சுற்றவர முட்கம்பி, நீட்டிய துப்பாக்கிகளுடன் சிங்கள இராணுவம், மாரிகால மழை, வெள்ளம், குளிர் என்ற அனைத்துவகை துன்பங்களுடன் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ்மக்களுக்கு புது வருடம் பிறக்கிறது. அழிவு அரசியலின் தலைமையால் அனைத்தையும் இழந்து தோற்கடிக்கப்பட்டவர்களாக இந்த மக்கள் சிங்கள தேசியத்தின் காலடியில் தூக்கி வீசப்பட்டுள்ளார்கள்.

புலித்தலமையின் அழிவு நிர்க்கதியாக நிற்கின்ற மக்களுக்கு, இதுவரை தெரியாமலிருந்த எதிரிகளையும் தெரிந்துகொள்ள வழிசெய்திருக்கிறது.

“மணியோடர் சமூகமாக” இருந்தமையால் போர்க்காலத்திலும் யாழ்ப்பாணம் புலம்பெயர்ந்த உறவுகளின் உண்டியல்களினால் பொருளாதார ரீதியாக பிழைத்துக் கொண்டது. ஆனால் வன்னி முகாம் மக்களுக்கு இந்த “வசதி” இல்லை. முகாமைப் போய்ப் பார்த்தோம், மகிந்த அவர்களை நன்றாகவே “வைத்திருக்கிறார்” என்ற தமிழ்குடிகளின் அறிக்கைகள்தான் அவர்களுக்குப் பரிசாக கிடைக்கின்றன. இன்னும் ஒருபடி மேலே போய், வெளியில் போனால் அவர்களுக்கு வீடில்லை, வருமானம் இல்லை, ஆகவே முகாம்தான் சிறப்பானது என்கிறார்கள். அந்த மக்களுக்கு உதவுவது அவர்களது போர்க்குணாம்சத்தை மழுங்கடித்து விடும் என்று புரட்சிகரமாக முழங்கப்படுகிறது.

2009_1மே 17ஆம் திகதிவரை தமிழீழம் வாழ்க என்று ஆவேசத்துடனும், துடிப்புடனும் இருந்த புலம்பெயர்ந்த தமிழ்தேசிய வீரர்கள் பின்னர் அடங்கிப்போய், இப்போது வேட்டைக்காரன் பார்ப்பவர்கள் துரோகிகள் என போராட்டதின் அடுத்த கட்டத்துக்கு வந்துள்ளனர்.

புலி அரசியலால் இல்லாமல் செய்யப்பட்டிருந்த புலி அல்லாத இன்னொரு அரசியல் புலித்தலமைகளின் அழிவின்பின் தமது குண்டாந்தடிகளுடன் களத்தில் இறங்கியுள்ளது. “உன்னைப் பற்றி எனக்கு முன்பே தெரியும்” என்று ஆளாளுக்கு “ஓடவிட்டு” போர் புரிய ஆரம்பித்துள்ளனர். அரசியலற்ற போரையும், வீடியோவுக்கான இராணுவத் தாக்குதல்களையும் தமிழீழத்துகான ஒரேவழியாக புலம்பெயர் புலித்தேசியம் தாரகமந்திரமாகக் கொண்டிருந்தது. இப்போதும் புலித்தலைமை இல்லாத நிலையில் அதே புலம்பெயர் தேசங்களிலிருந்துதான் புதிய தலமைகள் தோன்ற ஆரம்பித்திருக்கின்றன.

தமிழீழத்தின் பெயரில் சேர்ந்த மில்லியன் சொத்தை சொந்தமாக்கிக்கொள்ளும் அடிதடி, குழிபறிப்பு, காட்டிக்கொடுப்பில் புலித் தொண்டர்கள் தீவிரமாக ஒரு பக்கம் ஈடுபட, இதுவரையான புலி அரசியலின் மீதான எந்தவொரு கேள்விகளும், சுயவிமர்சனமுமின்றி இன்னொரு பகுதி நாடுகடந்த தமிழீழம் படம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள்தான் ஒரிஜினல் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பலர் உரிமைகோரி அறிக்கை விடுகிறார்கள்.

நந்திக்கடலில் தமிழ்மக்களைக் கொலைசெய்த மகிந்தவுக்குப் பாடம் புகட்ட, செம்மணியில் தமிழ்மக்களை கொலைசெய்த பொன்சேகாவை சனாதிபதியாக்க வேண்டும் என்றளவுக்கு தமிழீழ அரசியல் விரிவடைந்திருக்கிறது.

இவ்வளவு கூச்சல்கள்/கூத்துகளினால் மறக்கடிக்கப்படுவர்கள் முகாமில் அடைக்கப்படுள்ள மக்கள், சரணடைந்து தகவலின்றி இருக்கும் புலிப் போராளிகள், தமிழீழப் போரின் பெயரில் சிங்களச் சிறைகளில் வருடக்கணக்காக தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள்தான்.

இவ்வளவு மக்களைக் கொன்று குவித்தைப் பார்த்துக்கொண்டிருந்த அதே சர்வதேசத்தை நோக்கியே இப்போது இந்த மக்களுக்காவும் குரல்கொடுக்க வேண்டியது தவிர்க்க முடியாத முரண். சிங்கள அரசின் இரத்தக்கறை சர்வதேசங்களில் தொடந்தும் காட்டப்படவேண்டும். முகாம் மக்கள், சரனடைந்த புலிகள், அரசியல் கைதிகள் தொடர்பில் சர்வதேச (ஊடக)ங்களின் கவனத்தை வைத்திருக்காது போனால் 2010 இலும் தெரியவராத மனித அழிவு தொடரப் போகிறது

“தமிழ் மக்களைப் பட்டினி போட்டு அடிபணிய வைக்கிறது இலங்க அரசு” இந்த ஒரு வரிக்காக பத்திரிகையாளர் திசைநாயகத்துக்கு 20 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மனித உரிமைக்கும் சிங்கள அரசுக்கும் எந்தவித ஒட்டுறவும் இல்லை என்பது தெரிந்த விடயம். ஆனால் நகைப்புக்குரிய காரணத்தைச் சொல்லக்கூடிய திமிர் அரசுக்கு இருப்பது சர்வதேசத்தின் மெத்தனமான போக்கினால்தான். காசை (கடனாக) அள்ளிக்கொடுக்கும் “வளர்ந்த” நாடுகள் இதற்கு மனித உரிமையை நிபந்தனையாக்க தயாரில்லை.

2009_3அமெரிக்க சனாதிபதி பராக் ஒபாமாவுக்கு அமைதி/சாமாதானத்திற்கான நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. We can change என்ற முழக்கத்துடன் பதவிக்கு வந்த ஒபாமா Change பண்ணாத விடயங்களில் இரண்டு.

போர் நடக்கும் நாடுகளில் போருக்குப் பின்னாடியும் மக்களை அங்கவீனர்களாக்கிக் கொண்டிருக்கும் பயங்கர போர்க்கருவி நிலக்கண்ணி வெடிகள். குழந்தைகள், முதியவர்களிலிருந்து யாரும் இதற்குத் தப்பவில்லை. போர்த்தரப்பினரை விட பொதுமக்களையே நிலக்கண்ணி வெடிகள் பெருமளவில் பாதிக்கின்றன. குறிப்பாக குழந்தைகளே மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர்.

கன்ணிவெடிகளைத் தடைசெய்வதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட இந்த வருடமும் அமெரிக்கா மறுத்துவிட்டது.

அப்கானிஸ்தானுக்கு இன்னும் அமெரிக்க துருப்புகள் அனுப்பிவைக்கப்பட இருக்கின்றனர்.

நோபல் பரிசு 2009 இலும் தனது “நடுநிலமை”யைக் காட்டியுள்ளது.

2009_2காலநிலை மாற்றம் குறித்து டென்மார்க்கில் நடைபெற்ற மாநாடு தோல்வியில் முடிந்திருக்கிறது. வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை முடக்குவதாக வளர்ந்தநாடுகள் தீர்மானங்கள் கொண்டுவரப்போய் காலநிலைப் பிரச்சினையைக் கிடப்பில் போட்டாயிற்று.

இத்தனைகாலமாக தமது பொருளாதார வளர்ச்சியை மட்டும் கருத்தில்கொண்டு உலகத்தின் காலநிலையையே நாசமாக்கிய வளர்ந்தநாடுகள் தமது பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை.

இந்த விளையாட்டில் பாதிக்கப்படுவது வளராத நாட்டில் இருக்கும் விவசாயிகள் உட்பட்ட அப்பாவி மக்கள்தான்.

ஊர்வலத்தில் கலந்து கொண்டவர் ஈரான் அரசால் கொலை.

மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு சீனாவில் மரண தண்டனை.

2010ஐயும் வரவேற்போம். புதுவருட வாழ்த்துகள்.

தொடர்புள்ள சில பதிவுகள்:


http://porukki.weblogs.us/2010/01/01/2009/