Sun01202019

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் … மனம் எரிஞ்சு சொல்லுறன் என்ர அண்ணனைக் கொண்டவன் அழிஞ்சு போவான் ...... மா.நீனா

… மனம் எரிஞ்சு சொல்லுறன் என்ர அண்ணனைக் கொண்டவன் அழிஞ்சு போவான் ...... மா.நீனா

  • PDF

யுத்தம் முடிந்து ஒரு வருடமாகப் போகிறது. இங்கு இரு முக்கிய தேர்தல்கள் நடந்து முடிந்தது. எந்த விதமமான அரசியல் முரண்பாடும் நாட்டில் இல்லை என்பது போன்ற மாயையுடன், அரசியல் நாடகங்கள் நடந்தேறுகின்றது.  இங்குள்ள தமிழ் சமுதாயம் எதோ ஒன்றும் நடவாதது போல், மிகவேகமாக நகர்ந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக யாழ்பாணத்தில் பொருளாதாரமும், கலை கலாச்சார வாழ்நிலையும் பாரிய மாற்றங்களை கண்டவண்ணமுள்ளன.

சந்திக்கொரு மதுபான சாலையும், நகரின் எங்கு திரும்பினாலுமுள்ள மின்பொருள் விற்பனை நிலையங்களும், சர்வதேச உணவு பரிமாறும் உணவகங்களும் மக்களின் ஒரு வருட காலத்தில் ஏற்பட்ட உடை நடை பாவனை மாற்றமும், யுத்த பூமியின் எச்சங்களை தேடினாலும் கிடைக்காத நிலையிலுள்ள நிலைமைகள்.
 
இதற்கு வீதிகளை செப்பனிடவும், தாகத்துக்கு குடிக்கக்கூட தண்ணீர் ஏற்பாடு செய்ய வக்கில்லாத அரசின் வடக்கின் வசந்தமோ, மஹிந்த சிந்தனையோ, அதன் அடிவருடி டக்ளசின் சிந்தனையோ காரணமல்ல. எல்லாம் புலம் பெயர்ந்த எம் மக்கள் ஒவ்வொருவரின் இரத்தம் சிந்திய பணம் தான் காரணம்.
 
இப்பகட்டான வெளிப்படையான மாற்றங்களுக்கு அப்பால், தற்கொலை, உளவியல் வியாதிகள், பெண்கள்; குழந்தைகள் மீதான வன்முறைகள், சாதி ஊர் சார்ந்த முரண் அடிப்படயிலான சண்டைகளும் வெட்டுக் கொத்துகளும், கடத்தல், கப்பம், கொள்ளைகள், கொலைகளும் நாளாந்த செய்திகளாகவுள்ளது.

   

இதற்கிடையில் பலநூறு குடும்பங்கள் தமது சிறைப்பட்ட, காணாமல் போன மகளை, மகனை, கணவனை விடுதலை செய்யக்கோரி, அரசியல் வாதிகளினதும், ஆதிக்க மனிதர்களினது வீட்டுக்கும், அலுவலகத்துக்கும் நடையாய் நடக்கின்றனர். இவர்கள் பலரின் உறவுகள் உயிருடன் அரச சிறையில் உள்ளனர். இறுதி யுத்தத்தில் சிறைப்பட்டவர்கள்.   
 
இன்னும் சில குடும்பங்கள் தமது காணமல் போன உறவினை தேடுகின்றனர். தமது   உறவுகள்  தொலைந்து போனதற்கு  அரசு காரணம் அல்ல. தமிழ் தேசிய விடுதலைக்காக போராடிய இயக்கங்களே இதற்கு காரணமானவர்கள் என்கின்றனர் குடும்பத்தினர். பலர் தம் உறவுகள் உயிருடன் இருப்பதாக நம்பவில்லை. ஆனாலும் எப்போது, எப்படி, எவரால், என்ன காரணத்துக்காய் அவர்கள் இறந்தனர், என்ற கேள்விகளுக்கு பதில் தேடியே அலைகின்றனர். இவர்களின் கேள்விகளுக்கு பதில் தரக்கூடிய பலர், இன்று புலம் பெயர்ந்து வாழ்கின்றனர். புலம் பெயர்த்தவர் இணையங்களில் பட்டும் படாமல், தொட்டும் தொடாமல், மறைமுகமாக பல மனித அவலங்களுக்கு காரணமானவர்கள் பற்றி எழுதப்படுகிறது. உதரணமாக திரு. ராஜாகரன், திரு.சீலன் போன்றோரால் இவ் இணயத்தில் புனாட் இயக்கத்தினால் கொல்லப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் அப்பலப்படுத்தப்பட்டது. இத் தகவல்களினால் பல வருடங்களாக தம் உறவுகள் பற்றி ஏதும் தெரியாது கலங்கிய சில குடும்பங்களுக்கு ஒரு வகையில் மன ஆறுதலை தந்துள்ளது. 

 

பின்வரும் சம்பாசனை தனது காணமல் போன தனது அண்ணனை தேடும் சகோதரியுடனானது. இவர் தீவுப்பகுதியை சேர்த்தவர். ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் உறுப்பினர்களால் 1984 நடுப்பகுதியில் விசாரணைக்காக அழைத்து செலப்பட்டவர். இவரின் மனநிலை வளர்ச்சி குன்றிய அண்ணன், இன்றும் வீடு வரவில்லை.

 

இச்சகோதரியின் அண்ணனின் மறைவுக்கு காரணமானவர்கள், இன்று புலம்பெயர் தேசங்களில் வாழுகின்றனர். சிலர் அரசியல், இலக்கிய, கலாச்சார தளத்தில் இன்று பிரமுகர்களாக வலம் வருகின்றனர். இது மட்டுமல்லாமல், இம்முன்னாள் ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினர்கள், மனிதஉரிமை, ஜனநாயகம், பெண்ணுரிமை, சாதி ஒடுக்குமுறை போன்ற தலைப்புகளில் கவிதை, கட்டுரை, புனைகதைகள் எழுதுவதன் மூலம் இன்று இந்திய இடதுசாரிகள் மத்தியிலும் பிரபலம் ஆனவர்கள்.
                  
இவ் உரையாடல் ஈ.பி.ஆர்.எல்.எவ்  மீதோ அல்லது முன்னாள் ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினர்கள் மீதோ அவதூறு பரப்ப பிரசுரிக்க படவில்லை. முக்கியமாக, இச்சகோதரியின் தமயனின் மறைவு பற்றிய கேள்விகளுக்கு, அவரின் மனக்காயம் மாறவும், சாந்தியடையவும் ஏதுவாக  சகோதரியின் அண்ணனின் மறைவுக்கு காரணமானவர்கள் யாராவது இதை வாசித்தால்;    பதில் அளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பே, இதை எழுதக் காரணமாகும். அத்துடன் இச்சம்பவங்கள் போல பல ஆயிரம் சம்பவங்கள் நாட்டில் நடந்துள்ளது. இதனால் பாதிக்கபட்டவர்கள்; பலர், அரசியலுக்கு சம்பந்தமில்லாத அப்பாவிப் பொதுமக்கள். இப் பொது மக்களின் மறைவுக்கு பொறுப்பானவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். அதற்கு  இச்சம்பவங்கள் போல அனைத்தும் பதியப்பட்டு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில் இது ஒரு சிறு முயற்சி.  


எப்ப நடந்தது?

………… எல்லாமே மறந்து போய்ச்சு. 84 ஆம் ஆண்டு  அண்ணன் காணமல் போனவர். ஆரம்பத்தில நாங்க தேடாத இடமுமில்ல, கேட்காத ஆக்களுமில்ல. அப்ப சொல்லிச்சினம் ஊரைவிட்டு ஓடிறார் ....... கிளிநொச்சியில்லே   நிக்கின்றார், வன்னியில நிக்கின்றார் எண்டு. பிறகு கேள்விப்பட்டம் அவரை அடிச்சுக் கொண்டு போட்டாங்கள் எண்டு. எங்கேயோ சுடுகாட்டுக்குப் பக்கத்தில தாட்டு இருக்கிறதாகவும் சனம் சொல்லிச்சிது....... நாங்க இன சனம் இல்லாதனாங்கள். எங்கட ஊராரெல்லாம் எப்பவோ வெளிநாடுக்கும்; கொழும்புக்கும் போய்ராங்கள்.     
    
யாரு அவரை கைது செய்தது? போலீசா?

 

இல்ல... ஈ.பி.ஆர்.எல்.எவ். அண்ணன் யாரோ வீட்டு சாமான்களை களவு எடுத்தவர் எண்டு சொல்லி கொண்டு போனவையள். என்கட ஊருக்கு பக்கத்து ஊர்கார பொடியள்தான் கொண்டு போனவங்கள்.  அந்தப்  பொடியனின் தாய் தகப்பன்களை எங்களுக்கு தெரியும். அவர்களோட நாங்க தாயா பிள்ளையா பழகின்னான்கள். அதால நாங்கள் ஆரம்பத்தில் பயப்படவில்லை.


ஈ.பி.ஆர்.எல்.எவ் உடன் தொடர்பு  கொண்டு கேட்டனீங்களா?

 

அந்தக் காலத்தில் அதெல்லாம் இலகுவான வேலையில்லை. ஆனாலும் நாங்க ஊரில இருந்த சில பெரிய மனிதர்களைக் கொண்டு விசாரிச்சனாங்க. யாழ்பாணத்தில இருந்த காம்பில்   சொன்னவை, தங்களுக்கும் அண்ணன கொண்டு போனதுக்கும் சம்ம்பந்தம் இல்லை எண்டு.      


உங்கள் அண்ணனை கைது செய்தவரின் பெயரை சொல்லி நீங்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ் இடம் கேட்டகவில்லையா? 

 

கேட்டனாங்கள். முதலில் அந்த நபர் தனக்கு எதுவும் தெரியாதெண்டு சொன்னதாக சொல்லிச்சினம். பிறகு நாங்கள், அந்த பொடியன்ட ஊரார் உதவியோட ஈ.பி.ஆர்.எல்.எவ் யை தொடர்பு கொண்டோம். அப்ப சொல்லிச்சினம், அந்த குறிப்பிட்ட நபரின் தலைமையில தான் அண்ணன் கைது செய்யப்பட்டதாகவும், ஆனால், அவரை விடுதலை செய்ததாகவும்....  ஆனா அப்பிடி நடந்ததா தெரியவில்லை...

 

உங்களுக்கு அந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் நபரின் தாய் தகப்பனை தெரியும் என்றால் அவர்களிடம் விசாரிக்க வில்லையா?

 

அந்த பொடியன்ட குடும்பதினரிடத்தில் நாங்கள் விசாரிக்க இல்லை. அவரின்  ஊரார் சொல்லிச்சினம், அந்த பொடியன் இந்தியாவுக்கு ரெயினிங்குக்கு போயிரான் எண்டு. இதுக்கு   பிறகு நாங்களும், பயத்தில ஊர விட்டு போயிற்றம். 


உங்கள் அண்ணன் காணாமல் போய் பலவருடங்கள் ஆகிவிட்டது. இப்ப அவர தேடுவதால் என்ன பலன்?

 

எங்களுக்கு தெரிஞ்சாக்களுடைய சொந்தக்காரர் ஒருநாள் இப்பிடித்தான் காணமல் போனவர். இப்ப அவர வவுனியா அருனாசலம் முகாமில கண்டு பிடிச்சிருக்கினம். அது மாதிரி என்ர அண்ணனும் திரும்ம்பி வர மாட்டனா எண்ட நப்பாசை. அதவிட அவர் கொலை செய்யப்பட்டிருந்தா, அவர எங்க தாட்டிருக்கினம் எண்ட விபரம் தெரிஞ்சு ஒரு பூச வைச்சு, அவருக்கான கடைசி காரியங்களை செய்தால் அந்த ஆத்துமா சாந்தி அடையும். அதோட அண்ணன் காணாமல் போனதோட எங்கட குடும்பத்த பிடித்த மனக் கவலை தீர வேணும். இதுக்காக தான், நாங்க இப்ப அவர பற்றிய விபரங்களை தேடுறம்.

      
உங்கட அண்ணனை பற்றி சொல்லுங்க?

 

அவர் ஒரு அப்பாவி. எடுபிடிவேல, கூலிவேலை செய்து எங்களுக்கு கஞ்சி ஊத்தினவர். அடிக்கிறவனை திரும்பி அடிக்கவோ அல்லது ஏன் அடிக்கிறாய் எண்டு கேட்கவோ வாயில்லாத அப்புராணி. அவர் மன வளர்ச்சி குறைந்தவர். எழுதப் படிக்க தெரியாதவர்........ நான் மனம் எரிஞ்சு சொல்லுறன் என்ர அண்ணன கொண்டவன் அழிஞ்சு போவான் .....    

 

Last Updated on Tuesday, 27 April 2010 19:58