வர்க்கப் போராட்டம் என்பது நிகழ்ச்சி நிரலாக இருக்க, அதுவல்லாத ஒன்றை முன்வைத்து பித்தலாட்டம் செய்கின்றனர். "சுயநிர்ணயம் - பேரினவாதஅரசு : புதிய ஜனநாயகக்கட்சி நிலைப்பாடு" என்ற அறிக்கை விடும் அளவுக்கு, தங்கள் அரசியல் மோசடிகளை நியாயப்படுத்துகின்றனர். வேடிக்கை என்னவென்றால் "சுயநிர்ணயம் - பேரினவாதஅரசு" பற்றி புலிக்கும் ஒரு தெளிவான நிலைப்பாடு இருந்தது என்பது தான். அவர்கள் அதை எப்படி தவறாக கையாண்டார்கள் என்பது எம்கண் முன் இருக்கின்றது. புதிய ஜனநாயகக்கட்சி இதை தேர்தல் வழிமுறைக்குள் வைத்து, மக்களுக்கு மொம்மலாட்டம் காட்டுகின்றனர்.

 

நிலைப்பாடுகள் இருத்தல் அல்ல, அதை எந்த மக்களைச் சார்ந்து, எப்படி எந்த வழியில் போராடுவது என்பது தான் மைய்யமான விடையமாகும். இன்று தேர்தல் வழிமுறையை முன்வைத்து "மார்க்சிய" கூத்தாடுவதும் சரி, அன்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ஆதரித்து "மார்க்சிய"  பித்தலாட்டம் செய்ததும் சரி, உள்ளடக்க ரீதியாக பாட்டாளி வர்க்கத்தின் முதுகில் குத்தும் துரோகம் தான்.

 

அன்று சிறிலங்கா சுந்திரக்கட்சியை ஆதரித்ததை இன்றும் நியாயப்படுத்தும் நீங்கள், அதை "..1994 ம் ஆண்டு யூ.என். பியின் 17 ஆண்டு அராஜகத்தை முடிவுக்கு கொண்டு வர மக்களிடையே இருந்த ஆவலை உணர்ந்தும் தேசிய இனப் பிரச்சனை உட்படப் பல வேறு விடயங்களில் சரியான நிலைப்பாடுகளை எடுத்து அவரது வேலைத்திட்டத்தை மனதிற் கொண்டுமே சந்திரிகாவுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது" என்கின்றனர். "மார்க்சிய" வேடிக்கைதான் போங்கள். ஆளும் வர்க்கங்களுடன் நீங்கள் நடத்தும் வர்க்க கூட்டுக் கூத்துக்கு பெயர், வர்க்கப்போராட்டம். வர்க்கத்தை வர்க்கமாக அணிதிரட்டாது, அரோகரா போட்டு தேர் இழுப்பது தான் உங்கள் வர்க்கப் போராட்ட வரலாறு. இதற்கு வெளியில், தனியான வர்க்கப் போராட்ட வரலாறு உங்கள் பின் கிடையாது. 

 

இதற்கு வெளியில் கொள்கையும் நிலைப்பாடும் என்பது, கேலிக்குரியது. அரசு பற்றிய, ஜனநாயகம் பற்றிய, வர்க்கப் போராட்டம் பற்றிய, மார்க்சிய கொள்கையையும் கோட்பாட்டையும் மறுத்தபடி, "சுயநிர்ணயம் - பேரினவாதஅரசு" பற்றிய நிலைப்பாட்டை பேசுவது கேலிக்குரியது. 

 

சரி "சுயநிர்ணயம் - பேரினவாதஅரசு" பற்றிய உங்கள் அரசியல் நிலைப்பாட்டுக்காக, நீங்கள் எப்படி எங்கே மக்களை அணி திரட்டினீர்கள். சொல்லுங்கள். சவால் விடுகின்றோம். 1970 களில் பின்னான 40 வருடத்தில், இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்ட நிலையில், ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் (ஜே.வி.பி. காலம்) கொல்லப்பட்ட நிலையில், போராட்டங்களும் தியாகங்களும் உங்களுக்கு வெளியில் நடந்த போது, நீங்கள் எங்கே படுத்துக் கிடந்தீர்கள். உங்கள் நிலைப்பாடுகள், என்ன தான் செய்தன? என்.எல்.எவ்.ரி, பி.எல்.எப்.ரி, தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை, தீப்;பொறி, பாசறை முதல் சிறு குழுக்கள் உதிரி நபர்கள் போராட்டத்தை முன் நடத்தினர். மார்க்சியத்தை அடிப்படையாகக் கொண்டு நடந்த போராட்டத்தின் போது, நீங்கள் எங்கே தான் இருந்தீர்கள்? என்னதான் செய்தீர்கள்? ஒரு போராட்டத்தை தலைமை தாங்கவேண்டிய கட்சி, எந்த ஒரு போராட்டத்தையும் நடத்தியது கிடையாது. ஒரு பாட்டாளி வர்க்க கட்சியாகவே இருக்கவில்லை. இன்று உங்களை நியாயப்படுத்த, அந்தத் தியாகங்களையே கொச்சைப்படுத்துகின்றீர்கள்.

 

"சுயநிர்ணயம் - பேரினவாத அரசு" தொடர்பான புலி நிலைப்பாட்டுக்கு அக்கம்பக்கமாக நின்று கொண்டு, உங்கள் நிலைப்பாட்டை முன்வைத்து புலிக்கு ஆதரவாக நின்றதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. அதில் உள்ள முரண்பாட்டை முன்வைத்து, மக்களை அணிதிரட்டியது கிடையாது. தமிழ்மக்களை புலிகள் மேய்க்க விட்டுவிட்டு, அதற்கு ஏற்ப தங்கள் நிலைப்பாட்டை வைத்து அதை விளக்கினீர்கள். இன்று போல் அன்று.

 

"யூ.என்.பியின் 17 ஆண்டு அராஜகத்தை முடிவுக்கு கொண்டு வர" சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ஆதரித்தவர்கள் என்று நியாயம் பேசுகின்றீர்கள். இதை வேறு வழயில் முடிவுக்கு கொண்டு வர மக்களை அணிதிரட்டவில்லை. சரி புலியில் 25 வருட அராஜகத்தை முடிவுக்கு கொண்டு வர, என்ன தான் புதிய ஜனநாயகக் கட்சியிடம் இருந்தது. என்ன தான் செய்தது. அதற்கான வேலைத்திட்டம் தான் என்ன? எதுவுமில்லை. "சுயநிர்ணயம் - பேரினவாத அரசு" பற்றிய நிலைப்பாட்டை முன்வைத்து, மறைமுகமாக புலிக்கு ஆதரவாக நின்றதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. 

 

இந்த நிலையில் "புதிய ஜனநாயகக் கட்சி நிலைப்பாடு இன்று முக்கியமான ஒரு அரசியல் சக்தியாக உருவாகியுள்ளது" என்பது வேடிக்கையான தர்க்கம். எந்த ஒரு போராட்டத்தின் ஊடாகவும் மக்களை சார்ந்து நிற்காத கூட்டம், இன்று புலியில்லாத இடத்தில் நின்று கும்மியடிக்கின்றது. தனக்கு வாக்கு போடக் கோருகின்றது. மக்களை வர்க்க அடிப்படையில்  அணிதிரட்டாத கூட்டம், புலியில்லாத இடத்தில் தங்கள் பச்சோந்தித் தனத்தைக்கொண்டு  தேர்தலில் கூத்தாடுகின்றது.

 

அரசு, ஜனநாயகம் தொடர்பான மார்க்சிய அடிப்படையை நிராகரிக்கின்ற விதத்தில், அதை தீவிர இடதுசாரியம் என்கின்றனர். ".. தீவிர இடதுசாரி அந்தத்தில் நின்று கொண்டு, தங்கள் இணையத் தளங்களில் இருந்து ஒரு அடி வெளியே வைக்காமல், புதிய ஜனநாயகக்கட்சிக்கு நொட்டை சொல்லி வருகிற தூய மார்க்சிய லெனினியப் புனிதர்களும் இருக்கிறார்கள்." என்று கூறிக்கொண்டு, எதை நியாயப்படுத்துகின்றனர். தங்கள் தேர்தலில் நிற்பதைத்தான். வேறு எதையுமல்ல. பொருத்தமற்ற குருட்டு வாதம்.

 

"இணையத் தளங்களில் இருந்து ஒரு அடி வெளியே வைக்காமல்.." என்று கூறும் தங்கள் கூற்றை, நாங்கள் மறுக்க முற்படவில்லை. இதைத் தாண்ட நாங்கள் எல்லாத் தளத்திலும்  முனைகின்றோம். நீங்கள் மார்க்சிய நிலையை முன்வைத்து இயங்கினால், உங்களுடன் சேர்ந்து போராடவும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். நாங்கள் "நொட்டை சொல்லிகள்", "தூய மார்க்சிய லெனினியப் புனிதர்கள்", "இணையத் தளங்களில் இருந்து ஒரு அடி வெளியே வைக்காதவர்கள்.." என்பதாக இருக்கின்றதாக கூறுகின்றது ஒருபுறம் இருக்கட்டும், ஆனால் உங்கள் மார்க்சியமல்லாத நிலைப்பாடு இதனால் சமன்படாது. நாங்கள் என்னவாக எப்படி ஏன் இருக்கின்றோம் என்பதல்ல இதற்கு பதில், நேர்மையான அரசியல் சுயவிமர்சனம் ஊடாக மார்க்சியத்தை வந்தடைதல் தான் சரியானது. அதை செய்யுங்கள், எங்கள் நிலை பற்றிய உங்கள் பார்வை மாறும், உங்களுடனான எங்கள் இடைவெளியும் குறையும். மொட்டந்தலைக்கு, சீவி சிங்காரித்துக் காட்ட முடியாது.   

 

தேர்தலில் நிற்பதை மறுப்பதும், அரசு, ஜனநாயகம் மற்றும் வர்க்கப் போராட்டம் தொடர்பான மார்க்சிய நிலைப்பாட்டை உயர்த்தி நிற்பதையும், "இடது தீவிர வாதம்" என்பது கேலிக்குரியது.  அத்துடன் "வலது சந்தர்ப்ப வாதமும் இடது தீவிர வாதமும் ஒரே புள்ளியில் தான் போய்ச் சந்திக்கின்றன." என்பது, தங்கள் சந்தர்ப்பவாத தேர்தல் நிலைப்பாட்டை பூசி மெழுகுவதுதான். ஒரே புள்ளியில் சந்திப்பது, பாராளுமன்ற சாக்கடைக்கு செல்லும் புள்ளியில் சென்று குவிவது தான். அன்று 1994ம் ஆண்டு சந்திரிக்காவுக்கு பின் நின்று வழிகாட்டியவர்கள், மக்களை வேறுவழியில் அணிதிரட்டி வழிகாட்டவில்லை. வர்க்கப்போராட்டம் என்ற புரட்சிகர அரசியலை  முன்வைத்து மக்கள் அணிதிரட்டப்படவில்லை. தேர்தல் புள்ளிகள் கூடி அன்று கனைத்தனர், இன்றும் கனைக்கின்றனர்.

 

புள்ளியில் கூடி கூத்தாட அடுத்து புதிய ஜனநாயகக் கட்சி வைக்கும் தர்க்கத்தை பார்போம்;  "புதிய ஜனநாயகக் கட்சியை ஒரு தேர்தல் அரசியல் கட்சி என்று சிலர் கூறி வருகின்றனர். இது மனமறிந்த பொய். புதிய ஜனநாயகக் கட்சி தேர்தல்கள் மூலமோ பாராளுமன்ற அதிகாரத்தின் மூலமோ ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்து சமூகமாற்றத்தைக் கொண்டுவர இயலாது என்பதில் பூரண தெளிவுடனே இருந்து வந்துள்ளது. தந்திரோபாயமாக யாரையும் ஆதரிப்பதும் தேர்தலில் பங்குபற்றுவதும் பற்றிய தெளிவுடனேயே இருந்து வந்துள்ளது. எந்த ஒரு முடிவையும் கட்சி சந்தர்ப்பவாத நோக்கில் எடுத்ததில்லை." சொந்த வர்க்க அடிப்படையை இழந்து, ஒரு வர்க்க கட்சியாக இருக்காத எந்த நிலையிலும் இதை வார்த்தைகளால் கூறவேண்டிய அவலத்தைத் தாண்டி, அதை நடைமுறையில் வேறுபடுத்தி காணமுடியாது. தேர்தல் கட்சி அல்ல என்பது, வெல்ல முடியாததன் விளைவால் அப்படி இருக்கின்றது. இதனால்தான் "பாராளுமன்ற அதிகாரத்தின் மூலமோ ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்து சமூகமாற்றத்தைக் கொண்டுவர இயலாது என்பதில்  பூரண தெளிவுடனே" இருக்கின்றது என்று கூறுகின்றனர். பாட்டாளி வர்க்க கட்சியாக இருந்து, மக்களை வர்க்க ரீதியாக அணி திரட்டியிருந்தால், தேர்தல் வழிமுறையை தெரிவு செய்திருக்கமாட்டார்கள். சமூக மாற்றத்தை தேர்தலுக்கு வெளியில் உண்டு என்று நம்பும் கட்சி, அதற்காக மக்களை அணிதிரட்டும். இதைச் செய்யாத கட்சி, இன்று தேர்தலில் நிற்கின்றது. அதை நியாயப்படுத்த வாதங்கள். நாங்கள் நல்லவர்கள் நேர்மையானவர்கள் என்று சத்தியம் செய்கின்றனர்.   
 

இப்படி இருக்கும் இவர்கள் அடுத்துக் கூறுவதைப் பார்ப்போம் "அவதூறுகளைப் பரப்புவோர்  நேர்மையானவர்களல்ல என்பதே நமது மதிப்பீடு. அவர்களிடம் சொற்ப அளவு நேர்மையும் நெஞ்சுரமும் இருந்தால் வைக்கிற குற்றச்சாட்டுக்களைப் பகிரங்கமாக வெளியிடும்படியும் புதிய ஜனநாயகக் கட்சிக்கு அவற்றை தெரியத் தரும் படியும் சவால் விடுகிறோம்." இது யாரைக் குறித்து சொன்னது என்பது எமக்கு தெரியாது. எம்மைப் பொறுத்தவரையில், எம் எழுத்துக்கு வெளியில் எதையும் சொன்னது கிடையாது. நாங்கள் சவால் விடுகின்றோம், எம் விமர்சனத்துக்கு பதிலளிக்கும் படி. விவாதிக்கத் தயாரா!?

 

பி.இரயாகரன்
17.03.2010