"மே 18" இயக்கம் வெளியிட்ட வியூகம் இதழ் தனது முன்னுரையூடாக, கடந்த தமிழ் தேசியத்தின் தோல்விக்கு "தன்னியல்புவாதம்" தான் காரணம் என்கின்றது. இதே காரணத்தையே 1992 களில் "உயிர்ப்பு" சஞ்சிகை ஊடாக கூட இவர்கள் முன்வைத்தனர். இப்படி முன்வைத்ததன் ஊடாக, அது அன்று புலியின் ஆள்காட்டி அமைப்பாக, புலியின் உளவு அமைப்பாக மாறியதே கடந்த வரலாறாகியது.

இன்று மீண்டும் ஜான் அதே "தன்னியல்புவாதம்" கோட்பாட்டை முன்தள்ளுகின்றார். பிரபாகரன் செத்த நாளாக அரசு அறிவித்த மே 18 ஜ, தனது அமைப்பின் பெயராக முன்வைத்து கொண்டு மீண்டும் தமிழ்தேசியம் பேசுகின்றார். இப்படி "மே18" இயக்கம் மூலம் ஜான் முன்தள்ளும் அரசியல் என்பது, தமிழர் விடுதலைக் கூட்டணி முன்வைத்த "தேசியத்தை" அரசியல் ரீதியாக "தன்னியல்புவாதம்" மூலம் முன்மொழிந்து பாதுகாக்கின்றார். கடந்த காலத்தில் தேசியத்தின் பெயரில் நடத்திய மக்கள் விரோத பாசிச அரசியலை பாதுகாக்க, அதை "தன்னியல்புவாதம்" என்று கூறி, அதையும் பாதுகாத்து நிற்கின்றது "வியூகம்" இதழ்.

 

"தன்னியல்புவாதம்" தான், தமிழ் தேசியத்தின் தோல்வி என்கின்றனர். அது தேசியத்தின் தோல்வி அல்ல என்கின்றனர். தேசியம் முன்வைத்த அரசியலின் தோல்வியல்ல என்கின்றனர். இங்கு தேசியம் முன்வைத்த அரசியல் சரியானது, "தன்னியல்புவாதம்" தான் தோல்விக்கான காரணம் என்கின்றனர்.

 

இப்படி "மே 18" இயக்கம் "வியூகம்" ஊடாக வியூகம் போட்டு அதை "தன்னியல்புவாத' மாக முன்தள்ளும் அரசியல், கடந்தகாலத்தின் மக்கள் விரோத தேசிய அரசியலை பாதுகாத்து மீளவும் அதைக் கட்டமைப்பதுதான். தங்கள் "தன்னியல்புவாத" கோட்பாட்டு அரசியலை, குழையடிக்கும் அரசியல் வடிவங்கள் மூலம் தமக்குள் நடைமுறைப்படுத்த முனைகின்றனர்.

 

தேசியம் பற்றிய அடிப்படையான அரசியல் உள்ளடகத்தையே இது மறுதலிக்கின்றது. தேசியத்தை மறுத்து எழுந்த "தமிழ் தேசிய" வலதுசாரிய அரசியலை பாதுகாப்பதுதான், "தன்னியல்புவாதம்" அரசியலின் உள்ளடக்கமாக உள்ளது.

 

இதனால் தேசியம் பற்றி அடிப்படையான புரிதலை மறுதலித்து, அதை திரித்துக்காட்ட முனைகின்றனர். இதை விரிவாக பின்னால் பார்க்க உள்ளோம்.

 

தேசியம் பற்றி வேறுபட்ட வர்க்கங்கள் கையாளும் அரசியல் கண்ணோட்டமும், அதன் உள்ளடக்கமும் கூட வேறுபட்டது. இதை "தன்னியல்புவாத" கோட்பாட்டு மறுதலிக்கின்றது. தேசியம் பற்றி ஏகாதிபத்தியமும், நிலப்பிரத்துவமும், தரகு முதலாளிய வர்க்கமும் கையாளும் அரசியல் கண்ணோட்டத்தை, "தன்னியல்புவாத" கோட்பாட்டு எதுவுமற்றதாக மறுதலிக்கின்றது.

 

தேசியம் என்பது என்ன? முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை, அடிப்படையாகக் கொண்டது. சொந்த தேசிய மூலதனத்தை, சொந்த மொழியை, சொந்த பண்பாட்டை, சொந்த மண்ணில் பாதுகாக்க அது முன்வைக்கும் தேசிய அரசியல் தான், தேசியத்தின் அரசியல் அடிப்படையாகும். இதை "மே 18" இயக்கம் மறுதலித்து, "தன்னியல்புவாத" கோட்பாட்டு மூலம் இந்த அரசியல் அடிப்படையை சேறடிக்கின்றனர்.      

   

இப்படி இவர்கள் மறுக்கும் "தமிழ் தேசியமே", கடந்தகாலத்தில் நிலவியதுடன், அது தோல்வி பெற்றது. முரணற்ற உண்மையான தேசியமோ, தனது மூலதனத்துக்கு எதிராக இயங்கும் ஏகாதிபத்திய மூலதனத்தை எதிரியாகப் பார்க்கும். அதுபோல் நிலப்பிரபுத்துவத்தை, தரகு முதலாளித்துவத்தை எதிரியாகப் பார்க்கும். இதை மறுதலிக்கின்றது "மே 18 இயக்கம்." இதையே முன்பு "உயிர்ப்பும்", "தமிழீழக்கட்சியும்" மறுதலித்தது.

 

முரணற்ற தேசியம் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் அனைத்து கோரிக்கைகளையும் தன்னகத்தில் உள்ளடக்கிய, ஒரு தேசிய போராட்டத்தை முன்னிறுத்திப் போராடும். இதற்கு வேறுபட்ட வர்க்கங்கள் தங்கள் நலன்களையும் உள்ளடக்கிய வகையில், ஒரு ஐக்கிய முன்னணியாக இணைந்து போராடும்.

 

இதையெல்லாம் மறுத்து எழுந்ததே எமது "தமிழ் தேசியம்;". வலதுசாரிய தரகுமுதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சியாக இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கிய தமிழ் தேசிய அரசியலின் நீட்சியில் இருந்து எழுந்த தமிழ் தேசியம், இன்று தோற்றுப்போனது. இது "தன்னியல்புவாதத்தின்" தோல்வியல்ல, அந்த "தேசிய அரசியலின்" விளைவாகும்;. "தேசியம்"   தன் அரசியல் உள்ளடக்கத்தை இழந்து இருந்தது. சொந்த தேசிய மூலதனத்தை, சொந்த மொழியை, சொந்த பண்பாட்டை, சொந்த மண்ணில் பாதுகாக்கும் தேசியம் என்ற அரசியல் அடிப்படையை, இது மறுதலித்;தது. தரகு முதலாளித்துவத்தையும், நிலப்பிரபுத்துவத்தையும் சார்ந்து நின்றதுடன், ஏகாதிபத்தியத்தையும் சார்ந்து நின்ற,  தமிழ் தேசியத்தை முன்வைத்தது. அரசியல் ரீதியாக இதுவே தமிழ்தேசியத்தை தோற்கடித்தது, இங்கு "தன்னியல்புவாதம்" அல்ல

.

தமிழ் தேசிய அடிப்படைகளை மறுத்து, இயல்பாக மக்கள் விரோதமான ஒரு அரசியல் அடிப்படையில் தன்னை அரசியல் ரீதியாக கட்டமைத்துக் கொண்டது. இப்படி தமிழ் தேசிய விரோதமான அரசியல் அடிப்படையை கொண்ட, கடந்தகால தமிழ் தேசியத்தின் அரசியலை மறுதலித்து விமர்சனத்தை செய்ய தயாரற்ற "மே 18" இயக்கம், இதை "தன்னியல்புவாதம்" என்கின்றது. அரசியல் ரீதியாக தேசியமல்லாத, கடந்தகால மக்கள் விரோத அரசியல் கூறுகளை பாதுகாக்க, அதை "தன்னியல்புவாதம்" என்று திரித்துக் காட்டுகின்றனர்.

 

சொந்த தேசிய மூலதனத்தை, சொந்த மொழியை, சொந்த பண்பாட்டை, சொந்த மண்ணில் பாதுகாக்கும் போராட்டம் தான், தேசியத்தின் ஆகக் குறைந்த அரசியல் அடிப்படைகள். இதை "மே 18" இயக்கம், ஸ்ராலின் அரசியல் வரையாக காட்டி மறுதலிக்கின்றது. கடந்த காலத்தில் இதை மறுத்தலித்தே உருவான இயக்கங்கள், ஏகாதிபத்;திய (அமெரிக்கா முதல் ரூசியா (இங்கு இந்தியா) வரை) கைக்கூலிகளாக மாறி தமிழ்தேசியத்தையே மறுத்தனர். இதையே இன்று "மே18" இயக்கமும் மறுதலிக்கின்றது. இதை "தன்னியல்புவாதம்"  என்று சொல்லி, இன்று "மே18" இயக்கத்தை, பிரபாகரனின் மரணத்தின் தொடர்ச்சியில் தொடங்கி அறை கூவல் விடுகின்றனர். மீண்டும் ஒரு மரணப் படுகுழியை தோண்டி வைத்துக்கொண்டு, அதற்கு அமைவாக குழையடித்துக் கொண்டு வா வா என்கின்றது. பிரபாகரனின் தொடர்ச்சியாக "மே18" இருந்து தொடர்வோம் என்கின்றது.


தொடரும்


பி.இரயாகரன்
10.01.2010