“சென்னையைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் எஸ்.ஜீவன் 12.10.2009 அன்று திருப்பதி ஏழுமலையான் கோவில் புறக்காவல் நிலையம் அருகே விஷம் அருந்திய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது சட்டைப்பையில் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி எழுதிய கடிதத்தில்..’

வெங்கடாஜலபதி முன்பாக இறக்க வேண்டும் என்று விரும்பி இந்த முடிவை எடுத்தேன். எனது சாவுக்கு யாரும் பொறுப்பல்ல. எனது மரணத்தால் பெற்றோரும் உறவினர்களும் அழவேண்டாம். மன உளைச்சல் காரணமாக இந்த முடிவை தேடிக்கொண்டேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.”

-          இது 13.10.2009 தினத்தந்தியில் வெளிவந்த ஒரு செய்தித் துணுக்கு.

ஏழை, பணக்காரன் என்ற வர்க்க வேறுபாடு மனிதனுக்கு மட்டுமல்ல மனிதன் உருவாக்கிய கடவுளர்களிடமும் உண்டு என்பதற்கு விசுவரூப சாட்சி திருப்பதி வெங்கடாசலபதி. தஞ்சை மாவட்டத்தின் பிரம்மாண்டமான சிவன் கோவில்களெல்லாம் வௌவால் நாற்றத்தில் ஆளில்லாமல் நாறும் போது திருப்பதி ஏழுமலையான் மட்டும் தங்கத்தில்தான் குளிப்பார். இந்தியாவின் இருபதாம் நூற்றாண்டில் சாதாரண நிலையிலிருந்து பில்லியனர் நிலைக்கு உயர்ந்தவர்கள் இரண்டுபேர். ஒருவர் அம்பானி, மற்றொருவர் வெங்கடாசலபதி. அம்பானி மோசடி செய்து பில்லியனரானார் என்றால் மோசடி செய்த பணக்காரர்களின் கருப்பு நோட்டை வைத்து பில்லியனாரானவர் ஏழுமலையான்.

திருப்பதி ஏழுமலையானை கைது செய்!

முனி, இசக்கி, சுடலைமாடன், மதுரைவீரன், முத்தாரம்மன் என நாட்டுப்புறத் தெய்வங்களை வணங்கும் உழைக்கும் மக்கள் தமது காணிக்கையாக அவர்களது வாழ்வில் கிடைக்கும் பொருட்களை படைப்பார்கள். கிடாவை வெட்டினால் அது படைக்கப்பட்டு பலருக்கும் உணவாய் போய்ச்சேரும். எதுவும் வீணாவதில்லை.

நகர்ப்புறத்து நடுத்தரவர்க்கம், மேட்டுக்குடியின் தெய்வமான ஏழுமைலையானுக்கு மட்டும் தங்கமும், புதுமணம் மாறாத கரன்சி நோட்டுக்களும்தான் பிடிக்கும். இப்போது ஒரு உயிரையே காணிக்கையாக ஏற்றுக்கொண்டிருக்கிறார். மன உளைச்சலால் அவதியுற்ற ஜீவன் என்ற மாணவன் தனக்கு பிடித்த கடவுளின் சன்னதியில் வைத்தே உயிரை துறந்திருக்கிறான். பட்டை நாமம் போட்டு கண்மூடிய நிலையில் இருந்தாலும் முழு உலகையும் விழிப்புடன் ஆளுவதாக நம்பப்படும் வெங்கடாசலபதி இந்த மாணவனின் உயிரைப் போய் ஒரு காணிக்கையாக ஏன் பறித்துக் கொண்டார் என்பது நம் கேள்வி.

முடியைத் துறப்பதிலிருந்து, 24 காரட் சவரன், அமெரிக்க டாலர் என விதவிதமாக காணிக்கைகளை கொட்டும் பக்தர்கள் பதிலுக்கு தங்களுக்கு நடக்கவேண்டிய, அல்லது வேண்டி நடந்த நிகழ்வுகளுக்காக ஏழுமலையானுடன் பிசினஸ் ஒப்பந்தம் போட்டுக் கொள்வது வழக்கம். ஆனால் ஜீவன் மட்டும் தனது உயிரைக் காணிக்கையாக அளித்து பதிலுக்கு ஏதும் பெறாமலேயே இறந்து விட்டார். அல்லது அவர் வேண்டியது வெங்கடாசலபதியின் தயவில் நடப்பதாக இருந்தாலும் அதைப் பார்ப்பதற்கு அவரிடம் உயிரில்லை. தனது மகனின் உயிரை காணிக்கையாக பறித்துக் கொண்ட அந்த இறைவனிடம் ஜீவனின் பெற்றோர் என்ன கோரிக்கை வைக்க முடியும்? அவர்களைப் பொறுத்தவரை திருமலை என்பது இனி புண்ணியத் தலமல்ல, மகனைப் பறிகொடுத்த இழவுத் தலம்.

ஜீவன் தனது ஜீவனையே காணிக்கையாக கொடுத்திருந்தாலும் அந்த இறந்த உடல் ஏழுமலையானின் சன்னதிக்கு செல்லப்போவதில்லை. திருப்பதியின் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களால் அறுத்து பிரதேப் பரிசோதனை செய்யப்படும் அவரது உடல் சென்னையின் ஏதோ ஒரு சுடுகாட்டில் சாம்பலாகப் போகிறது. லவுகீக சமாச்சாரங்களை பேஷாக எடுத்துக் கொள்ளும் திருமலையான், ஜீவனின் உடலையோ அல்லது இறைப்பற்றாளர்கள் நம்பும் அந்த உடலுக்குள் இருக்கும் ஆன்மாவையோ சட்டை செய்யப் போவதில்லை. விஷம் பாய்ந்த அந்த உடலை விட கருப்புப் பணமே இந்த காஸ்ட்லியான கடவுளின் விருப்ப காணிக்கை. கரன்சிக்கும், தங்கத்துக்கும் மத்தியில் அந்த மனித உயிருக்கு எந்த மதிப்பும் இல்லை.

ஜீவனின் மரணத்தை வெளியிட்டிருக்கும் தினத்தந்தியில் மற்றொரு செய்தியும் வந்திருக்கிறது. ஏழுமலையானை தரிசிப்பதற்கு நாடு முழுவதும் தினசரி பல்லாயிரம் பேர் வருகிறார்கள். தர்ம தரிசனம் எனப்படும் இலவச தரிசனத்திற்கு பல மணிநேரம் வரிசையில் நின்றால்தான் சாமி தரிசனம் செய்ய முடியும். அதிகாலை சுப்ரபாத சேவையில் தொடங்கி தோமாலா சேவை, அர்ச்சனா, ஆனந்த தரிசனம் என்று பல்வேறு தரிசனங்களுக்கு பக்தர்கள் கட்டணம் செலுத்தி வழிபடுகிறார்கள். இதற்கான சுதர்சன டோக்கன் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறதாம். 15,000 பேர்கள் தினசரி சுதர்சன டோக்கன் பெற்று வழிபடுகிறார்கள்.

இப்போது இந்தக் கட்டண முறைகளை ஒழித்து விட்டு ‘சீக்கிர தரிசனம்’ என்று 300 ரூபாய்க்கு அறிமுகப்படுத்துகிறார்களாம். திருமலையான் கவலைப்படாத ஏழைகள் தர்மதரிசனத்தில் புழுங்கும் போது பணமுள்ளவர்களுக்கு மட்டும் சீக்கிர தரிசனம். இப்படி வழிபாட்டிலேயே பணமுள்ளவனுக்குத்தான் முன்னுரிமை என்று அப்பட்டமான பேதத்தை கடைபிடிக்கும் ஏழுமலையானின் சன்னிதியில் ஜீவன் ஏன் உயிரை விட்டார்?

தென்னிந்தியாவில் இறைவழிபாட்டை ஒரு நவீன பாணியாக்கிய இரண்டு இடங்களில் திருப்பதிக்கும், சபரிமலைக்கும் முக்கிய இடமுண்டு. சபரிமலையில் கூட சிலமாதங்கள் மட்டும்தான் சீசன் என்றால் திருப்பதியிலோ தினசரி சீசன்தான். இந்தியாவில் தாராளமயம் வளர்ந்து வந்த அதே காலத்தில் திருமலையானும் செழிப்பாக வளர்ந்து வந்தார். ஆந்திராவில் நிலவும் நிலவுடமை பிற்போக்குத்தனத்தின் உரிமையாளர்கள் அத்தனை பேருக்கும் ஏழுமலையான்தான் ஸ்பான்சர். பதவி இழந்த சந்திரபாபு நாயுடுவோ, அவருக்கு வழி ஏற்படுத்திய ராமாராவோ, நேற்று கட்சி ஆரம்பித்த சிரஞ்சீவியோ அத்தனை பேரும் தமது அரசியல் வாழ்வில் வெங்கடாசலபதியை தொழுது விட்டே பணிகளை ஆரம்பிப்பார்கள்.

வெள்ளத்தில் மூழ்கித் தவிக்கும் ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்து கிராம மக்கள் இன்னும் நிவாரண உதவி கிடைக்காமல் அவதிப்படும் அந்த மக்கள் பார்வையிட வரும் முதல்வர் ரோசய்யாவின் கார்மீது கல்வீசி தமது ஆத்திரத்தை காண்பித்தார்கள். இப்படி புறநிலையான வாழ்வில் அதிகாரம் செலுத்துவோர் மீது வெறுப்புறும் மக்கள் அதே அதிகாரத்தில் உள்ளவர்கள் பிரலப்படுத்திய ஏழுமலையான்மீது மட்டும் வெறுப்பு கொள்வதில்லை. இது ஆந்திராவுக்கு மட்டுமல்ல. தென்னிந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை மக்களின் சர்வரோக நிவாரணியாக வெங்கடாசலபதி மாறிவிட்டார். வாழ்வின் வலிகளை பட்டுத்தெரிந்து கொண்டாலும் அதை விழிப்புணர்வாக மாறும் வளர்ச்சியை அழிக்கும் வேலையை வெங்கடாசலபதி செய்து வருகிறார்.

திருப்பதியில் டன் கணக்கில் குவிக்கபடும் தலைமுடிகள் சவுரியாக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு பலகோடி அன்னியச்செலவாணியை வழங்குகிறதாம். இந்த ஏற்றுமதிக்காக மொட்டையடிக்கும் மக்கள் தமது முடியோடு மூளையையும் சேர்த்துத்தான் இழக்கிறார்கள். சின்னப் பிரச்சினையோ, பெரிய பிரச்சினையோ எல்லாவற்றுக்கும் திருப்பதியும், அங்கு அடிக்கப்படும் மொட்டையும் நிவராணம் என்றால் அந்த நாடு உருப்படுமா? சில ஆயிரம் கந்து வட்டி கடனை அடைக்கமுடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் இருக்கும் ஆந்திராவில் ஒரு பணக்காரத்தெய்வம் மட்டும் பலகோடிகளை தினசரி வருமானமாகப் பெறுகிறது என்றால் தற்கொலை செய்து கொள்ளும் உயிரின் மதிப்பு என்ன?

ஜீவனின் மன உளைச்சலுக்கான காரணங்கள் என்ன? காதலா, படிப்பா, நட்பா, பாலியல் பிரச்சினையா எதுவென்று நமக்குத் தெரியவில்லை. ஆனால் தன்னுயிரை துறப்பதற்கு அவர் தெரிவு செய்த இடத்தை வைத்து அவரது ஆளுமையை நாம் யூகிக்க முடியும்.

இந்த உலகில் நமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி உண்டு என இறைவனை அழுத்தமாக நம்பும் ஆத்திகர்கள் இந்த உலகின் சரி, தவறுகளெல்லாம் கடவுள் மேலுள்ள பயத்தினாலே ஒரு ஒழுங்கைப் பெறுகின்றன, இந்த நம்பிக்கை இல்லையென்றால் மக்கள் தறுதலையாக மாறிவிடுவார்கள் என வாதம் செய்வார்கள். இப்படி இல்லாத ஒன்றினை வைத்துத்தான் இந்த உலகம் ஏதோ ஒரு ஒழுங்கில் இயங்குகிறதா? நாத்திகம் பேசுவோர் எல்லாம் தாறுமாறாக வாழக்கூடியவர்களா என்ன?

ஆத்திகம் ஆழமாக வேர்விட்டிருக்கும் மனிதர்கள் தமது வாழ்வின் பிரச்சினைகளுக்கு இறைவனிடம் சரணடைகிறார்கள். நாத்திகர்களோ அத்தகைய பிரச்சினைகளை தமது அறிவின் துணை கொண்டு தீர்க்க முனைகிறார்கள். பொதுவுடைமைத் தத்துவத்தை நம்பும் நாத்திகர்களோ அந்த பிரச்சனைகளின் சமூகவேரை கண்டறிந்து அகற்ற முனைகிறார்கள்.

இவ்வகையில் ஆத்திகம் ஒரு மனிதனின் முன்முயற்சி, போராட்டம், முனைப்பு, அத்தனையையும் ரத்து செய்கிறது. புறநிலைமையாக வாழ்க்கை உண்மைகளை கற்றுத் தந்தாலும் அவர்கள் அவற்றை ஆத்திகத்தின் வழியேதான் பார்க்கிறார்கள். இத்தகைய நம்பிக்கை எப்போதும் நல்ல செய்திகளை மட்டும் கொண்டு வருவதில்லை. ஜீவனின் பிரச்சினைகளை அவர் உயிர் வாழ்ந்து சந்திக்கும் வல்லமையை அவரது இறைபக்தி வழங்கிடவில்லை. மாறாக அதற்கு புறமுதுகிட்டு ஓடும் கோழமையைத்தான்  கற்றுக் கொடுத்திருக்கிறது.

அந்த வகையில் ஜீவனது தற்கொலையை தூண்டிய குற்றத்திற்காக வெங்கடாசலபதி கைது செய்யப்படவேண்டும். அவர் மீது கொலை முயற்சிகளின் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படவேண்டும். இந்த தற்கொலைக்கு தூண்டியவர் என்ற முறையில் திருப்பதி ஏழுமலையான்தான் இதற்குப் பொறுப்பு. இது அவர் செய்த கொலை!

http://www.vinavu.com/2009/10/15/arrest-tirupathi-elumalaiyan/