மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நடக்கிறது. “சூரிய நமஸ்காரம்” என்ற யோக முறையை பள்ளிகளில் கற்பிக்க கடந்த ஆண்டு உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. “சூரிய நமஸ்காரத்தை பள்ளியில் கட்டாயமாக்கக்கூடாது’ என கோர்ட் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பள்ளிகளில் மதிய உணவுக்கு சாப்பிடுவதற்கு முன், போஜன மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்ற நடைமுறை, அடுத்த மாதம் 5ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. “இது, மதச் சுதந்திரத்துக்கு எதிரானது’ என முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இந்த எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், ஆசிரியர்களை “ராஷ்ட்ர ரிஷி’ என்றழைக்க வேண்டும் என்ற புதிய உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 13ம் தேதி முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வருகிறது.

மாநில கல்வி அமைச்சர் அர்ச்சனாவின் இந்த உத்தரவுக்கு, ஆர்ச் பிஷப் லியோ கார்னிலியோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அகில இந்திய முஸ்லிம் தியோகர் கமிட்டி தலைவர் அசப் ஷமீரி குர்ரம் குறிப்பிடுகையில், “ஆசிரியர்களை ராஷ்ட்ர ரிஷி என அழைக்கப்படுவதற்கு பதிலாக, “ராஷ்ட்ர மவுல்வி’ என ஏன் அழைக்கக்கூடாது’ என்று கேள்வி எழுப்பியுள்ளார் (02/09/2009).