"'……."

' தர்மலிங்கம் அண்ணை இல்லையா...? "

'…….."
'வாங்க தம்பி..."


'நீங்க எனக்கு பெட்டி ஒன்று செய்து தரோணும்."


'பெட்டியா… என்ன பெட்டி தம்பி...?"

 
'இதுதான் அண்ணை அளவு. சூட்கேஸ் மாதிரி, கொண்டு திரியக் கூடியதாய் இருக்கோணும்..."

'……….."


'டேய்… என்னடா செய்யுறியள்...? சின்னப்பொடியள் மாதிரி கத்திக் கொண்டிருக்கிறியள்.... கரியன் வாறான், சத்தம் போடாமல் இருங்கோ…!"


சண்முகசுந்தரம் மாஸ்ரர் வராததாலை கெமிஸ்ரிப் பாடம் பிறீ. பிறீ கிடைச்சால் கௌரி பாடுறதும்..., ரவி மேசேலை மோளம் அடிக்கிறதும் வழமையான எங்கடை கூத்துத் தான்...! நல்ல காலம் குகன் வந்ததாலை தப்பினம். வேறையாரும் எண்டால் கரியனை கூட்டிக் கொண்டந்திருப்பாங்கள்.

பிறின்ஸ்சுப்பலுக்கு நாங்கள் வைத்த பெயர் தான் கரியன் !

குகன் எங்களை விட சீனியர். மற்ற ஷபிறிபெக்ற|; மாதிரி இல்லை, மிகவும் மென்மையானவர். எல்லாரோடும் அன்பாய் சிரித்துப் பழகுவார்.

நல்ல விக்கற் கீப்பர்.... வற்றிங்கிலை கிற்றர்....

கிறிக்கற் மச் என்றால் வீடு…., சாப்பாடு…, எல்லாம் மறந்து போயிடும். நண்பர்களோடு மதிலிலை ஏறியிருந்து, விசில் அடியும்...பாட்டும்…

மச் முடிஞ்சு எல்லாரும் போன பிறகு, கதிரை அடுக்கிறத்துக்கும்… பிச் சுத்திறத்துக்கும் உதவி செய்திட்டு, மிஞ்சியிருந்த வோண்டாவையும், பற்றிஸ்ஸையும் எடுத்துக் கொண்டு வந்து, வெள்ளை மண்ணிலை இருந்து சாப்பிட்ட அந்த இனிய நாட்கள்...!

ஜெயபால், ரங்கன், ராசன்….. எத்தனை நண்பர்கள்…? எத்தனை சொந்தங்கள்…?

"என்ன இன்பமான நாட்கள்….!"

குகனும்…., நரேனும்..... விளையாடின அந்த நாட்கள் இப்பவும் கண்ணிலை நிக்குது...! "முப்பது வருசம் ஆகிவிட்டாலும், எல்லாம் நேற்று மாதிரி இருக்கு...!"

குகனுடைய அண்ணன் தான் நரேன்.

எண்பதின் ஆரம்பத்திலேயே இருவரும் புலியிலே இணைந்துவிட்டார்கள்.

எண்பத்தேழுக் குண்டு வெடிப்பிலை தான் குகன் செத்துப் போனார்...!

நரேன், இறுதிச் சமரில் இராணுவத்திடம் சரணடைந்துவிட்டார்...!

நல்ல வசதியாய் சந்தோ~மாய் வாழ்ந்த குடும்பம்...,

படித்த… பண்பான பெற்றோர்கள்..., செல்லமாய் ஒரு தங்கச்சி… இன்று எல்லாத்தையும் இழந்து எங்கோ ஒரு மூலையிலே அகதியாய்…?

இந்த முப்பது வருசத்துக்குள் தான் எத்தனை மாறுதல்கள்...!

எத்தனை குகன்கள்… எத்தனை நரேன்கள்…??

இருந்ததையும் இழந்து..., அகதிகளாய் எத்தனை ஆயிரம் குடும்பங்கள்…???

'………."


கூட்டணியின்ரை கூட்டம் என்றால் முன்னுக்கு போய் நிப்பன்.

தமிழனுக்கெண்டு தனித் தமிழீழம் கிடைக்கிறகாலம் நெருங்கீட்டுது… ஷமரம் பழுத்து விட்டது. வெளவால் வருகிறது...| எண்டு வண்ணை ஆனந்தன் பேசேக்கை எவ்வளவு நல்லாய் இருந்திச்சு...!

வண்ணை வந்தால் ஒரு கூட்டத்தையும் விடமாட்டன். வெளவால் வாறதை கேக்கோணும்

எண்ட ஆசை...!.

ஆனால் அதின்ரை அர்த்தம் இப்பதானே விளங்கிச்சு...!!!

எங்கேயோ இருந்த எல்லா வெளவாலையும் கூட்டியந்து வன்னீலை விட்டிருக்கினம்!!!


அப்பவே "பத்மநாதன்" அத்தான் கேட்டவர், ' கூட்டம் கூட்டம் என்று திரியுறியே அமிர்தலிங்கம் தமிழீழம் எடுத்து தருவாரோ...? "

அவர் சும்மா நக்கலுக்கு கேக்கிறார் எண்டு நினைச்சுட்டன்...

யாழ்ப்பாண ஸ்ரேசனுக்கு பின்னுக்கு இருக்கிற புத்தகக் கடைக்கு கூட்டிக் கொண்டு போய் 'சைனா"விலை இருந்து வந்த கலர் படங்கள் போட்ட புத்தகங்கள் வாங்கித் தருவார்.

உறை போட நல்ல புத்தகம்.... எல்லாத்திலையும் ஒரு ஷகிழவன்ரை| படம் தான் பெரிசாய் இருக்கும். ஆனா கலர் கலரான வடிவான படங்கள்….!

அத்தான் ஒரு சைனா கொம்னிஸ்ட். அவருடைய தோழர்கள் அவரை பத்தண்ணா என்று கூப்பிடுகிறவையாம். அது கூட இங்கை வந்த பிறகு அவருடைய தோழர் ஒருவர் சொல்லித் தான் தெரியும்.

பாவம், கடசீலை தற்கொலை செய்து செத்துப் போயிட்டார்...

"…….."


தோழிலை யாரோ கைவைக்க திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தால்..., குவேட் சிரித்த படி….!

குவேட் சிரித்தால் அவருக்கு ஏதோ தேவை இருக்கும்.

குவேட் பக்கத்திலை வந்து நின்றது கூடத் தெரியேல்லை…! கை தான் வேலை செய்யுது… மனம் அங்கையும் இங்கையும் அலைஞ்கொண்டிருக்குது !

 

H… s… K..."  ( 'என்ன குவேட்..." )

 

'K… d… i...?( ' நாளைக்கு இரவு வேலைக்கு வறியா...? " )


இருபதாயிரம் அனுப்பவேணுமாம், அதாலை நாளைக்கு இரவு ஒவர் ரைம்...

வேலைக்கு வந்தால் டவுள் காசு தான்.

"அலனை" நினைக்கத்தான் பயமாய் இருக்கு.

ஒன்பது வருசம் பிரச்சனை இல்லாமல் போன வேலை, இவன் அலன் வந்தாப்பிறகு தான் பிரச்சனை...?

துவேசம் பிடித்தவன்… தமிழரைக் கண்டால் அவனுக்கு ஷஅலேர்யி|,

ஏதாவது ஓரு வழியிலை கொழுவல் போட்டு மனிசனை ரென்சன் ஆக்கீடுவான்….

குவேட்டின்ரை குடும்ப நண்பன் எண்டதாலை தமிழ் ஆக்கள் என்ன சொன்னாலும் குவேட் அவனை ஒண்டும் கேக்காது...,

எவ்வளவு தான் க~;ரப்பட்டு வேலை செய்தாலும் கடைசியிலை நன்மை எதுவும் இல்லை...! ஒவ்வொரு இரும்பையும் தூக்கி வைக்கேக்கை வாற வலியும்… மூக்குக்குள்ளை போற தூசும்…?

போட்டிக்கு விட்ட மாடுகள் மாதிரி, ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டி போடிற வேலை…

ஏன்தான் இப்படி ஒரு வாழ்க்கையோ..?

பேசாம, அங்கேயே இருந்து செத்துப் போய் இருக்கலாம்…!

"..... எவ்வளவு நிம்மதி.!"

வெளிநாடு வரேக்கை மாமா கேட்டவர், பாங்கிலை வேலை எடுத்துத்தாரன் கொழும்பிலை தன்னோடை நில் எண்டு… நிண்டிருக்கலாம்… இப்ப மாமா மாதிரி பாங்குக்கு மனேச்சராயாவது வந்திருக்கலாம்.

அம்மாதான் விடேலை…. "அக்காக்கு பிறகு நான் பன்ரெண்டு வருசம் தவமிருந்து பெத்த ஆம்பிளை பிள்ளை நீ... எனக்கு கொள்ளி வைக்காமல் ஒரு இடமும் போக்கூடாது" எண்டு சொன்ன அம்மா..., இயக்கப் பொடியளோடை திரியுறான் எண்டு, தானே பிடிச்சு அனுப்பிவிட்டுது...!

"கடைசியாய், பாக்கியத்துக்கு கொள்ளி வைக்கிற பாக்கியமும் இல்லாமல் போச்சு….!"

அப்பவே, நாட்டிலை பிரச்சனை வருமெண்டு அம்மாக்கு தெரியாம போச்சு…!

தெரிஞ்சிருந்தா அம்மா பன்ரெண்டு வருசம் தவமிருந்திருக்காது..., நானுமில்லை… பிரச்சனையுமில்லை...!

இப்படி எத்தனை அம்மாக்களோ.....? கொள்ளியை இழந்து எத்தனை பேரோ….??

'………"


ராசன் பாவம்…..! அவனுக்கு என்ன நடந்திருக்கும்...?

பொடியளோடை இந்தியா போனவனாம், எப்படி சாவடிச்சாங்களோ தெரியேலை…

ஆளே இல்லாமல் போயிட்டான்….

நான் தான் அவனை சாவடிச்ச மாதிரி சின்னம்மாவும், அக்காவும் என்னோடை கதைக்கிறேலை….!

நான் செய்ததும் பிழைதான்... அவன் கடைச்சல் வேலை செய்ததாலை, அவன் தான் குண்டு செய்ய பைப்பை வெட்டி கடைஞ்சு தந்தவன். என்னாலை தான் அவனுக்கு பொடியளை தெரியும்…!

'அவங்கடை போக்கு சரியில்லை… அவங்களோடை திரியாதே..." என்று சொல்லீட்டு தான் வந்தனான்.... அவன் தான் கேக்காமல் போயிட்டான்…!

'………."


நாகேந்திரம் இப்பவும் இந்தியாவிலை தான் இருக்கிறானோ… வேறு எங்கேயாவது போயிருப்பானோ…..?

புங்கிடுதீவிலை இருந்து யாழ் இந்துக் கல்லூரியிலை படிக்க எங்கடை வீட்டுக்கு பக்கத்து வீட்டு றூமிலை வாடைக்கு வந்திருந்தவன். படிப்பிலை நல்ல கெட்டிக்காரன்…

ஒருநாள் நோட்டிஸ் ஒட்ட என்னோடை வந்தவன் தான்….!.......?

ஐஞ்சு வருசத்துக்குப் பிறகு கலியாணம் கட்ட இந்தியா போகேக்கை அவன் மடிப்பாக்கத்திலை நிக்கிறான்…..!

என்ன நடந்தது எண்டு கேட்டதுக்கு, எல்லாமே முடிஞ்சு போச்சு…! விரக்தியாய் சொன்னான்;. அதுக்கு மேலை நான் ஒண்டும் கேக்கேலை…

பிறகு தான் கேள்விப்பட்டன்..., இயக்கத்தை நம்பி வந்த பொடியள் கனபேரை சாக்காட்டிப் போட்டாங்கள்… கனபேர் சாப்பிடவும் வழி இல்லாமல் இந்தியாவிலை…..

அடையாளம் இல்லாது போன உயிர்கள்… கற்பைபறி கொடுத்த பெண்கள்…,

"எல்லாரும் புலிகளை மட்டும் ஏன் பிழை சொல்லீனம் எண்டுதான் எனக்கு விளங்கேலை"...???

தங்களை நம்பிவந்த போராளியளை இப்படி எல்லாம் செய்து நடுத் தெருவிலை விட்டிட்டு…. இப்ப புலியளைப் பேசினம்.

'இதுகளை..….

குவேட்டும் அடிக்கடி பாத்துப் பாத்தொண்டு போகுது….! இண்டைக் கெண்டு வேலையும் ஓடுதில்லை….!

………..!

"என்ன வடிவான பெட்டி!"

தேக்கமரத்திலை கருங்காலிக் கட்டையை வெட்டி சின்னச் சின்னப் புள்ளிகளாய் பொருத்தி…!

"....ஐயாவுக்கு இப்படி ஒரு திறமையா….?? "

குகன் கூட இந்தளவுக்கு எதிர்பாக்கேல்லை….!

சைக்கிள்லை வந்து பெட்டியை கொண்டு போகேக்கை ஷகுகன்|ரை முகத்திலை இருந்த சந்தோ~ம்….???

எண்பத்திமூண்டிலை கடைசியாய் பார்த்த குகன் தான்…!

……..?

குகன்ரை படத்துக்கு அஞ்சலி செலுத்தின அவற்ரை தலைவரும் போயிட்டார்…!!

எல்லாரும் போயிட்டினம், எல்லாமே முடிஞ்சு போச்சு…?....?.....?...

முப்பது வருசம் கனவு மாதிரிப் போச்சுது….!

…...!.......?......

அந்தக் 'கறுத்தப் பெட்டிக்கு"  என்ன நடந்திருக்கும்….?

' கைதடி குண்டு வெடிப்பிலை அதுவும் செத்திருக்குமா…...? "

' வன்னி மண்ணிலே எங்கேயாவது ஒரு மூலைக்குள்ளை புதைஞ்சு கிடக்குமா……? "

'……...? "


தேவன்.