இப்படித்தான் கொடுமையான இரவுகளையே
எப்பொழுதும் உனக்கு தரவேண்டியாயிற்று.
காலை என்றாலும் உன்னை
நெருங்கிவிட முடியவில்லை.
எல்லாவற்றையும் நிர்பந்தங்களுக்காக
செய்துகொண்டிருக்கிறோம்.
உன்னை தனியே விட்டுச் செல்லுகிற
என் தாய்மையைப் பற்றி
என்ன சொல்லி அழுகிறாய்!
அந்த வெளியில்
கலந்து கிடக்கிற தாலாட்டுகள்
உன்னை தூங்க வைக்கும் என்றே நினைத்திருந்தேன்.

அவர்கள் உன்னை என்னிடமே சேர்ப்பதாக
சொல்லுகிறார்கள்.
வீடுகளை பார்த்து ஆசைப்பட்டுக்கொண்டு வந்த
பயணத்தின் இடையில்
ஒரு தோழிக்கு குழந்தை பிறந்திருக்கிறது.
அதற்கான பாதுகாப்பு விசாரணைகளுக்காகத்தான்
இடையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறோம்.
தூங்க மறுத்து
அழுது களைத்துப்போய் காலையில்
சூரியனை காணாது தூங்கிக்கொண்டிருக்கிறாய்.
நினைத்தபடி எங்கும் செல்ல முடியாது
என்பதால் உன்னை கொஞ்சம் பொறுக்கச்சொல்லுகிறேன்.

எனது கண்களும் கரைந்து கொண்டிருக்கின்றன.
என்னை மறந்து
தூங்கும்பொழுது மீளவும் உன்னிடம் வந்து
என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ள
துர்பாக்கியத்தில் நானிருக்கிறேன்.
இங்கு தோள்களில் பிள்ளைகளை அவர்கள் போட்டுக்கொண்டுதான்
புத்தகங்களை கொண்டு வந்திருக்கிறார்கள்.
கூடவே தங்கள் துணைகளையும் அழைத்து வந்திருக்கிறார்கள்.
ஏன் நம்மை பிரித்து விட்டார்கள்.
இந்த இரவு மிகவும் கொடுமையாக
நீண்டுகொண்டே உன்னை தூரமாக்கிச் செல்லுகிறது.

நானும் உன்னைப்போலவே தூங்க மறுத்துக்கிடக்கிறேன்.
பால் சுறந்து வடிந்துகொண்டிருக்கிறது
மனம் கொதித்து அறைக்குள் அலைந்துகொண்டிருக்கிறேன்.
மகளே இப்படித்தான்
நாங்கள் எப்பொழுதும் பிரிக்கப்படுகிறோம்.
எப்படி நீ அருகில் இருக்கிறாய் என்றும்
நான் உன் அருகில் இருக்கிறேன் என்றும்
சொற்களால் சமாளிக்க முடியும்?
நான் வெகு தூரத்திற்கு வந்திருக்கிறேன்.

எங்கோ ஒரு கூடாரத்தில் அழுது படிந்து கிடக்கிற
உனது முகத்தை யார்தான் காட்டமுடியும்?
பல்வேறு விடயங்களுக்காக
குழந்தைகள் அழுதுகொண்டே இருக்கிறார்கள்.
நாளையும் விரைவாக வருகிறது.
எப்படி மீளவும் உனக்கு பதில் அனுப்பப்போகிறேன்.
அவர்கள் உன்னை கொண்டு வந்து தருவதாகவே சொல்லுகிறார்கள்.
நான் சொன்னபடி
நிறையவே பொறுத்து உனக்கு தொண்டையடைத்துப்போயிருக்கிறது.
அவர்கள் சொல்லுவதைத்தானே சொல்ல முடியும்!

இவை கொடுமையான இரவு என்பதை
நான் சொல்லாமலே அறிந்து வைத்திருப்பாய்.
உனது அழுகை மிகச் சமீபமாகவே கேட்கிறது.
இன்னும் உன்னை பொறுத்துக்கொள்ளச் சொல்லுவது
எவ்வளவு இரக்கமற்ற வார்த்தைகளாக இருக்கும்!
உன்னை தூங்க வைத்து
அசைத்துகொண்டிருக்கும் மடிகளால் நிறைந்து கிடக்கிறது

என் கனவு .
எல்லாக் குழந்தைகளும்
எதோ ஒன்றின் நிமித்தம் அழுதுகொண்டேயிருக்கிறார்கள்.

-தீபச்செல்வன்

_________________
(03.09.2009 தடுப்பு முகாமில் தனது குழந்தையை கணவருடன் விட்டுவர நேர்ந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி தனது குழந்தை தன்னைப் பிரிந்து சுகவீனமடைந்து, அழுதுகொண்டிருப்பதால் குழந்தையை தன்னிடம் சேர்த்து விடும்படி கோருகிறார்)