புதுச்சேரியில் ஏம்பலம் மற்றும் அதன் சுற்றுப்புறத்திலுள்ள புதுக்குப்பம், செம்பியப்பாளையம் ஆகிய பகுதிகளில் கடந்த 21 ஆண்டுகளாக சாலை வசதி அமைத்துத் தராமல்  தார்ச்சாலை போட்டுத் தராமல் அதிகார வர்க்கமும் ஓட்டுப் பொறுக்கிகளும் இப்பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் கொள்ளையடித்து வந்தனர். இச்சட்டமன்றத் தொகுதியில் மாறிமாறிப் பதவிக்கு வந்த தி.மு.க காங்கிரசு, பா.ம.க ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களிடமும் அதிகாரிகளிடமும் இப்பகுதிவாழ் மக்கள் பலமுறை மனுக் கொடுத்து மன்றாடியும், அதை அவர்கள் தொடர்ந்து புறக்கணித்தே வந்தனர்.

இந்நிலையில், இப்பகுதியில் இயங்கிவரும் பு.ஜ.தொ.மு. மற்றும் பு.மா.இ.மு. ஆகிய அமைப்புகள் இணைந்து கடந்த டிசம்பர் மாதத்தில், ""ஏம்பலம் பகுதிகளில் சாலைகளைக் காணவில்லை! இலவச மரணக் கிணறுகள் ஏராளம்!'' என்ற முழக்கத்துடன் சுவரொட்டிப் பிரச்சாரத்தை மேற்கொண்டு, இந்தப் பகற்கொள்ளையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தன. கடந்த டிசம்பர் 30ஆம் தேதியன்று பகுதிவாழ் மக்களைத் திரட்டி துணை ஆட்சியரிடம் மனுவும் கொடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, பிரச்சார இயக்கத்தை மேற்கொண்ட இவ்வமைப்புகள், கடந்த மார்ச் 10ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தத் தீர்மானித்தன. இதைக் கண்டு அரண்டுபோன ஓட்டுப்பொறுக்கிகள், விரைவில் சாலை அமைக்க ஏற்பாடுகள் நடந்துவருகின்றன என்று மக்களிடம் நைச்சியமாகப் பேசி போராட்டத்தை முடக்க முயற்சித்தனர்.

 

இதைத் தொடர்ந்து, ""மனு என்னடா மசிரு! எங்களுக்குப் பணமும் பதவியும் தாண்டா உசிரு!'' என்ற தலைப்பில் ஓட்டுப் பொறுக்கிகளின் கூட்டுக் கொள்ளையைத் திரைகிழித்தும், உழைக்கும் மக்கள் சாலை வசதியின்றி அவதிப்படும்போது, இப்பகுதியில் மோசடி சாமியார் நித்யானந்தாவின் ஆசிரமத்துக்குச் செல்லும் பாதையில் பாலம் கட்ட ரூ.5 இலட்சத்தை இத்தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரான ராஜாராமன் ஒதுக்கியுள்ளதை அம்பலப்படுத்தியும் இவ்வமைப்புகள் துண்டுப்பிரசுரம் வெளியிட்டு வீடுவீடாகப் பிரச்சாரம் செய்தன.

 

இதே நேரத்தில் நித்யானந்தாவின் காமலீலைகள் அம்பலமானதும், ஏற்கெனவே குமுறிக் கொண்டிருந்த உழைக்கும் மக்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு நித்யானந்தாவின் ஆசிரமத்தை அடித்து நொறுக்கித் தீயிட்டுக் கொளுத்தினர். உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளின் வசதிக்காக புறவழிச்சாலைகளும் பறக்கும் சாலைகளும் அமைத்துக் கொடுத்து மக்களின் வரிப்பணத்தை வாரியிறைக்கும் ஆட்சியாளர்கள், உழைக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளை அறவே புறக்கணிப்பதை விளக்கி மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்தால் உந்தப்பட்ட மக்கள், ஓட்டுப் பொறுக்கிகள் மீது வெறுப்பை உமிழ்ந்தனர். இதனால்,போராட்டத்தில் கலந்து கொண்டால் மாட்டு லோன், வீட்டு லோன் போன்ற அரசின் சலுகைகள் கிடைக்காது என்று மிரட்டிப் பார்த்த ஓட்டுப் பொறுக்கிகளின் சூழ்ச்சிகளும் சதிகளும் உழைக்கும் மக்களிடம் எடுபடாமல் போயின. திட்டமிட்டபடி, 10.3.10 அன்று இந்துஸ்தான் யுனிலீவர் தொழிலாளர் சங்கத் தலைவர் தோழர் அய்யனார் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான பகுதிவாழ் உழைக்கும் மக்கள் பங்கேற்று ஆதரவளித்ததோடு, அடுத்த கட்டப்
போராட்டத்துக்கும் ஆயத்தமாகி வருகின்றனர்.

 

— பு.ஜ.செய்தியாளர், புதுச்சேரி.