தீப் பிளம்பதில்

நெருப்புத் தனல்

சுவாசித்து

மயக்கமில்லா

அறுவைச் சிகிச்சையில்

ரணமாகி

கண்ணீர் வற்றிய

மலர் துவிப்

பயணித்த

நெடுந்துராப் பயணம்

எம் பயணம்

நாவறள

குட்டைத் தண்ணீர்

ருசி பார்த்து

வயிற்றில் பிரசவ வலியுடனும்

பட்டினிப் பிரசவத்தை

வரிசையில்

கை நீட்டிப் பிரசவித்து

கதறிய கண்ணீர் கதைகள்

மீள் நினைவில்

அரங்கேறிட – கடுகளவு

சந்தோசம் மட்டும்

அப்போதெமக்கு

உயிருக்கு துளியளவு

உத்தரவாத மென்றதால்

நெடுந்துரமாய் எறும்பு வரிசையில் – எம்

பயண யாத்திரை

கழுத்தளவு நீரில்

ஊர்வலங்களாய்

மாறு வாழ்வு என்றார்கள்

மரண வாழ்வு வாழ்கின்றோம்

பூத்துக் குலுங்கி காய்த்த கனி கொடுக்கும் வேளையில்

கருகாய் காய்க்கிறது உள்ளம்

சோகத்தின் ரணங்களும், சோதனையின் சுமைகளும்

உள்ளத்தில் பாரமாக – இன்னும்

எத்தனை நாட்களுக்கு

நெற்றிச் சுருங்கிப் போனதால்

மனதை கோதிவிடும்

பாச விரல்களுக்காக ஏங்கி நிற்கின்றோம்

கவி வரிகளுக்கு கட்டுப்படாத

மன வலிகளைச் சுமந்து கொண்டு

பாம்பு வாழும் கூண்டில் நின்று

நியாயம் தேடுகின்றோம்

விடியுமா? என்று

கிழக்கை வெறிக்கிறது விழிகள்

நிலவிற்கு ஓளித்து

பரதேசம் போன கதையாக

நகருகின்றது வாழ்க்கை

சாந்தி சமாதானம், சாத்வீகம்

எனத் தினம்

வாந்தி எடுக்கும்

இந்தியா கூடித் தூங்கிவிட்டது.

எங்களின் நிலை

யாருக்கு புரியும்

உலகமே

நீயாவது

எங்களின் வேதனைகளைப்

புரிந்து கொண்டு

பரிந்துரை செய்வாயா?

 

கண்மணி
வன்னி அகதி முகாமில் இருந்து
11.02.2010