சீலன் எழுப்பிய கேள்வி மிகச் சரியானது. இப்படி எழுப்பப்படும் போதுதான், நாம் எப்படி தோற்றோம் என்பதும், தோற்கடிக்கப்பட்டோம் என்பதும் அனைவருக்கும் தெரியவரும்.  அரிவாள் என்ன, என்னை மட்டும் வெட்டக் கூடாதோ? சரியாகத்தான் அரிவாள் விழுகிறது. எத்தனையோ போராளிகளின் உயிரைப்பறித்தெடுத்த கொலைகாரர்கள் இயக்கத்தில் அராஜகம் தாண்டவடமாடிய போது, நாங்கள் என்ன செய்து கொண்டிருந்தோம் என்பது மிகச் சரியான கேள்வியே.

நானும் வெட்டுப்பட வேண்டிய ஆள் தான். சீலன் குறிப்பிடும் சுகந்தன் என்ற இயக்கப்பெயர் என்னுடையது. நாங்கள் எல்லோரும் கூட்டாக இந்த அரசியல் போக்குக்குள் அமிழ்ந்தித்தான் இருந்தோம். தீப்பொறி நேசன் முதல் சந்ததியார் ஈறாக.

 

சுழிபுரம் படுகொலை தான், எங்களைத் திகைக்க வைத்தது. திரும்பிப் பார்க்க வைத்தது. அதுவரை சந்ததியார் போன்ற சக்திகளில் நாம் அதிகளவு நம்பிக்கை கொண்டிருந்ததன் காரணமாய், அரசியல் போக்கில் எங்களுக்கு ஒரு கண்மூடித்தனம் இருந்தது.

 

சந்ததியாரோடு 1979ம் ஆண்டு காந்தீயப் பண்ணைகளில் நான் இணைந்து வேலை செய்யும் சந்தர்ப்பம் தான், என்னை அரசியலுக்குள் இழுத்தது. இறம்பைக்குளம் பாலமோட்டை செல்வாநகர், செட்டிகுளம் கல்லாறு கந்தசாமி நகர் போன்ற பண்ணைகளில், சந்ததியார், டாக்டர் இராஜசுந்தரம், டேவிட் ஜயா போன்றவர்கள் அகதிகள் புனர்வாழ்வுப் பணிகளில் இளைஞர்களை ஈடுபடுத்தினர். நாங்கள் இரு உயர்தரவகுப்பு விடுமுறைக்காலத்தில் பண்ணைகளில், குடிசைகள் நிர்மாணிப்பது, காடுகள் வெட்டுவது போன்ற பணிகளில் ஈடுபட்டோம். சந்ததியார் தான் இவற்றை ஒழுங்குபடுத்தினார். எங்களோடு காடுகள் வெட்டும் பணிகளில், கோடரிகளோடு சந்ததியாரும் இணைந்து கொள்வார். டாக்டர் இராஜசுந்தரமும் இணைந்து கொள்வார். அவர்களுடைய அர்ப்பணிப்புகள் தான், அன்று எங்களை ஈர்த்தது.

 

தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகத்தின் யாழ்ப்பாணக் கிளை இதன் மூலம் சித்தன்கேணி கணேச வித்தியாசாலையில் அங்குரார்ப்பணம் ஆயிற்று. இந்த அங்குரார்ப்பணத்தை ஆரம்பித்து வைக்க அன்று டேவிட் ஜயா சித்தன்கேணிக்கு வருகை தந்திருந்தார். நானும் சந்ததியாரும் இணைந்து இக்கூட்ட ஒழுங்குகளை செய்தோம். வருகை தந்திருந்தவர்கள் சிறுதொகையினர் தான் என்றாலும், இக்கிளையின் தலைவராக அன்றைய விக்டோரியா கல்லூரி அதிபர் திருவாளர் க.அருணாசலம் அவர்கள் பொறுப்பேற்றார்கள்.

 

அதன் பின்னர் கல்லூரி ஆசிரியர்களின் நிதியாதரவு வேண்டி நாங்கள் கல்வி வட்டாரத்திலுள்ள அனைத்துக் கல்லூரி ஆசிரியர்களின் தயவையும் நாடினோம். ஆசிரியர்களின் சம்பளப் பணத்தின் நன்கொடையை மாதாமாதம் வேண்டி, கல்லூரி அதிபர்களின் காரியாலய வாசல்களுக்கு சம்பளதினத்தன்று சைக்கிள்களில் சென்று வருவோம். இங்கு என்னோடு அத்தனை மைல்களையும் சைக்கிள் மிதித்து வந்தவர் யார் எனக் கேட்பீர்கள். கண்ணன் எனப்படும் சோதீஸ்வரன். இவர் வடலியடைப்பைச் சேர்ந்தவர் என தெரிந்திருக்கும் உங்களுக்கு. அப்படி மக்களுக்காக அன்று வாழ்ந்த இவர்களை நான் கண்டேன். அவர்களின் தலைமறைவு வாழ்க்கையிலும் மக்களுக்கான அவர்களது அன்றைய பணியில் எள்ளளவும் சந்தேகமுமிருக்கவில்லை எங்களுக்கு. இதே போலத்தான் மட்டக்களப்பு வாசுதேவாவுடனான எனது முதல் சந்திப்பு எனக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது. உடுத்த உடுப்புக்கு மாற்றுடையில்லாத, சல்லடையாக கிழிந்து போன சேட்டும், உப்புப்பூர்த்திருந்த அழுக்கான ரவுசரும், அறுந்த செருப்பும், பசியால் வாடிப்போய் துவண்டுபோயிருந்த குரலும் எனது நினைவுப்பதிவுகள். அரசபடைகளால் தேடப்படும் நிலையில் தன்னுடைய குடும்பம் மற்றும் மனைவியை பார்ப்பதற்கே, இருண்டதன் பின்னால் நள்ளிரவுகளில் கள்வர்கள் போல் சென்று கிசுகிசுத்த தாழ்ந்த குரலில் மட்டுமே பேசித்திரும்பும் நிலைமைக்காளான வாசுதேவா போன்றவர்களின்  அன்றைய அர்ப்பணிப்பு பொய்யாக இருக்கவில்லை. உண்மையில் தேநீருக்கு கூட பணம் இல்லாமல், பசி தலையைச் சுற்றும் நிலையிலேயே அவர் அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு வந்திருந்தார். இவரை முன்னெப்போதும் காந்தீயப் பண்ணைகளில் சந்தித்ததாக ஞாபகம் இல்லை. உணவும் தேநீரும் வாங்கிக் கொடுத்து அவருக்கு தென்பு வந்ததன் பின்னாலேயே அவரால் எங்களோடு பேச முடிந்தது.

 

இவர்களை, இவர்களது அர்ப்பணிப்புகளை, அவர்கள் மக்களுக்கு தலைவழங்கும், சேவை செய்யும் அவர்களது அன்றைய பண்புகளை அன்று நாங்கள் கண்டோம். ஆனால் அதே நபர்கள் அதிகாரமும், பணமும், வந்தபோது தலைகீழானார்கள். அமைப்பின் மத்தியகுழு அங்கத்தவர்கள் ஆனபோது, தங்கள் முந்தைய பண்புகளிலிருந்து விலகினர். பிற்காலத்தில் தமது அரசியலில் பம்மாத்து வாசுவாகவும் அதிகார பதவிவெறி கொண்டு உட்படுகொலைகள் ஈறாக நடாத்தி முடித்த இயக்கத்தின் பாதுகாவலராக மாறி நின்ற சோதீஸ்வரனாகவும்(கண்ணன்) மாறிப் போனார்கள்.

 

இது எப்படி நிகழ்ந்தது. அரசியலற்ற போக்கும், நாம் கொண்டிருந்த அரசியலின் தவறான போக்கும் தான், இதை உருவாக்கியது.  ஒரு மக்கள் சார் அரசியல் ஆணையில் இல்லாமல் ஒரு ஸ்தாபனக் கோட்பாடு இல்லாமல் எவரும் எங்கும் புலிகளைப் போலவே இராணுவவாதப் போக்கில் நடந்து கொண்டார்கள். இந்திய பிராந்திய மேலாண்மையை அனுபவமாக தந்த வங்கம் தந்த பாடம் (சந்ததியார் முதலாக) நூல் வெளியிட்டவர்கள் இவர்கள். ஆனால் இந்தியப்பருந்தின் இறகுக்குள்ளும் கோழிக்குஞ்சுகள் பாதுகாப்புத் தேடலாம் என்ற போக்கில் விளைந்ததே இந்தியப் பயிற்சி முகாம்கள். அங்கேயே உட்படுகொலைகளும் சித்திரவதைகளும் கேட்பாரின்றி நடந்தேறின என்பதை இலங்கையில் சுழிபுரத்தில்; ஆறு புலிப்போராளிகளின் குரூரக் கொலைகள் அம்பலமான பின்னரே தளத்திலிருந்த சக்திகள் சிறிது சிறிதாக இவற்றை அறிந்து கொண்டார்கள்.

 

பல அரசியல் போக்கிரிகளின் திறந்த கூடாரமாக இயக்கத்தின் மத்தியகுழு இருந்தது. மத்தியகுழுவிற்குள் செல்ல எந்த அரசியல் தகுதியும் கடப்பாடும் யாருக்கும் தேவையானதாக இருக்கவில்லை. அடிப்படையான மக்கள் நேசம் கூட இல்லாத பெரும்பான்மையின் கூட்டும் அவர்களின் அதிகாரமுமே அங்கு நிலவியது. இந்த அதிகாரத்திற்குள் உள்நுழையவே சிவராம் போன்ற அரசியல் தகிடுதத்திகள் பகீரதப் பிரயத்தனம் செய்தார்கள். இந்தப் போக்குகளுக்குள்ளேயே மத்தியகுழுவிலிருந்த கொலைகாரன் பரந்தன் ராஜன் அவனது கூட்டாளிகளாக அசோக் ஈஸ்வரன் ஜென்னி முரளி போன்றோர் ENDLF ஆக முளைத்தார்கள் எனின் அதற்கான வித்து எங்கிருந்து வந்தது? வங்கம் என்ன பாடத்தை தந்தது ?

 

முன்னர் மேலே குறிப்பிட்டிருந்த அர்ப்பணிப்புள்ள நபர்கள் ஊடாக வெளிப்பட்ட ஆரம்பகால அரசியல், பிற்காலத்தில் அடிபட்டுப் போனதற்கான காரணங்களை நாங்கள் உணராமல் பெரும் தவறு செய்தோம். இவர்களது அன்றைய அர்ப்பணிப்புகள், என்றும் அரசியல் தடம் புரளாதிருக்கும் என்ற நம்பிக்கை எங்களது தவறே தான். அதுவே தான் எனக்கு இயக்கத்தின் மேலிருந்த அபிமானம் நீண்டு போகக் காரணமாகவிருந்தது. அத்தோடு புதிய சக்திகளான எங்களோடு நடமாடிய கேசவன் போன்றோரின் அரசியல் தோழமைகள், இதை வெல்லும் என்று நம்பிக்கை கொண்டோம். அவர்களது அரசியல் போக்குகளை நாங்கள் உள்வாங்கியபோதும், எங்களது உட்கட்சிப் போராட்டத்துக்கான சமிக்ஞைகள் அவர்களுக்கு தெளிவாக தெரிந்திருந்தபோதும், அவர்கள் எங்களை அரசியல் ரீதியில் அணுகவில்லை. நாங்களும் கூட அதைச் செய்யவில்லை. அவர்கள் எங்களது மிகச் சாதாரண ஆதரவுகளை தேடி வரும் அளவுக்கு, ஒருவித நம்பிக்கையை (அரசியல் அடிப்படையிலேயே தான்) மட்டும் கொண்டிருந்ததை மட்டுமே நான் அறிவேன்.

 

இன்றைய மே18 ஜான் மாஸ்ரருக்கு பாதுகாப்பான மறைவிடம் தேடி, என்னை அன்று தீப்பொறியிலிருந்த நபர் (பெயர் குறிப்பிடவில்லை) அணுகினர். இதன் போது ஜான் மாஸ்ரருடைய இருப்பிடத்துக்கு உள்ளுரில் என்னுடன் இருந்த பரந்தாமன் மற்றும் சின்னண்ணா அவர்களுடன் இணைந்து, அவரை நாங்கள் பொறுப்பெடுத்துக் கொண்டோம். தீப்பொறியின் மேலிருந்த ஈர்ப்பும் தோழமையும், புளட்டோடு நடத்தவேண்டிய போராட்டமும் எம்முன் இருந்ததால், இது எங்கள் தலையாய கடமையாயிற்று. அன்றைய காலங்களில் அரசபடைகள் வெளிவருவதில்லை. அனைத்து இயக்கங்களின் கண்களிலும் மண்ணைத் தூவியே, இதைச் செய்ய வேண்டியிருந்தது. புலிகள் இயக்கம், ரெலோ மற்றும் நாங்கள் மிகவும் அஞ்ச வேண்டிய புளட் இயக்கம், எங்களையும் மிக அருகிலேயே இருந்து கண்காணிக்கும் நிலையில் இருந்தது.

 

நாங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட வீடு மிகவும் ஓதுக்குப் புறமாகவிருந்த, ஒரு அமைதியான வீடு. அதுவே தான் இன்றைய தேசம்நெற் ஜெயபாலனின் வீடு. இது ஒரு போற்றக்கூடிய குடும்பம். தனது மூத்த மகனை புளட் இயக்கத்துக்கு, இந்த இயக்கம் தாரை வார்த்திருந்தது. (வசந்தன் என்ற இயக்கப்பெயர் கொண்ட இவர், பின்நாட்களில் வன்னியில் புலிகளால் நடாத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டார். இவர் புளட் இயக்கத்தில் சுந்தரம் படை மூலமாக அதில் இணைவதற்கு முன்பாக, இவருக்கு நான் உயர்தரக் கணிதபாடத்தில் ஆசிரியராக இருந்தேன். எனது கல்லூரியிலேயே கல்வி கற்ற இவரது சிறுபிராயத்தின் அப்பாவித்தனமும், அப்பிராயத்திற்கேயுரிய அவரது குறும்பும் என் கண்முன் தெரிகிறது) இந்தியாவில் பின்தளத்திலிருந்த இவரோடு (தமது மூத்த மகனுடன்) கடிதத் தொடர்பிலிருந்த பெற்றோர், தேவையில்லாத விபரங்களை தமது மகனுக்கு கூட (வசந்தனுக்கு) அறியத்தராமல் வெறும் புளட் தோழர் ஒருவருக்கு தங்குமிடம் தந்திருக்கின்றோம் என்று மட்டுமே கூறி இருந்ததாக அறிகிறேன். உண்மையில் தன்னுடைய பெற்றார் பாதுகாப்பது தீப்பொறியின் ஜான் மாஸ்டர் தான் என அறிந்திருந்தால், வசந்தனின் எதிர்வினையும், அதனால் ஏற்பட்டிருக்கக் கூடிய விளைவும் வேறுவிதமாகவே இருந்திருக்கும் என நான் ஊகிக்கிறேன்.

 

ஏனெனில் வசந்தனை நான் (சீலனைச் சந்தித்த அதே தடவை – மறுதடவை நான் முரளி என்கின்ற செந்திலை மாணிக்கம்தாசனின் கொமாண்டோக் குறூப்பிலிருந்து விடுவித்து பெற்றோரிடம் சேர்ப்பதற்காக வந்திருந்தேன். இவ்வேளையே நான் அழகன் என்ற அனைத்து முகாம் மருத்துவப் பொறுப்பாளரையும் சென்னையில் சந்தித்துக் கொண்டேன்) பின்தளம் வந்திருந்தபோது, புதுக்கோட்டை பஸ்நிலையத்தில் எதிர்பாராமல் சந்தித்தேன். அவர் பெரியய்யாவின் மிகுந்த விசுவாசியாகவே தன்னை வெளிப்படுத்தியிருந்தார். இவருடன் நான் இயக்க உட்படுகொலைகளையும், அதனது அரசியல் தடம் புரளல்களையும் பம்மாத்துக்களையும் கிடைத்த அந்த நிமிடங்களில் பேசியபோது, புளட் இயக்க அரசியலை இவரோடு விமர்சித்த போது அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார். பின்னர் அவரது பதிலில் பெரியய்யாவின் கைகளை பலப்படுத்துவதே தனது தற்போதைய கடமை என்றார். இந்த இக்கட்டில் பெரியய்யாவை (உமாமகேஸ்வரனை) தனித்து விட முடியாது என்றார். சந்ததியார் பற்றி வெறுப்பாக பேசினார். எனவே தீப்பொறி என்பது அவரது பார்வையில் துடைத்தெறியப்பட வேண்டிய குழுவாகவே இருந்திருக்கும்.

 

ஜான் மாஸ்ரரின் இந்தப் பின்னணிகளை, நாங்கள் அந்தக் குடும்பத்தில் எவருக்கும் தெரிவிக்கவில்லை. அவர்களோ எதையும் துருவித்துருவிக் கேட்பதாகவும் இருக்கவில்லை. தங்களை விட்டுப் போன தங்கள் மகனின் சந்தோசமும், இப்படியான கடமைகளில் பெற்றாராகிய தாங்கள் ஈடுபடுவதில் தான் உள்ளது என, கடிதப் பரிமாற்றத்தில் இதனை அறிந்துகொண்ட மகன் குறிப்பிட்டு எழுதியதாக அவர்கள் சந்தோசமடைந்தார்கள். இங்கு சிக்கல் என்னவென்றால் வசந்தன் தங்கள் பெற்றார் பாதுகாப்பது யாரை என்பதை அறியும் நிலை ஏற்படின், அன்று ஜான் மாஸ்ரரின் பாதுகாப்பு என்னவாகியிருக்கும் என்பது தான்.

 

வெள்ளைவெளேரென மாநிறத்தில் இருந்த ஜான் மாஸ்ரரை யார் கண்ணையும் துருத்தாமல் அவர்களுடைய ஆர்வக்கோளாறைக் கிளறாமல் இடம் மாற்றுவது அல்லது அவர் நடமாடித் திரிவது என்பது கடினம் தான். ஆனாலும் வீட்டுக்கு வந்து போவோருக்கு எப்படி பதில் சொல்வது என்ற எந்தக் கேள்வியோ தயக்கமோ இன்றி, அவர்கள் ஜான் மாஸ்ரரை பாதுகாத்து தருவதற்கு முன்வந்தார்கள். பூட்டிய அறைக்குள் வைத்து ஜான் மாஸ்ரரை பாதுகாப்பதற்கு அவர்கள் அந்தச் சூழலிலும் முன் வந்தார்கள். எந்த விரும்பத்தகாத நிகழ்வுகளும் இன்றி அன்று அவ்வாறு ஜான் மாஸ்ரரின் உயிர் பாதுகாக்கப்பட்டதில், இந்தக் குடும்பம் ஆற்றிய பங்கு அளப்பரியது. ஜெயபாலன் அப்போது துருதுருவென ஓடிவிளையாடும் சிறுவயதினன்.

 

இதுவே ஜான் மாஸ்ரரை நான் இறுதியாக சந்தித்த காலங்கள். இவர் பாதுகாப்பாக இருப்பதை உறுதி  செய்ததன் பின்னால், ஜான் மாஸ்ரருடன் நான் நீண்ட சம்பாசணைகளையோ அரசியல் விவகாரங்களையோ பேசவில்லை. அவரை அவருடைய பாட்டிலேயே விட்டுவிட்டேன்.  முன்னர் அதிகம் ஜெயபாலனின் வீட்டுக்கு போய் வந்த நான், இப்போது அங்கு போவதை நிறுத்திக் கொண்டேன். எனது நடமாட்டமே யாருக்கும் மூக்கை நுழைக்க வழிவகுத்துவிடும் என்ற அச்சப்பாடு, எனக்கு அப்போதிருந்தது.

 

ஜான் மாஸ்ரருடன் ஏற்பட்ட இச்சிறு தொடர்பு எனக்கு என்றுமே, அதன் பின்னால் இல்லாது போனது. மீண்டும் தீப்பொறிக் குழுவினர் அவரைப் பாரம் எடுத்து இடம் மாற்றினார்கள் என்று தகவல் எனக்கு தரப்பட்டபோது, நான் ஒரு நல்ல ஒரு காரியத்திற்கு எனது சிறுபங்கையும் செலுத்தியதை இட்டு திருப்தி கொண்டேன்.

 

ஜான் மாஸ்ரர் கனடாவில் இருக்கின்றார் என்ற விபரம், ஜெயபாலனை இலண்டனின் சந்தித்துப் பேசும் வரை எனக்கு தெரியாது. இவர் தமிழீழக் கட்சியில் இருந்தார் என்பன போன்ற விபரங்கள் எதையும், நான் மே 18 இயக்கம் வெளிப்படும் வரை அறிந்திருக்கவில்லை.

 

புலிகளுக்கு ஆட்காட்டியாக தமிழீழக்கட்சியினர் இருந்தனர் என்பது மட்டும் தெரிந்தது. கேசவன் (டொமினிக் - தீப்பொறி மற்றும் புதியதோர் உலகம் ஆசிரியர்) யாழ்ப்பாணம் சென்றிருந்தவேளை புலிகளால் கைது செய்யப்பட்டு காணாமல் போனார் என்பதற்கும், தீப்பொறியின் நீட்சியாக விழைந்த தமிழீழக் கட்சியானது புலிகளிடம் சோரம் போனது என்பதை முடிச்சுப்போடும் போதும், ஜான் மாஸ்ரர் கேசவனைப்பற்றி எதுவுமே பேசாதிருப்பது எவ்வாறு? அந்த தீப்பொறி அரசியலுக்கும், தமிழீழக் கட்சிக்குமான அரசியல் உறவு என்ன? அந்தப் பாய்ச்சலில் கடக்கப்பட்டது என்ன? அல்லது அதன் தொடர்ச்சி என்ன? கேசவனுக்கு அஞ்சலியோ, கொலைக்கு கண்டனமோ இன்றி அவரது கைது, கொலை என்பனவற்றை இவர்கள் பேசாதிருப்பது மௌனம் கொள்வது எங்ஙனம்? என்ற பல கேள்விகள் எழுகின்றது.

 

பம்மாத்து வாசு, சோதீஸ்வரன், உமா மகேஸ்வரன், சங்கிலி (கந்தசாமி), வாமதேவன், செந்தில், பாபுஜி, மொட்டை மூர்த்தி, பரந்தன் ராஜன், மாணிக்கம்தாசன், வெங்கட், சிவராம், அசோக், முரளி, மாதகல் பொன்னுத்துரை, ஈஸ்வரன், ஜென்னி... போன்றவர்களிடமிருந்து விலத்தி ஓடிப்போன தீப்பொறியின் அரசியல், தமிழீழக்கட்சியின் தோற்றத்தோடு எப்படித் திசைமாறிப் போனது? இந்தக் ஆள்காட்டிக் கட்சியின் தோற்றத்துக்கு, அங்குரார்ப்பணம் செய்ய பலியிடப்பட்டவரா தீப்பொறிக் கேசவன் என்ற சந்தேகம் இப்போது வலுப்பெறுகிறது.
  
இனி மீண்டும் சீலனின் கேள்விக்கு வருவோம்.

 

உங்களை எல்லாம் அனுப்பிய பிற்பாடும் ஒருபுறத்தில் இந்த புளாட்டின் அரசியல் அலங்கார வார்த்தை ஜாலங்களிலும், மறுபுறத்தில் புளாட்டுக்குள் இருக்கக்கூடிய மேற்குறிப்பிட்ட புரட்சிகர சக்திகள் வெல்லும் என்ற நம்பிக்கையும் கொண்டு நாம் இயங்கினோம். இவ்வளவு பிரமாண்டமான இயக்கத்திலே, ஒரு சிறு குழுவின் கொலைகரங்களை துவம்சம் செய்ய கனவு கண்டோம். நமது தோழமை அவர்களையெல்லாம் தூரத்தே துரத்தியடிக்க வேண்டுமாயின், அவர்களை மக்களிடம் அம்பலமாக்காமல் முடியாது என்பது தெரிந்திருந்தும், அதில் நாங்கள் தோற்றோம் என்பதே எமது சுயவிமர்சனம். வெல்லும் வல்லமை  தோழர்கள் மத்தியில் இருந்தது. அதுவே தான் தள மாநாடு வரை புளாட்டினை இழுத்து வந்தது. அதுவேதான் இச்சக்திகளை வரலாற்றில் தூக்கி மூலையில் போட்டது.

 

இது ஒரு புறம். மறுபக்கதில் எனது பங்கு என்ன என்பதை நான் இருதடவைகள் (இரண்டாவது முறை சொந்தமுயற்சிலேயே பின்தளம் சென்றேன். தளமாநாடு நடந்து முடிந்த கையோடு) இந்ந நரிகளின் குகைக்கு வந்து, அவர்களை பின்னர் அம்பலப்படுத்தியதைப் பற்றியும் என்னை அணுகிய பெற்றோரின் கண்ணீருக்கு அவர்களது பிள்ளைகளை மீட்டெடுத்துத் தந்தேன் என்பதையும், முன்னர் எழுதியிருந்தேன். பின்தளத்தில் B காம்ப் ஈறாக, நான் வந்திருந்தபோது சீலனைச் சந்தித்து அவர் உயிருடன் உள்ளார் என்ற நிம்மதியான தகவலை அவரது பெற்றோருக்கு எடுத்துச் சென்றேன் என்பதையும் குறித்துக் கொள்ள விரும்புகிறேன்.

 

மக்கள் மத்தியில் கொலைகாரர்கள் அம்பலப்பட்டு போகும் வண்ணம், இந்த போக்குகளுக்கு எதிராக அமைப்பின் அணிகள் போர்க்கொடி தூக்குமாறும் எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசத்தொடங்கினோம். நாங்கள் பிரதிநிதித்துவம் செய்த மாணவர் அமைப்புகள், மக்கள் மன்றுகளில் நாங்கள் இவற்றை அம்பலப்படுத்திப் போராடினோம். இதை நான் ஏற்கனவே எனது கட்டுரையில் நான் தெரிவித்திருந்தேன். இந்த அம்பலப்படுத்தல்களை, எத்தனையோ தோழர்கள் செய்தார்கள் என்பது ஆவணமாகும். தமிழீழ ஆவணச் சுவடிகள் (www.tamilarangam.net) என்ற இணையத்தில் புளட்டினை மறுத்தோடியவர்களின்,  தீப்பொறியின் ஆவணப்பகுதிகளில் பார்வையிடலாம்.

 

கட்டுரைகளின் இணைப்புகள்

 

ஈ.என்.டி.எல்.எவ் இன் திட்டத்திற்கு நீங்கள் தளத்தில் இரகசிய ஏஜென்டுகளை உருவாக்கினீர்கள் - (பகுதி 3)

 

பாலியல் பலாத்காரம் செய்ததாக துப்பாக்கி முனையில் சொல்ல வைத்தது, அசோக்கும் குமரனும் தலைமையிலான புளட் (பகுதி 2)

 

"உண்மைகள் என்றும் உறங்குவதில்லை" - என்றும் பதில் சொல்லாத அசோக்கின் அரசியல் "நேர்மை" (பகுதி 1)