தமிழ்ப்பாசிசம் தன்னை மூடிமறைத்து எப்படி எந்த வேஷத்தில் தமிழ்மக்களை ஏமாற்றி பிரச்சாரம் செய்ததோ, அதே உள்ளடக்கதில் இந்திய பொதுவுடமைவாதிகளை ஏமாற்றுகின்றது.  இதற்காக தன்னை மூடிமறைத்துக்கொண்டு; களமிறங்குகின்றது. பாசிசம் எப்போதும் வெளிப்படையாக தன்னை பிரச்சாரம் செய்வது கிடையாது. அது தன்னை மூடிமறைக்கின்றது.

மக்களின் பொதுவான அவலத்தை, தன் சொந்த அவலமாக காட்டியே பிரச்சாரம் செய்கின்றது. தமிழ் பாசிசமாகட்டும், இந்துத்துவ அடிப்படைவாத பாசிசமாகட்டும், முஸ்லீம் அடிப்படைவாத பாசிசமாகட்டும்…, சமூகத்தின் பொதுவான பாதிப்புக்களையும், துயரங்களையும், மனித அவலங்களையும் முன்வைத்துத்தான் பாசிசம் பாசாங்காக செயற்படுகின்றது.

 

இந்து அடிப்படைவாதத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லீம், தன் அடிப்படைவாதத்தை மூடிமறைத்துக் கொண்டு அதற்கு அனுதாபம் தெரிவித்துக் கொண்டும், இதுபோல் முஸ்லீம் அடிப்படைவாதத்தால் பாதிக்கப்பட்ட இந்து, தன் அடிப்படைவாதத்தை மூடிமறைத்துக்கொண்டு அதற்கு அனுதாபம் தெரிவித்துக் கொண்டும், பொதுவுடமை தளத்தில் பிரச்சாரம் செய்யலாம் என்பது வினவின் பொதுவுடமை அரசியல் நிலைப்பாடாக மாறி நிற்கின்றது. இந்த அடிப்படையில்தான் (புலிப்) தமிழ் பாசிசம் தன்னை மூடிமறைத்துக்கொண்டு, வினவில் புகுந்து நிற்கின்றது.

 

நாங்கள் இந்து அல்லது முஸ்லீம் அடிப்படைவாத பாசிசத்தை, பொதுவான அவர்களின் துயரத்தின் ஊடாக, எம்தளத்தில் இந்திய பொதுவுடமைக்கு எதிராக பிரச்சாரம் செய்ய அனுமதிக்கலாம் என்பதே வினவின் நிலைப்பாடு. இந்து அல்லது முஸ்லீம் அடிப்படைவாதத்துக்கு நேரடியாக பிரச்சாரம் செய்யாவிட்டால் சரி. மறைமுகமாகச் செய்யலாம் என்பதற்கு இது ஒத்தது.

 

ஈழத்தின் பொதுவுடமைக்காக வினவு பிரசாரத்தை செய்யாமல், இதற்கல்லாத, ஒரு வர்க்கமற்ற, தமிழ் மக்களைச் சாராத, தனிமனித (புலி) வக்கிரத்தை பிரச்சாரம் செய்ய வினவு தளம் உதவிவருகின்றது.

 

தமிழ்மக்களின் பொது அவலத்தை புலியிசம் தனக்கு ஏற்ப, தன் வர்க்கத்துக்கு ஏற்ப  பயன்படுத்தும் என்ற அரசியல் உண்மையை, இந்த நடத்தை மூலம் வினவு நிராகரிக்கின்றது. இந்த அடிப்படையில் எதிர் விமர்சனமின்றி, அதை நுணுகிப் பார்க்கத்தவறி, தமிழ் பாசிசத்தை தமிழ்மக்கள் அவலத்தினூடு, பொதுவுடமை ஊடாக பிரச்சாரம் செய்ய வினவுதளம் உதவுகின்றது. வர்க்கங்கள் உள்ள சமூகத்தில், தமிழ்மக்களின் பொதுவான துயரங்களை எந்த வர்க்கம், எப்படி தனக்கு இசைவாக பயன்படுத்தும் என்ற அடிப்படையான அரசியல் வேறுபாட்டை கூட இங்கு கைக்கொள்ளாது, தமிழ் பாசிசத்தை ஒடுக்கப்பட்ட தமிழ் தேசியத்தின் குரலாக பொதுவுடமை பிரச்சாரத்தில் வினவு அனுமதித்துள்ளது. ஒரு புலிப் பாசிட்டை "தோழர்" என்று கூறி, எம் தோழர்களின் (சர்வதேசியத்தில் அவர்கள் தோழர்கள் கூட) பல ஆயிரம் பேரின் கழுத்தை அறுத்த பாசிச கும்பலுக்கு "தோழர்" அந்தஸ்து கொடுத்து, பொதுவுடைமை தளத்தில் கம்பளம் விரித்து பிரச்சாரம் செய்ய அனுமதித்துள்ளது. "தோழர்" என்ற அரசியல் பதத்தை எழுந்தமானமாக கையாள்வது, அரசியல் ரீதியாக மன்னிக்க முடியாது. தோழர் மருதையனையும், தோழர் என்று புலியை ஆதரிப்பதாக கூறும் ஒருவரையும், ஒரே விழிச்சொல் ஊடாக "தோழராக" ஒன்றுபடுத்தி விடுவது, தோழமையின் மேலான கேள்வியாகிவிடுகின்றது.   

       
      
ஈழத்து பொதுவுடமை தன் வர்க்க எதிரியில் ஒன்றை, இந்திய பொதுவுடமைக்கு சார்பான வினவுத் தளத்தின் ஊடாக எதிர்கொள்ளும் துயரம் எம்முன். நாம் சந்திக்கும் கடும் உழைப்பு, கடும் பளுவுக்குள், சர்வதேசியத்தின் அரசியல் அடிப்படையை தகர்த்துவிடும் எல்லைக்குள் இவர்கள் நகர்த்துகின்றனர். மனிதன் தான் சந்தித்த பாதிப்புகளை எந்த வர்க்கமுமற்றதாக காட்டி, ஈழத்துப் பாசிட்டுகளின் பிரச்சாரத்தை எமது பொதுவுடமை பிரச்சாரத்துக்கு எதிராக முன்னிறுத்தியுள்ளனர்.

 

நாங்கள் இதற்கு முரணாக, முரண்பட்ட விதத்தில் பிரச்சாரம் செய்கின்றோம். வரலாறும், அனுபவமும், துயரங்களும் வர்க்கம் சார்ந்தது. வெறும் சிங்கள பேரினவாதத்தை முன்னிறுத்தி, அனைத்தையும் வர்க்கமற்றதாக, முற்போக்கானதாக காட்டுவது அரசியல் அபத்தம்.  தமிழினம் சிங்கள பேரினவாதத்தால் தனித்து இந்த நிலையையடையவில்லை. தமிழ் பாசிசத்தினால் தான், கேவவமான இழிவான இந்த நிலையை அடைந்;தது. இதுவின்றி எதையும் பேச முடியாது. அத்துடன் பேசப்படும் மனித துயரங்கள், தமிழ் பாசிசத்தினால் உசுப்பேற்றப்பட்டு  உற்பத்தி செய்யப்பட்டது. உதாரணமாக மக்களை பணயம் வைத்து, (மக்கள் மத்தியிலிருந்து தாக்குதல் தொடுத்து மக்கள் பலியாகி விழும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட தாக்குதல் இன்றல்ல என்றோ ஆரம்பத்திலிருந்தே அவர்களது உத்தியாகவிருந்தது) அவர்களை பலிகொடுத்து, பலியை மனித அவலமாக காட்டிப் பிரச்சாரம் செய்தது தான் தமிழ் பாசிசம். இதைத்தான் காலாகாலமாக தமிழ்ப்பாசிசம் செய்தது. அந்த பக்கத்தில் சிலவற்றை, வினவு தளத்தில் வர்க்கமற்ற தமிழனின் துயரமாக காட்டி, தமிழ் பாசிசம் இந்திய பொதுவுடமைக்கு வகுப்பு எடுக்க முனைகின்றது.

 

தன்னால், தன் அரசியல் நடத்தையால் பாதிக்கப்பட்ட மக்களையும் வரலாற்றையும், பொதுவுடமை ஊடாக மூடிமறைக்க முனைகின்றது. தன் பாசிச வரலாற்றை மூடிமறைத்து,  பேரினவாத வரலாறாக மட்டும் திரிக்கின்றது. மனித துயரத்தை உற்பத்தி செய்த, தமிழ் பாசிச அரசியலை திட்டமிட்டு மறைக்கின்றது.

 

ஒடுக்குமுறையின் பொது அதிகாரத்தை தமிழ் என்ற ஒருமையில், ஒற்றை வரலாறாக காட்ட முனைகின்றது. இதை பொதுவான மனித துயரத்தின் மூலம், பொதுவுடமை தளத்தில் பாசிசம் பாய்விரித்து நிற்கின்றது. இதை எதிர்வினை செய்து முறியடிக்கும் வகையில், தமிழ் பாசிச வரலாற்றுக் கல்வியை இந்தியப் பொதுவுடமை இழந்து நிற்கின்றது. இது ஈழத்து பாட்டாளி வர்க்கம் சந்திக்கும், புதிய அரசியல் நெருக்கடிதான்.

 

தொடரும்
23.08.2009