தமிழகத்திலுள்ள தனியார் "மெட்ரிக்" பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்குக் கடிவாளம் போடப் போவதாகக் கூறிக்கொண்டு, தமிழ்நாடு பள்ளிகள் கட்டண முறைப்படுத்தும் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது, தமிழக அரசு. இந்தக் கல்வியாண்டு முதலே இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது.

இச்சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கோவிந்தராசன் கமிட்டி, ஆரம்பப் பள்ளிகள் அதிகபட்சமாக ரூ.3,500 வரையிலும், நடுநிலைப் பள்ளிகள் ரூ.5,000 வரையிலும், உயர்நிலைப் பள்ளிகள் ரூ.8,000 வரையிலும், மேனிலைப் பள்ளிகள் ரூ.11,000 வரையிலும் ஆண்டு கல்விக் கட்டணமாக வசூலிக்கலாம் என நிர்ணயித்திருக்கிறது. பேருந்துக் கட்டணம், விடுதிக் கட்டணம் தவிர்த்து, பிற கட்டணங்கள் அனைத்தும் சேர்த்து இந்த வரம்பைத் தாண்டக் கூடாதென்றும், இந்த உத்தரவை மீறும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்துசெய்யப்படும்; அதன் நிர்வாகிகள் மீது கிரிமினல் வழக்குத் தொடரப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

மெட்ரிக் பள்ளி முதலாளிகள் இந்தச் சட்டமும், இந்தக் கட்டண நிர்ணயமும் தங்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகக் கூறி, இதனை ஏற்றுக் கொள்ள மறுத்து வருகின்றனர். அதாவது, கல்விக் கட்டணம் என்ற பெயரில் பொதுமக்களைக் கொள்ளையடிப்பது தங்களின் அடிப்படை உரிமை என்பது அவர்களின் வாதம். இதன் அடிப்படையில் இச்சட்டத்தை எதிர்த்து உயர்நீதி மன்றத்திலும், பின்னர் உச்சநீதி மன்றத்திலும் வழக்குப் போட்டுத் தோற்றுப் போனார்கள். இதன்பின், பள்ளிகளைத் திறக்க மாட்டோம் என மிரட்டத் தொடங்கினார்கள்.

தனியார் முதலாளிகள் பள்ளிகளைத் திறக்காவிட்டால், அந்தச் சுமை முழுவதும் தன் மீது விழுந்துவிடும் என "உணர்ந்து" கொண்ட தமிழக அரசு, "கோவிந்தராசன் கமிட்டி நிர்ணயித்துள்ள கட்டணம் தமக்குக் கட்டுப்படியாகாது" எனக் கருதும் பள்ளி நிர்வாகங்கள், கட்டணத்தை மறு நிர்ணயம் செய்யக் கோரி விண்ணப்பிக்கலாம் எனத் தற்பொழுது அறிவித்திருக்கிறது.

பள்ளிகளைத் திறக்க வேண்டிய பருவம் நெருங்கிவிட்ட இவ்வேளையில், ஒருபுறம் கட்டணத்தை மறு நிர்ணயம் செய்வது தொடர்பாக அரசு பேரம் நடத்திக் கொண்டிருக்க, இன்னொருபுறமோ, மெட்ரிக் பள்ளிகள் பழையபடியே மாணவர்களைச் சேர்ப்பதற்கு கட்டணக் கொள்ளையை நடத்திக் கொண்டிருப்பதாக முதலாளித்துவப் பத்திரிகைகளே அம்பலப்படுத்தி எழுதி வருகின்றன. கட்டணக் கொள்ளையைத் தடுக்க வந்ததாகக் கூறப்பட்ட சட்டமோ, தனது கண்களைக் கருப்புத் துணியால் கட்டிக்கொண்டு, இருட்டறையில் சுகமாகத் தூங்கிக் கொண்டிருக்கிறது.

மெட்ரிக் பள்ளி முதலாளிகள், "தரமான கல்வியைக் கொடுப்பதற்குத் தாங்கள் போட்டுள்ள முதலீட்டுக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை" என அரசின் மீது குற்றஞ்சுமத்தி வருகிறார்கள். இதுவொரு அப்பட்டமான பொய். கோவிந்தராசன் கமிட்டி, பெற்றோர்களையோ, சமூக அக்கறை கொண்ட கல்வியாளர்களையோ கலந்து ஆலோசித்து இக்கட்டணத்தை நிர்ணயிக்கவில்லை. மாறாக, தமிழகத்திலுள்ள அனைத்து மெட்ரிக் பள்ளி முதலாளிகளிடம், அவர்களது வரவு-செலவு கணக்கையும், தரமான கல்வியைக் கொடுக்க ஒவ்வொரு பள்ளியும் என்னென்ன வசதிகளைச் செய்து கொடுத்திருக்கிறது என்ற விவரத்தையும் கேட்டு, அவற்றின் அடிப்படையில்தான் ஒவ்வொரு பள்ளிக்கும் ஏற்றவாறு, மேலே குறிப்பிடப்பட்டுள்ள வரம்புக்குள் கட்டணத்தை நிர்ணயித்திருக்கிறது

கோவிந்தராசன் கமிட்டி பள்ளி முதலாளிகள் கொடுத்த அறிக்கையை
ஏ/சி அறைக்குள் உட்கார்ந்துகொண்டு ஆய்வுசெய்துதான் கட்டணத்தை நிர்ணயித்திருக்கிறதேயொழிய ஒவ்வொரு பள்ளிக்கும் நேரில் சென்று ஆய்வு நடத்திக் கட்டணத்தை நிர்ணயிக்கவில்லை. தாங்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில்தான் கட்டணம் நிர்ணயிக்கப்படும் எனத் தெரிந்த பிறகு, பள்ளி முதலாளிகள் அதற்கேற்றபடி கணக்கு வழக்குகளில் விளையாடி இருக்க மாட்டார்களா? அக்கமிட்டியில் உள்ள அதிகார வர்க்கத்தை இலஞ்சப் பணத்தால் குளிப்பாட்டி இருக்க மாட்டார்களா?

நெல், கோதுமை போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை நிர்ணயிக்கும்பொழுது, அரசு விவசாயிகளிடம் நீங்கள் போட்ட முதலீடு எவ்வளவு என்றெல்லாம் ஆலோசனை நடத்துவதில்லை. கல்வியும், அது போன்ற அத்தியாவசிய சேவைதானே? இதற்குக் கட்டணம் நிர்ணயிக்கும்பொழுது மட்டும், முதலாளிகளிடம் கலந்து ஆலோசிக்க வேண்டிய அவசியமென்ன?

மெட்ரிக் பள்ளி முதலாளிகள் போட்டுள்ள முதலீட்டிற்கு ஏற்ப குறிப்பிட்ட அளவு இலாபம் கிடைக்கும்படிதான் கட்டணத்தை நிர்ணயித்திருக்கிறது, அரசு. இந்த இலாபம் போதாது என்பதுதான் பள்ளி முதலாளிகளின் புலம்பல். தமிழக அரசு பொதுமக்களின் ‘நலனில்’ இருந்துதான் இந்தப் பிரச்சினையை அணுகியிருப்பதாகக் கூறுவது உண்மையானால், "இந்த இலாபத்திற்குள் நடத்த முடியாதென்றால், கடையை மூடிவிட்டுப் போங்கள்" எனப் பள்ளி முதலாளிகளிடம் கறாராகச் சொல்லியிருக்கலாம். ஆனால், அரசோ, கட்டணத்தை மறுநிர்ணயம் செய்வதற்கு முதலாளிகளை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறது.

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டணம் மறுநிர்ணயம் செய்யப்படும் எனச் சட்டத்தில் காட்டப்பட்டுள்ள சலுகை, இப்பொழுது முதலாளிகளின் வசதிக்கேற்ப கட்டணம் மறுநிர்ணயம் செய்யப்படும் என்ற திசையில் செல்லத் தொடங்கிவிட்டது.

எனவே, இந்தச் சட்டத்தைக் கறாராக நடைமுறைப்படுத்தினால், மெட்ரிக் பள்ளிகள் நடத்திவரும் கட்டணக் கொள்ளையைக் கட்டுப்படுத்திவிடலாம் எனக் கூறப்படுவதெல்லாம் வெறும் மாயைதான். உண்மையைச் சொன்னால், மெட்ரிக் பள்ளிகள் நடத்திவரும் கட்டணக் கொள்ளையைச் சட்டபூர்வமாக்கிவிட்டது, தமிழக அரசு. தமிழக அரசிற்கும் மெட்ரிக் பள்ளிகளுக்கும் இடையே கட்டண நிர்ணயம் தொடர்பாக நடக்கும் யுத்தம், மெட்ரிக் பள்ளிகள் கொள்ளைக்கூடாரமாக மாறிவிடக் கூடாது என்பதற்காக அல்ல; மாறாக, கொள்ளையை எப்படித் தொடருவது என்பது குறித்துதான்.

தங்கள் பிள்ளைகளை மெட்ரிக் பள்ளிகளில் படிக்க வைத்து வரும் பெற்றோர்கள்தான் இச்சட்டம் பற்றியும், அதன் அமலாக்கம் பற்றியும் அதிக அக்கறை செலுத்த வேண்டும். ஆனால், அவர்களோ, எருமை மாட்டில் மழை பெய்த கதையாக, இன்றும்கூட இப்பிரச்சினை பற்றி சொரணையற்றுத்தான் இருக்கிறார்கள்.

‘‘தாங்களே விரும்பி அதிகக் கட்டணம் செலுத்துவதாகப் பெற்றோர்களிடம் எழுதி வாங்குவது; வாங்கப்படும் அதிகக் கட்டணத்திற்கு உரிய ரசீது தராமல் துண் டுச்சீட்டில் கட்டணத்தையும் சேர்க்கை விவரத்தையும் எழுதிக் கொடுப்பது" உள்ளிட்டப் பல வழிகளில் மெட்ரிக் பள்ளிகள் தங்களின் கட்டணக் கொள்ளையைத் தொடர்ந்து நடத்திக்கொண்டுதான் இருக்கின்றன. இது சட்டவிரோதமானது எனத் தெரிந்திருந்தும்கூட, நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் ‘எதிர்காலம்’ கருதி முணுமுணுப்போடு அடங்கிப் போய்விடுகிறார்கள். அவர்களைப் பொருத்தவரை, பீச், பார்க், சினிமா, ஹோட்டல் போன்ற சுகங்களைத் தியாகம் செய்து விட்டு, பிள்ளைகளை மெட்ரிக் பள்ளியில் படிக்க வைத்துவிட வேண்டும் என்பதுதான் குறிக்கோள்.

இதற்குப் பெயர் தியாகம் அல்ல; தவறை எதிர்க்கத் துணியாத, நியாயத்திற்காகப் போராட விரும்பாத தன்னலம். இந்தத் தன்னலமும், ஆங்கில வழிக் கல்வி மீது அவர்களுக்கு இருக்கும் முட்டாள்தனமான மோகமும்தான் மெட்ரிக் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு அடிப்படையாக இருக்கிறது. தமிழக அரசு சமச்சீர் கல்வித் திட்டத்தைக் கொண்டுவர முயன்றபொழுது, கல்வியின் ‘தரம்’ தாழ்ந்துபோகும் என மெட்ரிக் பள்ளிகளின் முதலாளிகளோடு சேர்ந்துகொண்டு சாமியாடியவர்களும் இவர்கள்தான். இப்பொழுது, அதே ‘தரத்தை’க் காரணமாகக் காட்டித்தான், மெட்ரிக் பள்ளிகளின் முதலாளிகள் தங்களின் கட்டணக் கொள்ளையை நியாயப்படுத்தி வருகிறார்கள். மெட்ரிக் பள்ளிகளின் தரத்தின் பின்னே உள்ள தகிடுதத்தங்களைப் பற்றிப் பேசினால், அப்பள்ளிகளின் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடும்.

அரசுப் பள்ளிகள் தரத்தில் மின்னுகின்றன என்பதல்ல நமது வாதம். ஆனால், அரசுப் பள்ளிகளுக்கு மாற்றாகக் கல்வியில் தனியார்மயம் புகுத்தப்படுவதும், அதை ஆராதிப்பதும் அபாயகரமானது என்பதைத்தான் நாம் குறிப்பிட விரும்புகிறோம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் வசூல் வேட்டை நடத்திய தனியார் பொறியியல் கல்லூரிகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. ஆனாலும், இக்குற்றத்திற்காக எத்தனை பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டன, எத்தனை முதலாளிகள் மீது கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டன என ஒரு விரலையாவது மடக்க முடியுமா? எம்.பி., எம்.எல்.ஏ.க்களே பள்ளிகளையும் கல்லூரிகளையும் நடத்தி வரும்பொழுது, இந்தச் சட்டம் நூல் பிசகாமல் நடைமுறைப்படுத்தப்படும் என்பதற்கு ஏதாவது உத்தரவாதம் உண்டா? ஆரம்பக் கல்வி தொடங்கி ஆராய்ச்சிக் கல்வி முடிய அனைத்து மட்டங்களிலும் தனியார்மயத்தைப் புகுத்த வேண்டும் என்பதே அரசின் கொள்(ளை)கையாக இருக்கும்பொழுது, கட்டணக் கொள்ளையை இக்கேடுகெட்ட அரசு தடுத்து நிறுத்திவிடும் என நம்பமுடியுமா?

கல்வி வள்ளல்கள் நடத்திவரும் கட்டணக் கொள்ளையைச் சட்டம் போட்டு தடுத்துவிட முடியும் என்பது, கடப்பாரையை முழுங்கிவிட்டு அது செரிக்க சுக்கு கசாயம் குடிப்பது போன்றது. அரசு பள்ளிகளையும், கல்லூரிகளையும் தரமாக நடத்துக் கோருவதும், தாய் மொழி வழியாகவே உயர்கல்வி வரை கொடுக்கக் கோருவதும்தான் இப்பிரச்சினைக்கு ஒரே மாற்று. தனியார்மய மோகத்தாலும், ஆங்கில வழிக் கல்வி மீது இருக்கும் குருட்டுதனமான பக்தியின் காரணமாகவும் நடுத்தர வர்க்கம் இவ்வுண்மையைப் புரிந்து கொள்ள மறுக்கிறது. இதனைப் புரிந்து கொண்டு, கல்வியைத் தனியார்மயமாக்குவதை எதிர்த்துப் போராடாத வரை, இந்தக் கட்டணக் கொள்ளை என்ற சிலுவையை அவ்வர்க்கம் சுமந்துதான் தீர வேண்டும்.
*ரஹீம்