தமிழீழ விடுதலைப் புலிகளின் கனவு என்பதே பலம் மிக்க இராணுவத்தைக் கட்டமைப்பது தான். இதன் அடிப்படையே ஒழுங்கமைக்கப்பட்ட பயிற்சி முகாமொன்றை உருவாக்குவது என்பதிலிருந்தே ஆரம்பிக்க முடியும் என நாம் கருதினோம். இதற்குரிய முழுமையான திட்டத்துடன் பிரபாகரன் முன்வருகிறார். திட்டமிட்டபடி மாங்குளத்தில் பயிற்சி முகாம் ஆரம்பிக்கப்படுகிறது. இது வரையில் எழுந்தமானமாக சந்தர்ப்பம் கிடைக்கின்ற வேளைகளிலெல்லாம் நாம் பயிற்சியெடுத்துக் கொண்டிருந்தோம். துப்பாகிகளைச் சுட்டுப் பழகுவது போன்ற சிறிய இராணுவ நடவடிக்கைகளுக்கான பயிற்சிகளை மேற்கொண்டோம்.

 

79 இன் ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பயிற்சி முகாமில் தான் திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்ட இரணுவப் பயிற்சி ஆரம்பமாகிறது. முகாம் துல்லியமாகத் திட்டமிட்டு அமைக்கப்பட்டது.

 

பாதுகாப்புடன் கூடிய இராணுவ முகாம்களில் பங்கர்கள் வெட்டப்பட்டு, மண்மூடைகள் அடுக்கப்பட்டு ஒரு சிறிய இராணுவ முகாம் போலவே காட்சிதருகின்ற பயிற்சிக்களம் தயாரிக்கப்பட்டது. முதல் தடவையாக இராணுவப் பயிற்சிக்கென்றே சீருடைகள் தயாரிக்கப்படுகின்றன. பயிற்சி வழங்கப்பட்ட அனைவருக்கும் சீருடைகள் வழங்கப்படுகின்றன. இராணுவப் பயிற்சி ஒழுங்கு முறைகள் கூடப் பிரபாகரனால் தயாரிக்கப்படுகின்றன. அவரின் நீண்ட நாள் இராணுவக் கனவோடு கூடிய திட்டங்கள் முதலில் நனவானது.

 

அரச இராணுவம் மக்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு அமைக்கப்படுகிறது. இதன் உள் நோக்கம் இராணுவத்தின் மனிதாபிமான,மென்மையான உணர்வுகளை முற்றாகத் துடைத்தெறிந்து, மக்களையும் அழிக்கவல்ல அரச இயந்திரத்தின் அலகாக உருவாக்குவது என்பதே. இதில் விசித்திரமானது என்னவென்றால் மக்கள் விடுதலைக்காகப் போராடுவதாகக் கூறிய நாங்களே எம்மையும் அறியாமல் மக்கள் பற்றற்ற இராணுவத்தை உருவாக்குவதற்கான அடிப்படையை மாங்குளத்தில் கட்டியெழுப்ப முனைந்தது தான்.

 

அனைத்திற்கும் மேலாக ஹிட்லரின் இராணுவ ஒழுங்கு முறைகளாலும் இராணுவ வெற்றிகளாலும் ஆளுமை செலுத்தப்பட்டிருந்த பிரபாகரன், ஜேர்மனிய இராணுவத்தின் ஒழுங்கு முறைகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பயிற்சிகளில் புகுத்த முற்படுகிறார். ஹிட்லரின் இராணுவம் கட்டுக்கோப்பானதாகவும் உறுதியானதாகவும் அமைந்திருந்தமையால் மட்டும் தான் வெற்றிகளைத் தனதாக்கிக் கொள்கிறது என்று கூறுகிறார்.

.

இராணுப் பயிற்சி ஒழுங்குமுறையின் முதல் பகுதியாக பயிற்றப்படுகின்ற அனைவரும் ஹிட்லரின் இராணுவம் போல அதே முறையில் சலூயுட் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. ஹிட்லரின் இராணுவத்தின் ஒழுங்குமுறையையும் கட்டுக்கோப்பையும் மிகவும் மதித்திருந்த பிரபாகரன் அதன் தமிழீழப் பிரதியாக விடுதலைப் புலிகளின் இராணுவம் அமைந்திருக்க வேண்டும் என்று விருப்பியிருந்தார். அதனை நானும் நிராகரிக்கவில்லை.

 

இவ்வேளையில் தான் முதல் தடவையாக பிரபாகரனுக்கு எதிரான எதிர்ப்பலைகள் தோன்றுகின்றன. சில உறுப்பினர்கள் ஹிட்லரின் சலூயுட் முறை என்பது தேவையற்றது என வாதிட்டனர். பிரபாகரன் அவர்களுக்கு எதிராக வாதிடுகிறார். கட்டுக்கோப்பான இராணுவம் அமைய வேண்டுமானால் அதற்கான வழிமுறைகளும் அமைந்திருக்க வேண்டும் என்கிறார். அதன் ஆரம்பமே இந்த ஹிட்லர் முறை என்று வாதிடுகிறார். குறிப்பாக, பிற்காலத்தில் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட குமணன் இதை எதிர்க்கிறார். அவரும் பயிற்சி முகாம் ஆரம்பிப்பதற்கான திட்டமிடல் விவாதங்களில் பங்குகொண்ட வேளையிலேயே இந்த விவாதம் ஏற்படுகிறது. இறுதியில் பிரபாகரன் முன்வைத்த அடிப்படையில் ஹிட்லர் முறை ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுதப்படுகிறது.

 

கைப்பற்றப்பட்ட இரண்டு இயந்திரத் துப்பாக்கிகள் தவிர, நாம் இந்தியாவில் சில இயந்திரத் துப்பாகிகளையும் சிறிய ரக ஆயுதங்களையும் வாங்கியிருந்தோம். ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவத்தின் பயிற்சி முகாம் போன்று அமைந்திருந்த எமது முகாமின் இராணுவ அணிவகுப்பு, முறையான உடற்பயிற்சி போன்றவற்றுடன் துப்பாகிகளால் சுட்டுப்பழகுதல் போன்ற செயற்பாடுகளையும் முன்னெடுத்தோம்.

 

மக்கள் இராணுவம் உருவாகி வளர்ச்சியடைகின்ற நிலையில் நிலையான இராணுவமும் பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட சரியான சூழல் உருவாகும் என்கிறது மாவோவின் இராணுவப்படைப்பு. நாம் நிலையான இராணுவத்தை எல்லாவற்றிற்கும் முன்னமே உருவாக்கிக் கொள்கிறோம். அதற்கான அனைத்து ஒழுக்கங்களும் ஒரு அரச இராணுவத்திற்கு ஒப்பானதாகத் திட்டமிடப்பட்டது.

 

மத்திகுழு உறுப்பினர்களில் முகுந்தன் (உமாமகேஸ்வரன்), நாகராஜா, பேபி சுப்பிரமணியம் ஆகியோர் இந்தியா சென்றுவிட்டதால் நானும் பிரபாகரனும் மட்டுமே பயிற்சி முகாம் குறித்த முடிவுகளுக்கு வருகிறோம். இந்தக் காலப்பகுதியில் யாழ்ப்பாணம் முழுவதும் இராணுவ மயப்படுத்தப்படுகிறது. இன்பம் செல்வம் என்ற இரண்டு இளைஞர்கள் இராணுவத்தால் சுட்டுக்கொலை செய்யப்படுகிறார்கள். இந்தக் கொலைகள் சமூகத்தின் அனைத்து மட்டத்திலும் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது.

 

பயிற்சிமுகாமிற்கு கிட்டு, செல்லக்கிளி,சாந்தன்,ஜோன்,சித்தப்பா,குமரப்பா,மாத்தையா போன்ற முன்னணி உறுப்பினர்கள் அழைக்கப்படுகின்றனர். பிரபாகரன் பயிற்சி வழங்குகிறார். இவருக்கு ஹிட்லர் இராணுவ முறையில் வணக்கம் செலுத்துவதும் திட்டமிட்டபடி இடம்பெறுகிறது.

 

இந்த வேளையில் இயக்கத்தினுள் இன்னொரு பிரச்சனையும் உருவாகிறது. வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ரகு. வீரவாகு என்ற இருவரைப் பிரபாகரன் பண்ணைகளில் பயிற்றப்படாமல், அவர்கள் குறித்து எந்த முன்னறிதலுமின்றி முகாமிற்குக் கூட்டிவருகிறார். பயிற்சி முகாமிற்குக் கூட்டிவரப்பட்ட இவர்களிருவருக்கும் ஏனைய முக்கிய உறுப்பினர்களுடன் இணைத்துப் பயிற்சி வழங்கப்படுகிறது. இது குறித்து பிரபாகரன் நான் உட்பட யாருடனும் ஆலோசிக்கவில்லை. இதற்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். மற்றவர்கள் அனைவரும் பண்ணைகளில் நீண்டகாலம் பயிற்றுவிக்கப்பட்டு, அவர்களின் உறுதித் தன்மை பரிசோதிக்கப்பட்ட பின்னரே இயக்கத்தின் பயிற்சி மட்டத்திற்கு உள்வாங்கப்படுவது வழமையாக இருந்தது. ஏற்கனவே பண்ணைகளில் பல உறுப்பினர்கள் நீண்டகாலம் இராணுவப் பயிற்சிக்காகக் காத்திருக்கும் வேளையில் திடீரெனெ இருவரைப் பிரபாகரன் கூட்டிவந்தது குறித்து சர்வாதிகாரப் போக்கு என்ற கருத்து எழுகிறது. இந்த நடைமுறைக்கு பிரபாகரனிடம் எந்த உறுதியான காரணமும் இருக்கவில்லை. பலர் இந்த பிரபாகரனின் இந்த நடவடிக்கை குறித்துக் கேள்வியெழுப்பிய வேளைகளில் அவரிடம் அதற்குரிய பதில் இருக்கவில்லை.

 

வல்வெட்டித்துறைச் சேர்ந்த இந்த இருவரும் குண்டுகள் செய்வதற்கான இரசாயனப் பொருட்களை அவர்கள் கல்விகற்றுக்கொண்டிருந்த ஹாட்லிக் கல்லூரியிலிருந்து திருடிய சம்பவத்திற்காகப் பொலீசாரால் தேடப்படுகின்றனர். பொலீசாரல் தேடப்படுவதால் இவர்கள் தலைமறைவாகவே வாழ்கின்றனர். குமணன், மாதி, ரவி போன்ற உறுப்பினர்கள் ஏனையயவர்கள் புறக்கணிக்கப்பட்டு இவர்களை இயக்கத்தினுள் உள்வாங்கியது குறித்து பலத்த ஆட்சேபனைகளைப் பிரபாகரனுக்கு எதிராக முன்வைக்கின்றனர்.

 

சில நாட்களின் பின்னர் மாணவனாகக் கல்விகற்றுக்கொண்டிருந்த சிறுவனான வீரவாகு இயக்கத்தில் இணைந்து தலைமறைவாக வாழ்வதாக அவரது குடும்பத்தினர் அறிந்துகொள்கின்றனர். இது தெரியவரவே குமரப்பா,மாத்தையா போன்றோரூடாகப் புலிகளைத் தொடர்புகொள்ளும் அவரது குடும்பத்தினர் வீரவாகுவை வீட்டுக்கு அனுப்பிவைக்குமாறு வேண்டுகின்றனர். வீரவாகுவும் வீட்டிற்குச் செல்ல விரும்பியதால் பிரபாகரன் அவரை அனுப்பிவைக்கிறார். வீட்டிற்குச் சென்ற அவர் பொலீசில் சரணடைந்துவிடுகிறார். இந்த நிகழ்ச்சி பிரபாகரன் மீதான அதிர்ப்தியை மேலும் அதிகரிக்கிறது. இதன் பின்னர் பிரபாகரனின் தன்னிச்சையான போக்கு குறித்துப் பலரும் எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம்பிக்கின்றனர். பிரபாகரனின் இராணுவ மனோபாவமும் அதற்குரிய சர்வாதிகாரத் தன்மையும் சிறுகச் சிறுக இயக்கத்தின் நிர்வாகத்துள் நுழைய ஆரம்பிக்கிறது. அதற்குரிய எதிர்வினைகளை எம்மோடிருந்த போராளிகளின் முன்னேறிய பகுதியினர் அவ்வப்போது ஆற்றத் தவறவில்லை.அனைத்து வாதப்பிரதிவாதங்களோடு பயிற்சி முகாம் சில நாட்கள் நடைபெறுகிறது. சில காலங்களின் பின்னர் பயிற்சி முகாம் முடிவடைந்தது என்று கூறி நிறுத்தப்படுகிறது.

இந்தக் காலப்பகுதியில் காந்தீயத்தில் அகதி நிவாரண வேலைகளை மேற்கொண்டிருந்த சந்ததியார் தானும் தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவிக்கிறார். பிரபாகரனைத் தொடர்புகொண்டு பேசுகிறார். பிரபாகரனும் சந்ததியாரும் பல தடவைகள் சந்தித்துக் கொள்கிறார்கள். அவரை புலிகளின் முக்கிய பொறுப்பில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று பிரபாகரன் விரும்புகிறார்.

 

உமாமகேஸ்வரனூடாக எமக்கு ஆதரவாக வேலைசெய்த முதல் பெண் ஊர்மிளா பொலீசாரால் தேடப்படுகிறார். கொழும்பில் வாழ்ந்த அவர் தலைமறைவாக வடக்கு நோக்கி வருகிறார். பெண் என்பதால் இலகுவாக அடையாளப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுவிடலாம் என அச்சம் நிலவியது.

 

லண்டனில் வசித்துவந்த கிருஷ்ணன் என்பவருடைய தலைமையில் எமக்கு ஆதரவாகச் சிலர் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடன் அன்டன் பாலசிங்கத்திற்குத் தொடர்புகள் இருந்தன. அன்டன் பாலசிங்கம் இந்தியாவிற்கு வந்து எம்மைச் சந்திக்க விரும்புவதாக எமக்குத் தகவல் வருகிறது. இதற்காகப் பிரபாகரனும் இந்தியா செல்ல விரும்புகிறார். பயிற்சி முகாம் மூடப்பட்டுவிட்டதால் இந்தியா சென்று பாலசிங்கத்தைச் சந்திக்கவும், ஊர்மிளாவை இந்தியாவிற்கு அழைத்துச் செல்லவும் இது சரியான சந்தர்ப்பம் என எண்ணிய பிரபாகரன் இந்தியா செல்ல ஏற்பாடுகளை மேற்கொள்கிறார். அப்போது சந்ததியாரைத் தொடர்புகொண்ட பிரபாகரன்,அவரோடு முன்னரே இணைந்து வேலைசெய்த உமாமகேஸ்வரனை இந்தியாவிற்கு தன்னோடு வந்து சந்திக்குமாறு அழைக்கிறார்.

 

சந்ததியாரும் இதற்கு இணங்கவே, பிரபாகரன், ஊர்மிளா,சந்ததியார், கலாபதி ஆகிய நால்வரும் எமது விசைப்படகில் இந்தியா செல்கின்றனர். அவர்களைத் தொடர்ந்து ரவியும் பாலாவும் இந்தியா செல்கின்றனர்.

 

01.20 வயது கூட நிரம்பாத இளஞன் தம்பி பிரபாகரன்-ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர்

 

02.70களில் பிரபாகரன் எமக்கெல்லாம் ஒரு ஹீரோ – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர்

 

03.தமிழீழ விடுதலைப் புலிகளின் தோற்றம் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (மூன்றாம் பாகம்)

 

04.முக்கோண வலைப்பின்னலைத் தகர்க்கும் புலிகளின் முதற் கொலை – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்(பகுதி நான்கு) : ஐயர்

 

05.பற்குணம் – இரண்டாவது உட்படுகொலை – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பகுதி ஐந்து) : ஐயர்

 

06.புலிகளின் உறுப்பினராகும் உமா மகேஸ்வரன்- ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் ஆறு) ஐயர்

 

07.புலிகளின் தலைவராகும் உமாமகேஸ்வரன் : ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் ஏழு) : ஐயர்

 

08.புதிய பண்ணைகளும் புதிய போராளிகளும் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் எட்டு)

 

09.சக போராளிகளுடனான எனது அனுபவக் குறிப்புகள் – ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் ஒன்பது)

 

10.நிசப்தம் கிழித்த கொலைகள் ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் ஐயர் பாகம் பத்து

 

11.கொலைகளை உரிமைகோரும் புலிகள்– ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பதினொன்று)

12.அடிமைச் சாசனம்- புலிகளின் எதிர்வினை – ஈழப்ப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 12)

 

13 வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்ட வங்கிக் கொள்ளை-ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 13)

 

http://inioru.com/?p=12399