பொய், பித்தலாட்டம், முடிச்சுமாறித்தனம் இன்றி, புலிகள் அன்றும் இன்றும் உயிர் வாழ்வது கிடையாது. இப்படி மக்களை ஏய்த்து வாழ்ந்த இந்தக் கூட்டத்தின் அரசியல் என்பது, என்றும் நேர்மையற்றதாகவே இருந்து வந்ததுள்ளது. இன்று ஒரு கூட்டம் உயிருடன் இல்லாத  தலைவரையே, இருப்பதாக கூறும் மோசடியை தொடர்ந்து செய்கின்றது.

தான் அல்லாத மற்றவனை கொன்றதன் மூலம், மக்களை மிரட்டியது தான் புலிகளின் அரசியல் வரலாறு. இதன் மூலம், மக்கள்  மேல் புலிகள் தங்கள் அதிகாரத்தை சர்வாதிகாரமாக செலுத்தினர். இதுதான் பிரபாகரன் முன்னெடுத்த அரசியல். அதேநேரம், வடிகட்டிய ஒரு அரசியல் முட்டாள். தன்னைப் பாதுகாக்க, தன்னைப்போல் பல கொலைகாரர்களை உருவாக்கினான்;. அரசியல் பினாமிகளையும், அரசியல் எடுபிடிகளையும் கொண்டு, தனது முட்டாள்தனமான  கொலைகார அரசியலை தமிழ்த்தேசியம் என்று புகழ்ந்துரைக்க வைத்தான். இப்படித் தான் ஒரு அரசியல் முட்டாள், மாமனிதனாக மாறி மாமேதையானான்.

இதை மூலதனமாக்கி பலர், அவரைச் சுற்றி பிழைத்தனர். புலிக்குள் இருந்த சொத்தை அனுபவிக்கும் சண்டையில், தங்கள் முட்டாள் தலைவரையே காட்டிக் கொடுத்து பலியிட்டனர். இன்று இல்லாத பிரபாகரனையே இருப்பதாகக் கூறி, அவரையே விற்றுத் தின்ன முனைகின்றனர். அவர் உயிருடன் வாழ்கின்றார், அவர் வருவார் என்கின்றனர். இப்படி தேசியத்தின் பெயரில், ஒரு நாய்ப் பிழைப்பு. தாங்கள் காட்டிக்கொடுக்கப்பட்டு, அனாதையாக செத்துப் போன ஒருவரை, உயிருடன் இருப்பதாக கூறுகின்றனர். இப்படி ஒரு பகுதி மக்களை ஏய்த்து, புலி அரசியல் செய்ய முனைகின்றது.

ஒரு படுமுட்டாளை பப்பாவில் ஏற்றி வைத்திருந்தது. அவரை வீழ்த்த சதிசெய்து கொன்ற சதிகாரக் கூட்டம், அவர் இன்றி கூத்தாடுகின்றது. தலைவர் என்ற ஒரு பொய் விம்பம் தான், இன்று புலியின் ஒரு பகுதி மாபியாக்களின் அரசியல். மக்களின் எந்த அரசியல் உரிமைகளுமல்ல. மக்களை தங்கள் உரிமைகளின்பால் ஒருங்கிணைத்து வழி நடத்த முடியாத மலட்டுக் கூட்டம் இது. தங்கள் மாபியா அரசியல் வங்குரோத்தை மறைக்க, தலைவர் உயிருடன் வருவார் என்ற கண்கட்டு வித்தை மூலம் மக்களை கட்ட முனைகின்றனர்.

மக்கள் போராட்டத்தை மறுத்தவர்கள் இவர்கள். அதைப் போட்டுத் தள்ளியவர்கள் இவர்கள். அதன் மூலம் கிடைத்த அதிகாரத்தைக் கொண்டு, பணம் சம்பாதித்தவர்கள் இவர்கள். இதை மூடிமறைக்க பாசிசத்தை ஏவியவர்கள். தலைவரின் கீழ் பாசிசத்தை அரசியல் ஆணையாக்கிவிட, இதன் மேல் தான் மாபியாத்தனம் புற்றெடுத்தது. இது மக்களை அறிவற்ற மந்தைகளாக்கியது. உருவேற்றிய அரை முட்டாள்களை உருவாக்கி, அவர்களை தன்னுடன் வைத்திருந்தது. வடிகட்டிய முட்டாள் பிரபாகரன் போல், மக்களை அதன் பால் அரை முட்டாளாக்கினர். பகுத்தறிவற்ற பக்தியின் பின், முட்டாள்களை மூலதனமாக கொண்டனர். பிரபாகரனை முருகன் என்று கூறுமளவுக்கு, பகுத்தறிவற்ற சமூகத்தையே மாபியாக்கள் உருவாக்கினர். கொலைகாரத் தலைவரை பொம்மையாகக் காட்டி, தமிழ் மக்களின் உரிமைகளைப் புதைத்தனர்.

கடந்த ஒரு வருடத்துக்கு முன்பே, தங்கள் முட்டாள் தலைவரையே மாபியாக்கள் காட்டிக் கொடுத்தே கொன்றனர். மக்களை வகைதொகையின்றி கொன்று, சர்வதேச தலையீடு மூலம் தமிழீழம் காணப் புறப்பட்டனர்.  இதுதான் முட்டாள் பிரபாகரனின் இறுதியான மதிநுட்பமான யுத்த தந்திரமாக மாற்றப்பட்டது. ஏன் இதன் பெயரில் தான், பிரபாகரன் கூட இறுதியாக சரணடைந்தான். அவரை உயிருடன் பிடித்த பேரினவாதம், அவரை அவமானப்படுத்தி சித்திரவதை செய்துதான் கொன்றது. இப்படி வழிதவறிய அரசியலில் சூனியமாகவே படுத்துக்கிடந்த முட்டாள் பிரபாகரன், இதை தான்மட்டும் தனித்து முடிவெடுக்கவில்லை. அவரைச் சுற்றி இயங்கிய மாபியாக்களினதும், பினாமிகளினதும் வழிகாட்டல்களை நம்பி, மக்களை பணயம் வைத்து அவர்களைக் கொன்றனர். அவர்கள் கூறியபடி தான் சரணடைந்து, தமிழீழத்தை அடைய முனைந்தான். இப்படி வடிகட்டிய மாபியாக்களின், ஒரு முட்டாளாக பிரபாகரன் இருந்தான். அவரைச் சுற்றி இருந்த மாபியாக்கள், இறுதியுத்ததில் மக்களைக் கொன்று இதில் அரசியல் செய்யமுனைந்தனர்.

இதற்கு தலைமை தாங்கிய வடிகட்டிய முட்டாள், தனது இறுதிநாள் இதுவென்று தெரியாத கூட்டுச் சதிக்குள் தான் சரணடைந்தான். இது தான் தமிழீழத்துக்கான அடுத்த பாதை என்று நம்பி சரணடைந்தவனைத் தான், பேரினவாதம் வெற்றிகரமாக சர்வதேச மாபியாக்களின் துணையுடன் கொன்றது. அந்த முட்டாளின் மரணத்தை, மே 18 அன்று பேரினவாதம் உலகுக்கு அறிவித்தது. இதை அடுத்தே புலி மாபியா அமைப்பு பல கூறுகளாக உடைந்தது. புற்றுச் சிதைய அதற்குள் குடியிருந்த நாகங்கள், மே 18 முதல் மேலே வரத்தொடங்கியது.

இதன் அடிப்படையில் தான் மே 18 என்ற திடீர் இயக்கமும் கூடத் தோன்றியது. ஜேசுவை சிலுவையில் அறைந்து கொன்ற பின், அந்தக் கொலைக்கருவியாக இருந்த சிலுவையை கும்பிடும் கிறிஸ்துவ மதம் போல், மே 18 பெயரில் கூட இயக்கம் தோன்றியது.

புலிக்கு எதிரான நீடித்து இருந்த முற்போக்கு அணிகளை அரசியல் ரீதியாக உடைக்க, புலியினால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட அமைப்புத்தான் தமிழீழக்கட்சி. புலியின் உளவு அமைப்பாகவும், புலியல்லாத மாற்று அரசியலை சிதைக்கும் பணிதான், அதன் புலி அரசியலாக குறிக்கோளாக இருந்தது. அதை அவர்கள் புலம்பெயர் மற்றும் நாட்டிலும் வெற்றிகரமாக செய்த தமிழீழக் கட்சி, அதன் பின் திடீரென லரலாற்றில் இருந்து காணாமல் போனது. அது தலைவர் செத்தவுடன், மே 18 என்ற பெயரில் மீண்டும் வெளிவந்துள்ளது.

அரசு முன்னிலைப்படுத்திய திகதியை கொண்டு இயங்கும் மே 18 முதல் நாடு கடந்த தமிழீழ மாபியாக் கூட்டம் வரை, பல முனையில் பல முரண்பாடுகளுடன் தம்மை இன்று முன்னிலைப்படுத்துகின்றனர். இதுதான் எம்மைச் சுற்றிய இன்றைய புலி அரசியல் போக்குகளாகும். தோற்றுப்போன புலி அரசியலை தொடர்ந்தும் முன்னிறுத்தி, மக்களை ஏமாற்றி ஏய்க்க தமக்குள்ளான முரண்பாட்டுடன் தம்மை முன்னிலைப்படுத்துகின்றனர். தலைவர் வருவார் என்றும், தலைவர் இல்லை என்றும், தலைவரின் தன்னியல்பு தான் புலியை அழித்தது என்றும் கூறி, புலியை புலிப்பாசித்தையும் தங்கள் இனவாத அரசியல் மூலம் மீளக் கட்ட முனைகின்றனர்.

பி.இரயாகரன்
15.05.2010