வேலூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடி ஜீலானி தோல் தொழிற்சாலையில், கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதியன்று கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும்போது நச்சுவாயு தாக்கி சரவணன், சூரியமூர்த்தி, ஏழுமலை, ராமு, சென்றாயன் என ஐந்து கூலித் தொழிலாளர்கள் மாண்டு போயுள்ளனர். இதில் ஏழுமலை, ராமு, சென்றாயன் ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள். அவர்களின் குடும்பம் மட்டுமின்றி, சகோதரர்களான மூவர் கொல்லப்பட்ட துயரத்தால் அவர்கள் வாழ்ந்த செங்கல்வராயன் பட்டறை கிராமமே வேதனையில் விம்மிக் கொண்டிருக்கிறது.

இந்தத் தோல் தொழிற்சாலையில், வாணிடெக் என்ற கழிவுகளை அகற்றும் அரசு சார்பு நிறுவனத்தின் மூலம் கூலித் தொழிலாளர்களை வைத்து ஒப்பந்ததாரர்கள் வேலை வாங்குகின்றனர். கொத்தடிமைத்தனம், எவ்விதப் பாதுகாப்புச் சாதனங்களும் இல்லாமல் கூலித் தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி வேலை வாங்குவது, அரசோ அல்லது தொழிலாளர் துறையோ இத்தகைய கொடுமைகளைக் கண்டு கொள்ளாமல் புறக்கணிப்பது ஆகியவற்றின் விளைவுதான் இந்தக் கோரச் சாவுகள். அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள போதிலும், செலவு குறைவானது என்பதால் கூலித் தொழிலாளர்களின் உயிரைப் பணயம் வைத்து வாளிகள் மூலமாக கழிவுகள் அள்ளப்படுகின்றன. கழிவுகளை அள்ளும் முன்பாக அமிலக் கரைசல் ஊற்றுவது, தொழிலாளர்களுக்கு முகமூடிக் கவசம் அணிவிப்பது, மூச்சுத் திணறல் ஏற்பட்டால் உடனடி முதலுதவிக்கான ஏற்பாடுகள் செய்வது முதலான எந்தவொரு பாதுகாப்பு ஏற்பாடுகளும் இங்கு கடைபிடிக்கப்படவில்லை.

வாணியம்பாடி, ஆம்பூர், பேர்ணாம்பட்டு, மேல்விசாரம், இராணிப்பேட்டை, வேலூர் ஆகிய பகுதிகளில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் இது தொடர்நிகழ்வாகி வருகிறது. இரு மாதங்களுக்கு முன்பு ஆம்பூரில் இரு கூலித் தொழிலாளர்கள் நச்சுவாயு தாக்கி மாண்டுபோயுள்ளனர். இத்தகைய முதலாளித்துவப் பயங்கரவாதத்தால்தான் 200 கோடி டாலர் அளவுக்கு தோல் ஏற்றுமதித் தொழில் பெருகியுள்ளது. நடப்பு நிதியாண்டில் இதை 700 கோடி டாலர் அளவுக்கு உயர்த்த தோல் ஏற்றுமதி கவுன்சில் இலக்கு தீர்மானித்துள்ளது. இக்கோரக் கொலைக்கு எதிராகப் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்த பிறகுதான், தி.மு.க. அரசு மாண்டுபோன தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கி, ஆலையை மூட உத்தரவிட்டுள்ளது

நாடு முழுவதும் தொழிலாளர்கள் உரிமைகளற்ற அடிமைகளாக வதைக்கப்படுவதற்கும், பாதுகாப்புச் சாதனங்களின்றி விபத்துகளில் தொழிலாளர்கள் கொல்லப்படுவதற்கும், முதலாளிகளின் இலாபவெறிக்கும் வகைமாதிரிக்கு ஒரு உதாரணம்தான் இக்கோரக் கொலைகள். இம்முதலாளித்துவப் பயங்கரவாதத்துக்கு எதிராகத் தொழிலாளர்களை அணிதிரட்டி அமைப்பாக்க, இப்பகுதியில் இயங்கும் ம.க.இ.க. பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.
- பு.ஜ.செய்தியாளர்.