தமிழக எம்.பிக்களின் ஈழச்சுற்றுலா: துரோகிகளுக்கு புரியுமா மக்களின் அவலம்?

ஈழத்திலுள்ள நலன்புரி மையங்களை அதாவது, வதைமுகாம்களைப் பார்வையிட்டு, மக்களின் அவலங்களை நேரில் கண்டுணர்ந்து, அந்த அவலங்களைப் போக்க ஏதாவது செய்வார்கள் என்று ஈழத்தமிழ் மக்கள் பெரிதும் எதிர்பார்த்தார்கள். ஆனால், ஈழத்துக்குச் சுற்றுலா சென்று வந்ததைப் போலவே தமிழகத்தின் பத்து எம்.பி.க்களின் பயணம் அமைந்தது.

 

யாழ் பொது நூலகத்தில் நடந்த கலந்துரையாடலில் கருத்துக் கூறியவர்களை அதட்டி உட்கார வைத்தும், முகாம்களில் வதைபடும் மக்களின் அவலத்தைப் பற்றிப் பேசுவதைத் திசைதிருப்பியும், நேரமில்லை என்று தட்டிக் கழித்தும் தூதுக்குழுவின் தலைவரான டி.ஆர்.பாலு சிடுமூஞ்சித்தனமாக நடந்து கொண்டார். இதை, ""இலங்கைக்கு முன்பு அனுமன் வந்தான். இப்போது டி.ஆர்.பாலு என்ற சனீஸ்வரன் வந்துள்ளான்'' என்று வலம்புரி நாளேடு தலையங்கம் தீட்டி கடுமையாகச் சாடியுள்ளது. சுருக்கமாகச் சொன்னால், இந்தியக் குழுவினரின் யாழ் வருகை ஈழத்தமிழ் மக்களுக்கு எந்தவிதத்திலும் நம்பிக்கையூட்டவில்லை.

 

இலங்கையின் எதிர்க்கட்சிகளையோ, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களையோ, இலங்கை அல்லது வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களையோ இந்த நலன்புரி முகாம்களைப் பார்வையிட இன்றுவரை அனுமதிக்காத பாசிச ராஜ பக்சே அரசு, தமிழகத்திலிருந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை ராஜமரியாதையுடன் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்று, உபசரித்து விருந்தளித்துப் பரிசுகளும் தந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட சில முகாம்களை மட்டும் பார்வையிட அனுமதிக்கக் காரணம் என்ன?

 

முகாம்களில் நடக்கும் கொடுமையும் மக்களின் அவலமும் ஊடகங்களில் தொடர்ந்து அம்பலமாகி வருவதால், அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய உலகம், இலங்கையைத் தனது மேலாதிக்கத்தின் கீழ் இருத்தி வைக்க, மனித உரிமையைச் சாக்காக வைத்து, ""முகாம்களில் வதைபடும் மக்களை உடனடியாக விடுவிக்காவிட்டால், இலங்கைக்கு அளிக்கப்படும் பொருளாதார உதவிகள் நிறுத்தப்படும்'' என்று எச்சரிப்பது போல பாசாங்கு செய்கின்றது. இந்நிலையில், ஈழத்தமிழ் மக்கள் முகாம்களிலிருந்து அவர்களின் வாழ்விடங்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும், தமிழக தூதுக்குழுவின் வருகையைக் காட்டியும், அவர்கள் சாதகமாக அறிக்கை வெளியிட்டுள்ளதைக் காட்டியும், ராஜபக்சே அரசு உலக நாடுகளை நம்பவைக்க முயற்சிக்கிறது. அந்த நோக்கத்தை ஈடேற்றும் வகையில்தான் நாடாளுமன்றக்குழுவின் செயல்பாடுகளும் இருந்தன. ""தமிழக எம்.பி.க்களின் வருகையின் மூலம் தவறான பிரச்சாரங்கள் குறித்து உலகம் தெளிவடைய முடியும்'' என்று ராஜ பக்சே கூறியிருப்பதே, இந்தியத் தூதுக்குழு எதற்காக அனுப்பப்பட்டது என்ற உண்மையைப் போட்டு உடைத்து விட்டது.

 

இக்குழுவினர் பார்வையிட்ட இடங்களில் ஈழத்தமிழ் மக்கள் எவ்வாறு தமது குமுறல்களைக் கொட்டியழுதார்கள் என்பதை இலங்கையிலிருந்து வெளிவரும் வீரகேசரி, உதயன், வலம்புரி ஆகிய நாளேடுகள் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளன. ஆனாலும், இக்குழுவில் பங்கேற்ற காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினரான சுதர்சன நாச்சியப்பன் வீரகேசரி நாளேட்டுக்கு அளித்த பேட்டியில், ""சர்வதேச நியமங்களுக்கு உட்பட்டே இலங்கையில் அகதி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு மக்களின் பாதுகாப்புக்காகவே முட்கம்பி வேலி போடப்பட்டுள்ளது'' என்று கூறியிருக்கிறார். மற்றொரு காங்கிரசு உறுப்பினரான ஜே.எம்.ஆருண், ""இந்திய ஊடகங்களில் தெரிவிப்பதைப் போன்று இடம் பெயர்ந்த மக்கள் அவலங்களை எதிர்நோக்கவில்லை'' என்று ராஜபக்சே வின் குரலையே எதிரொலித்துள்ளார்.

 

ஏற்கெனவே 22.9.09 அன்று செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, ""இலங்கையில் தமிழர்களின் மறுவாழ்வு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து வெளிவரும் தகவல்கள் நமக்குத் திருப்தியை அளிக்கின்றன'' என்றார். பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கை சென்று வந்த பிறகு, முகாம்களில் உள்ள மக்களின் துன்பங்கள் குறித்தும், அவர்களை மறுகுடியமர்த்துவது குறித்தும் அதிபர் ராஜபக்சேவிடம் இக்குழுவினர் கூறியதாகவும், முகாம்களிலுள்ள மக்களை அவரவர் ஊர்களுக்கு இரு வார காலத்திற்குள் தமது அரசு அனுப்பும் என்று அவர் உறுதியளித்ததாகவும் அறிக்கை வெளியிடப்பட்டது. தற்போது, முகாம்களில் வதைபடும் மக்களில் ஒரு பகுதியினரை அவரவர் ஊர்களுக்கு அனுப்புவதும் நடந்துள்ளது. அவர்கள் தமது சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டார்களா, அல்லது வேறு வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்டார்களா என்று தெரியாது. மொத்தத்தில் போர்க்குற்றவாளியான பாசிச ராஜபக்சே வுக்குச் சாதகமான அறிக்கை அளிப்பதற்காகவே இந்தக்குழு இலங்கைக்குச் சென்று வந்துள்ளது. இதை இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரான ரோஹித் பொகல்லகமா,""ராஜபக்சே மீதான இந்தியாவின் நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில் தமிழகக் குழுவின் வருகை அமைந்துள்ளது'' என்று பெருமையுடன் கூறியுள்ளார்.

 

தேர்தலுக்கு முன்பு, ""காங்கிரசுக் கட்சியை இருக்கும் இடமே தெரியாமல் அழிக்க வேண்டும்'' என்று சவடால் அடித்து, போர் நிறுத்தம் கோரி உண்ணாவிரத நாடகமாடிய திருமாவளவன், இப்போது நாற்காலி பதவிக்காக காங்கிரசு கூட்டணியுடன் முரண்பட விரும்பாமல், இக்குழுவில் பங்கேற்று இலங்கைக்குச் சென்று வந்துள்ளார். ""நல்ல பிள்ளையாகப் போய்விட்டுத் திரும்ப வேண்டும்'' என்று கருணாநிதியே அவருக்கு அன்புக் கட்டளை போட்டிருந்தார். எனவே, இந்த நாடகம் பற்றி அவர் அறிந்தேதான் தூதுக்குழுவில் பங்கேற்றார். திருமாவளவனைச் சுட்டிக் காட்டி, ""இவர் பிரபாகரனின் நண்பர்; இவரின் நல்லகாலம் இவர் பிரபாகரனுடன் இருக்கவில்லை; இருந்திருந்தால் இவரையும் போட்டுத் தள்ளியிருப்போம்'' என்று எகத்தாளமாக ராஜபக்சே கிண்டலடிக்க, வேறுவழியின்றி திருமாவும் அதை அசட்டுச் சிரிப்புடன் ஏற்றுக் கொண்டு வந்துள்ளார்.

 

இத்தூதுக் குழுவின் சார்பில் ராஜபக்சேவுக்குச் சாதகமான அறிக்கை வெளியிட்டு அமைதி காத்ததை எதிர்த்து விமர்சனங்கள் பெருகத் தொடங்கியதும் அவர், ""தமிழகத்தில் இலங்கைத் தூதரகம் இருக்கக் கூடாது'' என்று அவசரமாக ஆர்ப்பாட்டம் நடத்தினார். முகாம்களில் வதைபடும் ஈழத்தமிழ் மக்களின் அவலம் பற்றியும், ராஜபக்சேவைச் சாடியும் ஊடகங்களுக்கு நேர் காணல் அளித்துக் கொண்டிருக்கிறார். புலம்பெயர்ந்த தமிழர்கள் திருமா மீது வைத்திருந்த அரைகுறை நம்பிக்கையையும் அவரது இப்போதைய இரட்டை நாடகம் அம்பலப்படுத்திக் காட்டிவிட்டது.

 

ஈழத் தமிழரின் குலையறுக்கும் கொடிய போரை நடத்திய சூத்திரதாரியான இந்திய மேலாதிக்க அரசு, இப்போது போருக்குப் பின்னரும் ஈழத் தமிழ் மக்களை வதைத்துக் கொண்டிருக்கும் ராஜபக்சே அரசுக்கு ஜனநாயக சாயம் பூசும் வேலையாகவே தமிழக எம்.பி.க்களின் தூதுக்குழுவை அனுப்பியுள்ளது. அதற்கு விசுவாசமாகச் சேவை செய்துள்ளனர் துரோகிகளான இந்தத் தூதுக்குழுவினர். தொடரும் இத்தகைய துரோகங்களையும் இந்திய மேலாதிக்கத்தையும் எதிர்த்து முறியடிக்காவிட்டால், இனி தமிழன் சூடுசொரணையற்றவன் என்ற தீராப்பழிதான் நம்மீது சுமத்தப்படும். ·

 

 குமார்