உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. அரிசி பருப்பு தொடங்கி சர்க்கரை வரை விலை எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் ஏறிக்கொண்டிருக்கிறது. சாமானிய உழைக்கும் மக்கள் விலை உயர்வினால் கடும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

 

ந்தக்கவலை நாட்டின் பிரதமருக்கும், முதலமைச்சர்களுக்கும் வந்திருப்பதாக தெரிகிறது. அதனால் தான் பிரதமர் முதலமைச்சர்களின் மாநாட்டடைக் கூட்டி விலைவாசி உயர்வு குறித்தும் நாட்டின் பாதுகாப்பு குறித்தும் விவாதித்திருக்கிறார்கள். அதுவும் புனே குண்டுவெடிப்பிற்கு பிறகு உள்நாட்டு பாதுகாப்பின் முக்கியத்துவம் கூடி விட்டது. கஞ்சியில்லாதவன் சாவதை விட குண்டுவெடித்து சாவது அதிர்ச்சியானது தானே.

ஒரு ரூபாய் அரிசி திட்டம் செயல் படுத்தப்படுவதாலும், பத்து வகையான மளிகைப் பொருட்கள் ஐம்பது ரூபாய்க்கு வழங்கப்படுவதாலும் தமிழக மக்கள் பசிஎனும் சொல்லை அறியாமல் வாழ்கிறார்கள் எனவே காவல்துறையை நவீனப்படுத்தவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் அதிக நிதி தாருங்கள் என்று கேட்டுவிட்டு வந்திருக்கிறார் மாநாட்டில் கலந்து கொண்ட துணைமுதல்வர். பிரதமரோ பருவமழை பொய்த்து உற்பத்தி குறைந்ததால்தான் விலை உயர்ந்ததாக அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டிருக்கிறார், பதுக்கல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருக்கிறார். ஆனால் நிஜமோ வேறு மாதிரி இருக்கிறது. ஒருவரோ அல்லது ஒரு நிறுவனமோ 50000 டன் வரை உணவு தானியங்களை சேமித்து வைத்துக்கொள்வதற்கு சட்டப்படி அனுமதி இருக்கிறது. சட்டப்படி பதுக்கிவைத்து கொள்ளையடிப்பவர்களை தண்டிப்பது எப்படி என்பதை அவர் சொல்லவில்லை.

விலைவாசி உயர்வு என்றது மழை பொய்த்துவிட்டது உற்பத்தி குறைவு என்று காரணம் கூறுவது வழக்கமாகி இருக்கிறது. ஆனால் விலை உயர்வுக்கு உற்பத்திக்குறைவு காரணமல்ல என்பது தான் உண்மை. எடுத்துக்காட்டாக 2009 காரீப் பருவ பருப்பு சாகுபடியில் பருப்பு உற்பத்திக் குறைவு 7 சதவீதம் மட்டுமே.​ பெரும்பகுதி பருப்பு உற்பத்தி ரபி பருவத்தில் நடக்கிறது.​ ரபி பருவ பருப்பு சாகுபடி குறைவின்றியே இருக்கின்றது. ஆனாலும் பருப்புவிலை மடங்குகளில் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு பருப்புவிலை உச்சத்தை தொட்டபோது ஊகவணிகத்திற்கு தடை என்று சில நாட்கள் நாடகமாடினார்கள். ஊகவணிகம் தான் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என தெரிந்திருந்தும், அதை தடை செய்வது குறித்து மூச்சுவிடக்கூட மறுக்கும் இவர்களா மக்களைப்பற்றி கவலைப்படுவார்கள்?

உலகில் பிரேசிலுக்கு அடுத்து இந்தியாவில்தான் கரும்பு சாகுபடி அதிகம், ஆனால் சர்க்கரைவிலை மட்டும் முதலிடத்தில். இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் அவர்கள் மறந்தும் சர்க்கரை சேர்த்துக்கொள்ளக்கூடாது என்பதால் தான் சர்க்கரை விலையை இறங்காமல் பார்த்துக்கொள்கிறோம் என்று விளக்கம் கொடுக்கவேண்டியது தான் மிச்சம். உணவுப்பொருட்கள் விலை உயர்வுக்கு பதில் சொல்லவேண்டிய அமைச்சரின் கட்சி இதழ் ‘ராஷ்ட்ரியா’ சர்க்கரை சாப்பிடாவிட்டால் இறந்துவிட மாட்டீர்கள் என்று தலையங்கம் தீட்டுகிறது. விலை உயர்வுக்கு சரத்பவார் தான் காரணம் என காங்கிரஸ் மெதுவாக நழுவப்பார்க்க, பிரதமரின் ஆலோசனைப்படி தான் நான் நடந்துகொள்கிறேன் என்று இவர் பதிலடி கொடுக்கிறார். ஆனால் பொதுவிநியோகத்திற்கென ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த 72,684 டன் சர்க்கரையை தனியாருக்கு விற்றது யாருடைய ஆலோசனையின்படி என்பதை மட்டும் யாரும் சொல்லவில்லை.

கடந்த நவம்பர் மாத கொள்முதல் குறியீட்டின்படி மொத்த கொள்முதல் விலை உயர்வு 4.78 விழுக்காடு, அதாவது கொள்முதல் அளவில் அதிகரித்த விலை உயர்வு 4.78 விழுக்காடு, ஆனால் நுகர்வோர் அளவில் அதிகரித்த விலைஉயர்வு 11முதல் 19விழுக்காடு வரை. இது விலை உயர்வின் காரணி எங்கிருக்கிறது என்பதை காட்டுகிறது. விளைவிக்கும் விவசாயி கடன்தொல்லை தாங்கமுடியாமல் தற்கொலை செய்துகொள்கிறான். நுகரும் மக்களோ விலையுயர்வின் பாரம் தாங்காமல் துவழுகிறார்கள். இந்த விலையுயர்வின் காரணிகளை அறிந்துகொண்டே அரசு பருவமழை, உற்பத்திக்குறைவு என்று திசைதிருப்புகிறது.

கொள்முதல் விலையை உயர்த்திக்கேட்டு போராடும் விவசாயிகளை அலட்சியம் செய்யும் அரசு; விவசாயிகளுக்கு கொடுக்கும் கொள்முதல் விலையைவிட ஒன்றரை மடங்கு அதிகமான விலையில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறது. அதுமட்டுமன்றி அரசு நேரடியாக கொள்முதல் செய்வதிலிருந்து விலகி விவசாயிகளை தனியார் கொள்முதல் நிலையங்களை நோக்கி தள்ளிவிடுகிறது. இன்னொருபக்கம் சில்லறை விற்பனையிலும்கூட பன்னாட்டு நிறுவனங்களை அனுமதித்திருப்பதன் மூலம், உற்பத்தி விநியோகம் இரண்டையும் தனியாரின் பொறுப்பில் விட்டுள்ளது. இப்படி மக்களை தனியாரை பன்னாட்டு, தரகு முதலாளிகளை சார்ந்திருப்பவர்களாக மாற்றிவிட்ட பிறகும், உணவுதானியங்கள் பதுக்கிவைப்பதற்கு சட்டபூர்வ அனுமதி வழங்கிவிட்ட பிறகும் விலைவாசி உயர்வை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் எனும் அரசை எப்படி நம்புவது?

அறிவுத்துறையினர் விலைஉயர்வு குறித்து கூறுகையில் உலக அளவில் விலை உயர்வு இருக்கும் போது இந்திய அளவில் அதை தவிர்க்கமுடியாது என்கின்றனர். எந்தப்பொருட்களின் விலை உயர்கிறது எந்தப்பொருட்களின் விலை குறைகிறது என்பதை கவனித்தாலே இதன் பின்னால் தொழிற்படும் அரசியல் புலப்பட்டுவிடும். உலகின் ஒட்டுமொத்த உற்பத்திப்பொருட்களை எடுத்துக்கொண்டால், எந்த நிலையிலும் மக்கள் வாங்கியே ஆகவேண்டும் எனும் நிலையிலுள்ள அத்தியாவசியப் பொருட்களான உணவு முதலானவற்றின் விலை உயர்ந்துகொண்டே செல்ல, அலங்காரப் பொருட்களான செல்பேசி முதல் வாகனங்கள் மின்னணுவியல் பொருட்கள் வரை விலை குறைந்துகொண்டே செல்கிறது. மக்களை வாங்கவைக்க வேண்டுமென்றால் விலை குறையும். வாங்கியே தீரவேண்டும் என்றால் விலை கூடும். மக்களின் உழைப்பை திருடுவதல்லாத வேறு என்ன காரணம் இதில் இருக்கிறது? இதில் உற்பத்திக்குறைவு எங்கு வருகிறது?

அன்றாடம் உழைத்து களைக்கும் பாட்டாளி உண்ணமுடியாத அளவில் விலை உயர்வு இருக்கையில் செல்பேசியும், காரும் விலைகுறைந்தால் இரவு உணவுக்கு செல்பேசியை கடித்துக்கொண்டு காரையா சாப்பிடமுடியும்?

http://senkodi.wordpress.com/2010/02/16/rising-price/