10292020Thu
Last updateWed, 28 Oct 2020 2pm

தலித் முரசின் “வர்க்காஸ்ரம” வெறி!

தலைமறைவாகச் செயல்பட்டுவரும் மாவோயிஸ்டு கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரும், இந்திய அரசால் தேடப்படும் "மாவோயிஸ்டு பயங்கரவாதிகளின் பட்டியலில்' இரண்டாம் இடத்தில் இருப்பவரும், அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான தோழர் கிஷன்ஜி எனப்படும் கோடீஸ்வரராவ், ""தெகல்கா'' ஆங்கில வார இதழுக்கு (நவம். 21,2009) அளித்த நேர்காணலில், தனது கல்லூரி வாழ்க்கை, தனித் தெலுங்கானா மாநிலம் கோரி நடந்த போராட்டத்தில் ஈடுபட்டது, பின்னர் முற்போக்கு மாணவர் சங்கத்தைக் கட்டியமைத்தது, அன்றைய அரசியல் சூழ்நிலை, முற்போக்கான குடும்பப் பின்னணி, அவரது தந்தையார் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு காங்கிரசுக் கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக இருந்தது, பார்ப்பனர்களாக இருந்த போதிலும் தமது குடும்பத்தினர் சாதியத்தில் நம்பிக்கையின்றி நடந்து கொண்டது, தனது தந்தையாருக்கு சோசலிசத்தின் மீது நம்பிக்கை இருந்த போதிலும், ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை இல்லாதது முதலானவற்றைப் பற்றிச் சுருக்கமாக விவரித்திருக்கிறார்.

 

இதில், தமது பெற்றோர் மற்றும் குடும்பம் பற்றிச் சொல்லுமிடத்தில், ""நாங்கள் பார்ப்பனர்களாக இருந்த போதிலும், எங்கள் குடும்பத்தில் சாதி பார்ப்பதில்லை'' என்று ("we are brahmins, but our family never believed in caste ") கூறியுள்ளார். தான் வளர்ந்த முற்போக்கான சூழ்நிலையாக, தமது குடும்பம் சாதியத்தில் நம்பிக்கையற்று இருந்ததைக் குறிப்பிடுகிறார்.

 

இந்த வார்த்தையை மட்டும் எடுத்துக் கொண்டு ""நாங்கள் பிராமணர்கள்'' என்று சாதியப் பாசத்தோடு அவர் குறிப்றபிடுவதாக தலித் முரசு இட்டுக்கட்டி எழுதி அவதூறு செய்திருக்கிறது. இன்னும் ஒருபடி மேலேபோய், ஆயுதம் ஏந்தாத நக்சலைட்டுகள் ஏற்கெனவே பூணூலிஸ்டுகளாக இருப்பது போலவும், இப்போது ""ஆயுதம் ஏந்திய நக்சலைட்டுகளும் பூணூலிஸ்டுகளாகத்தான் இருக்கிறார்கள்'' என்றும் "கண்டுபிடித்து' கொச்சைப்படுத்தியுள்ளது. ""தான் பிராமணன் என்பதில் அவருக்கு நம்பிக்கை இருக்கிறது. சதுர்வர்ணத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது'' என்றெல்லாம் வலிந்து இட்டுக்கட்டி எழுதியிருக்கிறது. ""மாவோயிஸ்டுகளின் லட்சியம் சரிதான். ஆனால் அது ஜாதிöயாழிந்த அதிகாரமாக ஜனநாயகமாக இருக்க வேண்டாமா?'' என்று உபதேசமும் செய்கிறது.

 

அக்டோபர் மாத தலித் முரசு இதழில் ""ஒருநபர் ராணுவமாகச் செயல்பட்டவர் '' என்று மறைந்த மனிதஉரிமைப் போராளி தோழர் பாலகோபாலைப் பற்றி (அவரும் பிறப்பால் பார்ப்பனர்தான்) எழுதிய அப்பத்திரிகை, கிஷன்ஜி ஆயுதமேந்தி, ஒரு நபர் இராணுவமாக நின்று கொண்டிருக்கும்போது, அவரைப் ""பார்ப்பான்'' என்று அலறுவதன் மூலம் தனது முற்போக்கு ஜனநாயக வேடத்தைத் தானே கழற்றி எறிந்து விட்டது.

 

ஒருவனைப் பிறப்பின் அடிப்படையிலேயே தீர்மானிப்பதும், அணுகுவதும்தான் பார்ப்பனியம். ஆளும் வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்தில், மக்களை ஒன்றுதிரளவிடாமல் சாதி ரீதியாகப் பிரித்து மேய்வதுதான் பார்ப்பனியம். நூல் பிசகாமல், பார்ப்பனியம் கொடுத்த வேலையை பரிசுத்த ஆவியோடு செய்து முடித்திருக்கிறது,

 

தலித் முரசு. தலித் முரசு வாசகர்கள், தெகல்கா இதழைப் படித்திருக்க மாட்டார்கள், படித்திருந்தாலும் அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்று கருதிக் கொண்டு, இப்படி கீழ்த்தரமாகக் கொச்சைப்படுத்தி யிருக்கிறது அப்பத்திரிகை. இது பார்ப்பனியத்தின் மீதான வெறுப்பின் காரணமாக வரவில்லை. மாறாக, கம்யூனிசத்தின் மீதான வர்க்க வெறுப்பின் வெளிப்பாடுதான் இது. தலித்தியம் என்பதும், அடையாள அரசியல் என்பதும் ஏகாதிபத்தியம் பெற்றெடுத்த கள்ளக்குழந்தை அல்லவா? அதனால் தான் தமது ஏகாதிபத்திய எஜமானர்களின் மனம் குளிர இப்படி அவதூறு செய்து எழுதியிருக்கிறது அப்பத்திரிகை.

 

· சுடர்விழி