Fri01182019

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் சாம்பல் பூத்த மேட்டில் இருந்து..... கதை ஒன்று - கதை கேட்டு பதிந்தவர் : மா.நீனா

சாம்பல் பூத்த மேட்டில் இருந்து..... கதை ஒன்று - கதை கேட்டு பதிந்தவர் : மா.நீனா

  • PDF

யாழ்ப்பாணத்தின் புறநகர் பகுதி. மீனவர் சமுகமே பெரும்பான்மையாக வாழும் கிராமம். கிராமவாசிகசாலையில் தமிழ் தேசிய அரசியல் கூட்டமைப்பு தனது தேர்தல் பிரசாரக் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தது.

கூட்டமைப்பின் பிரமுகரும்; பாராளுமன்ற உறுப்பினருமான அந்தப் பெரும் தலை, தமிழ் தேசியக் காவலர்களும்; தனது அல்லக்கைகளும் புடைசூழ, மேடையேறி பேச தொடங்குகிறார். 

 

"...... எம் மக்களுக்காக நாம் சிந்திய இரத்தம் கொஞ்சமல்ல!!! நாம் பட்ட துன்பங்களை நினைத்தால் நெஞ்சம் கொதிக்கிறது!!! இவ் அரசின் அதிக்காரத்தை ஒழிக்கும் நாள் மிக விரைவில் வரும். எம் உழைக்கும் தோழர்களை நாம் கேட்பது ஒன்று தான், தேசியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எங்களுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள். சுயநிர்ணய அடிப்படையில் நாம் நம் உரிமையை வென்றே தீருவோம் ..... எம் அன்பான உழைக்கும் மக்களே .........."   

 

கூட்டத்தின் நடுவிலிருந்து ஒரு மெல்லிய மனிதர் எழுகிறார். பல நாள் சவரம் செய்யாத  முகம். கிழிவுகளும்; ஓட்டைகளும்; கைகளால் தைக்கப்பட்ட வெள்ளைச்சேட்டும், சாயம் வெளுதுப்போன இந்தியன் கிப்ஸ் சாரமும் அணிந்திருந்தார். உருவத்துக்குச் சம்பந்தம் இல்லாமல், அவரின் கம்பீரகுரல் மண்டபத்தை நிறைகின்றது.   


"....வாயை மூடடா நாயே .... கடையில் துணி பொறுக்கி கண்டவற்கும் கால் கிளப்பி இடையில் பவிசு வந்தால், என்னை அவன் பார்பானோ எண்ட  மாதிரி,……. இந்தியனுக்கும், சந்திரிகாவுக்கும், பிறகு புலிக்கும் அரசியல் விபச்சாரியாக இருந்து போட்டு, இப்ப வந்து என்னடா தோழர்களே மக்களே எண்டு கயிறு விடுகிறாய்?...."  ........ தோழர், தோழி எண்டும், சோசலிசம் எண்டும் கதச்சு கதச்சே எல்லாத்தையும் நாறடிச்சு போட்டியள். ......ஊரை அடித்து உலையில் போடுற உங்களுக்கெல்லாம்; மக்களின் கஸ்ரம் பற்றி என்னடா தெரியும்?..." கூட்டத்தில் சலசலப்பு. அறிவிப்பாளர் பிரமுகரிடம் இருந்து ஒலிவாங்கியைப் பெறுகிறார்.
 
".. அரச கைக்கூலிகள் இங்கும் வந்து விட்டார்கள். இது ஜனநாயக மறுப்பின் உச்சக்கட்டம். நீங்கள் யாரால் அனுப்பப்பட்டவர் என்பது எமக்கும் தெரியும். ஆயுதத்தால் எங்களை வெருட்ட  ஏலாதென்று, இப்ப  தன்ர கைத்தடிகளை அனுபிறார் .......துரோகதனதுக்கும் ஓர் எல்லை இருக்கு ...."
 
... "யாரயடா சொல்லுராய் துரோகி எண்டு...... " சொல்லி வாய் மூட முன்னம், பாராளுமன்ற உறுப்பினரின் பாதுகாவலுக்கு வந்த பொலிசாரும், சில தமிழ் தேசிய காவலர்களும், அவ் வெள்ளைசட்டை அணிந்த மனிதனை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேறினர். 
 
மூன்று தினங்களின் பின், மற்றுமோர் தேர்தல் விஞ்ஞாபன அரசியல் கூட்டம். யாழ்ப்பாண நகரின் கிழக்கு பகுதி. பஞ்சமர், ஒடுக்கப்பட்ட சாதி என்றும், தற்போது ஐரோபாவில் தலித்துகள் என அழைக்கப்படும், எண்பதுகளின் கள் இறக்கும் தொழில் செய்த மக்கள் வாழும் கிராமம். ஊரின் பிள்ளையார் கோவில் முற்றலில், வெளிச்சம் போட்டு கூட்டம் கூட்டப்பட்டது. மகாசபை மகான்களும், தலித் முன்னணியின் ஐரோப்பிய கோமான்களும், மாலைகள் மரியாதையுடன் மேடையேறினர்.
 
"........பல கிராமங்களில் சிரட்டையில் தேநீரும் பனையோலையில் உணவும் வழங்கப்படுகிறது. எமது மக்களுக்கு இதுவரை சமத்துவம் அளிக்கப்படாது இருந்து வரும் கோயில்கள், தேனீர்கடைகள், பொதுக்கிணறுகள், வேலைத்தலங்கள், ஏனைய பொது இடங்கள் என்பவற்றில் சமத்துவம் பெறுதல் முக்கியமானதாகும்….. நாடாளுமன்றத்திற்குள் நுழைவதன் மூலம் எங்களது பிரச்சினைகளை நாடு தழுவிய அளவில் எடுத்துச் செல்லமுடியும்....... நாடாளுமன்றப் பிரதிநிதிகள் மூலம் தலித் மக்களின் நலனிற்கான புதிய திட்டங்களை வரைந்து அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். எல்லாவற்றிற்கும் மேலாக நாடாளுமன்ற அதிகாரத்தில் எங்களுக்குரிய பங்கை நாங்கள் கோருகிறோம். நாங்கள் தேர்தல் புறக்கணிப்புச் செய்தால் என்ன நடக்கும்? எல்லா இடங்களையும் ஆதிக்கச் சாதியினரே கைப்பற்றுவார்கள். இதை அனுமதிக்க இனியும் தலித் மக்கள் தயாரில்லை......இன்னொரு பக்கம் தமிழ்த் தேசிய மாயையிலிருந்தும் நம்மை நாம் விடுவிக்க வேண்டியுள்ளது. நமக்கு தேசிய உரிமைகள் தேவையில்லை. இந்தியாவைபோல் எமக்கு தனி பிரதி நிதித்துவமும், ஒவ்வொரு சாதிக்குமான உள் ஒதுக்கீடுமே எமது போராட்டத்துக்கான காரணிகளாகும் ....." என முழங்கினர் தலித் முன்னணியின் ஐரோப்பிய கோமான் ஒருவர். 
 
அக்கோமானின், பேச்சை இடை மறித்தபடி, அதே மெல்லிய மனிதர் எழுகிறார். கூடத்தின் நடுவிலிருந்து.  தன் கம்பீரக்குரலுடன்.

 

"...அண்ணே ஒரு கேள்வி....?! தேசிய உரிமைகள் தேவையில்லை, அது மேல் சாதிக் கோட்பாடு என்றும், ஒவ்வொரு சாதிக்குமான உள் ஒதுக்கீடு கேட்பது தான் உங்கள்     போராட்டத்துக்கான காரணி எண்டு சொல்லிறியல். அப்பிடி எண்டல் உங்கட தேசிய இனம் எது? நீங்கள் தமிழர் இல்லியோ? நீங்கள் சொல்லுற சாதி ஒடுக்குமுறைய நான் இல்லை என்று மறுக்கவில்லை. ஆனால் இன்றுள்ள சமுதாய சூழலில், தனி அமைப்பு கட்டி, ஏம் மக்களைப் பிரித்து, சாதி அடிப்படையில் உரிமை கேட்கும் அளவுக்கு சாதி முரண்பாடு கூர்மை அடைஞ்சோ இருக்கு?    ........"

 

அம் மெல்லிய மனிதர் தன் கேள்வியை முடிபதற்குமுன் தலித் முன்னணியின் ஐரோப்பிய கோமான் ஒலி வாங்கியை ஸ்டாண்டில் இருந்து பிடுங்கி தான் கையில் தாங்கியபடி, வைகோ ஸ்டையிலில் உணர்ச்சி ததும்ப கர்சிக்கிறார்.

 

"நீர் யார்? தலித்தானால், மேல்சாதியால் முளைச் சலவை செய்யப்பட்டவர் நீர். அப்படி இல்லை எண்டால், நீர் யார் என்று நாம் அறிவோம். முள்ளிவாய்காலில் பட்டபாடு காணாதா? இன்னுமா உங்களுக்கு தமிழ் ஈழம் வேணும்? ........... நாங்கள் கேட்பது எமது ஜனநாயக உரிமை....."

 

மெல்லிய மனிதர் தான் கையை உயர்த்தியபடி "....நான்  ஒரு தொழிலாளி, அதிவிட நான்   தமிழன்........ உங்களுக்கு சாதி தமிழ் சமுதாயத்தின் உள்ள முரண்பாடாக.........." என தன் பதிலை முடிக்க முன்  முன்னணியின்  ஐரோப்பியக் கோமான், உணர்ச்சி மேலோங்க   

 

"…..  இப்பதான் தெரியுது நீர் யார் என்று! உம்மை மாதிரி மார்க்சிசம் கதைகிற மேல் சாதி கள்ளர்கள் தான் எம் தலித் மக்களைக் காட்டி கொடுத்தவர்கள். உம்மை மாதிரி பல பேரை நான் வெளிநாட்டில கண்டிட்டன். மார்க்சிசம் கதைகிற இப்பேர்வழிகள் புலிகளை விட பயங்கரமானவர்கள். உமக்கு நாம் பதில் தர வேண்டிய தேவை எனக்கில்லை!!!! எங்கட கூட்டத்தை குழப்பாமல் நீர் வெளியேறுவது நல்லம்......" 

 

ஐரோப்பிய கோமான் சொல்லி முடிக்க முன், நான்கு இளைஞர்கள் அம் மெல்லிய மனிதரை நோக்கி வந்தனர். அவர்கள் வருவதை கண்டவுடன், அவர் தானாகவே அவர்களைத் தேடிச் சென்று, கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.

 

தலித் முன்னணியின் ஐரோப்பியக் கோமான், தன் தலித் அரசியல் கதைப்பதை விடுத்து மார்க்சிய எதிப்பும், தேசிய எதிர்ப்பும் ஏன் முக்கியம் என, உணர்ச்சி தாண்டவமாட உரையாற்றினர். மார்க்சிசம் கதைப்போரை மனநோயாளிகள் என்றும், தேசியம் கதைப்போரை யுத்தவெறியர், இனவாதிகள் என்றார்.

 

கூட்டத்தில் இருந்து வெளியேறிய அந்த மெல்லிய மனிதன், ஒரு நூறு மீட்டர் தொலைவில்;  இருட்டில் நின்றபடி வெளிச்சத்தில் நடப்பதைக் கவனித்தார்.  

 

Last Updated on Tuesday, 06 April 2010 19:29