என் அன்பு நண்பனே,
ஞாபகமிருக்கிறதா ஈராண்டுகளுக்கு
முன் அதிகாலை மூன்றுமணிக்கு
நான் புரட்சிநாள்
கவிதை வாசித்தேனே
ஓடிவிட்டன நாட்கள்
நீ எங்கிருக்கிறாய்
தெரியவில்லை எப்போதாவது
நீ இதை படிப்பாய் என்ற நம்பிக்கையில்….

 

ஒரு எல்லை வரைப்
உன்னிடத்தில் போராடினேன்
ஆனாலும் முடியவில்லை
எத்தனை வாதங்கள், விவாதங்கள்
சண்டைகள், சமாதானங்கள்
எல்லாம் முடிந்து விட்டன
நான் திரும்பிப்பார்க்கின்றேன்
உன்னிடத்தில் எத்தனைப்
போராட்டங்கள்
ஆனாலும்
உன் அடிமைத்தனத்தையுடைக்க
நீ தயாராக இல்லையே….

 

இப்போது உணர்கிறேன்
தவறாக பேசிவிட்டோமோ
அப்படி பேசியிருந்தால்
இப்போது உன்னிடம் நான் பேசியிருந்தால்
நீ உன்னை மாற்றிக்கொண்டிருப்பாயோ
ஆனால் எப்போதும் காலச்சக்கரம் பின்னோக்கி
சுழல்வதில்லையே

 


nov_2 copy

 

என் அன்பு நண்பா,
நீ  அடிக்கடி சொல்வாயே
சுயநலம் இல்லாது யாருமில்லையென்று
உனக்குத்தெரியுமா?
நானும் உன்னைப்போலத்தானிருந்தேன்
சில ஆண்டுகளுக்கு முன்
ஒருவர் வந்தார்
தோளில் ஜோல்னா பையினை மாட்டிக்கொண்டு
தன்னை தோழர் என்றார்
கருப்பாக
அதுவும் என்னைவிட கருப்பாக

 

அவரின் கேள்விகள் என்னை நிலைகுலையச்செய்தன
“உன் வாழ்வில் முதலாளித்துவம்
தலையிடுகிறதா இல்லையா?
நீ உண்ணும் அளவை எவனோ கட்டுப்படுத்துவது
தெரிகிறதா இல்லையா?
எல்லாவற்றையும் குறை கூறுகிறாயே
நீ என்ன செய்தாய் நாட்டுக்கு?”

 

என்னால் பேச முடியவில்லை
என் அடிமைச்சிறகுகள் ஒடிக்கப்பட்டு
சிறையிலிருப்பதை போல் உணர்ந்தேன்
என் முகத்தை மறைத்துக்கொண்டு
ஓடினேன் பயமெனக்கு
போய்விடுவோமோ நம்மை அறியாமல் போய்விடுவோமோ
ஓடினேன் ஓடிக்கொண்டே இருந்தேன்
இப்போது நான் பறப்பதற்கு சிறகுமில்லை

 

பேருந்துகளில், தெருக்களில்
பிரச்சாரம் செய்யும் தோழர்களை
கண்டு அவமானத்தில் தலையைக்
குனிந்தேன்., அவர்களின்
சொற்கள் என் இதயத்தை
கிழித்தன அங்கிருந்தும் ஓடினேன்

 

ஒருவரா இருவரா கருப்பாக,
சிவப்பாக, குண்டாக, ஒல்லியாக
இப்படி எத்தனையோ தோழர்களைக்கண்டேன்
ஆனால அவர்கள் எல்லாம்
எனக்கும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
கவனித்தாயா நண்பா
உனக்காக எனக்காக எல்லோரும்
போராடும் போது உனக்காக
நீயும் எனக்காக நானும்
போராடாமல் இருப்பது எவ்வளவு கேவலம்….
அடிக்கடி சொல்வேனே
நினைவிருக்கிறதா
“நாட்கள் இப்படியே இருக்காது
நாளை என் சாவு செய்தி கேட்டு
நீ செஞ்சட்டையோடு வந்திருந்தால்
அது தான் எனக்கு மகிழ்ச்சி.”
புரட்சிகர வாழ்த்துக்களுடன்
உன் அன்பு நண்பன்