திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட 2 வது வார்டில் அமைந்துள்ள கல்லங்காட்டு வலசு என்ற பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் சுமார் 120க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் பெரும்பான்மையான மக்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதும், இவர்களுக்கு மலம் கழிப்பதற்குப் பொதுக் கழிப்பிடம் கூட இல்லாததும் அவலத்தின் உச்சக்கட்டம்; பெண்களுக்கோ பெரும் திண்டாட்டம்.

கடந்த 10 ஆண்டுகளாகவே பொதுக் கழிப்பிட வசதி கோரி இப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகம், ஆணையர் முதல் அனைத்து ஓட்டுக் கட்சி தலைவர்களுக்கும் மனு கொடுத்தும் மன்றாடியும் இன்றுவரை எந்த பயனுமில்லை. இப்பகுதி மக்களின் வரிப்பணத்தில் வயிறு வளர்க்கும் நகராட்சி நிர்வாகமோ, ஆதிக்கசாதி வெறியுடன் வாயில் "மலத்தை' கக்குகிறது!


இந்தப் பிரச்சினை, திருப்பூர் பகுதியில் செயல்படும் பு.ஜ.தொ.மு. கவனத்திற்கு வந்ததும் மக்களை அதிரட்டி, தனியார்மய தாராளமய உலகமய கொள்கையின் நேரடி விளைவு இது; சேவைத்துறைகளை இலாபம் ஈட்டும் தொழிலாக தனியாரிடம் ஒப்படைக்கும் சதியின் ஓர் அங்கம்தான் இது — என்பதை தெளிவுபடுத்தி பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டது.

 

கடந்த நாடாளுமன்ற தேர்தலை இம்மக்கள் புறக்கணித்தனர். அதனைத் தொடர்ந்து, "ஆட்சியாளர்களின் பொய் வாக்குறுதிகளை நம்புவதில் பயனில்லை, சாதாரண அடிப்படைத் தேவையான கழிப்பிட வசதி கூட பெற முடியாதபோது "கண்ணியமான போராட்டங்கள்' நடத்திக் கொண்டிருக்க முடியாது. நமது வேதனைகள் நகராட்சி நிர்வாகத்திற்குப் புரியும்படி வெள்ளக்கோயில் நகராட்சி அலுவலகத்தை "பீ' காடாக்குவோம்! இதுவொன்றே எருமைத் தோல் அதிகார வர்க்கத்தைப் பணிய வைக்கும்!'' என்ற அறைகூவலோடு, கடந்த 14.7.09 அன்று வெள்ளக்கோயில், புதிய பேருந்து நிலையம் எதிரில் மக்களை அணிதிரட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தை இவ்வமைப்பினர் நடத்தியுள்ளனர்.

 

கடந்த 10 வருடங்களாக மனுகொடுத்தும், போராடியும் எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில், புரட்சிகர அமைப்புகளின் வழிகாட்டலில் தேர்தல் புறக்கணிப்பும் அதனைத் தொடர்ந்து நடந்த இந்த ஆர்ப்பாட்டமும் இப்பகுதி மக்களிடம் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது. வெள்ளக்கோயில் நகராட்சி நிர்வாகமோ, பொதுமக்களின் போராட்ட நாள் என்று வருமோ என்ற "பீ'தியில் உறைந்து போயுள்ளது!

 

— பு.ஜ.செய்தியாளர், வெள்ளக்கோயில்.