இந்த ரேஞ்சிலே இன்று கட்டுடைப்பு அரசியல் செய்கின்றனர். பெண்ணியம், தலித்தியம், தமிழ்தேசியம்… என்று, பலர் தங்கள் அடையாளத்தை முன்னிறுத்தி அடையாள அரசியல் செய்கின்றனர். சிலர் பன்முக வாசிப்பு மூலம் இதற்கு விளக்கம் கொடுக்கின்றனர். இதன் மூலம் ஓட்டு மொத்த பிரச்சனையையும் உள்ளடக்கிய, வர்க்க அரசியலை மறுக்கின்றனர்.  இதற்கு பதில் அடையாள அரசியலை முன்வைக்கின்றனர். சோபாசக்தி தான் கம்ய+னிஸ்ட் என்று சொல்லும் அளவுக்கு இது புளுத்து கிடக்கின்றது.

இந்த வகையில் பெண் பால் உறுப்பைப் பற்றி பேசினால், அது பெண்ணியமாகிவிடுகின்றது. இன்று இந்த ரேஞ்சில் பெண்ணியம் பேசப்படுகின்றது. சரி அதையே ஆண் பேசினால் பெண்ணியமா? அல்லது ஆணாதிக்கமா? லீனா எழுதியதையே சோபாசக்தி எழுதினால், அந்த சரக்குக்கு என்ன பெயர்? அவரின் போதையில் நிதானம் தவறாது பிறந்த உளறலா? இதையே சாருநிவேதா எழுதினால், அதற்கு என்ன பெயர்? சொல்லுங்கள்.

 

பெண் என்ற அடையாளம் தான், இங்கு "பெண்ணியமாக" கூறும் பெண் அடையாள அரசியல் பெரும்பாலும் பெண்ணியமாக இருக்கின்றது. பெண்ணியமாக வரிந்து காட்டுகின்ற பலரின் பார்வையும் இதுதான். இதற்கு ஏற்ப படைப்பை கட்டுடைத்துக் காட்டுவது, பன்முக வாசிப்பு செய்து காட்டுவது, எல்லாம் இதன்பின் அரங்கேறுகின்றது.

 

இந்த வகையில் லீனாவுக்கே பலர் பல புது விளக்கம் கொடுக்கின்றனர். தியாகு "அந்த கவிதையை நான் புரிந்து கொண்டது எல்லாவற்றிலும் தீவிரமாக இருக்கும் ஒருவன் கம்யூனிஸ்டாக இருக்கிறான். கலவியின் போதும் அவனது வாயிலிருந்து வரும் வார்த்தைகள்கூட உபரிமதிப்பு, காரல் மார்க்ஸ் என்பதாகவே இருக்கிறது.


அவனை எள்ளல் செய்ய யோனிமயிரை பிடிங்கி போட்டு கட்டவிழ்ப்பு என்கிறாள். நீங்கள் புரிந்து கொள்வது “கம்யூனிஸ்டுகளை கிண்டல் செய்ய கலவி மற்றும் பாலியல் உறுப்புகளை பயன்படுத்தி கொச்சை படுத்துகிறார்" என்பதாகும்" என்கின்றார். இப்படி கம்யூனிஸ்ட் இந்த மாதிரி மேட்டுகுடி நுகர்வு விபச்சாரிகளுடன் படுக்கின்ற போது நடக்கும் விளைவு சார்ந்தது என்கின்றார். சரியான கம்ய+னிஸ்ட், எப்படி மேட்டுக்குடி நுகர்வு விபச்சாரிகளுடன் படுக்க முடியும்? அவரால் அதை அம்பலப்படுத்த முடியவில்லை.

 

சிறிரங்கன் தன் கட்டுரையில்  "மார்க்சையும்,லெனியையும் சொல்லித்தாம் பலர் பெண்களைப் பாலியற் சுரண்டலுக்குள் தள்ளினார்கள். இந்த முதலாளியச் சமூகமோ பாலியலைப் பண்டமாக்கிப் பெண்களைச் சந்தையில் விற்கும்போது அதை நுகர வக்கற்ற போலித் தோழர்கள் - புரட்சிக்காரர்கள் அப்பாவித் தோழிகளைத் துளைத்தெடுத்தனர். அவர்களது குரலாக லீனாவின் குரலுக்கு முகம் உண்டு.

 

எனவே, லீனாவின் குரலுக்குள் இருக்கும் இன்னொரு முகத்தையும் காணத்தவறுவது மார்க்சிய-புரட்சிகர அணுகுமுறையாகாது." என்கின்றார். இங்கு தியாகு, சிறிரங்கன் பற்றியதல்ல விவாதம்.

 

இங்கு பன்முக வாசிப்பு ("இன்னொரு முகத்தை") என்னும் பின்நவீனத்துவ அரசியல் தான் பிரச்சனை. தம்மை மார்க்சியவாதிகள் என்று கூறிக்கொள்ளும் இவர்கள், பின்நவீனத்துவம் ஊடாக இதை நியாயப்படுத்தி அதை வாசித்துக் காட்டுகின்றனர். 1990 களில் மார்க்சிய விரோதிகள் முன்தள்ளிய பின்நவீனத்துவம், இன்று எப்படி மிக நாசூக்காக மார்க்சியத்தை மறுத்து இயங்குவதற்கான அரசியல் அடிப்படையை ஏற்படுத்திக் கொடுகின்றது என்பதை இது தெளிவாக காட்டுகின்றது.

 

ஒரு பொருளின் உள் முரண்பாடுகளை, பிரதான முரண்பாட்டிற்கு எதிராக முன்னிறுத்தி பிரதான முரண்பாட்டை இது மறுத்தலாகும். இந்த வகையில், ஒரு படைப்புக்கு பன்முக வாசிப்பு உண்டு என்கின்றனர். வாசித்துக் காட்டமுனைகின்றனர். இதே உள்ளடக்கத்தில் தான் சிலர், எழுதியவர்கள் அவைக்கு பொறுப்பில்லை என்கின்றனர். வேறு சிலர் எழுதியவரின் அடையாளத்தை வைத்து, இதை பெண்ணியமாக பார்க்க வேண்டும் என்கின்றனர். இப்படி ஒன்றுக்கு ஓன்று முரணாக கூறுவதில் கூட, பன்முகத்தன்மை உண்டு என்கின்றனர். இதை அங்கீகரிப்பதுதான் ஜனநாயகம் என்கின்றனர். இப்படி பரந்துபட்ட மக்களுக்கு எதிரான அரசியல் மூலம், ஓட்டுமொத்த சமூகப் பிரச்சனையையும் மறுக்கின்றனர். பகுதியை முன்னிறுத்தி, அதையே மாற்று அரசியல் வழிமுறையாக காட்டுகின்றனர்.

 

இந்த வகையில் லீனாவின் ஒற்றைப் பார்வைக்கு, பன்முகப் பார்வை உண்டு என்று கூறி நிற்கின்றனர். இதில் வேடிக்கையான முரண் என்னவென்றால், போலிக் கம்யூனிஸ்டுகளை இது குறிக்கின்றது என்று கூறி கவிதைக்கு பொருள் சொல்லி பன்முக வாசிப்பு நிகழ்த்துவது ஒருபுறம்;. மறுதளத்தில் லீனா தன் ஒரு பார்வை சார்ந்து யாரைச் சார்ந்து நிற்கின்றார் என்றால், அந்தப் போலிகளைத்தான். அனைத்து மார்க்சிய விரோதிகளையும் சாhந்து நிற்கின்றார். அது போல் அவர்கள் தங்கள் வர்க்க நிலையில் நின்று லீனாவுக்காக குரல் கொடுக்கின்றனர். அட, என்ன வர்க்க ஒற்றுமை! என்ன கூட்டு! சிங்கள பேரினவாதத்தை தொழுதவன் முதல், அதை எதிர்த்தவன் வரை, தங்கள் பன்முகவாசிப்பு ஊடாக ஓரே அச்சில் அழகாக நகர்கின்றனர். இங்கு தாங்கள் வரிந்து கொண்ட அடையாளங்களைக் கூட, அரசியலற்ற வரட்டு அடையாளம் மற்றும் பன்முகத் தன்மையைக் கூடக் களைந்து தமக்குள் கூடிவிடுகின்றனர். இதன் மூலம் ஒரு சமூகத்தை வழிநடத்த வக்கற்றுப்போகின்றனர்.  மக்களுக்கான அமைப்பை அரசியல் ரீதியாக நிராகரிக்கின்றனர். 

 

தங்கள் மறுவாசிப்பு மூலம் லீனாவின் கவிதை கம்யூனிச போலிகளை குறிக்கின்றது என்று கூறும் இவர்கள், படைப்பாளி படைப்புக்கு பொறுப்பில்லை என்ற தங்கள் சுய கற்பனை தளத்தில் வைத்து, தங்கள் சுயவிளக்கத்தைக் கொடுக்கின்றனர். இவர்களின் பார்வைக்கு முரணாக, கவிதையுடன் அவர்கள் செய்யும் எதிர்ப்புரட்சி அரசியல் அவற்றைக் கண்டு கொள்வது கூட கிடையாது. எதார்த்த உலகில் இருந்து விலகி, கற்பனை உலகில் வைத்து, அதைக் கட்டுடைத்துக் காட்டமுனைகின்றனர். 1990 களில் பின்நவீனத்துவம் என்ற எதிர்ப்புரட்சி அரசியல், தமிழகம் மற்றும் புலம்பெயர் சமூகத்தில் மிக திட்டமிட்டு மார்க்சிய விரோதிகளால் புகுத்தப்பட்டது. இதன் தாக்கம் தான், இந்த பன்முக வாசிப்பாக லீனாவுக்கே புது விளக்கம் கொடுக்கின்றது.

 

இங்கு இரண்டு தளத்தில் இது பிரிந்தும், இணைந்தும் இயங்குகின்றது.

 

1. இங்கு பெண் என்ற அடையாள அரசியல் மூலம் நியாயப்படுத்தப்படுகின்றது. (இது மார்க்சிய விரோதிகளால்)

 

2. பன்முக வாசிப்பு ஊடாக, மறுபக்கம் உண்டு என்ற பின்நவீனத்துவ அரசியல் மூலம் நியாயப்படுத்தப்படுகின்றது (இது மார்க்சியத்தின் பெயரால்) 

 

இப்படித்தான் லீனாவின் மார்க்சிய விரோத மற்றும் வலது அடிப்படை வாதத்துக்கு எதிரான பாலியல் நுகர்வு வக்கிரத்தை நியாயப்படுத்துகின்றனர். இங்கு வலது அடிப்படைவாதத்துக்கு எதிரான குரலை, ஏன் நாம் புரட்சிகரமானதாக பார்க்கக் கூடாது என்ற உள்ளடக்கத்தை கவிதையில் இருந்து எடுத்துக்காட்ட முனைகின்றனர். இதையே சிறிரங்கன் தன் கட்டுரையின் மற்றொரு பகுதியில் முன்னிறுத்துகின்றார். இதை தனியாக பின் ஆராய்வோம்.

 

இங்கு மிகத் தெளிவாக எம்முன் இருப்பது பெண் என்ற அடையாள எதிர்ப்புரட்சி அரசியலும், பன்முக வாசிப்பு என்ற எதிர்ப்புரட்சி அரசியலும்தான். இதன் மூலம் அனைத்து, பிற்போக்கு கூறுகளும் இன்று நியாயப்படுத்தப்படுகின்றது. புலித் தேசிய பாசிச அரசியலும் கூட, புலியெதிர்ப்பு ஜனநாயக அரசியலும் கூட இப்படித்தான் நியாயப்படுத்தப்பட்டது. இந்தப் போக்கு எங்கும் எதிலும் நிலவுகின்றது. ஏகாதிபத்திய நிதியில் இயங்கும் தன்னார்வ நிறுவனங்கள் கூட, இதையே அடிப்படையாக் கொண்டு சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெற்று இயங்குகின்றது. அவை முற்போக்காக தம்மைக் காட்டிக்கொள்ளும் வண்ணம், தன் அடையாள செயல்பாடுகளை உள்ளடக்கி தன்னை பன்முகத் தன்மையின் ஊடாகக் காட்டுகின்றது. பொதுமக்கள் அதன் செயல்தளத்தில், குறைந்த ஓரு அம்சத்தை முன்னிறுத்தியே அதன் பின் நம்பிக்கை கொள்கின்றனர். அவர்களால் இதனை முழுமையாகப் பார்க்க முடிவதில்லை. இப்படித்தான் பார்க்கவேண்டும் என்று கூறுவது தான், பன்முகப் பார்வை. ஒரு சரியை முன்னிறுத்தி, அதை அரசியல் ரீதியாக பாதுகாப்பது. இதைத்தான் இங்கு மார்க்சியம் மீது நம்பிக்கை கொண்டவர்களும், பன்முகப் பார்வை ஊடாக விளக்கி நியாயப்படுத்த முற்படுகின்றனர். முழுமையில் பொருளை பார்க்க மறுப்பது, பொருளின் பகுதியைக் காட்டி ஆதரிப்பதும், அரசியல் சீரழிவில் முதல்படியாகும். அடையாள அரசியல்வாதிகள், அடையாள இலக்கியவாதிகள், அடையாள இலக்கிய பிரமுகர்கள், தமக்கிடையில் கொண்டுள்ள உறவுகள் கூட, முழுமையான அரசியலை மறுப்பதில் தொடங்குகின்றது. இவர்களின் எந்த உறவும், அரசியல் பார்வையும் முழுமையான அரசியல் கோட்பாட்டில் அடிப்படையில் இருப்பதில்லை. பகுதியில் நின்று, முழுமையை மறுக்கின்றது. இது பொது செயல்தளத்தையும், ஒரு அமைப்புக் கோட்பாட்டையும் கூட மறுக்கின்றது. அதாவது ஒன்றில் முற்போக்கும், மற்றையதில் பிற்போக்காகவும் இருத்தல் சாத்தியமென்கின்றது. இதுதான், ஜனநாயகத்தின் பன்முகத்தன்மை வாய்ந்த புது உலக ஒழுங்கு என்கின்றது. இந்த முற்போக்கில் இணைந்து நிற்பதன் ஊடாக, முழுமையை குறிப்பாக மார்க்சியத்தை மறுக்கின்றனர்.

 

இந்த வகையில்தான், இந்தக் கவிதையைக் கூட, இப்படி கட்டுடைத்துக் காட்ட முனiகின்றனர். இங்கு பன்முக வாசிப்பு, பகுதிப் போராட்டம், அடையாள அரசியல் என்று கூறி, முழுமையான முற்போக்கை மறுக்கின்ற அரசியல், இயல்பில் பல பிற்போக்கை மறைமுகமாக ஆதரிக்கின்றது.

 

உதாரணமாக மகிந்தாவின் பேரினவாத அரசு, தமிழக அடையாள இலக்கியவாதிகளை சரி செய்ய புலம்பெயர் அடையாள இலக்கியவாதிகளுக்கு பல வழிகளில் வழிகாட்டியது. இந்த வகையில் சுகன் தமிழகத்தில் நடத்திய பேரினவாத நடத்தைகள், சில உலகறிந்தது. இதன் பின் இலங்கைக்கு சுகன் சென்றபோது, மகிந்தா அரசு சுகனுக்கு சிவப்புக் கம்பளம் விரித்ததுடன் தன் விமானப்படை விமானத்திலேயே அழைத்துச் சென்று தான் அழித்த தமிழர்களைக் காட்டி அவரை கவுரவித்தது. இதைக் கூட பன்முக வாசிப்பு மூலம் சரி என்று சொல்லுகின்ற "முற்போக்கு" அரசியல்;. இந்தச் சுகன் தலித்தியத்தின் பெயரில் அல்லது வேறு ஒன்றின் பெயரில் எழுதினால் அல்லது செயல்பட்டால், அதை நியாயப்படுத்தி கட்டுடைக்கவும் பன்முகவாசிப்பு செய்து காட்டும் நிலையில் மார்க்சியம் இன்று பேசப்படுகின்றது. வேடிக்கைதான். 

 

இந்த வகையில், லீனா மார்க்சிய தலைவர்களுக்கு நிகராக மதவாதிகளையும், ஏகாதிபத்திய கூறுகளையும் உள்ளடக்கிய கவிதைக் கூறுகளை காட்டி, அதை முற்போக்காக இட்டுக் காட்ட முனைகின்றனர். சோபாசக்தி தான் ஒரு கம்யூனிஸ்ட் என்று சொன்னது போல், லீனா என்ன கம்யூனிஸ்ட்டா? சிறிரங்கன் கட்டுடைப்பும், பன்முகவாசிப்பும் அதைதான் மறைமுகமாக சொல்லுகின்றது. அதை அடுத்த தொடரில் பார்ப்போம். 

 

 3.ஒரு காவாலி "உன் கேள்விக்கு காவாலித்தனம் என்று பெயர் வை!" என்கின்றது

 

2.லீனாவும், அ.மார்க்ஸ்-சோபாசக்தி நடத்திய தொழிலாளர் விரோதக் கூட்டம்  

 

1.தொழிலாளர் விரோத உணர்வுடன் கூடும் சோபாசக்தியும் லீனாவும்

பி.இரயாகரன்
23.04.2010