உனக்கும், எனக்கும் மட்டுமல்ல எம்மைச் சுற்றி நடந்ததை மூடிமறைப்பதே எங்கும் அரங்கேறுகின்றது. ஒருபுறம் அரசு என்றால், மறுபுறம் புலிகளும் இதில் போட்டி போடுகின்றனர். இந்த எல்லைக்குள் தான் எதிர்க்கட்சிகள் முதல் சர்வதேச நாடுகள் வரை கைகோர்க்கின்றனர்.

 

 

(சிங்கள) இனவாதத்துக்கு எதிரான (தமிழ்) இனவாதிகளின் யுத்தம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அதாவது புலிகள் நடத்திய போராட்டம் தோற்கடிப்பட்டுள்ளது. புலிகளின் வழிமுறை, பேரினவாதிகளிடமிருந்து மக்களைப் பாதுகாக்காது என்பது தெளிவாக்கியுள்ளது. புலிகளால் தொடர்ந்து போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த முடியாது என்பது, கடந்தகால வரலாறாக எம்முன் அம்மணமாகிக் கிடக்கின்றது. இப்படியிருக்க தொடர்ந்து மக்களை ஏய்த்துப் பிழைக்க,  தொடர்ந்து தாம்தான் போராட முடியும் என்பதைச் சொல்ல, நடந்ததை திரிப்பதும் புரட்டுவதும் தொடருகின்றது.

புலி போராட்டம் தோற்றது என்ற உண்மை ஒருபுறம் இருக்க, எம்மால்தான் அதை வெல்ல முடியும் என்று கூறுபவன் உன்னை முட்டாளாக்கி விடுகின்றான். இவர்கள் வேறு யாருமல்ல,   மக்களை ஏய்த்துத் தின்னும் பொறுக்கிகள் கூட்டம். இப்படி ஒருபுறம் இருக்க, பேரினவாத போர்க்குற்றம் தொடர்பாக புலிகள் குலைப்பது தான், அதன் மீதான பரந்துபட்ட சமூக செயல்பாட்டைத் தடுக்கின்றது. போர்க்குற்றத்தில் ஈடுபட்ட புலிகள், அதை நியாயப்படுத்தியவர்கள், எப்படி உண்மைக்காக நேர்மையாக குரல்கொடுப்பார்கள்? அவர்கள் தம்மை பாதுகாக்க, இதைத் திரித்து புரட்டி எதுவுமற்றதாக்குகின்றனர். இதில் உள்ள உண்மை இது தான். தம்மை பாதுகாத்துக் கொள்ள மூடிமறைப்பதன் மூலம், அரசின் குற்றத்தை எதுமற்றதாக்கிவிடுகின்றனர்.

இப்படி இருதரப்பும், அதாவது அரசு – புலி தங்கள் பக்கத்தை மூடிமறைப்பதுதான், இன்றைய முரண்பட்ட தகவல்களின் உள்ளடக்கமாகும். இந்த வகையில்

1. மக்களுக்கு எதிராக தாங்கள் நடத்தியவற்றை மூடிமறைப்பதன் மூலம், புலிகள் "தேசியத்தையும்"  அரசு "ஜனநாயகத்தை" பரஸ்பரம் பூசி மெழுக விரும்புகின்றனர்.

2. போர்க்குற்றத்தை, குறிப்பாக மே 16 சரணடைந்த பின்னான நிகழ்ச்சிகளை மூடிமறைத்து அதை முற்றாகச் சிதைக்க முனைகின்றனர்.

இந்த எல்லைக்குள் நிகழ்ச்சிகளும், அரசியல் முரண்பாடுகளும் கூர்மையாகி வருகின்றது. சர்வதேச ரீதியாக போர்க்குற்றம் தொடர்பான விசாரணைக் கோரிக்கையோ, அரசு மற்றும் புலிக்கு எதிராகவே கோரப்படுகின்றது. ஒரு விசாரணை நடந்தால், நிச்சயமாக இரண்டுக்கும் எதிராகத்தான் அது நடக்கும். இது பல உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவரும்.

இதைத் தடுப்பதில் தான் அரசும், மறுபக்கத்தில் புலிகளும் தீவிரமாக இயங்குகின்றனர். தங்கள் தங்களவில், இதை விசாரணை செய்வதாக காட்டிக்கொண்டு இதை மழுங்கடிக்கும் வண்ணம் தொடர்ச்சியாக அதைக் குழிபறிக்கின்றனர். மக்களையும், உலகத்தையும் ஏய்க்க முனைகின்றனர். குற்றங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதும், பின்னிப் பிணைந்தும் காணப்படுகின்றது. இதனால் இருதரப்பும் அதை விரும்பவில்லை. அதை குழிபறிக்கும் செய்திகளையும், கட்டுக்கதைகளையும் வெளியிடுகின்றது.

சம்பவங்களை திரிப்பதன் மூலம், புலிகள் அரசுக்கு உதவுகின்றனர். புலிகள் மே 16 தாங்கள் ஆயுதத்தை கீழே வைத்து சரணடைந்ததை அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர். இது ஒரு உண்மை. இதையே இன்று மறுக்கின்றனர். அந்த சரணடைவுடன் சம்பந்தப்பட்ட சர்வதேச தொடர்பாளர்களின் அறிக்கைகள் எல்லாம் இதை தெளிவாக உறுதி செய்கின்றது. இதை இன்று திரிப்பதில் முதன்மைப் பாத்திரத்தை புலிகள் வகிக்கின்றனர். அரசும் இதையே வழிமொழிவதுதான் இதில் வேடிக்கையான ஒற்றுமையான விடையமாக உள்ளது. மகிந்த மே 16 அன்று ஜி11 மாநாட்டில் அறிவித்தததை மறுப்பதுடன், மே 17 காலை 7.30 மணிக்கு பேரினவாதியாக மண்ணை முத்தமிட்டதை இன்று மூடிமறைக்க முனைகின்றனர். அரசு 18 ம் திகிதி என்றும், சரத்பொன்சேகா 19 ம் திகதி என்றும் அனைத்தையும் திரிக்கின்றனர். மே 17 மாலைதான் சரத்பொன்சேகா நாடு திரும்பினார். இறுதியுத்தத்தின் போது சரத்பொன்சேகாவை, நாட்டில் இருந்து அகற்றியது ஏன்? இதை விரிவாக தனியாக பார்க்க உள்ளோம்.

இங்கு  அரசும் - புலியும் இதில் ஒன்றுபட்டு நிற்பதும், இவர்களின் இனவாத வரலாற்றில் முதன்முதலாக நிகழ்கின்றது. தங்கள் தரப்பை மூடிமறைக்க இந்த ஓற்றுமை இதில் ஏற்படுகின்றது. இதன் பின்னணியில் மூடிமறைக்கப்பட்ட குறிப்பான காரணமோ, இரண்டு வேறுபட்டது.

1.புலி தான் சரணடைந்ததை மூடிமறைக்கவும், தங்கள் துரோகத்தையும் காட்டிக் கொடுப்பபையும் ஏதுமற்றதாக காட்டி தொடரும் எதிர்ப்புரட்சி அரசியலை தக்க வைக்கவும், மே 16 க்குப் பதில் மே 18 ஆகத் திரிக்கின்றனர்.

2. அரசு மே 16 பின் சரணடைந்த புலி உறுப்பினர்களையும் அவர்கள் குடும்பத்தினரையும்  கொன்று குவித்ததை, மூடிமறைக்க இந்த போர்க்குற்ற மீறலை புலிகளின் துணையுடன் மறுக்கின்றனர், மறைக்கின்றனர்.

இப்படித்தான் இங்கு இதில் புலி-அரசு ஒற்றுமை ஏற்படுகின்றது. போர்க்குற்றங்கள் பற்றிக் கிடைக்கும் ஆவணங்கள் மூடி மறைக்கப்படுகின்றது அல்லது திரிக்கப்படுகின்றது. இந்த வகையில் சனல் 4 தன் இறுதியான ஆவணத்தில், சில உண்மைகளை புதைத்து திரித்து வெளியிட்டுள்ளது. சனல் 4 பேட்டி முழுமையானதல்ல. இதை ஓட்டிய கேள்விகள் பலவாக இருந்தும், சிலதை தமக்கு ஏற்ப திரித்து வெளியிட்டுள்ளனர்.

சனல் 4 புலிகளுடன் ஏதோ ஒரு வகையில் நெருங்கிய தொடர்புடையது. புலியின் சரணடைவு பற்றி கே.பி பேட்டி (17ம் திகதி காலை) முதல் கே.பி யை நேரடியாக பேட்டி கண்ட ஒரு தொலைக்காட்சி. புலி உறுப்பினர்களைச் சுட்டுக்கொன்ற வீடியோ காட்சியைக் கூட, அதன் மூலம்தான் வெளியிடப்பட்டது. புலிகளின் போர்க்குற்றம் தொடர்பாக எதையும் வெளியிட்டதாக அறிய முடியவில்லை. இப்படி இலங்கை விடையத்தில் தொடர்புடைய இந்த தொலைக்காட்சி, புலியுடன் தொடர்புடையது.

இந்த நிலையில் இலங்கை இராணுவ அதிகாரி ஒருவரின் பேட்டியை, தன் குரல் பிரதி மூலம் சிலரின் தேவைக்கு அமையவே வெளியிட்டது. இதன் பின்னணியில் மே 16 இல் நடந்த புலியின் சரணடைவையும், அதில் அவர்கள் எப்படிக் கொல்லப்பட்டனர் என்ற குறிப்பான விடையத்தை பொதுவானதாக்கியது. பொதுவாக கொன்றுகுவித்ததாக கூறுவதுடன், சரணடைந்தவர்களைக் கொன்றதை பற்றி பொது உண்மை சார்ந்த விடையத்தை இல்லாதாக்கினர். இதில் பிரபாகரன் கடைசி மகன் சரணடைந்ததை பற்றிய குறிப்பு மூலம், பிரபாகரனின் இருப்பிடத்தைக் கேட்டு சித்திரவதை செய்ததாக கூறியதன் மூலம், இந்த போர்க்குற்ற ஆவணம் மூலம் பிரபாகரன் சரணடையவில்லை என்பதையே குறிப்பாக புலிகள் சொல்ல வந்த செய்தியாகும்.

இங்கு பிரபாகரனின் இளைய மகன், தன்னம் தனியாக தன் மெய்ப்பாதுகாவலருடன் தனித்து சரணடைந்தது என்பது முழுப் பொய். அவருடன், அவரின் முழுக் குடும்பமுமே சரணடைந்தது. புலியில் எஞ்சியிருந்த தளபதிகள் முதல் அவர்கள் குடும்பங்கள் அனைத்தும் சரணடைந்தது. அவர்கள் தப்பிச் செல்லும் உறுதிமொழியுடன், இந்தச் சரணடைவு ஏற்பாடு மூன்றாம் தரப்பால் தங்கள் கூட்டு சதி மூலம் நெறிப்படுத்தப்பட்டு இருந்தது. இது எந்தப் பிசகுமின்றி, மே 16 அன்று நடந்தது. இதற்கு முன்னமோ, பின்னமோ இது நடக்கவில்லை. இதை திரிக்கவே, இந்த இராணுவ அதிகாரியின் பேட்டியை சனல் 4, தன் குரலால் மொழி பெயர்த்தது.

தமிழ்மக்களுக்கு நடந்த அவலம் முதல் புலித் தலைமை கொல்லப்பட்ட விதம் பற்றிய தகவல்கள், புலி மாபியாக்களால் தான் இன்று பகிரங்க விசாரணைக்குள்ளாகவில்லை. தகவல்களை பெறக்கூடிய அவர்களின் கடந்தகால கட்டமைப்பும், அதன் செல்வாக்கும், அதை மூடிமறைப்பதற்கே தொடர்ந்தும் பயன்படுத்தப்படுகின்றது. அரசு தீவிரமாக யுத்தக்குற்ற ஆவணங்களை அழிப்பது போல், புலிகளும் அதை அழித்தபடி திரித்தும் புனைந்தும் கதைகளைக் கட்டிவிடுகின்றனர். தாங்கள் திரித்து புரட்டி வழிநடத்தி தோற்றுப்போன தங்கள் போராட்டத்தைப் போல், யுத்தக் குற்றங்கள் பற்றி மாபியாப் புலிகள் அனைத்தையும் சிதைக்கின்றனர்.

இன்று இதுதான் பேரினவாதத்தின் போர்க்குற்றத்தை பாதுகாக்கின்றது. பாரிய போர்க்குற்றத்தில் ஈடுபட்ட புலிகள், மற்றொரு தரப்பின் போர்க்குற்றத்தை விசாரணை செய் என்று தார்மீக ரீதியில் கூட கோர முடியாது, கோரவும் மாட்டார்கள். ஒரு விசாரணை நடக்கும் பட்சத்தில், அரச - புலி இரண்டும் மேலானதாக அது அமையும். இதைத்தான் சர்வதேச சமூகம் கோருகின்றது. இதைப் புலிகளும், அரசும் கூட்டாக மறுக்கின்றது. இரண்டு தரப்பும், தங்கள் மேல் போர்க்குற்ற விசாரணை செய்வதை விரும்பவில்லை.

மகிந்த குடும்பம் இந்த போர்க்குற்றத்தை செய்ததால், அவர் குடும்பம் அதிகாரத்தில் இருக்கும் வரை இதை அனுமதிக்க மாட்டார்கள். புலிகள் போர்க் குற்றம் செய்தால், அவர்கள் தங்கள் புலி அரசியலை தக்கவைக்கும் வரை, அவர்களும் இதை அனுமதிக்கமாட்டார்கள்.

புலிக்கும் - அரசுக்கும்  வெளியில் தமிழ்மக்கள் சுயாதீனமாக போராடினால் மட்டும் தான், போர்க் குற்றவிசாரணை என்பது தார்மீக ரீதியில் கூட சாத்தியமாகும். புலி தான் இதைக்கோரும் என்றால், அவர்களை நம்பித்தான் இது சாத்தியம் என்றால், தோற்றுப்போன அவர்களின் போராட்டம் போல் இதுவும் தோற்றுப்போகும். இதுமட்டும் அனைத்தும் தளுவிய ஒரு உண்மையாகும்.

பி.இரயாகரன்

23.05.2010