தான் அல்லாத எதிர்தரப்பையும், தனக்கு எதிரான ஊடகத்தையும் ஓடுக்குவதே, இந்த அரசின் முதன்மையான இன்றைய அரசியலாக உள்ளது. பாரிய குற்றங்களை செய்வதன் மூலமே, தன் அதிகாரத்தை தக்கவைத்துள்ளது. பாரிய போர்க்குற்றத்தை செய்தும், பல ஆயிரம் மக்களைக் கொன்றும், பல பத்தாயிரம் கோடி பணத்தை சுருட்டியபடியும், பாசிச  ஆட்டம் போடுகின்றது.

ஒரு சர்வாதிகார குடும்பத்தின் கீழ் ஒரு குற்றக் கும்பல் தங்கள் குற்றங்களை மூடிமறைக்கவும், கொள்ளையிட்டதை அனுபவிக்கவும் முனைகின்றது. இதனால் எதிர்கட்சி மீதும், ஊடகவியல் மீதும் வன்முறை, கைது, கடத்தல் என்று ஒரு போரையே தொடுத்துள்ளது. அபாண்டமான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்திய பின், அதற்கு ஏற்ப ஆதாரங்களை தேடுகின்றது. வேடிக்கையிலும் வேடிக்கை.

 

சரத்பொன்சேகா வென்றால் இராணுவ ஆட்சியைத்தான் தருவார் என்ற கூறி தேர்தல் பிரச்சாரம் செய்தவர்கள், இறுதியில் இராணுவ புரட்சி நடத்த இருந்ததாக கூறி அவரின் ஆதாரவாளர்களை எல்லாம் கைது செய்கின்றனர். இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. கைது செய்து, ஆதாரத்தைத் தேடுகின்றனர். கைதானவர்களை சித்திரவதை செய்தும், பணத்தைக் கொடுத்தும், தம் பாசிசத்தை நிலைநிறுத்தும் ஆதாரத்தைப் புனைய முனைகின்றனர்.

 

இதன் மூலம் மகிந்த குடும்ப சர்வாதிகாரத்தை நிலை நிறுத்த, இராணுவத்தை எடுபிடி அமைப்பாக்க முனைகின்றனர். அந்த வகையில் தொடங்கிய களையெடுப்பு, இராணுவ புரட்சி பற்றிய மகிந்த சிந்தனையிலான கற்பனையை, மகிந்த குடும்ப சர்வாதிகாரம் பரப்பி வருகின்றது.

 

இந்த வகையில்  சரத்பொன்சேகாவைத் தொடர்ந்து, இராணுவத்தில் பல தலைகளை மகிந்த குடும்ப சர்வாதிகாரம் உருட்டுகின்றது. முன்னாள் இராணுவ அதிகாரிகளை கைது செய்கின்றது. தமது குடும்ப சர்வாதிகாரத்தை ஏற்காத இராணுவ அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்புகின்றது. பாரிய களையெடுப்பை இராணுவம் முதல் பல தளத்தில் ஏன் ஊடகவியல் வரை அதை நடத்துகின்றது. மொத்தத்தில் இதன் மூலம் ஒரு இராணுவ ஆட்சியை, மகிந்த குடும்ப சர்வாதிகாரம் தங்கள் பாசிச வழியில் இலங்கையில் நிறுவி வருகின்றது.

 

புலிகளை அழித்தும், தமிழினத்தை ஒடுக்கியும் சிங்களப் பேரினவாதத்தை பாதுகாக்கவும் போராடி வென்றவர்கள் என்று கடந்த காலத்தில் காட்டப்பட்டவர்கள் தான், இன்று களையெடுக்கப்படுகின்றனர். ஓய்வு பெற்றவர்கள் முதல் இன்று இராணுவத்தில் உள்ளவர்கள் வரை பலர் கைது, கண்காணிப்பு, ஓய்வு என்று திட்டமிட்டு ஒதுக்கப்பட்டு ஒடுக்கப்படுகின்றனர்.

 

இது எந்த அடிப்படையில் நடக்கின்றது? சுயாதீனமானதும், சுய ஆளுமையுள்ளவர்களும் இராணுவத்தில் இருந்து கழற்றிவிடப்படுகின்றனர். தமக்கு விசுவாசமானவர்கள், நக்கித் தின்னக் கூடியவர்கள், பொறுக்கித் தின்னக் கூடியவர்களை, இராணுவத்தின் தலைமைக்கு கொண்டு வருகின்றது மகிந்தா குடும்ப சர்வாதிகாரம்.

 

தங்கள் மக்களை ஒடுக்கி வாழவும், மக்களை ஒடுக்கும் சிறந்த விசுவாசமான கூலிப் படையாக இராணுவத்தை மாற்றவும், இந்தக் களையெடுப்பு. எதிர்க்கட்சிகளை ஓடுக்கி, குடும்ப சர்வாதிகாரத்தை பலப்படுத்தவே இராணுவத்தில் களையெடுப்பு.  

 

அதாவது ஒரு குடும்ப இராணுவ சர்வாதிகார பாசிச ஆட்சியை, இலங்கையில் வெற்றிகரமாக நிறுவ இராணுவக் களையெடுப்பு நடக்கின்றது. முதலில் இராணுவத் தளபதியான சரத்பொன்சேகாவையே இராணுவத்தில் இருந்து துரத்தினர். இது இவர்களுக்கே எதிரான, போட்டி வேட்பாளராக்கியது. இதன் விளைவால் தங்கள் தேர்தல் தோல்வியை தவிர்க்க, சதிகள் மூலமும், மோசடிகள் மூலமும், தேர்தல் "ஜனநாயக" அதிகார பாரம்பரியங்கள் மூலமும், தம்மைத்தாம் வென்றவர்களாக அறிவித்துக் கொண்டனர்.

 

தம் போட்டியாளரை ஒடுக்க, சரத்பொன்சேகா வடிவில் இராணுவ ஆட்சி என்றவர்கள், இது எடுபடாமல் போகவே இராணுவப் புரட்சி நடத்த முனைவதாக பிரச்சாரம் செய்தனர். இதன் மூலம் தங்கள் குடும்ப சர்வாதிகார பாசிசத்தை கொண்டு, விரிந்த அளவில் தாமல்லாத அனைவரையும் ஓடுக்கத் தொடங்கியுள்ளது. இராணுவத்தில் பாரிய களையெடுப்பை நடத்துகின்றது.

 

கைதுகள், கடத்தல்கள் மூலம் தங்கள் குடும்ப சர்வாதிகரத்தை பலப்படுத்தி நிலைநிறுத்த  முனைகின்றது. இராணுவச் சதி, இராணுவப் புரட்சி பற்றி பேசிக்கொண்டு நடத்தும் இராணுவ களையெடுப்பு ஊடாக, ஒரு மகிந்த இராணுவ ஆட்சியை நிறுவுகின்றது.

 

மகிந்த குடும்பம் இராணுவ ஆட்சி பற்றியும், இராணுவ சதி பற்றியும் எந்த ஆதாரத்தையும் மக்கள் முன், சட்டத்தின் முன் வைத்தது கிடையாது. தம்மை கொல்ல சதி என்பதற்கு எந்த ஆதாரத்தையும், அது வைத்தது கிடையாது. மாறாக எதிர்தரப்பை கைது செய்து, அதை கண்டுபிடிப்பதாக கூறிக்கொள்கின்றனர். சட்டமும், நீதியும் கேலிக் கூத்தாகின்றது.

 

மகிந்தா தன்னைக் கொல்ல சதி என்பது, சரத் தன்னை கொல்ல சதி என்பதும், அவர்கள் இந்த நிலையை வந்தடைய வந்த பாதை இப்படிப்பட்டது என்பதால், இது நாளை தமக்கு நடக்கும்; என்று நம்புகின்றனர். சாராம்சத்தில் இது ஊகம். இவை அனைத்தும் தங்கள் கடந்தகால வழி சார்ந்த, சூக்குமான அனுமானங்கள் தான். இன்று அதிகாரத்தை இழந்த சரத்துக்கு முன்னால், அரசு தன் அதிகாரங்கள் மூலம் இதில் முன்னணி பாத்திரத்தை வகிக்கின்றது. இந்த அரசு சட்டத்துக்கு புறம்பாக பல ஆயிரம் இளைஞர்களை இரகசியமாக கடத்தி கொன்றது. ஒரு இரகசிய ஒரு கொலைக் கும்பலே, இந்த அரசின் தூண்கள். சரத்தை எப்படி கொல்வது என்பது இந்த கொலைக் கும்பலின் தீராத கவலை. 

 

விளைவு என்ன?

 

மகிந்த குடும்ப சர்வாதிகாரம் ஊடான பாசிசம் கட்டமைக்கும் இராணுவ சர்வாதிகாரம், எதிர் நிலையில் இராணுவ சதிக்கு ஒரு தூண்டுகோலாக இன்று மாறி வருகின்றது. தேசிய இன ஒடுக்குமுறை, எப்படி புலியை உருவாக்கியதோ அதுபோல், இராணுவம் மேலான குடும்ப ஆதிக்கம் சார்ந்த ஒடுக்குமுறை, இராணுவ சதிப் புரட்சியை வெளியில் இருந்து மகிந்த குடும்பம் தூண்டுகின்றது.

 

இந்தியா தன்னைச் சுற்றிய பிராந்தியங்களில், தன் இராணுவ பொருளாதார செல்வாக்கை தக்கவைக்க, இராணுவம் சார்ந்த ஆட்சி அதிகாரங்களையே இன்று தேர்ந்தெடுக்கின்றது.  அதைத்தான் மகிந்த குடும்பம் இன்று முனைப்புடன் முன்தள்ளி முன்னெடுக்கின்றது.

 

பி.இரயாகரன்
03.02.2010