டபிக்ரே செயற்றிட்டத்தினூடாக நூலக அறிமுகம்

நோக்கம்:
இலங்கைவாழ் தமிழ்பேசும் சமூகங்களின் சகல தளங்களிலும் எண்ணிம நூலகம், ஆவணக்காப்பகம், மரபறிவுப் பாதுகாப்பு, தகவல் அறிதிறன், அறிவுப்பரம்பல், ஆய்வுச் செயற்பாடு மற்றும் கல்வி மேம்பாடு ஆகியவை தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவை தொடர்பில் வழிகாட்டுவதோடு தன்னிறைவானதும் சுதந்திரமானதுமான செயற்பாட்டு வினைதிறனுடைய தன்னார்வக்குழுக்களை உருவாக்குதல்.


வழிமுறை:
சமூக மட்டத்தில் ஏற்கனவே இயங்கிவரும் தமிழ் நூலகங்கள் (வாசிகசாலைகள் மற்றும் சனசமூகநிலையங்கள் உள்ளடங்கலாக), கல்விநிறுவனங்கள் (பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகள்), வெளியீட்டாளர்கள் (பத்திரிகைகள், சஞ்சிகைகள், பதிப்பகங்கள் மற்றும் எழுத்தாளர்கள்) சமூகம் சார்ந்து இயங்கும் இதர நிறுவனங்களை இனங்காண்பதும் அவர்களூடாக அறிமுகச் சந்திப்புக்கள், கூட்டங்கள் மூலம் ஊடாடுதல். இதனூடாக வினைத்திறனுடைய தன்னார்வக் கட்டமைப்புக்களை ஏற்படுத்தி அவற்றை மேற்குறித்த தளங்கள் சார்ந்து இயங்கக்கூடியதான குழுக்களுக்குத் தேவையான ஆரம்பக்கட்ட ஆலோசனைகளையும் வளங்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதோடு எதிர்காலத்தில் சுயமாக இயங்கக்கூடியதான நிலைக்கு அக்குழுக்களைத் தயார்ப்படுத்தல்.


செயற்றிட்டம் நடைபெறவுள்ள புவியியல் அமைவு:
இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் செறிவாக வாழும் வட மாகாணம் (யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி), கிழக்கு மாகாணம் (திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை), மத்திய மாகாணம் (கண்டி, மாத்தளை, கேகாலை, பதுளை, நுவரெலியா) , கொழும்பு மாவட்டம் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் செயற்படுத்தப்பட உள்ளது. மொத்தமாக 15 மாவட்டங்கள் இதற்கென தெரிவுசெய்யப்பட்டுள்ளன.


நடைமுறைப்படுத்தல்:
விளக்க உரைகள், ஒளிக்காட்சிகள், செய்முறை விளக்கம், கலந்துரையாடல், கையேடுகள் விநியோகம் போன்ற உத்திகளூடாக முழுமையான அறிமுகம். இதனூடாக உருவாக்கப்படும் தன்னார்வத் தொண்டர்களின் கட்டமைப்பினூடான செய்திமடல் ஊடான அறிமுகம். மேலும் இலங்கையில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வெளிவரும் சஞ்சிகைகள் பத்திரிகைகள் ஊடாகப் பரந்த அளவிலான அறிமுகங்கள்.


விளக்கம்:
இச்செயற்றிட்டம் மூலம் எண்ணிம நூலகம், ஆவணக்காப்பகம், மரபறிவுப் பாதுகாப்பு, தகவல் அறிதிறன், அறிவுப்பரம்பல், ஆய்வுச் செயற்பாடு மற்றும் கல்வி மேம்பாடு என்ற புள்ளிகள் சார்ந்து இயங்குவதற்கான ஆரம்பக் கட்டமைப்புக்களை உருவாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பிரதேசங்கள் சார்ந்து தமிழ்நூலகங்கள், கல்வி நிறுவனங்கள், வெளியீட்டாளர்கள் மற்றும் இதர நிறுவனங்கள் போன்றவற்றிற்கிடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதனூடாக பல்வேறு தளங்களில் அவர்கள் சமூகம் சார்ந்து இயக்கமுறுவதை அதிகப்படுத்தலாம். இதனூடாக மேற்குறிப்பிட்ட தளங்களில் இயங்குவோர் இணைந்ததாகப் பிரதேச ரீதியாக உருவாக்கப்படும் குழுக்களை அகலிக்கலாம்.

 

எண்ணிம நூலகம் ஒன்றை எவ்வாறு ஆவணக்காப்பகம் ஆகவும் மரபார்ந்த அறிவுகளைப் பாதுகாப்பதற்கான பொறிமுறையாகவும் தகவல் அறிதிறனுடன் தொடர்புபட்ட விடயமாகவும் அறிவுப்பரம்பலைச் சாத்தியப்படுத்தும் சாதனமாகவும் ஆய்வுச்செயற்பாடுகளை இலகுபடுத்தும் இடமாகவும் கல்வி மேம்பாட்டை ஏற்படுத்தக்கூடிய இடமாகவும் பார்க்க முடியும் என்பதை சகல மட்டங்களிலும் தெளிவுபடுத்தல். இதனூடாக எண்ணிம நூலகம், ஆவணக்காப்பகம், மரபறிவுப் பாதுகாப்பு, தகவல் அறிதிறன், அறிவுப்பரம்பல், ஆய்வுச் செயற்பாடு மற்றும் கல்வி மேம்பாடு என்ற புள்ளிகள் சார்ந்து அக்கறையுள்ளவர்களை மையப்படுத்திய பரந்தளவிலான மக்கள் இயக்கம் ஒன்றைச் சாத்தியப்படுத்திவிட முடியும். மாவட்டங்கள் சார்ந்து சுயமான குழுக்களை உருவாக்குவதும் அவற்றை இயங்கவைப்பதற்கான ஆரம்பக்கட்டச் செயற்பாடுகளைப் பூர்த்தி செய்வதுடன் இச்செயற்றிட்டம் அப்பிரதேசங்களில் நிறைவுபெறும். சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் உள்வாங்குவதனூடாக உருவாக்கப்படும் சுதந்திரமான தன்னார்வக்குழுக்களால் செயற்படுத்தப்படும் செயற்றிட்டங்களுக்கு நூலக நிறுவனம் தன்னாலான ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்க முடியும்.

 

நூலக நிறுவனத்தின் அதிகாரத்திற்கும் ஆதிக்கத்திற்கும் உட்பட்ட தன்னார்வக்குழுக்களுக்கு மாற்றீடாக சுதந்திரமாகச் செயற்படக் கூடிய தன்னார்வக்குழுக்களை உருவாக்குதல் என்பதில் இச்செயற்றிட்டம் உறுதியாக இருக்கின்றது. அதுவே மேற்குறித்த புள்ளிகள் சார்ந்து பரந்துபட்ட மக்கள் பங்கேற்பு செயற்பாடுகளை உருவாக்கும். பெரும்பாலான அரச சார்பற்ற நிறுவனங்களின் வழமையான செயற்பாட்டு முறைகளுக்கு மாற்றீடாக நூலக நிறுவனத்திற்குள்ள நிதிப்போதாமைகளையும் நினைவிலிருத்தி அதிகப்படியான மக்களது பங்களிப்பு மேற்படி கருத்தியலின்பால் இருக்கும் போது மட்டுமே உண்மையான விழிப்புணர்வுச் செயற்றிட்டமாக அமைய முடியும். அல்லாதுவிடின் நூலக நிறுவனத்தின் தேவைகளுடன் மட்டுப்படுத்தப்படுவதாகத் தன்னார்வக் குழுக்களின் செயற்பாடுகள் அமைந்துவிடும் அபாயம் உள்ளது. இம்மட்டுப்படுத்தலானது நீண்டகாலப்போக்கில் தன்னார்வக்குழுக்களின் தொடர்ச்சியான இயக்கத்தைப் பாதிக்கக்கூடும். இவ்வகையில் தன்னார்வக்குழுக்களின் சுதந்திரம் முக்கியமான விடயமாகின்றது. இச்சுதந்திரமே பூரணமான மக்கள் பங்கேற்பு செயற்பாட்டை உருவாக்கும். இவ்வறிமுகச் சந்திப்புக்களைத் தொடர்ந்து பிரதேச மட்டங்களில் உடன்படக்கூடிய நபர்கள் இணைந்ததான தன்னார்வக்குழு அமைக்கப்படுவதாக உத்தேசிக்கப்பட்டுள்ளது. இச்செயற்றிட்டம் தமிழ் பேசும் சமூகங்கள் வாழும் இதர பிரதேசங்களிலும் செயற்படுத்தப்படும். இவ்வகையில் இச்செயற்றிட்டம் நூலகத்திட்டத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவான 2010 தைப்பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

 

http://shaseevanweblog.blogspot.com/2010/03/blog-post.html