Wed04242019

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் தமிழீழ சாத்தியம் குறித்த ஆரம்பகால விவாதங்கள்

தமிழீழ சாத்தியம் குறித்த ஆரம்பகால விவாதங்கள்

  • PDF

திருமதி சிரிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஆட்சி செய்த 1970 தொடக்கம் 1977 வரையிலான காலப்பகுதியானது இன முரண்பாடு மேலும் விரிசல் அடையவும் பகை முரண்பாடாக வளர்ச்சி காணவும் பெரும் பங்கு அளித்தது. பாராளுமன்ற இடதுசாரிகள் எனப்பட்டவர்கள் அங்கம் வகித்த அவ்வரசாங்கம் முன்னெடுத்த பேரினவாத நோக்குடைய நடவடிக்கைகள் தமிழ்த் தேசியவாதப் பரப்பில் எதிர் அலைகளைத் தோற்றுவித்தன.

பாராளுமன்றத் தலைமைகள் தமக்குரிய வாய்ப்புக்களைத் தேட ஆரம்பித்தனர். அதே வேளை தமிழ் இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக்களும் வன்முறைகளுக்கான வழிமுறைகளும் தோற்றம் பெற்றன.

 

1970இல் அவ்வரசாங்கம் பல்கலைக்கழகப் புகுமுக க.பொ.த. உயர்தரத்திற்கான புள்ளிகளை மொழி அடிப்படையில் தரப்படுத்தும் திட்டத்தைக் கொண்டு வந்தது. அதனால் தமிழ் மாணவர்கள் குறிப்பாக கல்வித்துறையில் முன்னணி வகித்து வந்த யாழ்குடாநாட்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். நகர் சார்ந்த மத்திய மேல்மட்ட குடும்பங்களை சேர்ந்த மாணவர்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். அவர்கள் மத்தியிலிருந்து கடும் எதிர்ப்புகள் வந்ததுடன் முழுத் தமிழ் மாணவர்களினதும் பிரச்சினையாக வடிவம் பெற்றது. தமிழ்த் தேசியவாத அரசியல் சக்திகளின் பின்புலத்தில் தமிழ் மாணவர் பேரவை தோற்றம் பெற்றது. இதன் ஆரம்பத்தின் ஊடாகவே இக்கால தீவிர இளைஞர் இயக்கங்களில் முன்னணியில் நின்ற பலர் அரசியலில் பிரவேசித்தனர். இத்தரப்படுத்தலுக்கு எதிராக குடாநாடு தழுவிய ஒரு மாணவர் எழுச்சி ஊர்வலத்திற்கு தமிழ்மாணவர் பேரவை அழைப்பு விடுத்திருந்தது. 1970 நவம்பர் 24ஆந் திகதியன்று கொக்குவிலிருந்து ஆரம்பித்து யாழ் முற்றவெளிவரை நடைபெற ஏற்பாடாகியிருந்த அம் மாணவர் ஊர்வலத்திற்கு ஆரம்பத்திற் பொலிசார் அனுமதி மறுத்திருந்தனர். தமிழரசுக் கட்சியின் சில தலைவர்கள் அவ்வூர்வலத்தைக் கைவிடும்படி வற்புறுத்தியும் அது பலனளிக்கவில்லை. இறுதியில் மாணவர் தொகையையும் எழுச்சியையும் கண்ட பொலீஸ் அனுமதி வழங்கியது.

 

இவ் ஊர்வலத்தின் மாக்சிச லெனினிச கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பு கலந்து கொள்வதா இல்லையா எனும் விவாகத்தின் பின், தமிழ்த் தேசியவாதப் பின்னணி இருந்தபோதும், தரப்படுத்தல் இன ஒடுக்குமுறை சார்ந்த ஒன்று என்ற காரணத்தால் அது எதிர்க்கப்படுவதன் அடிப்படையில் கலந்து கொள்ள முடிவாகியது. அதனால் அவ்வமைப்பைச் சேர்ந்த பலநூற்றுக் கணக்கான இடதுசாரி மாணவர்கள் அவ்வூர்வலத்தில் கலந்து கொண்டனர். இக் கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பானது 1969இன் தமிழரசு - காங்கிரஸ் இணைந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் கல்வி அமைச்சர் இரிய கொல்லவால் அறிமுகப்படுத்தப்பட்ட 'சியவச" மாணவர் சீட்டிழுப்பை எதிர்த்த இயக்கத்தின் ஊடே தோற்றம் பெற்ற மாணவர் அமைப்பாகும். அக்கால கட்டத்தில் இவ்வமைப்பு 'தீ" என்னும் மாணவர் பத்திரிகையையும் நடாத்திப் பாடசாலைகளில் மாணவர்களின் ஆதரவைப் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். அதன் காரணமாகவே அதனை அன்றைய தமிழ் மாணவர் பேரவையினர் தமது பொதுவான மாணவர் ஊர்வலத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டிருந்தனர்.

 

ஊர்வல ஆரம்பத்தில் நிதானமான அரசாங்க எதிர்ப்பு, தரப்படுத்தல் எதிர்ப்பு முழக்கங்களைக் கொண்டிருந்த போதிலும், ஊர்வலம் குறிப்பிட்ட தூரம் வந்தபின், அன்றைய கல்வியமைச்சரான பதியுதீன் மஹ்முடின் மீதும் முஸ்லிம் துவேஷ அடிப்படையிலும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இது தமிழ்த் தேசியவாதத்தின் பிற்போக்கான நிலைப்பாட்டின் வழியிலேயேயாகும். இம் முழக்கங்கள் யாழ் முஸ்லிம் வட்டாரத்தின் ஊடாக ஊர்வலம் வந்த போது உச்சத்தை அடைந்ததுடன் சில மாணவர்கள் தாம் அணிந்திருந்த தொப்பிகளைக் கழற்றிப் புரட்டி எறிந்து அணிந்து பாவனை செய்தும் கொண்டனர். இத்தகைய இழி நடத்தையைக் கம்யூனிஸ்ட் மாணவர்கள் எதிர்த்தனர். முஸ்லீம் மாணவர்களும் கலந்து கொண்ட அவ்வூர்வலத்தில் அத்தகைய துவேஷ முழக்கங்கள் நிறுத்தப்பட வேண்டும் எனக் கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பினர் வற்புறுத்தினர். இதனால் மாணவர்கள் மத்தியில் முறுகல் நிலை ஏற்பட்டது. தமிழ்த் தேசியவாதத்தின் அசிங்கத்தை அவ்வூர்வலத்திற் காண முடிந்தது.

அதன் பின் முற்றவெளியில் இடம்பெற்ற கூட்டத்தின் போது தரப்படுத்தலுக்கு எதிராக முன் கூட்டியே அச்சிடப்பட்ட கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பின் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்ட போது அங்கு கைகலப்புகள் இடம்பெறலாயின. அன்றைய சம்பவம் தமிழ்த் தேசியவாதத்தின் படுபிற்போக்கான கூறுகளின் வழியேதான் சகல போராட்டங்களும் பயணிக்கப் போகிறதே தவிர முற்போக்கான கூறுகளுக்கு அங்கு இடம் இருக்கப் போவதில்லை என்பதையே எடுத்துக் காட்டியது. வளரும் பயிரை முளையிலே தெரியும் என்பது போன்று அன்று கிளப்பப்பட்ட முஸ்லீம் விரோதம் பிற்காலத்தில் எத்தகைய வளர்ச்சியைக் கண்டது என்பதைக் கடந்த முப்பது ஆண்டுகளில் எல்லோரும் காண முடிந்தது.

 
இத்தகைய மாணவர் பேரவையானது படிப்படியாக இளைஞர் பேரவையாக மாற்றம் பெற்றது. ஆனால் அதன் போக்கிற் புதிய கொள்கைகளுக்கும் நடைமுறைகளுக்குமான எதுவும் தென்படவில்லை. தமிழரசுக் கட்சியினர் பேசிய அதே தொனியில் தான் இளைஞர் பேரவையினரும் பேசினர். இப் பேரவையில் அணிதிரண்ட இளைஞர்கள் மத்தியில் தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு எதிரான அதிருப்தியும் கண்டனமும் காணப்பட்டன. அவை தமிழ்த் தேசியவாத நிலைப்பாட்டை ஒரு மிதவாதப் போக்கிலும் வெறுமனே பாராளுமன்றத்திற்குப் போகும் பாதையிலும் முன்னெடுக்கப்படுவதன் குற்றச் சாட்டை மட்டுமே கொண்டிருந்தன. அதற்கு அப்பால், வடக்கு கிழக்கின் தமிழ் மக்களிடையே நிலவிவந்த அடிப்படைப் பிரச்சினைகளான வர்க்க, சாதிய, பிரதேச, மத முரண்பாடுகளுக்கான தீர்வுகளை உள்ளடக்கியதாக முழுத் தமிழ் மக்களையும் அணிதிரட்டக் கூடிய முற்போக்கான வெகுஜனப் போராட்டப் பாதையிலான கொள்கைகளையோ நடைமுறைகளையோ அவற்றுக்கான சாயல்களையோ இத் தமிழ் இளைஞர் பேரவையினர் கொண்டிருக்கவில்லை.

 

எப்பொழுதும் இளைஞர்கள் என்போர் ஒரு வர்க்கமாக இருப்பதில்லை. அவர்கள் பல்வேறு வர்க்க பின்புலத்திலிருந்து வருபவர்களாகவே இருப்பர். அவர்களிடையே வளரும் சிந்தனைகளும் செயற்பாட்டு முயற்சிகளும் பெருமளவிற்குத் தாம் சார்ந்த வர்க்கத்தின் சார்பாகவும் அதன் நலன்களை மீறாத வகையிலுமே அமைந்து கொள்ளும். ஒரு சில இளைஞர்கள் தமது சூழலாலும் முன்நோக்கிய பரந்த சிந்தனையாலும் மாற்றுக் கருத்துக்களுக்கும் நடைமுறைகளுக்கும் வந்து கொள்வார்கள். தமிழ் இளைஞர் பேரவையில் ஒன்றிணைந்த இளைஞர்கள் தமிழ்த் தேசியவாதத்தின் பிற்போக்கான கூறுகளைத் தம்மகத்தே கொண்டிருந்தனர். அத்துடன் தமிழரசுக் கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை உள்ளுரப் பெற்றும் இருந்தனர். இவ் இளைஞர் பேரவையினரில் ஓரிருவர் மட்டுமே தாழ்த்தப்பட்ட சமூகத்து இளைஞர்களாக இருந்து வந்தனர். அதே வேளை, பெரும்பாலானவர்கள் உயர்சாதி மத்தியதர, கீழ் மத்தியதரத் தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்தோராகவே இருந்தனர். வன்முறையை நாடுவதும் அதன் மூலம் பௌத்த சிங்கள மேலாண்மை அரசாங்கத்தை எதிர்ப்பதும் அவர்களது பிரதான நோக்கமாக இருந்ததே தவிரக், கருத்தியல் சிந்தனை நடைமுறைத் தளங்களில் தமிழ்த் தேசியவாதத்தின் குறுந்தேசியவாத நிலைப்போக்கே முனைப்புக்காட்டி நின்றது. சாதியத்தை அடிப்படையில் எதிர்த்து முறியடிக்க முடியாத தமிழ்த் தேசியம் வெறும் தமிழ் உணர்வால் மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்களை இணைக்க நின்றது. அதற்கச் சில கல்வி கற்ற அல்லது மேநிலையாக்கம் பெற்ற தாழ்த்தப்பட்டோர் ஆதரவு கொடுத்து பங்கு கொண்டனர். அப்படியானவர்களுக்குக் கூட தமிழ்த் தேசியவாத அரசியலில் வரையறுக்கப்பட்ட இடமே இருந்து வந்தது.


இவ்வாறான சூழலிலேயே, 1972ம் ஆண்டு புதிய அரசியலமைப்பு அன்றைய ஐக்கிய முன்னணி அரசால் கொண்டு வரப்பட்டது. பிரித்தானிய முடியாட்சியுடன் இலங்கையைத் தொடர்புபடுத்தி வைத்திருந்த சகலவற்றையும் அறுத்துக் கொண்டு சுதந்திரமான இலங்கையை அவ் அரசியலமைப்பு பிரகடனம் செய்து கொண்டது. அதன் அடிப்படையில் இலங்கையின் தேயிலை, இறப்பர் உற்பத்திக்கான பெருந்தோட்டங்களை அந்நிய வெள்ளைக்காரர்களிடம் இருந்து அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்டது. தோட்டங்களைத் தேசியமயமாக்கும் நடவடிக்கைளையும் மேற்கொண்டது. இவ்வாறு குறிப்பிடத்தக்க முற்போக்கான செயற்பாடுகளை ஐக்கிய முன்னணி அரசாங்கம் பாராளுமன்ற இடதுசாரிகளின் ஆதரவுடன் முன்னெடுத்தது. அதே வேளை, தேசிய இனப் பிரச்சினையை நியாயமான வழிகளில் தீர்த்து வைப்பதற்கு அவ் அரசியலமைப்பில் எவ்வித ஏற்பாடும் உட்புகுத்தப் பட்டிருக்கவில்லை. மேலும் அவ் அரசியலமைப்பு பௌத்த மதத்திற்கு முதலிடம் அளித்ததுடன் சிறுபான்மையோர் பாதுகாப்பிற்கெனப் பெயரளவில் சோல்பெரி அரசியலமைப்பில் இருந்த 29வது சரத்தை விலக்கியது. அது இருக்கக் கூடியதாகவே 1948இல் பிரசாவுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அவ்வாறே 1956இல் தனிச்சிங்கள மொழிச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஏற்கெனவே கிழக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் செயலாக்கப்பட்டன. அப்போதெல்லாம் இவ் 29வது சரத்தின் மூலம் எத்தகைய தடையையும் ஏற்படுத்த ஏன் முடியவில்லை என்பதற்கான விடை, மேற்படி சரத்து வெறும் பெயரளவிலான ஒன்று என்பதேயாகும்.

 

இப் புதிய, குடியரசு அரசியலமைப்பு கொண்டு வரப்பட்டதிலிருந்த சோகம் என்னவென்றால், அதனைக் கொண்டுவந்த அரசியலமைப்பு அமைச்சராக இருந்தவர் ட்ரொட்ஸ்கிச இடதுசாரியும் சமசமாஜக் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான கொல்வின் ஆர். டி சில்வா என்பது தான். அவரே, தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்துப் பாராளுமன்றத்திற் பேசும் போது, ஒரு மொழி இரண்டு நாடு இரண்டு மொழி ஒரு நாடு எனத் தனது சிம்மக் குரலில் கர்ச்சித்தவராவார். அவ்வாறே இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான டாக்டர் விக்கிரமசிங்ஹ, அன்றைய பருத்தித்துறை தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரான பொன். கந்தையா ஆகியோரும் தனிச் சிங்கள மசோதாவை எதிர்த்துக் கடுமையாக உரையாற்றி இருந்தனர். அன்று அம் மசோதாவை எதிர்த்து வாக்களித்த தமிழப்; பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமானதாகும். ஆனாற் பாராளுமன்றச் சந்தர்ப்பவாதமும் அமைச்சுப் பதவிகளின் தணியாத மோகமும் ட்ரொட்சியவாதிகளை ஒரு அந்தலையில் இருந்து மறு அந்தலைக்குப் பாய வைத்தது. அதுவே அவர்களது நிரந்தரச் சீரழிவுக்கும் தமிழ் மக்களுக்கு எதிரான கறையாகவும் அமைந்து கொண்டது.

 

இன்று வரை, தமிழ்த் தேசியவாதம் பேசும் அத்தனை கனவான்களும் தமது துரோகத்தனம், பிற்போக்கு நிலை என்பனவற்றை மறைக்கவும் பொத்தம் பொதுவாக இடதுசாரி விரோதத்தைக் கக்கவும் மேற்கூறிய இடதுசாரிகள் முன்னின்று நிறைவேற்றிய அரசியலமைப்பையே பிரதானப்படுத்திக் காட்டுவது அவர்களுக்கு வசதியாக அமைந்து கொண்டது.


இதன் வழியில், தமிழரசு-தமிழ்க் காங்கிரஸ் தலைமைகள் தமது பாராளுமன்றத் தேர்தல் தோல்விகளை முழு அளவிலான வெற்றிகளாக்க இச் சந்தர்ப்பத்தைத் தமிழ் மக்கள் மத்தியில் நன்கு பயன்படுத்த ஆரம்பித்தன. அத்தகைய எதிர்ப்பு நடவடிக்கை போதாது என்றும் மிதவாதம் கொண்டது எனவும் கூறி தமிழ் இளைஞர் பேரவையினர் அடிக்கடி தமிழரசுத் தலைமையுடன் முரண்பட்டு வந்தனர். ஆனால், அமிர்தலிங்கம் போன்றோருடன் இளைஞர்கள் முரண்பட்ட போதிலும் இளைஞர்களைத் தமக்கு விசுவாசமான இளைஞர்கள் மூலம் கட்டுப்படுத்தி வைத்திருக்கவே தமிழரசுக்கட்சி முயன்றது. அதன் வழியில், அமிர்தலிங்கம் போன்றோர் இரண்டு வழிமுறைகளைப் பின்பற்றினர். ஒன்று, தமிழ் தேசியவாத நிலைப்பாட்டில் சகலரும் ஐக்கியப்பட வேண்டும் என்றும் அதன் மூலம் தமது ஒற்றுமையை அரசாங்கத்திற்கும் உலகிற்கும் காட்ட வேண்டும் என்பதாகும். மற்றது, வடக்கு கிழக்கில் தமக்கு எதிராகவுள்ள பாராளுமன்ற எதிராளிகளைத் துரோகிகளாக அடையாளப்படுத்தி அவர்களை அழித்தொழிக்க வேண்டும் என்பதாகும். அதற்கு தீவிரமாக நிற்கும் இளைஞர்களைப் பயன்படுத்தவும் தமிழரசுத் தலைமை தயக்கம் காட்டவில்லை. இத்தகைய குறுக்கு வழிப்பாதைக்கு திசைகாட்டியவர்களால் அதன் எதிர்கால விளைவுகள் எப்படியிருக்கும் என்பதை உணரவோ ஊகிக்க இயலவில்லை.

 
மறுபுறத்தில் தமிழ் மக்களை திருப்திப் படுத்தி தமது தலைமைத்துவ ஆதிக்கத்தை தொடர்ந்து கைகளில் வைத்திருப்பதற்கான அரசியல் காய் நகர்த்தல்களைச் செய்தனர். 1972இல் தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்து வல்வெட்டித்துறையில் ஒரு கூட்டத்தை நடாத்திய தமிழரசு--தமிழ்க்; காங்கிரஸ்--இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இணைந்து தமிழர் கூட்டணி என்ற பெயரில் இயங்க ஆரம்பித்தனர். இக் கூட்டணியில் தமிழ் காங்கிரஸ் முழுமையான ஈடுபாட்டைக் காட்டவில்லை. ஆயினும் தமிழ் காங்கிரசில் நின்று 1970இல் தோல்வியடைந்த மு. சிவசிதம்பரம், காங்கேசன்துறை திருநாவுக்கரசு, வவுனியா த. சிவசிதம்பரம் ஆகியோர் தமிழரசுடன் கூட்டணி வைத்து வேலை செய்ய ஆரம்பித்தனர். ஜீ.ஜீ. பொன்னம்பலமும் அவரோடு இணைந்து நின்ற தனிப்பட்ட தமிழ் காங்கிரஸ்காரர்களும் இக் கூட்டணிக்குச் சம்பந்தமற்றவர்களாகவே இருந்து வந்தனர். இருப்பினும், தமிழ் காங்கிரஸின் பொதுச் செயலாளராக மு. சிவசிதம்பரம் இருந்தமையால், உருவாக்கப்பட்ட கூட்டணி ஒரு ஐக்கியத் தோற்றத்தைக் காட்டியது.

 
தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆரம்பத்தில் பெயரளவில் இக் கூட்டில் இணைந்திருப்பதாலும், விரைவாகவே அதிலிருந்து கழன்று கொண்டது. தமிழீழக் கோரிக்கையைத் தாம் ஆதரிக்கவில்லை எனத் தொண்டமானின் பகிரங்க அறிக்கை மூலம் தெரிவித்துக் கொள்ளப்பட்டது.

 
இதனால் தமிழரசு-காங்கிரஸ் கட்சிகள் மீது விரக்தியடைந்த தமிழ் இளைஞர் ஓரளவுக்கு ஆறுதல் பெற்றாராயினும் தீவிர எண்ணம் கொண்ட இளைஞர்களின் அழுத்தம் அதிகரித்துக் கொண்டே வந்தது. அதனாற், கறுப்புக் கொடிப் போராட்டம், துக்கதினம் கடைப்பிடித்தல், உண்ணாவிரதம் இருத்தல் போன்ற தமிழரசுக் கட்சியின் வழமையான நடவடிக்கைகளே கூட்டணி அமைத்த பின்பும் தொடர்ந்து, 1972 மே 22ஆந் திகதி புதிய அரசியலமைப்பும் குடியரசுப் பிரகடனமும் இடம்பெற்ற போது, வடக்கு கிழக்கில் துக்கதினமும் கறுப்புக்கொடி பறக்கவிடுவதும் கூட்டணியால் முன்னெடுக்கப்பட்டது. அதே வேளை, தமிழ் மாணவர், தமிழ் இளைஞர் பேரவைகளின் ஊடாக வந்த இளைஞர்களிற் சிலர் வன்முறை நடவடிக்கைகளில் இறங்கினர். தனிநபர் பயங்கரவாத நடவடிக்கைகளின் ஆரம்ப வடிவங்கள் ஆங்காங்கே இடம்பெற்றன.

 
இச் சூழலிலேயே 1972ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த மே 22ம் திகதியில் இருந்து நான்கு மாதங்களுக்குப் பின்பு காங்கேசன்துறைத் தொகுதிக்கான தனது பாராளுமன்றப் பதவியை எஸ்.ஜே.வி. செல்வநாயகம் துறந்து கொண்டார். நிரந்தரமானதாக அன்றிப், புதிய குடியரசு அரசியல் யாப்பிற்கான கண்டனமாகவும் எதிர்ப்பாகவும் இப் பதவி துறப்பு இடம்பெற்றது. ஆனால் அரசாங்கம் அதற்கான இடைத்தேர்தலை 1975ம் ஆண்டு முற்பகுதியிலேயே நடாத்தியது. வேண்டுமென்றே இவ் இடைத்தேர்தலை அரசாங்கம் இழுத்தடித்து வந்தது. இவ்வாறு பாராளுமன்றப் பதவி துறத்தலானது பெரும் அரசியல் நடவடிக்கையாகவும் தியாகமாகவும் காட்டப்பட்டு செல்வநாயகத்தைச் சுற்றிக் கட்டியெழுப்பப்பட்ட 'தந்தை", 'ஈழத்துக் காந்தி" போன்ற படிமங்கள் மேலும் வலுப்படுத்தப்பட்டன.


மேலும் கூட்டணியினருக்கு, குறிப்பாகத் தமிழரசுக் கட்சியினருக்குத், தமது தமிழ்த் தேசியவாத நிலைப்பாட்டை ஊக்குவிப்பதற்கு அடுத்த ஒரு சந்தர்ப்பம் காத்திருந்தது. அதுவே நான்காவது உலகத் தமிழ் ஆராச்சி மாநாடாகும். இலங்கையில் நடைபெற இருந்த அம் மாநாட்டைக் கொழும்பிலா அல்லது யாழ்ப்பாணத்திலா நடாத்துவது என்பதில் ஆரம்பம் முதல் அரசாங்கக் காப்பாளர்களுக்கும் தமிழ்த் தேசியவாதத் தலைவர்களுக்குமிடையில் இழுபறியாகவும் வாக்குவாதமாகவும் இருந்து வந்தது. இறுதியில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அவ் வேளை யாழ் மாநகர சபையின் முதல்வரான அல்பிரட் துரையப்பா ஏற்கனவே சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்திருந்தார். யாழ்ப்பாணத் தொகுதியில் சுயேட்சை உறுப்பினராகப் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட பின்பே அவர் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டார். அதனால் அவர் தமிழரசுக் கட்சியினருக்குத் துரோகி ஆகினர். இந் நிலையில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற தமிழராய்ச்சி மாநாட்டு இறுதி நாள் நிகழ்வு அம் மண்டப முன்றலில் நடைபெற ஏற்பாடாகி இருந்தது. யாழ் முற்றவெளிக்கு முன்பாக அமைந்திருந்த மேற்படி நிகழ்வில் பல ஆயிரக்கணக்கான மக்கள் விழாக் காணக்கூடி இருந்தனர். இதன் போதே, பொலீஸ் படையினர் இந் நிகழ்ச்சியை குழப்பியடிக்கும் நோக்குடன் உட்புகுந்து கலகத்தில் ஈடுபடத் தொடங்கினர். அவர்களை எதிர்த்து இளைஞர்கள் செருப்புக்களும் கற்களும் கொண்டு தாக்கினர். அதனால், ஆகாயம் நோக்கிப் பொலீஸ் துப்பாக்கிப் பிரயோகம் செய்த போது மக்கள் சிதறி ஓடியதுடன் சரிந்து விழுந்த மின்சாரக் கம்பிகளில் சிக்குண்டு ஒன்பது பொதுமக்கள் உயிர் துறந்தனர்.

 

தமிழராய்ச்சி மாநாட்டின் மேற்படி துயரச் சம்பவம் தமிழர் கூட்டணியினருக்குப் பெரும் அரசியல் வரப்பிரசாதமாக அமைந்து கொண்டது. தமிழர்களின் தலை நகரிலே தமிழர்கள் மீது சிங்கள இனவாதப் பொலிசார் நடத்திய தாக்குதல் என்பதாகவும் அதற்கு மாநகர முதல்வர் அல்பிரட் துரையப்பா துணையாக இருந்தார் அல்லது ஏவி விட்டார் என்பதாகவும் பிரசாரம் மிக வேகமாகவே தமிழ் மக்கள் மத்தியில் பரவியது. இதில், தமிழர் கூட்டணி தமிழ் இளைஞர் பேரவையினர் போன்றோர் முன்நின்றனர். இத் துயரச் சம்பவத்தை நியாய சிந்தை உள்ள எவரும் ஏற்றுக் கொள்ள இயலாது. மாக்சிச லெனினிசக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழராட்சி மாநாட்டில் பொலிசார் நடந்து கொண்ட அத்துமீறலை வன்மையாகக் கண்டித்து உரிய நீதி விசாரணையைக் கோரி நின்றது. ஆனால் தமிழ்த் தேசியவாத அரசியல் சக்திகள் இனவாதமாகவே அதனைப் பிரசாரப் படுத்தினர். அதே வேளை தாம் பரப்பி வந்த தமிழீழக் கோரிக்கையை மக்கள் மத்தியில் நியாயப்படுத்திக் கொள்ளவும் இச் சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்டனர்.

 
தமிழர் கூட்டணியினரதும் தமிழ் இளைஞர் பேரவையினரதும் குறுந்தேசியவாதப் பரப்புரைகள் தமிழ் மக்கள் மத்தியில் விரிவுபெற்று வந்த சூழலில், தமிழீழம் என்ற பிரிவினவாத எண்ணக்கருவும் வளர்க்கப் பட்டது. தமிழனைத் தமிழன் ஆள்வது, ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆள நினைப்பதில் என்ன குறை, உலகில் பலகோடி தமிழர்கள் வாழ்ந்தும் தமிழருக்கென ஒரு நாடு இல்லை, இனிமேலும் சிங்கள ஏகாதிபத்தியத்தின் கீழ் வாழ முடியாது என்பன போன்ற கருத்துக்கள் தீவிர இனவாதத்தின் ஊடாகத் தமிழ் மக்கள் மத்தியிற் பரப்பப்பட்டன.

 
இவ்வாறான கட்டத்திலேயே 1975ம் ஆண்டு இரண்டாவது மாதத்தில் காங்கேசன்துறைத் தொகுதிக்கான இடைத்தேர்தலிற் செல்வநாயகம் போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் பாராளுமன்றக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வி. பொன்னம்பலம் போட்டியிட்டார். இத் தேர்தலில் மாக்சிச லெனினிசக் கம்யூனிஸ்ட் கட்சி அக்கறை கொள்ளவும் இல்லை. இடதுசாரி என்றளவிற் கூட வி. பொன்னம்பலத்தை ஆதரிக்கவும் இல்லை. பாராளுமன்றச் சந்தர்ப்பவாத கம்யூனிஸ்ட் கட்சியையோ அன்றி வி. பொன்னம்பலம் என்ற சந்தர்ப்பவாதியையோ நேர்மையான மாக்சிச லெனினிசவாதிகள் எவரும் ஆதரிக்கவில்லை. அதே வேளை, செல்வநாயகத்தை ஆதரித்தோர் தமிழீழம் பற்றிய வேகமான பரப்புரைகளைச் செய்து கொண்டனர். இதன் போதே செல்வநாயகம் தமிழீழம் பற்றி மனவிருப்பமின்றி ஒரு பிரசார மேடையில் அரைகுறைச் சத்தத்தில் பேசினார் என்றும் அதனை அமிர்தலிங்கம் வழமையைவிட உரத்த தொனியில் தந்தை சொல்கிறார் எனப் பிரித்துப் பேசினார் என்றும் கூறப்படுவதுண்டு. எவ்வாறாயினும் செல்வநாயகத்தின் வாயால் அப்போதும் அதன் பின்பும் தமிழீழத்தைச் சொல்ல வைத்தவர் தளபதி அமிர்தலிங்கம் என்றே கூட்டணி வட்டாரங்களிற் பேசப்பட்டது.

 

அத் தேர்தலிற் செல்வநாயகம் அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்றார். அது தமிழீழத்திற்கான முதலாவது அங்கீகாரம் எனத் தமிழர் கூட்டணி மகிழ்ச்சி கொண்டது. வி. பொன்னம்பலம் சுமார் பத்தாயிரம் வாக்குகளைப் பெற்றுக் கொண்டார். முன்னையது தமிழீழ ஆதரவு வாக்குகள் என்றால் பின்னையது தமிழீழ எதிர்ப்பு வாக்குகள் என்றே கொள்ள வேண்டியதாகும். இதில் வேடிக்கை யாதெனில், இதே வி.பி., காலம் அதிகஞ் செல்லுமுன்பாகவே, 'செந்தமிழர் இயக்கத்தைத்" தோற்றுவித்துக் கூட்டணியுடன் இணைந்து கொண்டார். அதை விட மோசமான ஒரு விடயத்தைக் கூட்டணி நடாத்திய மேதின மேடையில் பேசும் போது வி.பி. கூறியும் கொண்டார். அதாவது காங்கேசன்துறைத் தொகுதி இடைத் தேர்தலில் மனச்சாட்சியின்படி தந்தை செல்வாவிற்கே தனது வாக்கை அளித்தேன் என்றார். அதன் மூலம் தனக்கு வாக்களித்த பத்தாயிரம் வாக்காளர்களை மனச்சாட்சியற்ற முட்டாள்கள் என்பதாக ஆக்கிக் கொண்டார். அதுவே வி.பி. என்ற பிரபல்யம் பெற்ற "கம்யூனிஸ்ட் மனிதரின்" இறுதியான அரசியற் சாவாகவும் ஆகியது.

 
இடைத் தேர்தல் வெற்றி தமிழர் கூட்டணிக்கு தமிழ்த் தேசியவாத அரங்கில் செல்வாக்கு விரிவடைய வழிவகுத்த அதே வேளை இளைஞர் பேரவையைச் சேர்ந்த தீவிரவாத இளைஞர்களின் வன்முறை வரைமுறையற்ற விதத்தில் வளர ஆரம்பித்தது. உயர் பொலீஸ் அதிகாரி ஒருவரையும் மாநகர முதல்வர் அல்பிரட் துரையப்பாவையும் கொல்வதற்கு பல தடவைகள் இளைஞர்கள் முயன்ற போதிலும் அவை வெற்றியளிக்கவில்லை. இறுதியாக வட்டுக்கோட்டைத் தொகுதியில் அமிர்தலிங்கத்தின் இல்லத்திற்கு அண்மையாக அமைந்திருந்த பொன்னாலை கிருஷ்ணன் கோவிலடியில் வைத்து, வழிபாட்டிற்கு வந்த இடத்தில் அல்பிரட் துரையப்பா 1975ஆம் ஆண்டு யூலை 27ஆந் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையைச் செய்வதில் முன்நின்று நிறைவேற்றியவர் விடுதலைப் புலிகளின் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பது யாவரும் அறிந்த ஒன்றேயாகும். அதற்கு முன்பாக நல்லூர் கிராமசபைத் தலைவர் குமாரகுலசிங்கம் துரோகி எனக் கூறப்பட்டு இளைஞர் பேரவையைச் சேர்ந்தோரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் இரும்பு மனிதரெனப்பட்ட ஈ.எம்.வி. நாகநாதனை 70ஆம் ஆண்டுத் தேர்தலில் நல்லூர்த் தொகுதியில் தோற்கடித்த சி. அருளம்பலத்தின் பிரதான ஆதரவாளராக இருந்தார் என்பதே அதன் காரணமாகும்.

 
யாழ் மாநகர முதல்வர் சுட்டுக் கொல்லப்பட்ட அன்றைய தினம் மாக்சிச லெனினிசக் கம்யூனிஸ்ட் கட்சியின் வடமராட்சிக் குழு ஒரு கருத்தரங்கை வல்வெட்டித்துறை சந்தியில் அமைந்துள்ள சனசமூக நிலையத்தில் ஒழுங்கு செய்திருந்தது. அதற்கு வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் தலைமை தாங்கவும் அதில் கட்சியின் பொதுச் செயலாளர் நா. சண்முகதாசன் உரையாற்றுவதாகவும் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலையில் துரையப்பா கொலை செய்யப்பட்ட செய்தி குடாநாட்டில் பரபரப்பாகிக் கொண்ட சூழலிலும் தீர்மானிக்கப்பட்ட மேற்படி கருத்தரங்கு அன்று மாலை குறித்த இடத்தில் நடைபெற்றது. பெருந்தொகையான மக்கள் இளைஞர்கள் கலந்து கொண்டனர். தோழர் சண், தமிழர் பிரச்சினையின் வளர்ச்சி பற்றியும் வர்க்க நிலைப்பாட்டின் ஊடான போராட்டம் பற்றியும் விரிவாகப் பேசினார். ஒரு கட்டத்தில் அன்று நடந்த துரையப்பா கொலையைச் சுட்டிக் காட்டி அது தனிநபர் பயங்கரவாதம் என்றும் அதன் மூலம் விடுதலை பெற முடியாது என்றும் அழுத்தந் திருத்தமாக எடுத்துரைத்தார். உதாரணத்திற்குத், தோழர் லெனின் மூத்த சகோதரர் தனிநபர் பயங்கரவாதத்தில் ஈடுபட்டு ஜார் மன்னனைக் கொல்ல முற்பட்டு தோல்வி கண்டதுடன் தூக்கிற் தொங்க வேண்டியேற்பட்ட நிகழ்வையும் சுட்டிக் காட்டினார். அப் பேச்சை இளைஞர்கள் அன்று வல்வெட்டித்துறையில் கேட்டார்களே தவிர அதில் உள்ளடங்கியிருந்த அரசியல் சாராம்சத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்றே கொள்ளல் வேண்டும்.

 
மேலும் தனித் தமிழீழம் என்ற எண்ணக்கருவில் அடங்கியுள்ள பிற்போக்கான அம்சங்களையும் அதன் எதிர்கால வளர்ச்சியின் அபாயத்தையும் அதே நேரம் உரிய அரசியல் தந்திரோபாய போராட்ட வழிமுறையையும் மாக்சிச லெனினிச கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டி இருந்தது. அத்துடன் பேரினவாத ஒடுக்குமுறையின் வளர்ச்சிப் போக்கானது வடக்கு-கிழக்கு மக்களை நசுக்கி வருவதையும் எடுத்துக் காட்டியது. எதிரி யார், நண்பன் யார் என்ற தீர்மானிக்கப்பட்டு இனவாதமற்ற வர்க்கப் போராட்டப் பாதையில் வெகுஜன அடிப்படையில் மக்கள் அணிதிரண்டு போராடுவதைக் கட்சி தனது தலைமை வழிகாட்டலில் இடம்பெற்ற போராட்ட அனுபவத்தின் ஊடாக எடுத்துக் காட்டியது.

 
அதன் அடிப்படையில், தமிழீழப் பிரகடனம் வட்டுக்கோட்டையில் செய்யப்படுவதற்கு முன்பாகவே தமிழீழம் சாத்தியம் - சாத்தியம் இல்லை என்ற மாறு;றுக் கருத்துக்களின் பரப்புரை கூட்டணியினதும் மா.லெ. கம்யூனிஸ்ட்; கட்சியினதும் சார்பாகப் பல மேடைகளிற் பேசப்பட்டது. அது தொடர்பான பகிரங்க மேடை விவாதங்கள் இரண்டு 1975ஆம் ஆண்டு முற்பகுதியிலும் நடுப்பகுதியிலும் இடம்பெற்றன. ஒன்று ஆனைக்கோட்டை உயரப்புலம் பாரதி சனசமூக நிலையத்தினர் ஒழுங்கு செய்த விவாத மேடையில், தமிழீழம் சாத்தியம் என்றும் சாத்தியம் இல்லை என்றும் விவாதிக்கப்பட்டது. சாத்தியம் என்பதை வலியுறுத்தி கூட்டணி சார்பில் ம.க. ஈழவேந்தன் தலைமையில் ஒரு குழுவும் சாத்தியம் இல்லை என்பதை வற்புறுத்தி மா.லெ. கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சி.கா. செந்திவேல் தலைமையிலான குழுவும் கடும் விவாதத்தில் ஈடுபட்டனர். பெருந்தொகையான மக்களும் இளைஞர்களுமு; இவ்விதத்தில் பங்கு கொண்டனர். அவ் விவாதத்திற் சாத்தியமில்லை என்ற கருத்தே மேலோங்கிக் கொண்டது. அடுத்த விவாதம் அப்போதைய உடுவில் பாராளுமன்ற உறுப்பினர் வி. தர்மலிங்கத்திற்கும் தோழர் நா. சண்முகதாசனுக்கும் இடையில் இடம்பெற்றது. இவ் விவாதத்திற்கு முன்னாள் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அதிபர் ஒறேற்றர் சி. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.

 
சுன்னாகம் சந்தை மைதானத்தில் நடைபெற்ற இவ் விவாதத்திலும் பெருந் தொகையான மக்கள் கலந்து கொண்டனர். தோழர் சண் முன்வைத்த சாத்தியமின்மைக்கான தர்க்க நியாயங்கள் பெரும் பகுதி மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.இவ்விரு விவாதங்களிலும் தமிழீழம் என்ற எண்ணக் கருவில் உள்ளடக்கியிருந்த பிற்போக்கு அம்சங்கள், அதன் மூலம் ஏகப் பெரும்பான்மையான மக்களுக்கு விடுதலை கிடைக்க முடியாமை, தமிழீழம் அடிப்படையில் மேட்டுக்குடி உயர் வர்க்க உயர் சாதிய ஆண்ட பரம்பரை சக்திகளுக்கே சேவை செய்யக் கூடியமை என்பன எடுத்து விளக்கப்பட்டிருந்தன. அத்துடன் இலங்கையின் வரலாற்று ரீதியான வளர்ச்சியும் சமகால அரசியல் யதார்த்தச் சூழலும் அந்நிய ஏகாதிபத்தியச் சக்திகளின் தலையீட்டு முயற்சிகளும் தமிழீழத்திற்கு சாதகமற்றதாகவே விளங்கும் என்பதும் சுட்டிக் காட்டப்பட்டது. அதன் ஒட்டுமொத்தமான சாத்தியமின்மை பற்றியும் எதிர்கால அபாயம் பற்றியும் தூரநோக்கில் எடுத்துக் கூறப்பட்டது. பழம் பெருமையும் உணர்ச்சி வேகமும் வீரமும் குறுந் தேசியவாதமாகப் பேசப்பட்ட சூழலில் அவற்றில் எதையுமே காதில் வாங்கிக் கொள்ள இயலவில்லை. இளைஞர்கள் தீவிரவாத நிலைப்பாட்டிலும் கூட்டணித் தலைமை பாராளுமன்றப் பாதையிலும் தமிமீழத்தை வென்றெடுக்க முன்நின்றனர். அதனால், 1976ஆம் ஆண்டு மே மாதத்தில் வட்டுக்கோட்டையின் பண்ணாகத்தில் தமிழீழப் பிரகடனம் செய்யப்பட்டது. அதன் அம்சங்கள் பற்றி அடுத்து வரும் தொடரில் பார்ப்போம்.

 
- வளரும் -

 

வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை - பகுதி ஒன்றை இங்கே வாசிக்கலாம்.

(நன்றி : புதிய பூமி)

 http://kalaiy.blogspot.com/2009/10/blog-post_29.html

Last Updated on Thursday, 29 October 2009 07:21