நேர்மையாக தாம் சொன்னவற்றுக்காக சமூகத்திற்காக இயங்குபவர்களும், விமர்சனத்தை சுயவிமர்சனத்தையும் செய்பவர்கள், இது தம்மீதான "தனிநபர் தாக்குதல்" என்று சொல்ல எதுவும் இருக்காது. அவர்களுக்கு இரண்டுவிதமான முகம் இருக்காது. சொல்லும் அரசியலுக்கும், தனிநபர் வாழ்க்கை சார்ந்தும், இரு வேறுபட்ட முகமும் நடைமுறையும் இருக்காது. சமூகம் மீதான தங்கள் நேர்மையான செயல்பாட்டில், அரசியலும், தனிநபர் வாழ்க்கையும் ஒன்றில் இருந்து ஒன்று பிரிக்கப்பட்டதாக இருக்காது. அவர்களுக்கு இரண்டும் ஒன்றுதான்.

அது தவறு என்றால், அந்த அரசியல் வழிமுறைதான் தவறாக இருக்கும். மக்கள் விடுதலைக்கு இது பாதகமானது என்று தெரிந்தவுடன், அந்த அரசியல் மீதான விமர்சனம், சுயவிமர்சனம் மூலமும் இது சரிசெய்யப்பபடும். இது "தனிப்பட்ட வாழ்க்கை" என்று நியாயப்படுத்தும்,  இரட்டை வாழ்க்கைமுறை மக்கள் போராட்டத்தில் சாத்தியமற்றது. இதை யாரும் நியாயப்படுத்தவும் முடியாது. 

 

"இது" தம் மீதான தனிநபர் தாக்குதல் என்று கூறுகின்ற போது, தமது இரட்டை வாழ்க்கை முறை அம்பலமாவதை இட்டுத்தான் அவர்கள் பேசிக்கொள்கின்றனர். தங்கள் நேர்மையற்ற, சமூகத்துக்கு முரணான  மற்றொரு பக்கத்தை பற்றியது "இது" என்பதையும், இதை பேசக் கூடாது என்பதும் தான் இவர்களின் தர்க்கமாகும்.  

 

மக்கள் முன் எதைச் சொல்லுகின்றோமோ, அதை தம் வாழ்க்கையாகக் கொள்ளாத எவர் பின்னும், தனிப்பட்ட மற்றொரு வாழ்க்கைமுறை கேள்விக்குள்ளாகின்றது. அதைப் பற்றி பேசக் கூடாது என்பது, மக்கள் முன் தம்மை மூடிமறைத்து மக்களை ஏய்க்கின்ற தங்கள் அரசியல் பித்தாலட்டத்தை தொடர்ந்து மூடிமறைக்கும் முயற்சியாகும்.

 

இங்கு தனிப்பட்ட வாழ்க்கையும் அரசியலும் ஒன்றாக இருந்து அது விமர்சனத்துக்கு உள்ளாகும் போது, அந்த அரசியல் வழியே விமர்சனத்துக்கு உள்ளாகின்றது.

 

இப்படி இருக்கின்ற போது, பலர் தம்மை தக்கவைக்க இந்த பொது அரசியல் உள்ளடக்கத்தை மறுத்துவிடுகின்றர். தம்மை மூடிமறைக்க "இது தனிநபர் தாக்குதல்" என்று முத்திரை குத்துகின்றனர். பலரை இதன் பெயரில் தவறாக வழிநடத்துகின்றனர்.

 

இன்று அரசியல், சமூகம் சார்ந்து தம்மை முன்னோடிகளாக காட்டிக் கொள்ளும் பலர், தம்மை தக்கவைக்க இது "தனிநபர் தாக்குதல்" என்கின்றனர். இதை நீங்கள் அடிக்கடி, பலர் கூறக் கேட்டுயிருப்பீர்கள். இதன் சாரம் என்ன? அரசியலில் ஈடுபடும் ஒருவர், தான் முன்வைக்கும் அரசியலுக்கு வெளியில் வேறுபட்ட ஒரு வாழ்கை வாழ்வதை இது மறைமுகமாக ஒத்துக்கொள்வதாகும். இப்படி தாங்கள் பேசும் அரசியலுக்கு முரணாக அவர்கள் வாழ்வதைப் பற்றி பேசுவது தான், "தனிநபர் தாக்குதல்" என்கின்றனர். இப்படி இவர்கள் குறிப்பிடும் அவர்களின் தனிபட்ட விடையங்களை, நாம் இன்று பேசுவது கூட கிடையாது. உண்மையில் இதை செய்யாத, அதை அம்பலப்படுத்தாத எம்மீதான ஒரு விமர்சனமாகக் கூட வைக்காலம்.

 

"தனிநபர் தாக்குதல்" என்பதன் மூலம் அவர்கள் சொல்லவருவது என்ன? நாம் பேசும் அரசியலுக்கு வெளியில், தனிநபர் எப்படியும் வாழலாம் என்கின்றனர். அதை கண்டு கொள்ளக் கூடாது என்கின்றனர். அதை பற்றிக் கதைக்கக் கூடாது என்கின்றனர். இதைத்தான் இவர்கள் தனிநபர் தாக்குதல் என்கின்றனர். இப்படி சொல்லுகின்றவர்கள், அரசியல் ரீதியாக நேர்மையற்றவர்கள். தாம் சொல்லும் கருத்துக்காக நடைமுறையில் வாழாதவர்கள். மக்களுக்கு சொல்வது ஓன்று, தனிப்பட வாழ்வது வேறாகின்றது. இப்படி இரட்டை வாழ்க்கைமுறையைக் கொண்டு, அவர்கள் உலகத்தை ஏமாற்றி வாழ்கின்றனர்.

 

சமூக விடையங்களிலும், அரசியலிலும் ஈடுபடுவர்கள் முன்வைக்கும் கருத்துக்கு, தனிப்பட்ட நடைமுறை வாழ்க்கைக்கும் இடையில் ஒரு கோடு பிரிக்கும் என்றால், அவர்கள் சமூகத்தை ஏமாற்றுகின்ற பம்மாத்து பேர்வழிகள் தான். அவர்கள் சமூகத்தை வழிநடத்துவதாக செய்யும் பாசாங்குத்தனத்தை, மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கும் எவராலும் அனுமதிக்க முடியாது.

 

சமூகத்தின் முன் நாம் எதற்காக போராடுகின்றோமோ, அதையே நாம் எம் வாழ்க்கையாக நடைமுறையில் கொள்ளவேண்டும். அதற்காக விமர்சனத்தை, சுயவிமர்சனத்தை எமக்கு நாமே கையாளவேண்டும். இதைச் செய்யாமல், மக்களை அதற்காக போராடும் படியும், அதன்பால் அவர்களை வாழும்படியும் கூற எந்த நாய்க்கும் எந்த அருகதையும் கிடையாது.

 

சமூகத்தின் முன் நாம் சொல்வதை நாம் கடைபிடிக்கத் தவறினால், அதன்பால் சுயவிமர்சனத்தையும் விமர்சனத்தையும் செய்யத் தவறினால், அவர்கள் கடைந்தெடுத்த போக்கிலிகள். அவர்கள் அதை மூடிமறைக்க முன்தள்ளும் தர்க்கங்கள், வாதங்கள் அனைத்தும் மக்கள் முதுகில் ஏறி நின்று மிதிப்பதுதான். தங்கள் சுயநலத்தையும், பம்மாத்து அரசியலையும், மக்கள் மேல் திணிப்பது தான். இதைத்தான் அவர்கள் "தனிநபர் தாக்குதல்" என்கின்றனர். இதில் இருந்து வேறுபட்டது கோட்பாடற்ற "அவதூறு", "தூய்மைவாதம்", "தனிநபர் ஒழுக்கவாதம்" … தொடர்பான சிந்தனைகள், நடைமுறைகள். இதை தனியாக ஆராய்வோம்.

 

பி.இரயாகரன்
27.05.2010