தமிழனைக் கொன்றாலும், ஒடுக்கினாலும் அதுவே தமிழ் தேசியமென்கின்றனர் பாசிட்டுகள். அவை எதுவும் நடவாதது போல், தம்மை மூடிமறைத்துத் கொண்டு சில பாசிட்டுகள் பிரச்சாரம் செய்கின்றனர். இதற்கமைய சிங்களப் பேரினவாதத்தை முன்னிறுத்திய, தன் முனைப்புடன் கூடிய புலிப் பாசிச அரசியலை பாதுகாக்க தம்மை மூடிமறைத்து பிரச்சாரம் செய்கின்றனர்.

இதை செய்வது தமிழ் மக்கள் என்கின்றனர். இதுவே தமிழ் மக்களின் அப்பாவித்தனமான நிலை என்கின்றனர். இதுவோ மூடிமறைக்கப்பட்ட பாசிட்டுகளின் தந்திரமல்ல என்கின்றனர். இவர்களை மறுப்பது மார்க்சியமல்ல என்கின்றனர். இதை அம்பலப்படுத்தி எதிர்வினையாற்றுவது, மார்க்சியத்துக்கே எதிரானது என்கின்றனர். இந்த நிலைக்கு ஏற்ப, நான் (நாங்கள்) உங்களின் வர்க்கப் போராட்டத்துக்கும், அதன் அரசியல் வழிக்கும் தடையாக இருந்தால், அதற்கு வழிவிடத் தயாராகவிருக்கின்றோம். ஈழத்து வர்க்கப் போராட்டத்துக்கு தடையாக, நாங்கள் என்றும் அரசியல் ரீதியாக இருக்கவிரும்பவில்லை. அதை செய்யுங்கள் என்றுதான் கூறுகின்றோம். நாங்கள் ஒதுங்குகின்றோம்.

 

இதை நீங்கள் செய்யும் வரை, நாம் எம் நிலையில் நின்று நாம் போராடுவோம். மூடிமறைக்கப்பட்ட பாசிசத்தை பாதுகாக்க தத்துவ விளங்கங்கள். தமிழ்மக்கள்  தம்மைத்தாம் கொன்றபடி, பாசிச சித்தாந்தத்துடன் கூடி நிற்கின்றனராம். இதற்குள் அரசியல்.

 

பரந்துபட்ட மக்கள், பாசிசத்துக்கு வெளியில் அரசியல் ரீதியாக அனாதரவாக விடப்பட்டுள்ளனர். எம் கேள்வி அந்த மக்களை நோக்கி இயங்குவதா? அல்லது அதை மறுப்பதா? அவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தைப் பற்றியும், அவர்களுக்கு மேலான கொடுமைகள் பற்றியும் ஒரு தலைப்பட்சமாக மூடிமறைப்பதற்கு உதவுவதா மார்க்சியம்!?

 

பேரினவாதத்துக்கு எதிரான புலி யுத்தத்தில், மக்களை புலிகள் ஒடுக்கியும், அவர்களை கொன்றதன் மூலமும், அவர்கள் தனிமைப்பட்டதால் தான் தோற்கடிக்ப்பட்டனர். இதை இப்படிக் கூறுவது, மார்க்சியமல்ல என்கின்றனர். புலியைத் தோற்கடித்தது தமிழ் மக்கள் அல்ல,  சிங்களப் பேரினவாதமும், இந்தியா மற்றும் உலக நாடுகளும் தான் என்ற அரசியல் மார்க்சியமாக எமக்கு முன் வைக்கப்படுகின்றது.  

 

06.02.2009 ( அர்த்ததமற்றுப் போகும் போராட்டங்கள் ) அன்று நாம்  மக்களைச் சார்ந்து நின்று கோரினோம்.


1. இலங்கை அரசே! யுத்தத்தை நிறுத்து!


2. புலிகளே! மக்களை விடுவி!


3. சர்வதேச சமூகமே! மக்களை பொறுப்பெடு!


4. புலிகளே! மக்களை விடுவியுங்கள்! நீங்கள் உங்கள் வழியில் போராடி மீளுங்கள்!

 

இப்படி கோருவதெல்லம் இயங்கியலற்ற மார்க்சியமல்ல என்கின்றனர். எதுதான் எம்மைச் சுற்றிய மார்க்சியம்! 
 
எதார்த்தம் சார்ந்த உண்மைகள் மக்களுக்கு எதிரானதாக இருக்க, இல்லையில்லை மக்கள் புலியுடன் நிற்பதாக கூறுகின்றனர். அப்படி பார்ப்பதுதான் மார்க்சியம் என்கின்றனர். இப்படி பாசிசத்துக்கு எதிரான, அரசியல் திரிபுகளை நாங்கள் பார்க்கின்றோம். மக்கள் வேறு புலிகள் வேறு என்ற உண்மையை மறுத்து, இரண்டும் ஒன்று என்று கூறி ஒரு வண்டியில் அதைக் கட்டுகின்றனர்.

 

இதை மறுப்பதும், வண்டியில் ஏறி அமர மறுப்பதும் மார்க்சியமல்ல என்கின்றனர். இது மக்களுக்கு எதிரானது என்கின்றனர். இப்படி பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தை கொச்சைப்படுத்தி திரித்து திணிக்கும் புதிய அரசியல் போக்குகள், எம்மைச் சுற்றி தத்துவ விரசல்;களுடன் எழுகின்றது.

 

மண்ணில் வாழும் பரந்துபட்ட மக்கள், பாசிசத்தின் கொடூரத்தை வாழ்வியலாக அனுபவித்தவர்கள். அதை வாழ்வியலாக கொள்ளாத புலத்து மக்களுக்கு, அந்த பாசிசக் கொடுமையை உணரத் தூண்டியவர்கள். இதை விட, எமக்கு கற்றுக் கொடுக்கும் அரசியல் கல்வி எதுவும் கிடையாது. இதை கற்றுகொள்ளாமல், அதை தெரிந்து கொள்ளாமல்  இருப்பதாக பாசாங்கு செய்து நடிப்பவர்கள், மக்களுக்கு எதிராக இதைச் செய்ய உதவியவர்கள் தான். அந்த அரசியலின் பின் நிற்பவர்கள்;. அதற்காகவே மனித வரலாற்றை திரிப்பவர்கள்.

   

என்றும் மக்களுடன் நிற்க மறுக்கின்ற, மக்களுக்காக போராட மறுக்கின்ற, மக்கள் விரோதிகள் தான். தமிழ் மக்களை போராட்டத்தின் பெயரில் கொன்றதை, பாசிட் அல்லாத ஒருவன் ஏற்றுக் கொள்ளமாட்டான். பாசிட் அல்லாத ஒருவன் இதை மூடிமறைக்க மாட்டான். இன்று எல்லாத் தமிழ் மக்களுக்கும் தெரிந்த உண்மை. சிலருக்கு மட்டும் இது தெரியாமல் போகின்றது. அவர்கள் யார்? மக்களின் நண்பனா? எதிரியா?

 

பரந்துபட்ட தமிழ் மக்கள் தமக்கு நடந்ததை தம் பாசிச சிந்தனையுடன் ஏற்றுக்கொண்டு அதை நியாயப்படுத்தி, அவர்களே பாசிச சிந்தனையுடன் வாழ்வதாக இட்டுக்கட்ட முனைகின்றனர். இதை ஏற்க மறுப்பது மார்க்சியமல்ல என்கின்றனர். நாங்கள் மையமாக வைத்த கோசம், மக்கள் தான் புலிகளை தோற்கடித்தனர் என்பதாகும். அதனூடே தான் பேரினவாதம் வெற்றிகொண்டது. 

 

எம் மக்களுக்கு போராட்டத்தின் பெயரில் நடந்த கொடுமைகளையும், கொடூரங்களையும் மூடிமறைத்து நிற்கும் எவனும் அல்லது எவளும், மக்களுடன் நிற்பவர்களல்ல. பரந்துபட்ட மக்களில் ஒருவரல்ல இவர்கள். யாரெல்லாம் போராட்டத்தின் பெயரில் கொடுமைக்கு உள்ளாகிய மக்களுடன் சேர்ந்து நிற்கவில்லையோ, அவர்களுக்காக யார் குரல் கொடுக்கவில்லையோ, அவர்கள் பாசிசத்துக்கு நேரடியாக அல்லது மறைமுகமாக உதவி செய்கின்றனர்.  

  

மக்களுக்கு வெளியில் எந்த உண்மையும் கிடையாது. எனக்கு தனிப்பட்ட பாதிப்பில்லை என்ற பெரும்பான்மையின் உணர்வு, தனிப்பட்ட பாதிப்பை என்றும் மறுப்பதில்லை. தனிப்பட்ட பாதிப்பை பெரும்பான்மை தன் உணர்வாக மாற்றுகின்ற சூழல் என்பது, பாதிப்பை உருவாக்கிய சூழலுக்கு எதிரான மனித உணர்வில் தங்கியுள்ளது.

 

மக்கள் தம் மீதான போராட்டம் சார்ந்த கொடுமையை, தாமாகவே தாம் தமிழன் என்பதால் நியாயப்படுத்துவதாக எமது கற்பனையில் நின்று கூறுவதுதான் மார்க்சியமாம். இப்படி இதை நியாயப்படுத்துவதையும், அதை மூடிமறைப்பதையும், இதற்கு உடந்தையாக இருப்பதையும் நாம் பாசிசமாக பார்க்கக் கூடாது. இப்படி பார்த்தால் அது மார்க்சியமல்ல என்கின்றனர்.

 

இது மார்க்சியமல்ல என்றால், ஈழத்து பாசிசம் எங்கே எப்படி எந்த வடிவில் உள்ளது? ஒடுக்குவது மட்டும்தான் பாசிசமா? ஓடுக்குவதற்கு ஏற்ற தத்துவ விளக்கம் கொடுத்து, அதை மூடிமறைத்து நிற்பது பாசிசமல்ல என்ற அர்த்தமா!? நேரடி ஒடுக்குமுறையில் ஈடுபடாத அன்ரன் பாலசிங்கம், பாசிட்டா இல்லையா என்ற கேள்வி இன்று தொங்கிவிடுகின்றது. இதுவல்ல பாசிசம் என்றால், ஈழத்தில் என்றும் பாசிசம் இருந்ததில்லை என்றாகிவிடும். இப்படி மார்க்சியம், வர்க்கப் போராட்டம் நடக்குமானால், நாங்கள் அதற்கு வழிவிடத் தயாராக உள்ளோம். 

 

பி.இரயாகரன்
10.09.2009