10222020Thu
Last updateTue, 20 Oct 2020 6pm

அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஊழல்: தி.மு.க – காங்கிரசின் கூட்டு களவாணித்தனம்!

ஒரு பொருள் 2001இல் என்ன விலைக்கு விற்கப்பட்டதோ, அதே விலைக்கு 2008இலும் விற்பதற்கு சந்தைப் பொருளாதாரம் இடம் தராது என்பது பாமரனுக்கும் தெரியும். ஆனால், சந்தையில் கிராக்கி அதிகமுள்ள இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை வரிசையின் உரிமக் கட்டணமோ, 2008இல் நிலவிய சந்தை மதிப்புக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படாமல், 2001இல் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின்படி விற்கப்பட்டுள்ளது. சந்தைப் பொருளாதாரத்தில் நிபுணத்துவம் வாய்ந்த மன்மோகன் சிங் அரசு, இந்தத் தவறை அறியாமலா செய்திருக்கும்?

 

அலைக்கற்றை வரிசைகளைப் பெற்ற ஒன்பது தனியார் நிறுவனங்களுமே இந்தப் பொன்னான வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டன. 13 மண்டலங்களை 1,537 கோடி ரூபாய்க்குப் பெற்ற ""ஸ்வான்'' என்ற நிறுவனம், அதில் 45 சதவீதத்தை மட்டும் 4,200 கோடி ரூபாய்க்கு ""எடில்சலாட்'' என்ற நிறுவனத்துக்கு விற்றுக் கொள்ளை இலாபம் அடைந்திருக்கிறது. 22 மண்டலங்களை 1,658 கோடி ரூபாய்க்குப் பெற்ற ""யூனிடெக்'' நிறுவனம், தனது 60 சதவீதப் பங்குகளை 6,100 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறது. எனவே, அலைக்கற்றை விற்பனையில் ஊழலும், மோசடியும் நடந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க மூளையைக் கசக்கிப் புலனாய்வு நடத்த வேண்டிய அவசியமேயில்லை.

 

தனியார்மயம் என்பதே சட்டப்படி நடக்கும் கொள்ளைதான் என்பதற்கு இந்த ஊழல் விவகாரம் இன்னுமொரு சான்றாய் அமைந்திருக்கிறது. இந்த விற்பனையில் கிடைத்த இலஞ்சப் பணத்தை வாரியிறைத்துத்தான் தி.மு.க.காங்கிரசு கூட்டணி, அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எதிர்பாராத வெற்றியை அடைந்தது என்பது ஊரறிந்த உண்மை. எனவே, காங்கிரசும் இந்தக் கொள்ளையில் பலன் அடைந்திருக்கிறது என்பதை மறுத்துவிட முடியாது. ஆனால், கூட்டணியில் நிலவும் முட்டல் - மோதலின் காரணமாக, இந்த ஊழலின் முழுப் பொறுப்பையும் தி.மு.க.வைச் சேர்ந்த ராசாவின் தலையில் சுமத்திவிட முயலுகிறது, களவாணி காங்கிரசு. காங்கிரசுன் இந்த நரித்தனத்திற்கு எதிர்க்கட்சிகளும் தேசியப் பத்திரிகைகளும் முட்டுக் கொடுக்கின்றன.

 

ராசா தொடர்புடைய இந்த ஊழல் பத்திரிகைகளில் அலசப்பட்ட அளவிற்கு, கடந்த அக்டோபர் மாதம் அம்பலமான வேறு இரண்டு ஊழல்கள் குறித்து விரிவாக அலசப்படவில்லை. ஜார்கண்ட் மாநில சுயேச்சை சட்ட மன்ற உறுப்பினராக இருந்த மதுகோடா, பா.ஜ.க.வின் தயவில் அமைச்சராகி, பின்னர் காங்கிரசின் தயவில் அம்மாநில முதல்வராகி, ஆகஸ்டு 2006 முதல் ஜூன் 2008 முடிய ஆட்சி நடத்தினார். அவர் எம்.எல்.ஏ. ஆன பொழுது 40 இலட்சமாக இருந்த அவரது சொத்து மதிப்பு, அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்ட சமயத்தில் 400 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள தாதுப்பொருள் சுரங்கங்களைத் தரகு முதலாளிகளுக்கும்,

 

பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பட்டா போட்டுக் கொடுத்ததில் நடந்த முறைகேடுகள் காரணமாகத்தான் அவரது சொத்து மதிப்பு 1000 மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த இலஞ்சப் பணத்தைக் கொண்டு, அவர் வெளிநாடுகளில் செய்துள்ள முதலீடுகள் குறித்து இப் பொழுது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

இந்திய அரசுக்குச் சொந்தமான ஹைட்ரோகார்பன் இயக்குநரகத்தின் தலைவரான வீ.கே.சிபலின் மகளுக்கு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான முகேஷ் அம்பானி மும்பய் நகரில் மிக நவீனமான வீடொன்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார். கோதாவரி படுகையில் கிடைக்கும் எரிவாயுவைப் பகிர்ந்து கொள்வதில் அம்பானி சகோதரர்களுக்கு இடையே நடந்து வரும் தகராறில், முகேஷ் அம்பானிக்கு சாதகமாக வீ.கே.சிபல் நடந்து வருவதற்காகக் கொடுக்கப்பட்ட சிறு அன்பளிப்புதான் இந்த வீடு. இந்த அன்பளிப்பு பற்றி இப்பொழுது மையப் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

 

தனித்தனியாகத் தெரியும் இந்த மூன்று ஊழல்களுக்கும் இடையே இருக்கும் பொதுவான அம்சம் தனியார் மயம். தனியார்மயத்தின் பின், பொதுச் சொத்துக்களை விற்பதற்கு எடுக்கப்பட்ட ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஊழலும் மோசடிகளும் நடந்திருப்பதற்குப் பல ஆதாரங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இந்த மோசடிகள் மூலம் கிடைத்த எலும்புத் துண்டுகளைப் பொறுக்கிக் கொண்ட அதிகாரிகளும், ஓட்டுக்கட்சிகளும் அம்பலமான அளவிற்கு, கறித்துண்டு முழுவதையும் விழுங்கி ஏப்பம் விட்ட தரகு முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்கள் பற்றி அடக்கியே வாசிக்கப்படுகின்றன. எனவே, ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால், அதிகாரிகளையும் அமைச்சர்களையும் தண்டிக்கக் கோரினால் மட்டும் போதாது; ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருக்கும் தனியார்மயத்தையும் ஒழிப்பதற்குப் போராட வேண்டும்