சாங்குயிங் என்ற நகரம், சீனாவின் மேற்கேயுள்ள சிச்சுவான் மாநிலத்தின் வளர்ந்துவரும் பெரு நகரங்களில் ஒன்றாகும். இந்நகரத்தைச் சேர்ந்த லீ குயாங் என்பவர், சீன "கம்யூனிஸ்ட்' கட்சியின் செல்வாக்குமிக்க அதிகாரி. அவர் ஒரு பெரும் தொழிலதிபர்; கோடீசுவரர்.

 

வீட்டுமனைத் தொழிலிலும் நகரின் வாடகைக் கார் போக்குவரத்திலும் அவர்தான் ஏகபோக அதிபர். இது தவிர, ஏராளமான சூதாட்ட சாராய களிவெறியாட்ட விபச்சார விடுதிகளையும் போதைமருந்து வியாபாரத்தையும் சட்டவிரோதமாக அவர் நடத்தி வந்தார். நவீன ஆயுதங்களைக் கொண்ட குண்டர் படையையும் அவர் வைத்திருந்தார். எனவே, சாங்குயிங் நகரில் அவர் வைத்ததுதான் சட்டம். அவர்தான் இந்நகரின் ""ஞானத் தந்தை''!

 

நான்காண்டுகளுக்கு முன்பு, இந்நகரைச் சேர்ந்த ஹூவாங் கோபி என்ற 47 வயதான பெண்மணி, தன்னுடை ய வீட்டுமனையை இவருக்குத் தர மறுத்தார். விளைவு? அவரின் கண் முன்பாகவே அவரது கணவர் வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது வீடு நாசமாக்கப் பட்டது. குற்றுயிராக அவர் தெருவில் வீசியெறிப்பட்டார். இக்கொடுஞ்செயலைப் பற்றி அவர் போலீசில் புகார் தெரிவித்தார். நீதிமன்றத்தில் முறையிட்டார். ஆனால், லீயின் வானளாவிய அதிகாரத்தை எதிர்த்து அதிகார வர்க்கமோ, நீதித்துறையோ, போலீசோ எதுவும் செய்ய மறுத்தன. ஹூவாங் கோபியின் துயரமும் லீயின் கொட்டமும் ஏதோ விதிவிலக்கான சம்பவம் அல்ல. சீனா முழுவதும் நடந்துவரும் கம்யூனிசப் போர்வையணிந்த தனியார் முதலாளிகளின் அட்டூழியங்களுக்கும் பயங்கரத்துக்கும் ஒரு உதாரணம்தான் இந்தச் சம்பவம்.

 

சாங்குயிங் நகர "கம்யூனிஸ்ட்' கட்சியின் புதிய செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள போ ஷிலாய் என்பவர், கட்சித் தலைமையின் ஆதரவுடன் லீ கும்பலுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்து கடந்த ஜூலை 21 ஆம் தேதியன்று நூற்றுக்கணக்கான அரசு அதிகாரிகள், போலீசு அதிகாரிகள், நீதிபதிகள் என அனைவரையும் கைது செய்ய உத்தரவிட்டார். லீ உள்ளிட்டு, பல மாஃபியா குண்டர் படைகளுக்குப் புரவலனாக இருந்த அந்நகரத்தின் போலீசு கமிசனர், விபச்சார சூதாட்ட விடுதிகளையும் போதைமருந்து வியாபாரத்தையும் நடத்தி வந்த இந்நகரின் ""ஞானத் தாய்'' ஷி காய்பிங் என 31 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

இது தவிர, 1500 அரசு அதிகாரிகள், 250 போலீசு அதிகாரிகள், மூன்று கோடீசுவரர்கள், 70 குண்டர் படைத் தலைவர்கள் எனப் பலர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக இக்கும்பல் நடத்திவந்த ஆயுத தொழிற்சாலை அம்பலப்பட்டு, ஏராளமான ஆயுதங்களும் வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. உலக மகா கோடீசுவரர்கள் பயன்படுத்தும் ஃபிராரி, லம் போர்கினிஸ், பென்ட்லேஸ் முதலான கார்களுடன் உல்லாசமாகத் திரிந்த இக்கும்பலின் ஆடம்பர வெளி நாட்டு சொகுசு கார்கள், 65 க்கும் மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பலருக்கு ஆயுள் தண்டனையும், மாஃபியா குண்டர் படைத் தலைவர்களுக்கு ம ரண தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. கிரிமினல் குற்றக் கும்பல்களுக்கு எதிரான இந்நடவடிக்கை தொடங்கியதும், வேறு சில நகரங்களிலும் இதேபோன்று கைதுகள் நடந்து, அதில் சிலருக்கு மரண தண்டனையும் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

 

இக்கிரிமினல் கும்பல் மீதான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சாட்சியமளிக்க வந்த ஹூவாங் கோபியைப் போலவே 300க்கும் மேற்பட்டோர் தங்களுக்கும் இக்கிரிமினல் கும்பலால் ஏற்பட்ட கொடுமைகளை வாய்விட்டு அழுது சாட்சியமளித்துள்ளனர். ""இந்தக் குண்டர்கள் பட்டப்பகலில் பலரை வெட்டிக் கொன்றனர். பலரைப் படுகாயப்படுத்தினர். போலீசில் புகார் செய்தால் மீண்டும் தாக்கி எச்சரித்துப் பயபீதியை உருவாக்கினர். சீனாவின் குயிங் வம்ச கொடுங்கோலாட்சியில் கூட இத்தகைய கேள்விமுறையற்ற அட்டூழியங்கள் நடந்ததில்லை'' என்று வேதனையுடன் புலம்பினார், நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க வந்த ஒரு சீனத் தொழிலாளி.

 

""இது 10 சதவீத கமிசன் வாங்கும் ஊழல் பெருச்சாளிகளின் ஆட்சி. இரகசிய உலகப் பேர்வழிகள் அரசியல் பலத்தோடு அரசு எந்திரத்தையே தமது காலடியில் கொண்டுவந்து விட்டனர். இலஞ்ச ஊழலே இன்று "கம்யூனிஸ்ட்' கட்சியை அச்சுறுத்தும் பெரிய நோயாக மாறிவிட் டது'' என்று சீழ்பிடித்து நாறும் சீனாவைப் பற்றி விவரிக்கிறார் பூ யோங்ஜியான் என்ற பேராசிரியர். உண்மைதான்! கடந்த செப்டம்பரில் சீன "கம்யூனிஸ்ட்' கட் சியின் விரிவாக்கப்பட்ட பிளீனத்தில், கட்சியில் புரையோடிப் போய்விட்ட இலஞ்ச ஊழலுக்கு எதிராகப் போராடுமாறு கட்சித் தலைமையே அறைகூவல் விடுக்குமளவுக்கு, அக்கட்சியும் அதன் முதலாளித்துவ ஆட்சியும் நாடெங்கும் நாறிப் போயுள்ளது.

 

உலகமயமாக்கத்தின் கீழ் எந்தளவுக்கு அரசு ஆதரவோடு தனியார் முதலாளித்துவம் தீவிரமாக நடை முறைப்படுத்தப்படுகிறதோ, அந்தளவுக்கு ஊழலும் கிரிமினல் குற்றங்களும் தீவிரமாகின்றன. கடந்த 2000வது ஆண்டில் சாங்குயிங் நகரில் விரைவான தொழில் வளர்ச்சி என்ற பெயரில் ஏற்றுமதி அடிப்படையிலான தொழில்பூங்காக்களும் அடுக்குமாடிக் குடியிருப்புகளும் உருவாகத் தொடங்கியதும், அதே வேகத்தில் ஊழலும் கிரிமினல் குற்றங்களும் பெருகத் தொடங்கின.

 

முதலாளித்துவத்தை ஒழிக்காமல், இக்கிரிமினல் குற்றக் கும்பல்களுக்கும் ஊழல் பெருச்சாளிகளுக்கும் மரணதண்டனை முதல் கடுமையான தண்டனைகள் விதிப்பதன் மூலம், தீவிரமாகிவரும் ஊழலையும் கிரிமினல் குற்றங்களையும் ஒழித்துவிட முயற்சிக்கிறது சீன முதலாளித்துவ அரசு. கடந்த ஆண்டில் உலகிலேயே மிக அதிகமாக மரணதண்டனை விதிக்கப்பட்ட நாடு சீனாதான். இப்படி கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்ட போதிலும் ஊழலும் கிரிமினல் குற்றங்களும் குறையவில்லை. மாறாக, மேலும் தீவிரமாகிக் கொண்டே வருகிறது. ஏனென்றால்,முதலாளித்துவமும் கிரிமினல் குற்றக் கும்பல்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும்.

 

மகத்தான சீனப் புரட்சியின் 60வது ஆண்டுவிழாவை உலகெங்குமுள்ள புரட்சிகரஜனநாயக சக்திகள் கொண்டாடிவரும் இத்தருணத்தில், சீன நாடானது முதலாளித்துவத்தின் எல்லா கடை கோடி கழிசடைத்தனங்களையும் கொண்டு சீரழிந்து நிற்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக அந்நாடு பின்பற்றிவரும் முதலாளித்துவம், இன்று அந்நாட்டையே அச்சுறுத்தும் அபாயமாக மாறி, நாட்டையும் மக்களையும் வதைத்துக் கொண்டிருக்கிறது. சீரழிந்த சீனா, இன்னுமொரு பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சியை எதிர்நோக்கி நிற்கிறது.

 

• குமார்