக் கண்டித்து அமெரிக்காவுக்கான தனது விசுவாசவத்தை மீண்டு; ஒருமுறை பறைசாற்றியுள்ளார். அமெரிக்க வெளிநாட்டு அமைச்சு கட்டட வேலைகளை அரசு தடுக்குமாயின் பொருளாதார உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படுமென தனது பாணியில் எச்சரிக்கை விட்டுள்ளது. அமெரிக்காவின் ஆதிக்கம் இலங்கை மீது நேரடியாகவே உள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்ட, வெளிநாட்டமைச்சின் எச்சரிக்கையும், மதவாதிகளினது கூக்குரலும் போதுமானதாவே உள்ளது.