தினந்தோறும் உயிரைப் பணயம் வைத்து, ஆழ்கடலில் நெடுந்தொலைவு சென்று நம் மீனவர்கள் பிடித்து வரும் மீன்களால்தான், இந்தியாவின் புரதத்தேவையில் பாதியளவு நிறைவு செய்யப்படுகிறது. இம்மீனவர்களின் வாழ்வுரிமையையும் அன்றாடச் செயல்பாடுகளையும், இந்திய அரசு நடைமுறைப்படுத்தவுள்ள ""மீன்பிடித்துறை ஒழுங்குமுறை மசோதா''முடக்கிப் போடப் போகின்றது.

மீன் பிடித் தொழிலில் இந்தியாவிலேயே மூன்றாவது இடத்தை வகிக்கும் தமிழ்நாட்டிலுள்ள 2.5 லட்சம் மீனவர்கள், 6200 மீன்விசைப் படகுகள், 50 ஆயிரத்து 360 பாரம்பரியக் கலன்களைக் கொண்டு அண்மைக்கடல், தூரக்கடல் பகுதிகளில் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நம் நாட்டின் மீன் உற்பத்தியைப் பெருக்குவதற்கென '70களில் நீலப்புரட்சித் திட்டம் கொண்டுவரப்பட்டது. இத் திட்டத்தின்படி, விசைப்படகுகள் வாங்கக் கடனுதவி, டீசலுக்கு மானியம் போன்றவை கடந்த 35 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில் அரசு கொண்டுவந்துள்ள புதியமசோதா, விசைப்படகுகள் மற்றும் பாரம்பரியப் படகுவகைகளுக்கிடையே உள்ள பாரதூரமான வேறுபாடுகளையோ, அவற்றின் மீன்பிடித் திறன்களையோ கருத்தில் கொள்ளாமல் அனைத்தையும் ""மீன்பிடிக் கலன்''என ஒரே வார்த்தையில் வரையறுத்து, அனைவரையும் மீனவர்கள் என்று பொதுவில் வகைப்படுத்தி விதிமுறைகளையும் தண்டனைகளையும் வகுத்துள்ளது.

 

இச்சட்டப்படி, எல்லா வகைப் படகுகளும் மத்திய அரசிடம் கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெறும்போதே பிடிக்கப்போகும் மீன் இனங்கள், எந்த இடத்தில் எத்தனை மாதங்கள் மீன்பிடிக்கப்படும், எந்த முறையில் மீன்பிடிப்பு நடக்கும் முதலான அனைத்தையும் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்; என்ன நோக்கத்துக்காக மீன் பிடிக்கப்படுகிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்; இதற்கான அனுமதிகளையும் மீனவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் காலந்தோறும் புதுப்பித்துக் கொண்டிருக்க வேண்டும். பிழைப்புக்கா, வணிகத்துக்கா, ஆய்வுக்கா என்றெல்லாம் துருவிக் கொண்டிருக்கப் போகிறது அரசு. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆண்டு அனுபவித்து வரும் கடலை மீனவர்களிடம் இருந்து பிரித்து, அவர்களை நாட்டினுள் ஊடுருவியிருக்கும் பயங்கரவாதிகளைப் போல கேள்வி மேல் கேள்விகேட்டு மீனவர்களின் பாரம்பரிய உரிமையைப் பறித்தெடுக்கத் துடிக்கிறது, அரசு.

 

நாட்டின் பாதுகாப்புக் காரணத்தையோ அல்லது அரசு தீட்டும் கடல் அல்லது மீன்வளம் சார்ந்த திட்டத்தைக் காட்டியோ மீனவர்களுக்குத் தரப்படும் அனுமதிகளையும் சலுகைகளையும் ரத்து செய்யும் அதிகாரமும் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. திடீரென சில குறிப்பிட்ட வகை மீனினங்களைப் பிடிக்கக் கூடாது எனக் கட்டுப்பாடுகளை விதிக்கவும் அரசுக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது.

 

இந்த விதிமுறைகளை மீறும் மீனவர்களுக்குத் தரப்படவுள்ள தண்டனைகளையும் இச்சட்டம் பட்டியலிட்டுள்ளது. மீன்பிடிப் படகில் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் மீன்கள் இருக்குமானால், படகு பறிமுதல் செய்யப்படும். படகை விடுவிக்கவேண்டுமானால் படகின் மதிப்பில் பாதியைப் பிணையாகக் கட்ட வேண்டும். அப்படகில் இருந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். சோதிக்க விடாமல் தடுப்பவர்களுக்கு, பத்து லட்சம் ரூபாய் வரை அபராதம்; பன்னிரண்டு கடல்மைல் தாண்டினால் ஒன்பது லட்சம் அபராதம்; படகின் சொந்தக்காரருக்கு மூன்றாண்டுசிறைத் தண்டனையும் உண்டு. மீன்களும் பறிமுதல் செய்யப்படும். படகின் நீளம் 12 மீட்டருக்கு மேல் இருந்தாலும் தண்டனை உண்டு.

 

கரையோரப் பகுதிகளில் மீன்வளம் குறைந்துவருவதால், 12 கடல்மைல்களைத் தாண்டி மீன்பிடிக்கச் செல்லாவிட்டால் பிழைக்கவே முடியாது என்பதுதான் மீனவர்களின் இன்றைய நிலைமையாக உள்ளது. விசைப்படகேறி, கடலில் நெடுந்தொலைவு பயணித்து, பலநாட்கள் தங்கியிருந்து, மீன் பிடிக்க ஒரு முறை போய்வரும் செலவு மட்டுமே ஒன்றரை லட்சம் ரூபாய் வரை ஆகிறது. இந்நிலையில், இவ்வாறான கட்டுப்பாடுகளை அரசு கொண்டுவருமாயின் மீனவர்கள் இனி கடல்இருக்கும் திசைப்பக்கமே தலைவைத்துப் படுக்கமுடியாது.

 

விதிமுறைகளை மீறும் மீனவரைக் கைது செய்தல், படகு மற்றும் மீன்பிடிக் கருவிகளைப் பறித்தல் போன்றவற்றிற்கு இழப்பீடும் கோரமுடியாது. சந்தேகத்தின் பேரில் தவறான நபர்களைப் பிடித்தாலும், அவற்றிற்காக கடலோரக் காவல்படையைக் குற்றம் சாட்ட முடியாதபடிக்கு இச்சட்டம் கடலோரக்காவல் படைக்கு எல்லையற்ற அதிகாரத்தைக் கொடுக்கிறது.

 

ஏற்கெனவே மீனவர்களின் வாழிடங்கள் உல்லாசவிடுதிகள் கட்டுவதற்கென கரையோரங்களிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. தீவிரமாகியிருக்கும் உலகமயத்தினால் அதிகரிக்கும் கப்பல் போக்குவரத்து, கடலோர நகரங்களிலிருந்து தினமும் கடலில் கொட்டப்படும் நச்சுக்கழிவுகள், சாக்கடைகள், அனல் மின்நிலைய சாம்பல்கள் போன்றவையும், ஏற்கெனவே இருந்த மீன்வளத்தை அழித்துக் கொண்டு வரும் சூழ்நிலையில், மீனவர்களின் மேல் இன்னுமோர் பேரிடியாக ஏன் இந்தக் கெடுபிடிச் சட்டம்?

 

இதற்கு இந்திய அரசு, ""ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பிற நாட்டு அமைப்புகளுக்கு மீன்களையும் மீன்பொருள்களையும் ஏற்றுமதி செய்வதென்றால், இந்தியாவில் அதற்கான ஒழுங்குபடுத்தும் ஆணையம் இருக்கவேண்டுமென்ற அந்நாடுகளின் எதிர்பார்ப்புக்கிணங்கவும், இந்தியாவின் மீனவர் உரிமைகளை நிலைநாட்டவும் இந்தச் சட்டம் தேவை'' எனக் கூறுகிறது.


வேளாண்மைத் துறை அமைச்சகமோ, கடல்வழியாக பாகிஸ்தானிலிருந்து வந்த பயங்கரவாதிகள் நடத்திய கொடுந்தாக்குதல்கள் போல இனி நடைபெறாமல் தடுக்க, நமக்கு உரிமையுள்ள கடல் பரப்பை நிர்ணயிப்பதும், அதில் நமது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதும் அவசியம் என்பதால் இந்த மசோதா கொண்டுவரப்படுவதாகச் சொல்கிறது. ஆனால் உண்மையோ வேறு.

 

1990களில் நரசிம்மராவ் அரசால் அறிவிக்கப்பட்ட மீன்வளக் கொள்கை, "கூட்டு முயற்சி' எனும் பெயரில் பன்னாட்டு ஆலைக் கப்பல்கள் இந்தியக் கடல்களில் மீன்பிடிக்க உரிமம் வழங்கியது. இம்முடிவுதான், மீனவர்களின் வாழ்வாதாரத்தின் மீது பன்னாட்டு நிறுவனங்கள் படிப்படியான தாக்குதலைத் தொடுத்திட வழிகோலியது. இந்தியக் கடல் எல்லைக்குள் நிறுத்தப்பட்டுள்ள இந்நிறுவனங்களின் கப்பல்கள், நவீனகருவிகளைக் கொண்டு முட்டை, குஞ்சு வேறுபாடின்றி அப்படியே மீன் ஆதாரங்கள் அனைத்தையும் உறிஞ்சி எடுத்து, மீன்களை இரகம் வாரியாகப் பிரித்தெடுத்து இன்னொரு கப்பலுக்குக் கைமாற்றி விடுகின்றன. எஞ்சிய மீன்குஞ்சுகளையும், முட்டைகளையும், சிலசமயங்களில் துடுப்பு வெட்டப்பட்ட சுறாவின் உடல்களையும் கழிவாகக் கடலில் கொட்டிவிடுகின்றன. மீன்வளத்தின் ஆதாரமான முட்டைகளைத் துப்புரவாகத் துடைத்தொழித்து வரும் இவற்றின் அகோரப் பசிக்கு இடையூறாக இருக்கும் இந்திய மீனவர்களை முற்றிலுமாக கடலிலிருந்து துரத்துவதுதான் ஏகாதிபத்தியத்தின் அடுத்த இலக்கு.

 

அந்த நோக்கத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த சட்டம், அதற்காகக் கடுமையான நிபந்தனைகளையும், தண்டனைகளையும் வரையறுத்துள்ளது. அதே நேரத்தில் மீனவர்களை அத்தொழிலில் இருந்து அப்புறப்படுத்தும் நோக்கில் மாற்றுத் தொழில் கற்றுத்தரும் நூற்றுக்கணக்கான தன்னார்வக் குழுக்கள், சுனாமிபேரழிவுக்குப் பிறகு இந்தியக் கடற்கரை நெடுக வலைவிரித்துள்ளன. ரொட்டி தயாரிப்பு, உள்ளீடற்ற செங்கல் தயாரிப்பு போன்ற சிறுதொழில்களுக்கு மீனவர்களை மாற்றும் சதித்திட்டத்தில் நாகை, காஞ்சிபுரம் மாவட்டங்களின் கரையோரங்களில் இவை இயங்கி வருகின்றன. ஒரே நேரத்தில் அடக்குமுறை சட்டம் மூலமும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமும் மீனவர்கள் மீது ஏகாதிபத்தியமும் இந்திய அரசும் போரைத்தொடுத்துள்ளன.

 

இச்சட்டத்திற்கு மீனவர்கள் மத்தியில் எழுந்துள்ள பரவலான எதிர்ப்புக்கூட ஏகாதிபத்திய உலகமயமாக்கத்தின் சதிகளுக்கெதிராகப் போராடாமல், இலக்கற்ற போராட்டங்களாகவே உள்ளன. அனைத்து பிரிவு உழைக்கும் மக்களுடன் இணைந்து, நமது கடல்வளத்தைக் கொள்ளைகொண்டு போகவரும் ஏகாதிபத்தியங்களை விரட்டியடிக்கும் திசையில் மீனவர்களின் போராட்டம் முன்னேறாவிடில், நமது கடல் இனி நம்முடையதாக இருக்காது.


• கதிர்