ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங் – சுகதேவ் நினைவை நெஞ்சிலேந்துவோம்!” – புரட்சிகர அமைப்புகளின் உறுதியேற்பு!

தஞ்சையில், பகத்சிங் நினைவாக ""அந்த வீரன் இன்னும் சாகவில்லை''என்ற எழுச்சிமிகு பாடலோடு, பனகல் கட்டிடம் அருகே ஏகாதிபத்திய மறுகாலனியாதிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வி.வி.மு ம.க.இ.க பு.மா.இ.மு ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டம், ""இந்தப்போர் எங்களோடு தொடங்கவும் இல்லை, எங்களோடு முடியப்போவதும் இல்லை'' என்ற பகத்சிங்கின் வரிகளை நினைவுகூர்ந்து, அவர் வழியில் அர்ப்பணிப்புடன் போராட அறைகூவியது.

 

திருச்சி ம.க.இ.க. கிளை உறுப்பினராகச் செயல்பட்டு கடந்த பிப்ரவரியில் மறைந்த தோழர் கண்ணனின் படத்திறப்பு விழாவுடன், திருச்சி  காந்திபுரத்தில் பகத்சிங் நினைவுநாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. தோழர் கண்ணன் வாழ்ந்த காந்திபுரம் பகுதியில், அவரது போராட்ட வாழ்வை மக்களுக்கு உணர்த்தும் வகையிலும், இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழலில் பகத்சிங் வழியில் போராட அறைகூவியும் முன்னணியாளர்கள் சிறப்புரையாற்றிய இக் கூட்டத்தின் இறுதியில், பறைமுழங்க ம.க.இ.க. மையக்கலைக்குழு நடத்திய புரட்சிகர கலை நிகழ்ச்சி போராட்ட உணர்வைத் தட்டியெழுப்பியது.

 

சென்னையில், பு.மா.இ.மு. சார்பில் ஓவியக் கண்காட்சியும் ம.க.இ.க. தோழர் துரை.சண்முகம் சிறப்புரையாற்றிய கருத்தரங்கமும் நடைபெற்றன. பு.மா.இ.மு.வைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களான ரகு கோகிலா ஆகியோர் தீட்டியிருந்த கோட்டுச் சித்திரங்களில், அன்று பாராளுமன்றத்தில் பகத்சிங் எறிந்த கையெறிக் குண்டின் வெடிமருந்து நெடி வீசியது.

 

வேலூர், ஆம்பூரில் தியாகத் தோழர் பகத்சிங் பற்றிய புரட்சிகரப்பாடல்களுடன் ம.க.இ.க.சார்பில் அறைக்கூட்டங்கள் நடைபெற்றன.

 

திரளாக இளைஞர்களும் உழைக்கும் மக்களும் பங்கேற்ற இந்நிகழ்ச்சிகள்,பகத்சிங் வழியில் மறுகாலனியாக்கத்துக்கு வீழ்த்த நாட்டுப்பற்றுடன் மீண்டும் ஒரு விடுதலைப்போரைத் தொடுக்க அறைகூவுவதாக அமைந்தன.

 

பு.ஜ.செய்தியாளர்கள்.