புலிக்கு பின் பல "முற்போக்கு" முகமூடி அரசியல் எல்லாம், வேஷம் கலைந்து பம்முகின்றது.   மகிந்தா முன்தள்ளும் பாசிசத்துக்கு ஏற்ப, அரசியல் விவாதங்கள், விளக்கங்கள். தேனீ முதல் தேசம்நெற் வரை இதற்கு விதிவிலக்கே கிடையாது.

 

இன்று தேசம்நெற் "ஊடகவியல்" முன்தள்ளும் மகிந்த அரசியலை மூடிமறைத்தபடிதான், மே 18 முதல் இனியொரு வரை இயங்குகின்றது. இதன் மூலம் மூடிமறைத்த சந்தர்ப்பவாதத்துடன் கூடிய, தங்கள் காரியவாத அரசியலை முன் நகர்த்துகின்றனர். இதன் மூலம் இதன் முன்னணிப் பிரமுகர்கள், தம் பின்னால் மந்தைகளை உருவாக்கியபடி  அவர்களை தமது காரியவாததுக்கு ஏற்ப மேய்க்க விரும்புகின்றனர்.

 

இவர்களின் காரியவாதத் தயவில் தான், மகிந்த சிந்தனை புலத்தில் புளுக்கின்றது. இது பல வேஷம் போடுகின்றது.

 

இதில் ஒன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுதல். இதைச் செய்தலே தமிழ்மக்கள் நலன் என்று காட்டுகின்றனர். தன்னார்வ நிதி பற்றி மெய்சிலிர்க்க குதிப்பவர்கள், மகிந்த சிந்தனையின் பின் உருவாகும் இந்த எதிர்ப்புரட்சியை, தங்கள் காரியவாத அரசியல் மூலம் மூடிமறைக்கின்றனர். இதுபோல் புதிய ஜனநாயகக் கட்சி தேர்தல் பற்றிக் கொண்டுள்ள எதிர்ப்புரட்சிக் கண்ணோட்டத்தையும் விமர்சிப்பதில்லை. இப்படி அரசியலை தங்கள் குறுகிய காரியவாதத்துக்குள் மூடிமறைத்துக் கொண்டு, சந்தர்ப்பவாதத்தை முன்தள்ளுகின்றனர்.

 

இதன் மூலம் தான் எதிர்ப்புரட்சி அரசியல், தனக்கு முற்போக்கு முலாம் இடுகின்றது. மகிந்த சிந்தனையின் பின் நின்று தான் மக்களுக்கு உதவுவதைப் பற்றி பேசுகின்றது. இப்படியும் ஒரு கூட்டம். இதில் சிலர் பக்கா வியாபாரிகள். இவர்கள் தங்கள் வியாபாரத்தை, மகிந்தவின் பாசிச சிந்தனை மூலமே அங்கும் செய்ய முனைகின்றனர். இதற்கமைய உதவும் அரசியலை அது முன்தள்ளுகின்றது. இப்படி மகிந்த குடும்பம் நடத்தும் பாசிச அரசின் துணையுடன், மக்களுக்கு உதவுதன் மூலம் தங்கள் வியாபாரத்தையும் தொடங்கியுள்ளது.

 

இ;தைத்தான் புலிப்பினாமிகள் முன்பு செய்தனர். இதைத்தான் அரச பினாமிகள் இன்று தொடங்கியுள்ளனர். புலிகள் மக்களுக்கு உதவுதாக கூறி திரட்டிய நிதியை, அவர்கள்  மோசடி செய்தனர். இவர்களும் வியாபாரிகள் என்பதால், இதுவே இவர்களின் நோக்கமாகும்.   உள்ளடக்க ரீதியாக தமிழ்மக்கள் அரசியலை, மோசடியாக வியாபாரம் செய்கின்றனர். 

 

நாம் மக்களுக்கு உதவுவதற்காக இருந்தால், மகிந்த அரசுடன் நின்றுதான் தான் செயல்பட முடியும் என்கின்றனர். தங்கள் அரசுசார்பு நிலைக்கு அமைய, இதை முன்னிறுத்தி  பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் இந்த வியாபார அரசியலுக்கு வெளியில், பாரிய உதவியை தனிநபர்களும் பல்வேறு அமைப்புகளும் சுயமாகவே செய்கின்றனர். அதை அவர்கள்  அரசியலாக முன்னிறுத்துவதில்லை. இதை அரசியலாக முன்னிறுத்துபவர்களில், சிலர் புலத்தில் வியாபாரிகள். உதவி மூலம் முன்தள்ளும் அரசியலோ, மொத்தத்தில் அரசியல் வியாபாரம் தான்;.  இதில் புலத்தில் வியாபாரம் செய்யும் அரசியல் வியாபாரிகள், இங்குள்ள அரசுகளையே ஏமாற்றி வியாபாரம் செய்யும் தில்லுமுல்லுப் பேர்வழிகள். இன்று தமிழ்மக்களை மகிந்தவுடன் சேர்ந்து ஏமாற்றி பிழைக்கும் புது வியாபாரத்தில் இறங்கியுள்ளனர்.

 

இன்று தாங்கள் மகிந்தா அரசுடன் சேர்ந்து நின்று செய்வதையே, தமிழ் மக்களுக்கான மாற்று அரசியல் என்கின்றனர். இந்த மகிந்த அரசியல் மற்றும் வியாபாரத்தையே அரசியலாக காட்டும் தளத்தில், தேசம் நெற் ஒரு சிறப்பான எடுத்துக் காட்டு.

 

தங்கள் இந்த வியாபார வர்க்க அரசியலுக்கு அமைய, மார்க்சியத்தை எதிர்த்து மகிந்தாவுடன் நின்று வாந்தி எடுக்கின்றனர். மகிந்த பாசிசத்துடன் கூடி நிற்றல் தான், மாற்று என்கின்றனர். இப்படி மகிந்தா குடும்பம் நடத்தும் சர்வாதிகார பாசிச ஆட்சியுடன் கூடிக் குலாவி குலைத்துக்கொண்டு, மார்க்சிட்டுகளை அவர்கள் போட்டுத்தள்ள இலங்கை சென்று செயல்படுமாறு கோருகின்றனர்.  அதாவது  போட்டுத் தள்ளும் அரசியலை செய்கின்றனர். மகிந்த அரசின் ஆள்காட்டிகளாக இருப்பவர்கள், தங்களை மூடிமறைக்கவே மனிதாபிமான உதவி ஊடாக உலகை வலம் வருகின்றனர்.

 

தான் அல்லாதவர்களை போட்டுத் தள்ளும் மகிந்த அரசு, இவர்களுக்கு செங்கம்பளம் விரிக்கின்றது. இப்படி இலங்கைக்கு செல்லும் இவர்கள் தான், மார்க்சியவாதிகளைப் பார்த்து கொக்கரிக்கின்றனர்.

 

மகிந்த பாசித்துக்கும் அதன் போர்க்குற்றத்துக்கும் துணை நிற்கும் இந்த போக்கிலிகளின் கவலை, தாங்கள் அம்பலப்படுவது தான். தாங்கள் அம்பலப்படாமல் இருக்க, மார்க்சியவாதிகளை ஓழித்துக்கட்டுவது அவசியம். இதனால் மார்க்சியவாதிகளை இலங்கை செல்லுமாறு கோருகின்றனர். என்ன வக்கிரம்.

 

சரி உங்களை வரவேற்று நிற்கும் உங்கள் மகிந்தா அரசு, எங்கள் ஜனநாயகத்தை அங்கீகரித்துத்தான் விடுமா!? உங்கள் இணையமே அதை அங்கீகரிப்பதில்லை. உங்கள் கவலை, மார்க்சிட்டுகளை போட்டுத்தள்ள, இலங்கைக்கு அவர்களை வழிகாட்டுவது தான். இதற்கு வெளியில் இவர்களுக்கு, மார்க்சியவாதிகளின் அரசியல் பற்றி எந்த அக்கறையும் நோக்கமும் கிடையாது.

 

இதற்கு மத்தியில் மே18 இயக்கத்தின் உத்தியோகபூர்வத் தளமாக, தேசம்நெற் தன்னைக் காட்டிக்கொள்ள முனைகின்றது. ஜான் என்ற தனிநபர் தேசம்நெற் ஆசிரியருடன் கொண்டுள்ள தனிப்பட்ட உறவை கொண்டு, ஜானின் துணையுடன் மே 18 இயக்கத்தையே தேசம்நெற் தளம் மகிந்த சிந்தனைக்கு பயன்படுத்துகின்றது.

 

இங்கு மே 18 இயக்கம், தன் அரசியல் சந்தர்ப்பவாதம் மூலம் தேசம்நெற்றை விமர்சிப்பதில்லை. இதேபோல் தான் தேசம்நெற்றுடன் அசோக், நாவலன் போன்றவர்கள் சேர்ந்து நடத்திய கூத்துகள் ஒருபுறம்;. தேசம்நெற்றின் மகிந்த சிந்தனையை இவர்கள் யாரும் விமர்சிப்பது கிடையாது. கூடிக்குலாவி நடத்திய சுத்துமாத்து அரசியலும், தங்கள் காரியவாத உள்ளடக்கத்துடன் கூடிய அரசியலும் அதை அனுமதிப்பதில்லை.

 

சந்தர்ப்பவாதம் மூலமான நகர்வுகள் தான் இவர்களின் அரசியல். தம்மைப் சுற்றி பல சுத்துமாத்து அரசியல் நகர்வுகளை மூடிமறைத்துக் கொண்டு, அவர்களுடன் கூடிக் குலாவிக்கொண்டும், ஒரு  சந்தர்ப்பவாதத்தையே தங்கள் அரசியலாக முன் நகர்த்துகின்றனர்.

 

ஒரு எதிரியையும், ஒரு செயலையும் காட்டிக் கொண்டு, தங்களைச் சுற்றி சுத்துமாத்துகளையும் மக்கள் விரோத அரசியலையும் எதிர்ப் புரட்சி நகர்வையும் மூடிமறைக்கின்றனர்.

 

கடந்தகாலத்தில் இயக்கங்கள் தோன்றிய போது, எதிரியைக் காட்டிபபடி தங்களுக்குள்ளும் தங்களை சுற்றியும் உருவான எதிர்ப்புரட்சி அரசியலை இனம் காட்டாது எதிர்ப் புரட்சி அரசியலையே புரட்சி அரசியலென மாற்றினர். அதே நடத்தையை, தங்கள் காரியவாத சந்தர்;ப்பவாதத்துடன் கூடிய எதிர்ப்புரட்சி அரசியலையே இன்றும் கையாளுகின்றனர். தம்மைச் சுற்றிய அணிகளை ஏமாற்றிக்கொண்டும், தமக்குள் மட்டும் இதைப்பற்றி பேசிக்கொண்டும், வெளிப்படையாக சந்தர்ப்பவாதத்தை முன்தள்ளுகின்றனர். இதன் மூலம் தங்ளைச் சுற்றிய  அணிகளை, மீண்டும் படுகுழியில் தள்ள இவர்களின் இந்தச் சந்தர்ப்பவாதமே போதுமானதாக இன்று உள்ளது.

 

கடந்தகாலத்தில் என்ன நடந்தது என்ற சுயகற்கை மூலமான தெளிவின்றியும், இந்த நகர்வுகளை முன்னெடுக்கின்றவர்கள் கடந்தகாலத்தில் என்ன செய்து கொண்டு இருந்தனர் என்ற தெளிவான அரசியல் பார்வையின்றி, எந்த தனிமனித கண்ணோட்டமும் மக்களுக்கு எதிரானதாக மாறும் அல்லது சுய தற்கொலைக்கே இட்டுச்செல்லும்.

 

பி.இரயாகரன்

16.02.2010