கைவிடப்பட்டவன்! ( Cast Away)


செய்யும் செயலுக்கு
விளக்கம் சொல்ல தேவையில்லை.

என்னை அறிந்த
நான்.

பல விதங்களில்
தனிமையில்
செளகரியமாக உணர்கிறேன்.

தனிமை பிடிக்கும்!
தனிமையை மட்டுமல்ல!

****

நான்கு ஆண்டுகளாக நீங்கள் மனிதர்களற்ற ஒரு குட்டித் தீவில் தனியாக மாட்டிக்கொண்டால் என்ன ஆவீர்கள்? அநேகமாய் பைத்தியம் பிடிக்குமா? இல்லையெனில் நம்பிக்கைகளையும், முயற்சிகளையும் ஒன்றாய் திரட்டி தப்பித்து விடுவீர்களா?


இனி இந்த படம் பற்றி நான் சொல்வதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்! நீங்கள் ஒருமுறை படம் பாருங்கள்.

கதையெனப் பார்த்தால்...

உலக அளவில் தனது கிளைகளைப் பரப்பியுள்ள ஒரு தனியார் கூரியார் நிறுவனத்தில் நாயகன் அதிகாரியாக (system analyst) பணிபுரிகிறார். பணி நிமித்தமாக வேறு நாட்டுக்கு விமானத்தில் கிளம்புகிறார். வழியனுப்ப வரும் தன் காதலிக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறார்.

விமானம் பரந்த பசிபிக் கடலில் மேலே பறக்கும் பொழுது, புயலும், மழையும் சுழற்றியடித்து, மோசமாக விபத்துக்குள்ளாகி, கடலில் மூழ்கிறது. உடன் வந்த விமானிகள் இறந்து போக, ஆபத்துக்கு உதவ வைத்திருக்கும் ஒரு மிதக்கும் படகு மூலம் மயக்க நிலையிலேயே பல மைல்கள் கடந்து, ஒரு குட்டித் தீவில் ஒதுங்குகிறார்.

தீவை ஒட்டி, எந்த விமானமும், கப்பலும் கடந்து போகாத நிலையில்... நாலு ஆண்டுகள் தனியாக வாழ்கிறார். இறுதியில்... கிடைத்த பொருட்களை கொண்டு, ஒரு படகு (!) போல ஒன்றை செய்து, பல நாட்கள் பயணித்து... ஒரு சரக்கு கப்பல் அவரை காப்பாற்றுகிறது.

தன் நாடு திரும்பினால்... அங்கே அவருக்கு அடுத்த அதிர்ச்சி. உயிருக்கு உயிராய் காதலித்த தன் காதலி இன்னொருவரின் மனைவியாக, ஒரு குழந்தைக்கு தாயாகவும் இருக்கிறார்.

தீவிலும் தனிமை. ஒருவழியாய் தப்பித்து கரை வந்தால்... சுற்றி ஆயிரம் பேர் இருந்தாலும், தனிமை. புதிய நாட்டுக்கு, புதிய வாழ்க்கை தேடி பயணிக்கிறார். படம் முடிகிறது.

ஒரு மேலை நாட்டைச் சேர்ந்த சகல வசதிகளையும் கொண்டு வாழும் ஒரு மனிதன், அந்த தீவில் ஒதுங்கிய பிறகு, பரமபத விளையாட்டில், பாம்பு கொத்தி, துவங்கிய கட்டத்திலேயே தள்ளப்பட்டுவிடுகிறான். மனிதன் துவக்க காலங்களில் எதிர்கொண்ட எல்லா சிரமங்களையும், போராட்டங்களையும் எதிர்கொள்கிறான்.

தீயை மூட்ட எவ்வளவு முயற்சிகள்? அப்படி பல சிரமங்களுக்கு பிறகு, தீயை உருவாக்கிய பின்பு, அவன் ஆடும் சந்தோச ஆட்டம் இருக்கிறதே! அடடா! துவக்கத்தில் ஒரு சின்ன மீனை பிடிக்க கூட திணறும் நாயகன், பிறகு, நாலு ஆண்டுகளில் வேட்டையாட திறன் பெற்றுவிடுகிறான். பச்சையாகவும் தின்கிறான்.

இந்த மண்ணில் ஒரு குழந்தை பிறக்கும் பொழுது, இந்த மொத்த சமூகமும் உற்பத்தியில் ஈடுபட்டு, வசதியாக வாழ தேவையான அனைத்து பொருட்களையும், வசதிகளையும் தருகிறது. ஆனால், இது புரியாமல் சில ஜென்மங்கள் காசு கொடுத்தால், இங்கு எல்லாம் கிடைக்கும்! நான் ஏன் மற்றவர்களை மதிக்க வேண்டும் என பேசுகின்றன! இந்த மாதிரி ஆட்களை அந்த தனித்தீவிற்கு நாமே 6 மாததிற்கு அனுப்பி வைக்கவேண்டும்.

யாருமற்ற தீவில், யாரிடம் பேசுவது? அந்த வெறுமையை நாயகன், அவனோடு கரை ஒதுங்கிய ஒரு பந்தை வில்சன் என நண்பனாக உருவகப்படுத்தி கொள்கிறான். எல்லாவற்றையும் அந்த பந்திடம் விவாதிக்கிறான். கோபித்து கொள்கிறான். எல்லாவற்றையும் அமைதியாக (!) கேட்டுக்கொள்கிறது! இறுதியில் தப்பித்து போகும் பொழுது, நடுக்கடலில் பந்து அவனை விட்டு பிரிந்துவிடுகிறது. ஒரு நல்ல நண்பனை இழந்த ஒருவன் எவ்வளவு கதறுவானோ அந்த அளவுக்கு கதறுகிறான்!

பெருநகரங்களில் பலரும் நிறைய பேசுகிறார்கள். கேட்க பலருக்கு பொறுமை இருப்பதில்லை. தன் பிரச்சனைகளை காதுகொடுத்து கேட்கும் மனிதருக்காக பலரும் ஏங்குகிறார்கள். நாயகனுக்கு கிடைத்த பந்து போல, நானும் பலருக்கும் பயன்பட்டிருக்கிறேன்.

இன்னும் சில மனிதர்கள் இருக்கிறார்கள். எதிரில் உள்ள எல்லோரையும் இந்த பந்து போல நினைத்து கொண்டு, தன் சுய புராணங்களை பேசிக்கொண்டே இருப்பார்கள். இந்த படம் பார்த்ததும் அவர்கள் தான் நினைவுக்கு வந்தார்கள். அவர்களையும் ஒரு 6 மாதத்திற்கு இந்த தீவிற்கு கடத்த வேண்டும்.

டாம் காங்ஸ் (Tom Honks) - நாயகன். இந்த படத்திற்காக ஆஸ்காருக்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். அருமையான நடிப்பு. இவரை ஏற்கனவே Saving private riyan, Forrest Gump - இரண்டு படங்கள் மூலம் அறிந்திருக்கிறேன். நல்ல நடிகர்.

நல்ல படம். பாருங்கள்!

மேலும் சில தகவல்கள்!

தனித்தீவில்...
http://socratesjr2007.blogspot.com/2009/09/cast-away.html