"மக்களை அரசியல் மயப்படுத்த” காடு மேடுகள் எல்லாம் திரிந்து, அடுத்த புத்தாண்டில் (சித்திரையில்) தமிழீழம் என்றவர்கள் இவர்கள். இப்படி "அரசியல் மயப்படுத்த"ப்பட்டவர்களை ஏமாற்றி பிடித்துச் சென்றவர்கள், அதில் ஒரு பகுதி இளைஞர்களை கொன்றார்கள். இது வரலாறு.

இதையா அசோக் புளாட் வரலாறாக சொல்லுகின்றார். இந்த கொலைகாரப் புளட்டை எதிர்த்து புளாட்டில் இருந்து வெளியேறி வாழ வழியற்று வாடும் டேவிட் ஐயா எழுதிய "கொலைகார முகுந்தனும் கூட்டாளி வாசுதேவாவும்" என்ற நூலில் 286 படுகொலைகள் பின்தளத்தில் நடந்ததாக எழுதியுள்ளார்.

 

இப்படி உட்படுகொலையை புளாட் செய்தது. அதன் மத்தியகுழு உறுப்பினர் ஒருவர் தான் அசோக்.

 

கொலைகார முகுந்தனின் நம்பிக்கைக்குரிய ஒருவர் தான் இன்று ஈ.என்.டி.எல்.எவ் ஏஜண்டாக இருக்கும் ஜென்னி.

 

டேவிட் ஐயாவுக்கு இருந்த நேர்மை ஒரு துளிதன்னும் இவர்களுக்கு கிடையாது. 

 

யார் இந்த கொலைக்கு பொறுப்பு? சரி ஏன் எதற்காகக் கொன்றீர்கள்? அதை நீங்கள் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், அதற்கு பதில் சொல்லவேண்டிய பொறுப்பு உங்களுக்கு உண்டு.

 

இரயாகரனின் "அவதூறுக்கு" பயந்தா, அந்த கொலைகாரர்களைப் பாதுகாக்கின்றீர்கள்!?

 

அன்று புளட்டால் கொல்லப்பட்டவர்கள் யார்? அவர்கள் வேறுயாருமல்ல, சமூகத்தையும், மக்களையும் நேசித்தவர்கள். அதனால் தான், இவர்களால் அவர்கள் கொல்லப்பட்டனர். அதுதானே உண்மை.

 

அவர்கள் உங்கள் அரசியல் பம்மாத்துகளையும் ("மக்களை அரசியல் மயப்படுத்தி"), மக்கள்விரோத அரசியலையும் கேள்வி கேட்டு எதிர்த்ததுடன், உங்கள் பிற்போக்குத் தலைமையை எதிர்த்து போராடியதால் கொல்லப்பட்டனர். இதை மறுக்க முடியுமா?

 

இந்த கொலைகளுக்கு எல்லாம் துணை நின்ற, இன்று ஈ.என்.டி.எல்.எவ்  ஐரோப்பிய ஏஜண்டாக உள்ள ஜென்னியால் தான் இதை மறுக்க முடியுமா?

 

நீங்கள் இதை மறுத்தால், யார் இதைச் செய்தது? இதற்கு துணை நின்றவர்கள் யார்? சொல்லுங்கள்.

 

ஆம், அவர்கள் உங்கள் எல்லோரையும் விட, மக்களை நேசித்தனர். மக்கள் அரசியலை  முன் வைத்தனர். மார்க்சியத்தை தழுவத் தொடங்கினர். அதனால் தான், அவர்கள் உங்களால் கொல்லப்பட்டனர். அதனால்தான் நீங்கள் இன்று வரை அதை முன்னிறுத்தாது மூடிமறைத்தீர்கள், மூடிமறைக்கின்றீர்கள். இந்தக் கொலைகளையும், கொலைகாரர்களையும் முனைப்பாக சமூகம் முன் கொண்டுவரும் மக்கள் அரசியல் உங்களிடம் என்றும் இருக்கவில்லை. அதனால்தான் அதை செய்தவர்களுடன் இன்றும் கூடிக் குலாவ முடிகின்றது.

 

அவர்கள் உங்களுக்கு எதிரான போராட்டத்தில் தான், தங்களை தியாகம் செய்தனர். இதைத்தான் மறுக்க முடியுமா? உங்கள் அரசியலுக்கு எதிரான தியாகம் என்பதால், அவர்களின் அரசியலையும், மரணத்தையும், கேவலப்படுத்தி அதை இருட்டடிப்பு செய்கின்றீர்கள். உங்களால் அவர்களுடன் அன்றும் சரி, இன்றும் சரி, சேர்ந்து நிற்கவும் போராடவும் முடியவில்லை. இது வரலாறு. 

 

அவர்கள் யார்? யார் அவர்களைக் கொன்றது? ஏன் கொன்றனர்? எதையும் இன்று வரை மக்கள் முன் கொண்டு செல்லாத அரசியல் ஒரு "நேர்மை" உங்கள் நேர்மை என்கின்றீர்கள். நேர்மையான அரசியலே உங்களிடம் கிடையாது. இதுதானே உண்மை. இது என்ன இரயாகரனின் கண்டுபிடிப்பா!?, இரயாகரனின் அவதுறா!? இப்படிச் சொல்லித் தான் கொலைகார அரசியலுடன் இன்றுவரை உறவாட முடிகின்றது, கூத்தாட முடிகின்றது.    

             

நீங்கள் கொலைகார தலைமையிலான முகுந்தனுடன் கூடி நின்ற போதுதான், உங்களுக்கு எதிராக நடந்ததுதான் தீப்பொறியின் போராட்டம்.

 

புளாட்டின் வலதுசாரிய பாசிச அரசியலுக்கும், அதன் படுகொலைக்கும் எதிராக தீப்பொறி குழுவைச் சேர்ந்தவர்கள் போராடினார்கள். அதாவது பெரும்பான்மை மத்திய குழு உறுப்பினர்கள், சந்ததியாரின் தலைமையில் போராடினார்கள். நீங்கள் அந்த பெரும்பான்மையுடன் என்றுமே இருக்கவில்லை. அதில் அவர்கள் தோற்று தப்பியோடிய போது, அவர்களை கொன்று புதைக்க ராஜன், பாபுஜி, சிவராம் முதல் நீங்கள் அனைவரும் தேடி அலைந்தீர்கள். நீங்கள் கூட, அவர்களுடன் அதே அணியில் நின்றீர்கள். இப்படி அவர்களைக் கொல்ல முனைந்தவர்கள் சேர்ந்து உருவாக்கியது தான், புதிய மத்திய குழு.

 

இந்த மத்தியகுழு தான் மண்ணில் தீப்பொறி அணியை கைது செய்தனர், தொடர்ந்து வேட்டையாட முனைந்தனர். நீங்கள் தீப்பொறியுடன் நிற்கவில்லை. இதுதான் உண்மை.  இந்தளவுக்கும் தீப்பொறிக் குழுவே, மத்திய குழுவில் பெரும்பான்மையாக இருந்தது. சந்ததியார் அதற்கு தலைமை தாங்கியவர். அந்த மத்திய குழுவின் எதிர் அணியில் தான் நீங்கள் இருந்தீர்கள். இதை நீங்கள் எப்போதும் சுயவிமர்சனமாக பார்க்கவில்லையா?

 

இப்படிபட்ட நீங்கள் சந்ததியாரையே கொச்சைப் படுத்துகின்றீர்கள்.

 

 "கேணல் அபுதாகீரின் பங்களாதேசத்தின் மீது இந்தியா மேலாதிக்க அரசியலை அம்பலப்படுத்திய “வங்கம் தந்தபாடம்” என்ற புத்தகத்தை 1983ல் இலங்கையில் வெளியிட்டு இலங்கை மீதான இந்திய மேலாதிக்க அபாயத்தை எச்சரித்தவர்கள் நாங்கள்"

 

என்று வரலாற்றை திரிக்கின்றீர்கள். வங்கம் தந்த பாடம் என்ற நூலை சந்ததியார், புளாட் தலைமையிலான அரசியலுக்கு முரணாக வெளியிட்டவர். அதுவும் இந்தியாவில் தான் அச்சானது. சந்ததியாரின் அரசியலுடன் நிற்காத நீங்கள், அவருக்கு எதிராக நின்ற நீங்கள், இன்று அதை உரிமை கோருவது வரலாற்று அபத்தம்.

 

"இந்திய மேலாதிக்க அபாயத்தை எச்சரித்தவர்" என்று இன்று உரிமை கோரியவர் தான், றோ உருவாக்கிய ஈ.என்.டி.எல்.எவ் இன் முதுகெலும்பாக இருக்க முடிந்தது.

 

வரலாற்றை இருட்டடிப்பு செய்து வரலாற்றை திரித்துப் புரட்டுகின்ற அரசியல் தான், தீப்பொறியின் போராட்டத்தையும் திரித்து அதை கொச்சைப்படுத்தி கேவலப்படுத்துகின்றது. இதன் மூலம் தங்கள் எதிர்ப்புரட்சி வரலாற்றை, புரட்சிகர வரலாறாக காட்ட முனைகின்றனர்.  

  

அந்தத் திரிபையும், எதிர்ப்புரட்சிகர கூத்தையும் நீங்களே பாருங்கள்.

 

 "புளொட்டில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக 1985ல் பெரும்பான்மை மத்திய குழு உறுப்பினர்களும் தோழர்களும் புளொட்டைவிட்டு வெளியேறியிருந்தோம்.

இப் பிளவு மூன்று பகுதிகளாக அமைந்திருந்தது. ஒரு பகுதித் தோழர்கள் ராஜனோடும், இன்னொரு பகுதி தோழர்கள் எங்களோடும், மிகக் குறைந்த தோழர்கள் தோழர் காந்தனோடும் வெளியேறினர். காந்தனோடு வெளியேறிய தோழர்கள் தலைமறைவாகி தீப்பொறி என்ற பெயரில் பின்னர் இயங்கத் தொடங்கினர். எங்களோடு நூற்றுக்கணக்கான தோழர்கள் வெளியேறியபடியால் தலைமறைவாகி அரசியல் இயக்கத்தை முன்னெடுப்பதென்பது சாத்தியம் இல்லாமல் போயிற்று. அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை என்ன என்பது பற்றிய குழப்பங்களும் நெருக்கடிகளும் எங்களுக்கு தோன்றின."

 

என்கின்றார்.

 

ஒரு புரட்சிகர போராட்ட வரலாற்றை, அசோக்கைத் தவிர வேறு யாராலும் இவ்வளவு கேவலமாக திரிக்க முடியாது. அதுவும் இன்று செய்வது, அன்றைய எதிர்ப்புரட்சி அரசியலை நியாயப்படுத்தி செய்யும் அரசியல் நீட்சி.

 

அதை எப்படி என்று நாங்கள் பார்ப்போம்.

 

தீப்பொறி வெளியேறியது 15.02.1985 அன்று.

 

சந்ததியாரை உங்கள் புளாட் கொன்றது 10.09.1985 அன்று.

 

உங்கள் தலைமைக்கு எதிராக ஐ.பி போன்றவர்களினால் நடத்திய தளமாநாடு சுண்ணாகத்தில் ஸ்கந்தாவில் 19-24.02.1986 வரை நடந்தது.

 

இந்த தளமாநாட்டுக்கு பின் பின்தள மாநாடு நடக்க இருந்த நிலையில், றோவின்  முன்முயற்சியில் ராஜன் தலைமையிலான அணி தளக் கமிட்டிக்கு எதிராக சதி செய்தது.

 

அந்த றோ உருவாக்கிய கமிட்டியில் நீங்கள் இருந்தீர்கள்.

 

ஆனால் நீங்கள் "இன்னொரு பகுதி தோழர்கள் எங்களோடும்" என்று ராஜனுடன் நின்றதை மறுத்து திரிக்கின்றிர்கள்.

 

(பார்க்க அன்று றோ ராஜனுடன் சேர்ந்து நீங்கள் விட்ட துண்டுப் பிரசுரத்தை)

 

தீப்பொறி வெளியேறிய பின், குறைந்து 18 மாதங்கள் புளாட் சார்பாக கொக்கரித்தீர்கள். தளமாநாட்டுக்கு எதிராக றோவின் தேவைக்கு ஏற்ப நீங்கள் ஒரு மாநாட்டை நடத்த முனைய, இதைப் பயன்படுத்தி உமாமகேஸ்வரன் யூலை 19 போட்டி மாநாட்டை நடத்த முனைந்தான்.

 

பெரும்பான்மையான தளக் கமிட்டி இந்த இரண்டு சதிக்கும்பலுக்கும் எதிராக, நின்றதுடன் இரண்டு கொலைகார கும்பலிடமும் இருந்து தப்பிப்பிழைக்க நீங்கள் இல்லாத "இன்னொரு பகுதி தோழர்கள்" தப்பியோடினர்.

இது வரலாறு.

 

இந்த வரலாற்றைத்தான் அசோக் திரித்து புரட்டுகின்றார்.

 

எப்படி? எந்த வகையில்? ஏன்?

 

 

முன்னைய கட்டுரைகள்

 

எதிர்புரட்சி அரசியலோ தனக்கு தானே லாடம் அடித்து தன்னைத் தான் ஓட்ட முனைகின்றது. (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 1)

 

அரசியல் நேர்மை என்பது உண்மைகளைச் சார்ந்தது (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 2)

 

தொடரும்

 

பி.இரயாகரன்
02.12.2009