மக்களின் குருதியறைந்து, கொலைகளுக்கு நியாயம் சொல்லுகின்ற ஒரு புதிய கூட்டம் மாரிகாலக் காளான்கள் போல கோரமாய்ப் பரவிக்கொண்டிருக்கும் இக்கட்டான உலக சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒரு புறத்தில் இராட்சத வியாபாரிகள் ஆயிரமாயிரமாய் கொலைகளை நிகழ்த்திவிட்டு “வீர சிம்மாசனத்தில்” வீற்றிருக்க அவர்களின் பின்னால் இன்னும் ஆயிரம் “புதிய நியாயங்களோடு” குட்டி வியாபாரிகள் மக்களைச் சூறையாட அணிவகுத்து நிற்கின்றனர்.

அறுபது நீண்ட ஆண்டுகள், இலங்கைத் தமிழ் பேசும் சிறுபான்மையினர், இடைவெளியின்றிச் சூறையாடப்பட்டிருக்கின்றனர்; வேறுபாடின்றி தெருவோரத்தில் கொன்று போடப்பட்டிருக்கின்றனர்; அவர்கள் காணி நிலம், வீட்டு முற்றம், தெருக்கோடி எல்லாமே பேரினவாதப் புற்று நோய்க் கிருமிகளால் சிறுகச் சிறுக அரிக்கப்பட்டு அதன் உச்ச பட்ச வடிவமாக வன்னி நிலம் முழுவதுமே அபகரிக்கப்பட்டுவிட்டது.

amotherகொன்று போடப்பட்டவர்கள், சாம்பலாக்கப்பட்டவர்கள், விரட்டியடிக்கப்பட்டவர்கள், சிதைத்துச் சிதைது குடியேற்றப்பட்டவர்கள் என்று வடக்கும், கிழக்கும், மலையகமும் மறுபடி மறுபடி அவலங்களின் பூமியாக மாற்றப்பட்டுவிட்டது.

இவையெல்லாம் நேற்று ஆரம்பித்து இன்று முடிவடையும் சிவில் யுத்தமல்ல. பின் காலனியக் காலகட்டம் முழுவதுமே தமிழ்ப் பேசும் சிறுபான்மையினரின் அழிப்பிற்கான காலகட்டம் தான். கடந்த அறுபது ஆண்டுகள், ஒவ்வொரு பொழுதும் புலரும் போதும் கொலைச் செய்தியோடு, அல்லது தமிழ் பேசும் மக்கள் மீதான  வெறுப்பைச் சுமந்துவரும் பேரினவாத சோவனிஸ்டுக்களின் அருவருக்கும் செய்திகளோடும் தான் புலரும்.

இன்றைய உலகின் புதிய விதிகளின் பின்புலத்தில் மகிந்த அரசு பெற்றுக்கொண்ட அசுர பலத்தில், புலிகளை அழிக்கிறோம் என்ற ConcentrationCampsபெயரில் சாரி சாரியாக அப்பாவி மக்களைக் கொன்று போட்டுவிட்டு, மீதமிருக்கும் மக்களை திறந்த வெளிச் சிறைகளில் அடைத்து வைத்துக் கொண்டு தெற்காசியாவின் குட்டித் தாதாவாக உருவெடுத்திருக்கிறது.

இதே உலகச் சூழல் அறுபது ஆண்டுகளாக நடாத்தப் படுகின்ற திட்டமிட்ட குடியேற்றங்களை அதன் நவீன வடிவத்தில் நடைமுறைப் படுத்த ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு உதவி புரிகிறது. தமிழ் நாடு முதலமைச்சர், “தொப்புள்கொடி” முத்துவேல் கருணாநிதி குடும்பத்திலிருந்து தெருச் சந்தை வியாபாரிகள் வரை பல சந்தர்ப்பவாதிகள் முண்டியடித்துக்கொண்டு மக்களின் இரத்த வாடையில் திருட்டு வியாபாரம் நடத்துகிறார்கள். பிரித்தானியாவில் இருந்து இலங்கை சென்ற அரசியலோடு தொடர்பற்ற ஒருவர் முகாம்களிலிருந்து கொண்டு வந்திருந்த ஒளிப்படத்தில் நூற்றுக் கணக்கில் மக்கள் திறந்த வெளிச்சிறையிலிர்ந்து விடுதலையாவதையே கோருகிறார்கள். ஊடகவியலாளர்கள் முகாம்களுக்குள் இலங்கை அரசின் தடைகளையெல்லம் மீறி செல்லும் போதெல்லாம் இதே கோரிக்கையைத் தான் மக்கள் முன்வைக்கிறார்கள். யாரும் முகாம்களுள் சிறைவைத்துச் சாப்பாடு போடக் கோரவில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நூற்றுக் கணக்கில் திறந்தவெளிச் சிறைவாசிகளோடு பேசியிருக்கிறேன். அவர்களுக்கு என்ன உதவியை நாம் வழங்க முடியுமென்று கேட்கும் போதெல்லாம், அங்கிருந்து அவர்கள் வேளியேற வேண்டுமென்றே கோருகிறார்கள்.

புலிகள் மக்கள் மீது நடத்திய தாக்குதல்களை எல்லாம் அவர்கள் மறந்து போய்விடவில்லை. ஆனாலும், இலங்கை அரசின் துணைப்படைக் குழுக்களையும் அதன் ஆதரவு சக்திகளையும் கடைந்தெடுத்த துரோகிகளாகவே அவர்கள் எண்ணுகிறார்கள். அரச தில்லுமுல்லுகள், திருட்டு வாக்குகளுக்கு மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் வழங்கிய வாக்குகள் அவர்கள் புலிகள் மீது வைத்திருக்கும் பற்றால் அல்ல, அரச அடக்குமுறை மீதுள்ள வெறுப்பினாலேயே வழங்கியிருக்கிறார்கள். இது தான் மக்களின் மனோநிலை.

வீதியில் நடமாடக்கூட விதி முறைகளுண்டு. அதியுயர் சோவனிசப், பாசிசக் கட்டுமானங்களைக் கொண்ட இலங்கை அரசிற்கும் விதிமுறைகள் உண்டு. இந்த விதிமுறைகளோடு ஒத்துழைக்காமல், அதாவது இனப்படுகொலைக்கு அங்கீகாரம் வழங்காமல், இலங்கையில் ஒரு துரும்பைக்கூட அசைக்க முடியாது.எத்தனை முறை மருந்து வினியோகத்தையும், உணவு வினியோகத்தையும் இலங்கை அரசு அங்கு திட்டமிட்டுத் தடை செய்திருக்கிறது என்பதை அமரிக்க ராஜாங்கத் திணைக்கள அறிக்கை கூறுகிறது.

இலங்கை அரசிற்கு எதிராகப் போராடுவதும், அதனை மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக அம்பலப்படுத்துவதும் மட்டுமல்ல அதன் ஆதரவு சக்திகளையும் பாசிசத்தின் புதிய கூறுகளாக உலகம் எங்கும் பல்வேறு கோணங்களில் முளைவிடுகின்ற இலங்கை இந்திய அரசியல் குற்றவாளிகளின் விரிவு படுத்தலைப் பற்றி விழிப்பாயிருத்தலும், ஏனையோரை விழிப்பாயிருக்கக் கோருதலும் எமது ஒவ்வொருவரதும் கடமை.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான பிராந்திய அதிகாரப் indianmadeபோட்டியின் விளைபலன் தான் இலங்கைக்கு இந்தியா ஆயுதம் வழங்கியது என்று இந்திய ஆதரவாளர்கள் நிறுவ முயல்கிறார்கள். இந்தியா இலங்கை அரசுடன் இணைந்து நடத்திய இனப்படுகொலைக்கு சீனாவும் பாகிஸ்தானும் தான் காரணம் என்ற முட்டாள் தனமான விவாதத்தை முன்வைக்கிறார்கள். இந்தியாவின் கொல்லைப் புறத்தில் அமைந்திருகிற “சுண்டெலித்” தீவான இலங்கையை இந்திய மேலாதிக்கம் நினைத்தால் எப்படி வேண்டுமானாலும் புரட்டியெடுக்கலாம். இங்கு சீனா, பாகிஸ்தான் என்ற விவாதமெல்லாம் இந்தியாவை நியாயப்படுத்த முன்வைக்கும் சமாதானங்களாகும்.

தமிழ் பேசும் மக்களின் போராட்டத்தை 83 களில் ஆரம்பித்து சிதைத்து சின்னாபின்னப் படுத்தியது இந்தியா தான். இலங்கையின் தமிழ் பேசும் மக்களின் விடுதலை என்பது இந்திய மேலாதிக்கத்திற்கும் எதிரான போராட்டத்திலிருந்தே ஆரம்பிக்க முடியும். இந்திய முற்போக்கு சக்திகளுடன் இணைந்த புதிய போராட்ட வடிவங்கள் குறித்து தமிழ் பேசும் மக்கள் சிந்திப்பது இன்று அவசியமாகிறது.

80 களில் இந்தியாவிடம் ஒரு தந்திரோபாய முறைமை இருந்தது. அமரிக்க அணியிடமிருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப் படுமானால் சோவியத் சார்பு நிலையும், சோவியத் ரஷ்யாவிடமிருந்து அழுத்தங்கள் உருவாகுமானால் அமரிக்க சார்பு நிலையும் எடுத்துக்கொள்கிற வெளிவிவக்காரக் கொள்கையைப் பிரயோகித்திருந்தது.

இந்திய வெளிவிவகார ஆலோசகர் ஷிவ் சங்கர் மேனன் டெல்லிப் பல்கலைக் கழகத்தில் இந்த வருட ஆரம்பத்தில் ஆற்றிய உரையில் குறிப்பிடுவது போல 1990 இற்குப் பின்னதாக இன்று வரைக்கும் இந்திய வெளிவிகாரக் கொள்கை புதிய கோணங்களில் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.

சுதந்திரத்தின் பின்னர் கடந்த பத்தாண்டுகளில் மட்டும்தான் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி பெற ஆரம்பித்திருக்கிறது என்றும் அந்த வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையிலேயே இந்திய வெளியுறவுக் கொள்கை அமையும் என்கிறார் ஷிவ் சங்கர் மேனன். இந்த நிலையில் இந்த ஆண்டு சீனாவுடன் இந்திய வியாபாரம் 60 பில்லியன் தொகையை அடையும் என்று எதிர்வு கூறப்படுகிறது. இந்தியாவின் பிரதான வியாபாரப் பங்கு நாடான சீனாவின் தெற்காசிய ஆதிக்கத்திற்கான நிகழ்ச்சி நிரல் என்பது இந்தியாவுடன் இணைந்ததாகவே அமைந்திருக்கும் என்ற எல்லைக்கு ஆசியப் பொருளாதாரம் இன்று ஆதிக்கம் செலுத்துகிறது.

ஆக, இந்தியா, சீன சார்பு நிலையையே பிராந்தியப் பொருளாதார ஆதிக்கம் குறித்த விவகாரங்களில் கடைப்பிடிக்கிறது. இலங்கைப் பிரச்சனையிலும் கூட! இருந்த போதும் சீனாவிடமிருந்து அதிக அழுத்தங்கள் உருவாகும் போதெல்லாம், அமரிக்காவுடன் அரசியல் இராணுவத் தொடர்புகளை வலுப்படுத்துவதாகக் காட்டிக்கொண்டு, அதிகாரச் சமநிலையைப் பேணிக் கொள்கிறது.இது, முன்னைய சோவியத் – அமரிக்க சமநிலை பேணுதலின் புதிய உலக ஒழுங்கோடு கூடிய புதிய பரிமாணமே தவிர வேறில்லை.

இந்த நிலையில், அமரிக்க ராஜாங்கத் திணைக்களம், இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் குறித்த 70 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வன்னியில் இரத்தக் குளியல் நடைபெற்று ஐந்து மாதங்களின் பின்னர் அமரிக்காவிற்கு முளைத்திருக்கும் மனிதாபிமான கரிசனை உலக அரசியல் சதுரங்கத்தில் இலங்கை இனச்சிக்கல் இன்னும் தீவிர பாத்திரத்தை வகிப்பதாகவே உணர்த்துகிறது.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஆசியப் பொருளாதார நாடுகளின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதற்கும் அமரிக்க ஆதிக்கம் சரிந்து வருவது குறித்துமே அமரிக்கா துயர் கொண்டுள்ளது. ஐ.நா சபையில் இலங்கைப் போர்க்குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரணைக்கு உட்படுத்துவது தொடர்பான கூட்டத்தொடர்களில் எல்லாம் இலங்கை அரசிற்கு சார்பாகச் செயற்பட்ட பிரதானமான நாடு இந்தியா. இவ்வறிக்கை என்பது இலங்கையின் போர்க்குற்றங்களை விரிவாகத் தெளிவுபடுத்தும் அதே வேளை இந்திய அரசின் இலங்கை சார்பான நிலைப்பாட்டிற்கும் சவால் விடுத்துள்ளது. இந்திய – சீன இணை நடவடிக்கைக்கு எதிராக் அமரிக்காவின் ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் முன்னறிவுப்பு என்பதே இது.

இதன் உள் நாட்டு நகர்வுகளையும் அமரிக்கா இந்தியாவிற்கு எதிராக ஆரம்பித்துவிட்டது எனலாம். சரத் பொன்சேக தேர்தலில் போட்டியிட்டால் சிங்கள் மக்களின் வாக்குகள் பிளவுபட, தமிழ் மக்களின் வாக்குப் பலத்துடன் அமரிக்க சார்பு யூ.என்.பி கட்சியை butenisஆட்சிக்கு கொண்டு வந்துவிடலாம் என்பதே அமரிக்கத் தூதுவரின் கணிப்பு. சரத் போன்சேகவிற்கும் இலங்கைகான அமரிக்கத் தூதருக்கும் இடையிலான உத்தியோகப் பற்றற்ற சந்திப்புக்கள் குறித்து இலங்கைப் பத்திரிகைகள் கேள்வியெழுப்புகின்றன. ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்ட போது அங்கு தூதுவராகக் கடமையாற்றியவர், ஈராக் ஆக்கிரமிக்கப்பட்ட போது அங்கு தூதுவராகக் கடமையாற்றியவர், பங்களாதேஷின் அமரிக்க சார்பு அரசை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தவர், என்ற தகமைகளைப் பெற்றுள்ளவர் தான் அமரிக்கத் தூதுவர் பற்றீசியா பட்டெனிஸ்.

உலகிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களினதும், தமிழ் பேசும் மக்களினதும் எதிரியான அனைத்து நாடுகளதும் வியாபார அரசியல் சதுரங்கம் கருத்தில் கொள்ளப்பட்டு விவாதங்களுக்கு உட்படுத்தப்படல் என்பது இன்றைய தென்னாசிய அரசியற் சூழலில் புதிய போராட்ட சக்திகளின் மத்தியில் அவசியமானதாகும்.

http://inioru.com/?p=6826