அந்த பேருந்து நிலையம் புதியது எனக்கு, எந்த பஸ் எங்கு நிற்கும் என்ற விவரம் தெரியவில்லை. ஒரு ஆளை பிடித்தேன். “ஏங்க ……..ஊருக்கு எந்த பஸ் போகும்?” அவர் ஏதோ ஏற இறங்க பார்த்து விட்டு “தோ அந்த பஸ் தான் நிறைய பஸ் உங்க ஊருக்கு இருக்கு”. 

நண்பருடைய திருமணம் எண்பது கிலோ மீட்டர் தாண்டி இருந்தது. பெரும்பாலான ஊர்கள் போலவே இதுவும் ஒரு 5 கிலோமீட்டர் தாண்டினாலே கிராமத்தினை கொண்டிருந்தது. காலையில் வெகு சீக்கிரம் எழுந்து கிளம்பினேன். வரும் போது பிளாட்டுகளாக்கப்பட்ட விவசாய நிலங்கள் கண்ணை உறுத்தின. கிராமங்களில் பான் பீடா கடைகள் புதியதாய் முளைத்திருந்தன. விவசாய நிலங்களில் வறுமையின் கவிதை வறண்டு போய் இலக்கியம் எழுதிக்கொண்டிருந்தது. கூட வேலை செய்பவர் என்பதால் கண்டிப்பாக போக வேண்டிய அவசியம். அந்த ஊர் பெரிய நகரம் இல்லை, கிராமமும் டவுனும் கலந்திருந்தது.

 

கொஞ்சம் பெரிய மண்டபம் தான் ,ஒரு வழியாய் கல்யாணத்தில் சாப்பிட்டுவிட்டு எஸ்கேப் ஆகி இப்போது பஸ்டாண்டில் நிற்கிறேன்.அந்தப்பெரியவர் காட்டிய பஸ் சென்று கொண்டிருந்தது. நான் செல்ல வேண்டிய ஊருக்கு தொடர்ச்சியாக பல பேருந்துகள், சரி ஒரு டீ சாப்பிடலாம் என்று பேருந்துகளுக்குப் பின்னால் இருந்த டீக்கடைக்கு என் கண்கள் ஓடின.

 

ஒரு பேருந்துக்குப்பின்னால் ஒரு பையனும் பொண்ணும் பேசிக்கொண்டிருந்தனர். பார்ப்பதற்கு கல்லூரி படிப்பவர்கள் போல பையினை மாட்டிக்கொண்டிருந்தார்கள்.

டீயினைக்குடித்து விட்டு தயாராக இருந்த பஸ்ஸில் ஏறினேன். கூட்டம் முக்கால்வாசி இருந்தது, கண்ணாடி பக்கம் கிடைக்கவில்லை. இருபெரிய்யய மனிதர்களுக்கு மத்தியில் தஞ்சம் புகுந்தேன்.

 

ஒரு பெண் முன் படி வழியாக பஸ்ஸில் ஏறி வந்து என்னுடைய இருக்கைக்கு இடது புற இருக்கையில் அமர்ந்தார். எங்கயோ பார்த்த மாதிரி இருந்தது, அதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால பஸ்ஸிற்கு பின்னாடி பாத்தமே அதேதான். யாரோ என் இருக்கைக்கு பின்னிருக்கையில் உட்கார்ந்தது போலிருக்கவே திரும்பினேன். அட வெளியே பார்த்த அந்தப்பையன்.

 

பஸ் கிளம்ப ஆரம்பித்தது. அந்தப்பெண் அவனிடம் பேசிக்கொண்டிருந்தார் ” ஏய் சும்மாவே இருக்கமாட்டியா? ஏன் இப்படி பண்ணுற , உன்னல்லாம் என்ன பண்றதுன்னே தெரியல” ஏதோ பெண்ணிடம் தகராறு செய்பவன் என நினைத்துக்கொண்டிருந்தேன். “என்னை நீ மாட்டி வுட்டுருவ, லீவு வேற சொல்லிட்டேன் போடா” என்றபடி அந்தப்பெண் சைகை காட்ட அவன் அப்பெண்ணோடு உட்கார்ந்தான்.

 

டிரைவர் டிவிடியைப்போட்டார் “அழகாக சிரித்தது அந்த நிலவு”எனப்பாடத்தொடங்கியது அது. ஊர்கதை உலகக்கதை எல்லாம் பேச ஆரம்பித்து அவள் தோள் மீது சாய்ந்து கொண்டான்.

 

பஸ்ஸில் எல்லோரும் தன்னைத்தான் பார்க்கிறார்கள் என்ற மானம் கொஞ்சம் கூட இல்லாமல் சத்தம் போட்டு பேசிக்கொண்டு, கைகளை முறுக்கிக்கொண்டு சேட்டைகளை செய்து கொண்டு வந்தார்கள். மிஞ்சிப்போனால் ரெண்டு பேருக்கும் 17 இல்லைன்னா18 வயசுதானிருக்கும். நான் மேற்கொண்டு இதை பார்க்காது கண்ணைமூடி தூங்குவது போல் இருந்தேன்.

 

அன்றாடம் பஸ்-ல் இப்படி ஒரு ஜோடியயாவது பாக்கறேன், அன்னைக்கு பஸ்ஸ்டாண்டுல பையன் பக்கத்துல உக்காந்துகிட்டிருக்குற பொண்ணு ………………………………………அப்பெண் சிரிச்சுகிட்டு போன் பேசிகிட்டு இருந்துச்சு. அப்புறம் போன வாரம் பிரவுசிங் சென்டர்ல ஒரு ஜோடி முத்தம் கொடுத்துகிட்டு இருந்துச்சு, நான் பாதியில பிரவுசிங்க விட்டுட்டு வந்தேன். யார் பாத்தா நமக்கென்ன நாய் மாரி ஊர் மேய்ஞ்சுகிட்டு இருக்குங்க. சென்னையில நிறய நடக்கும் ஆனா இப்ப சிறு நகரத்துல கூட சிலதுங்க ஊர் மேய்ஞ்சுகிட்டு திரியுதுங்க.

 

எந்த நம்பிக்கையில் தான் ஒருபெண் அல்லது ஆண் காதலிக்கிறான்/ள். ஒருவனைப்பற்றி முழுமையாக தெரியாமல் எதைப்பார்த்து, எதை வைத்து ஊர் சுற்றுகிறார்கள். கேட்டால் காதலிக்க உரிமையில்லையா என்கிறார்கள். முதலில் இவர்கள் செய்வது காதலா?

 

இவர்களில் பெரும்பாலோர் திருமணம் செய்வது இல்லை.

தன் காதலுக்காக போராடுவது கிடையாது. வீட்டிற்கு தெரிந்து விட்டது என்பதெல்லாம் ஒரு சாக்கு, ஒருத்தியை விட்டால் இன்னொருத்தி என்று ரயில் ஓடிக்கொண்டே இருக்கிறது. எனக்கு ஒரு விருப்பம் இப்படிப்பட்ட ஜோடியிடம் கேட்க வேண்டும் “காதல் என்பது என்ன?“. ஆனால் இவர்களைப்பார்த்தால் தானாகவே ஒரு அருவறுப்பு வந்து விடுகிறது.

 

எவன் பார்த்தால் என்ன? நான் முத்தம் கொடுப்பேன், பஸ்ஸில் எல்லா சேட்டையும் செய்வேன் என்பவனை ஒரு காதலனாக பார்க்க முடியுமா?அல்லது ஒரு விபச்சாரியாக பார்க்கமுடியுமா? நாய்களைப்போல தன் உணர்ச்சிக்கு வடிகால் எல்லா இடங்களும் தாராளமாக இருக்கின்றன.

 

இவர்களெல்லாம் விபச்சாரத்தனத்திற்கு காதலை ஒரு சாக்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

 

தனிமனித ஒழுக்கம் என்பது இல்லாமலே போய்விட்டது , அப்பாவுக்கு தெரிஞ்சா எனக்கவலையுறும் அப்பெண் அப்பாவுக்கு எப்பவுமே தெரியக்கூடாது என்கிறார். ஆனால் தான் செய்யும் செயல் சரியா தவறா?.

 

பாலுணர்வு மட்டும் சார்ந்தது எப்படி காதலாக இருக்கும் என்பதுதான் கேள்வி. சில மாதங்கள் முன் ஒருவன் என்னருகில் பேருந்தில் செல்லும் 2 மணி நேரமும் காதலியோடு பேசிக்கொண்டே இருந்தான். அப்படி எதைத்தான் பேசுகிறான்?

 

அந்தக்கதை இந்தக்கதை என்றூ மொக்கைகள் தான் பேச்சுக்களாகின்றன. எனக்கொரு சந்தேகம், ஒரு முறைகூட இந்த சமூகத்தைப்பற்றிய பேச்சு ஏன் உங்களிடம் இருந்ததில்லை. நீங்களும் வயிற்றுக்கு சோறு தானே உண்கிறீர்கள், ஏன் அரிசி, பருப்பு விலை ஏறியது? எதற்காக இவ்வளவு கல்விக்கட்டணம்? ஏன் யோசித்ததே இல்லை? ஏன் இவையெல்லாம் உங்களை பாதிக்கவில்லையா?

 

திரைப்படங்கள் இப்படி ஊர்மேய்வதை கலாச்சாரமாக்குகின்றன, “எதைப்பற்றியும் கவலை இல்லை எனக்கு என் உணர்வுதான் முக்கியம்” மற்றவர்கள் ஏதாவது நினைத்துவிட்டால் என்ற எண்ணம் தேவை இல்லாததாகிவிட்டது. “மனிதனை உள்ளுணர்ச்சிகள் தான் வழி நடத்த வேண்டும், அறவுணர்ச்சிகள் அல்ல” இந்த மாபெரும் கருத்தைலீனாவின் தளத்தில் படித்தது போல ஞாபகம்.

 

நித்தியானந்தனையும், காஞ்சி சங்கரனையும் ஏன் தேவநாதனையும் கூட உள்ளுணர்ச்சிகள் தான் வழி நடத்துகின்றன.பின் நவீனத்துவவாதிகளை எது வேண்டுமானாலும் வழி நடத்தட்டும். உங்களின் உள்ளுணர்ச்சிகள் எங்களின் அறவுணர்ச்சியை பாதிக்கும் போது என்ன செய்வது? உங்களுக்கு அறவுணர்ச்சி தேவை இல்லாமலிருக்கலாம் நாங்களும் அறவுணர்ச்சியற்று இருக்க வேண்டுமென்பது அராஜகமாக இல்லையா?

 

ஒரு விசயத்தில் பின்நவீனத்துவவாதிகள் பெருமை கொள்ளலாம், இதோ இங்கே இளைஞர்களை உள்ளுணர்ச்சிகள் தான் வழி நடத்துகின்றன.

  

சுயநலத்திற்கு யாரைப்பற்றியும் சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை, ஏன் தன்னைப்பற்றியும் கூட. உன் உரிமைபறிபோகிறதென்றால் உனக்கேன் அக்கறை நான் மானங்கெட்டு வாழ்வது என் உரிமை என்றாகிவிட்டது / இல்லை என்றாக்கப்படுகிறது, /பட்டுவிட்டது.

 

இவ்வுலைகைப்பற்றி பேசாதே, உழைத்து இந்த சாலையை அமைத்தார்களே அவர்களைப்பற்றிப்பேசாதே, அதோ இந்த ஓட்டுனர் எவ்வளவு பணிச்சுமைக்கிடையில் பேருந்தினை இயக்குகிறார்.அவர் கவலையினை என்றாவது புரிந்து கொண்டிருக்கிறாயா?

 

 “இந்த முதலாளித்துவ உலகம் கற்றுக்கொடுக்கிறது, எல்லாவற்றையும் நுகர்ந்து விடு இம்………….. எல்லாவற்றையும், கருப்பாக இருந்தால் நீ நுகரப்படமாட்டாய், சிவப்பாக மாறு பலரும் உன்னைப்பார்ப்பார்கள், மற்றவர்கள் உன்னை ரசிப்பதுதான் வாழ்வியலின் தேவை உழைப்பு அல்ல, எதைப்பற்றியும் சிந்திக்காதே, இவ்வுலகம் படைக்கப்பட்டதே அனுபவிக்கத்தான் அனுபவி நன்றாக அனுபவி, எத்தனைபேர் மாண்டாலும் உன் சுகத்தை எதற்காகவும் விட்டுக்கொடுக்காதே.

  

இது தான் தாரக மந்திரம். உன் அடிமைத்தனத்துக்கு தடையாய் இருப்பவனெல்லாம் உன் எதிரிகள்”

” பொய்யாய் வாழ்வது தான் விருப்பமெனில், உண்மைகள் புரியும் போது பொய்கள் கலையும், அப்போது உங்கள் ” காதலும் ” பறந்து போகும். மறுகாலனியாக்கத்தால் தைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நீ உன்னைப்பற்றி என்னப்பேசப்போகிறாய்? ஏன் பேச மறுக்கிறாய்?

 

நாங்கள்பேசுகிறோம் மக்கள் விடுதலைக்கு உனக்கும் சேர்த்துதான், ஆனால் நீ உன் விடுதலைக்கு கூட பேச மறுக்கிறாய். ஒருவர் தன் துணையை தெரிவு செய்ய காதல் சிறப்பான வழிதான். ஆனால் இந்த காதல் வேசம் போடும் விபச்சாரிகளை என்ன செய்வது?”

 

கண்விழித்துப்பார்த்தேன் அப்பெண்ணின் மடியில் அவன் படுத்துக்கொண்டிருந்தான், நான் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது. அதைப்பார்க்கும் போது ஒரு பிணத்தின் மடியில் இன்னொரு பிணம் படுத்துக்கொண்டிருப்பதைப்போல் இருந்தது.

http://kalagam.wordpress.com/2010/03/11/பாலியல்-காதலர்கள்-நுகர்/