"பழங்குடியினர் மீனவர்கள் விவசாயிகள்மீதான போர்தான், அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்!" என்ற மைய முழக்கத்துடன் பல்லாயிரக்கணக்கில் துண்டுப் பிரசுரங்கள், கொலைகார இந்தியஆட்சியாளர் நடத்தும் காட்டுவேட்டை போரின் உள்நோக்கத்தைத் திரைகிழிக்கும் வெளியீடு,

சுவரொட்டிகள் ஆகியவற்றுடன் பேருந்துகள் இரயில்கள், ஆலைவாயில்கள், சந்தைகள், கடைவீதிகளில் பிரச்சாரம், தெருமுனைக்கூட்டங்கள், அதன் தொடர்ச்சியாக அரங்கக் கூட்டங்கள், கலை நிகழ்ச்சிகள் என தமிழகமெங்கும் ம.க.இ.க. வி.வி.மு. பு.மா.இ.மு. பு.ஜ.தொ.மு.ஆகிய புரட்சிகர அமைப்புகள் கடந்த ஒரு மாத காலமாக வீச்சாகப் பிரச்சாரர இயக்கத்தை நடத்தி வருகின்றன. ஆளும் கும்பல் நடத்திவரும் காட்டுவேட்டை எனும் நக்சல் வேட்டையின் நோக்கத்தையும், மறுகாலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியத்தையும் உணர்ந்து இப்பிரச்சார இயக்கத்தை வரவேற்று, உழைக்கும் மக்களும் ஜனநாயக சக்திகளும் உற்சாகத்துடன் நன்கொடை அளித்து ஆதரித்து வருகின்றனர்.

 

23.1.10 அன்று சென்னையிலும் 24.1.10 அன்று கோவை மற்றும் சேலத்திலும் இவ்வமைப்புகள் சார்பில் பல்வேறு ஜனநாயக சக்திகள் அமைப்புகளை அணிதிரட்டி அரங்கக் கூட்டங்கள் நடைபெற்றன. தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் திரு. வெள்ளையன், மூத்த கல்வியாளர் தோழர ;ச.சீ. இராசகோபாலன், மூத்த வழக்குரைஞர் தோழர் திருமலைராசன், கர்நாடக உயர்நீதி மன்ற வழக்குரைஞர் தோழர் பாலன், சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் திரு. அரங்க. சம்பத்குமார் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றி, இக்கொலை வெறியாட்டப் போரை வீழ்த்த அணிதிரள வேண்டிய அவசியத்தை விளக்கினர் .இவ்வரங்கக் கூட்டங்களில் பல நூற்றுக்கணக்கில் புரட்சிகர ஜனநாயக சக்திகள் திரண்டனர் என்றால், இப்பிரச்சாரர இயக்கம் நெடுகிலும் இப்புரட்சிகர அமைப்புகளின் தோழர்கள் சந்தித்த மக்களோ பல இலட்சம். நக்சல் எதிர்ப்பு நரவேட்டைப் போரை முறியடிக்கவும், மறுகாலனியாதிக்க எதிர்ப்புப்போரை முன்னெடுத்துச் செல்லவும் இப் பிரச்சார இயக்கம் தமிழக மக்களின் பேராதரவுடன் தொடர்ந்து முன்னேறி வருகிறது.-

 

பு.ஜ.செய்தியாளர்கள்