கூரைக் கட்டிடம்கூட இல்லாமல் மரத்தடியில் இயங்கும் அரசு பள்ளிக்கூடங்களைக் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்படிப்பட்ட பரிதாபமான நிலையில் ஒரு பல்கலைக்கழகம், அதுவும் ஒரு தனியார் பல்கலைக்கழகம் இயங்கி வருவதை உங்களால் நம்ப முடியுமா?

நம்ப மறுப்பவர்கள், தயவுசெய்து, தமிழகத் தலைநகர் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் மீனாட்சி பல்கலைக்கழகத்தை வந்து பாருங்கள்.

 

இப்பல்கலைக்கழகம் நடத்தும் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்தபொழுது, "பல்கலைக்கழக கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படும் வரையில், சென்னைப் புறநகர்ப் பகுத யில் உள்ள சிறீமுத்துக்குமரன் பொறியியில் கல்லூரியைச் சேர்ந்த கட்டிடங்களையும் ஆய்வுக் கூடங்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' என இப்பல்கலைக்கழக நிர்வாகிகள் அன்புக் கட்டளை போட்டார்களாம். பணத்தைக் கட்டிச் சேர்ந்த பிறகு வந்து பார்த்தால், "இப்பல்கலைக்கழகத்திற்கென்று தனி வளாகம் எதுவும் கிடையாது; கட்டிடம் மட்டுமின்றி, இப்பொறியியல் கல்லூரிக்கு அங்கீகாரமே கிடையாது'' எனப் புலம்புகிறார், இப்பல்கலைக்கழகத்தை நம்பி மோசம் போன ஒரு மாணவர். பல்கலைக்கழக மானியக் குழு, மீனாட்சி பல்கலைக் கழகத்தை அங்கீகரித்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

பல்கலைக்கழக மானியக் குழுவின் இணைய தளத்தில், காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூரில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரியும், மீனாட்சி செவிலியர் கல்லூரியும் மட்டுமே மீனாட்சி பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் உள்ளன. ஆனால், மீனாட்சி பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் பொறியியல் கல்லூரியையும் சேர்த்து மூன்று கல்லூரிகள் இப்பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் உலா வருகின்றன. பல்கலைக்கழக மானியக் குழுவின் தென் கிழக்கு வட்டார அலுவலகத்தின் இணைச் செயலர் ஜி.சீனிவாஸ், "அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலின் (ஏ.ஐ.சி.டி.இ.) ஒப்புதல் இன்றி நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் பொறியியல் கல்லூரிகளை நடத்தக் கூடாது'' எனக் கூறுகிறார். ஆனால், மீனாட்சிப் பல்கலைக்கழகமோ தங்களின் பொறியியல் கல்லூரிக்கு யாருடைய ஒப்புதலும் தேவையில்லை என்பது போல காட்டிக் கொண்டு, இந்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை மும்முரமாக நடத்திக் கொண்டிருக்கிறது. இப்பல்கலைக்கழகம் நடத்திவரும் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்து வரும் மாணவர்களோ தங்களுக்குப் பல்கலைக்கழகத் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பதுகூடத் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

மீனாட்சிப் பல்கலைக்கழகம் எவ்வித அங்கீகாரமும் இன்றி பொறியியல் கல்லூரியொன்றை நடத்தி வருகிறது என்பதுதான் உண்மை. இம்மோசடிக்காக அப்பல்கலைக்கழக உரிமையாளர் களைத் தமிழக அரசு கைது செய்திருக்க வேண்டும். அப்பல்கலைக்கழத்தின் அங்கீகாரத்தைப் பல்கலைக்கழக மானியக் குழு ரத்து செய்திருக்க வேண்டும். ஆனால், இதற்கு மாறாக, தங்களுக்கு நியாயம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய அப்பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி மாணவர்கள்தான் போலீசாரால் அடித்துத் துரத்தப்பட்டனர்.

 

நாடெங்கிலும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களைக் கண்காணிக்க, அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.), இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.), பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) உள்ளிட்ட 51 அரசு நிறுவனங்கள் உள்ளன. அறுக்க மாட்டாதவன் கையில் ஆயிரம் கருக்கறுவாள் என்பது போல, இவ்வமைப்புகள் மீனாட்சி பல்கலைக்கழகத்தின் மோசடியை வேடிக்கைதான் பார்க்கின்றன. இது மட்டுமின்றி, உயர்கல்வி தொடர்பான அரசின் கொள்கை மற்றும் சட்ட திட்டங்கள் அனைத்தும் இது போன்ற மோசடியை, கல்விக் கொள்ளையை ஊக்குவிப்பதாகத்தான் உள்ளன. குறிப்பாக, கடந்த பத்தாண்டுகளில் பல்கலைக்கழக மானியக் குழுவும், மைய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையும் தனியார் கல்வி நிறுவனங்களுக்குப் பல்கலைக்கழகத் தகுதி வழங்கிய வேகத்தைப் பார்த்தாலே, மைய அரசின் கல்விக் கொள்கை பெரும்பாலான இந்திய மாணவர்களின் நலனுக்கு எதிராக இருப்பதைப் புரிந்து கொள்ளலாம்.

···

நமது நாட்டில் மூன்று வகையான பல்கலைக்கழகங்கள் இயங்கிவருகின்றன. மைய அரசும், மாநில அரசுகளும் நடத்தி வரும் பொதுப் பல்கலைக்கழகங்கள் ஒருவகை. மாநில அரசு தனியாக ஒரு சட்டம்போட்டு, தனியார் உயர் கல்வி நிறுவனத்தைப் பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கும் அரசு தனியார் பல்கலைக்கழகங்கள் இரண்டாவது வகை. பல்கலைக்கழக மானியக் குழுவும், மைய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையும் இணைந்து உயர் கல்வி நிறுவனங்களைப் பல்கலைக்கழகமாக அங்கீகரிப்பது மூன்றாவது வகை. (இப்பல்கலைக்கழகங்கள் முன்பு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் என அழைக்கப்பட்டு வந்தன.)

 

அரசோ, தனியாரோ நடத்தும் உயர் கல்வி நிறுவனங்களை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக அங்கீகரிக்கும் நடைமுறை 1956ஆம் ஆண்டிலிருந்தே இருந்து வருகிறது. 1956க்கும் 1995க்கும் இடைப்பட்ட காலத்தில் நாடெங்கிலும் 36 உயர் கல்வி நிறுவனங்கள் தான் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் என்ற தகுதியைப் பெற்றிருந்தன. இந்த 36 கல்வி நிறுவனங்களில் ஒன்றேஒன்றுதான் தனியார் கல்வி நிறுவனம். 1995க்கும் 2009க்கும் இடைப்பட்ட காலத்தில் மேலும் 91 உயர்கல்வி நிறுவ னங்கள் நிகர்நிலைப் பல்கலைக்கழங்களாக அங்கீகரிக்கப் பட்டன. இந்த 91இல், 85 உயர் கல்வி நிறுவனங்கள் தனியா ருக்குச் சொந்தமானவை.

 

கல்வியில் தனியாரின் ஆதிக்கம் அதிகரித்து வருவதற்கு இணையாக, தனியார் கல்வி நிறுவனங்கள்பல்கலைக்கழகங் களாக உருமாறும் வேகமும் அதிகரித்து வருவதை இப்புள்ளி விவரங்கள் மூலம் புரிந்து கொள்ள முடியும். குறிப்பாக, கடந்த பத்தாண்டுகளில், பா.ஜ.க. கூட்டணி ஆட்சியிலும் அதற்குப் பின்வந்த காங்கிரசு கூட்டணி ஆட்சியிலும் தனியார் உயர் கல்வி நிறுவனங்களைப் பல்கலைக்கழகங்களாக அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காகவே பல்வேறு சட்ட சீர்திருத்தங்களும் சமரசங்களும் செய்து கொள்ளப்பட்டன.

 

பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில், அக்கட்சியின் மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷி மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தபொழுது, உயர் கல்வி நிறுவனங்களுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தகுதி வழங்குவதற்குப் புதிய நடைமுறையை உருவாக்கினார். இப்புதிய நடைமுறையின்படி, நிகர்நிலைப் பல்கலைக் கழகத் தகுதி கோரும் உயர்கல்வி நிறுவ னம் ஆராய்ச்சித் துறையில், பல்கலைக்கழகத்துக்கு இணையாகச் சாதனைகள் புரிந்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லாமல் போனது. மாறாக, நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்படும் உயர்கல்வி நிறுவனத்திற்கு ஐந்து ஆண்டுகள் கால அவகாசம் கொடுக்கப்படும். இந்தக் கால அவகாசத்தின் பொழுது, பல்கலைக்கழக மானியக் குழு ஒவ்வொரு ஆண்டும் அக்கல்வி நிறுவனத்தின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து அதன் தகுதியை உறுதி செய்யும் என முடிவு செய்யப்பட்டது.

 

ஜோஷியின் இப்புதிய விதிகள், "படுத்துக்கிட்டு போர்த்திக்கிட்டாலென்ன, போர்த்திக்கிட்டு படுத்துக்கிட்டாலென்ன?'' என்ற அளவிற்கு, உயர்கல்வித் துறையை மலினமாக்கியது. "தகவல் தொழில் நுட்பம், உயிரி தொழில்நுட்பம் போன்ற துறைகள் இப்பொழுதுதான் உருவாகி வருவதால், நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தகுதி வழங்குவதற்கு ஆராய்ச்சி சாதனைகளை முதன்மைபடுத்தக் கூடாது'' என இந்த மலினப்படுத்தலுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. 2000ஆம் ஆண்டில் விதிகள் தளர்த்தப்பட்ட பிறகு, கடந்த எட்டு ஆண்டுகளில் 67 உயர் கல்வி நிறுவனங்கள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக அங்கீகரிக்கப்பட்டன. அதிலொன்றுதான், கட்டிடங்கள் கூட இல்லாமல் நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தகுதியைப் பெற்றுள்ள மீனாட்சி பல்கலைக்கழகம்.

···

 தனியார் கல்வி வியாபாரிகளுக்குச் சலுகை அளிப்பதில் ஜோஷி கோடு போட்டார் என்றால், அவருக்குப் பின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரான அர்ஜூன் சிங் ரோடே போட்டார். காங்கிரசு கூட்டணி ஆட்சியில், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் பற்றிய பிரச்சினையை ஆராய கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. இக்கமிட்டி, பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட புதிய நடைமுறையில் எவ்வித மாற்றங்களும் செய்ய மறுத்ததோடு, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் இனி தங்களைப் பல்கலைக்கழகங்கள் என்றே அறிவித்துக் கொள்ளலாம் என ஒரே போடாக போட்டது. இதன் மூலம், புகழ் பெற்ற சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கும், கட்டிடமே இல்லாத சென்னை மீனாட்சி பல்கலைக்கழகத்திற்கும் இடையே எந்தவொரு வேறுபாடும் கிடையாது என்ற தோற்றம் பாமர மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் உருவாக்கப்பட்டது.

 

பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்த உத்தரவை எதிர்த்து, கபில் குமார் என்ற சமூக நல ஆர்வலரால் தில்லி உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளது. செப்.2006 இல் அறிவிக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழுவின் நிர்வாக உத்தரவுக்கு எதிரான இப் பொதுநல வழக்கு, ஜூலை 2009இல் தான் விசாரணைக்கே வருகிறது. இந்த மெத்தனப் போக்கிற்கு நீதிமான்களைக் குற்றம் சொன்னால், நம்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பாய்ந்து விடும் அபாயமுண்டு!

 

···

 

நவம்பர் 2004க்கும் ஏப்ரல் 2005 க்கும் இடையே நாடெங்கிலும் இருந்து 230 உயர்கல்வி நிறுவனங்கள், தங்களுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகம் தகுதி வழங்கக் கோரி பல்கலைக்கழக மானியக் குழுவிடம் விண்ணப்பித்தன. இவ்விண்ணப்பங்களை வடிகட்ட 12 பேர் கொண்ட கமிட்டியொன்றை அமைத்தது, பல்கலைக்கழக மானியக் குழு. விண்ணப்பித்த 230 உயர்கல்வி நிறுவனங்களுள், வெறும் 10 நிறுவனங்களுக்குத்தான் நிகர்நிலைப் பல்கலைக்கழக் தகுதியினைப் பெறும் கட்டமைப்பு வசதிகள் இருப்பதாக இக்குழு முடிவு செய்தது. விதிகள் தளர்த்தப்பட்ட நிலையில் கூட, 220 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருக்கிறது என்றால், அந்த "உயர் கல்வி' நிறுவனங்கள் எந்த இலட்சணத்தில் இயங்கி வந்திருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

 

இந்த 12 பேர் கொண்ட வடிகட்டும் கமிட்டி எடுத்த முடிவு, மனித வள மேம்பாட்டுத் துறைக்கு ஏமாற்றம் அளித்ததால், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை மீண்டும் ஆய்வு செய்வதற்காக, மற்றொரு கமிட்டியை அமைத்தது, மனிதவள மேம்பாட்டுத் துறை. இந்தக் கமிட்டியின் முடிவும் அதிகாரிகளுக்கு மகிழ்ச்சியை அளிக்காததால், அந்த இரு கமிட்டிகளும் முடக்கப்பட்டதோடு, நிகர்நிலைப் பல்கலைக்கழகம் தகுதியினைக் கோரும் உயர்கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்வதற்குப் புதியதொரு ஏற்பாட்டினை உருவாக்கியது, பல்கலைக்கழக மானியக் குழு.

 

 "பல்கலைக்கழக மானியக் குழு அமைக்கும் ஆய்வுக்குழு, நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தகுதி கோரும் உயர்கல்வி நிறுவனத்திற்கு நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தி, அறிக்கையொன்றை பல்கலைக்கழக மானியக் குழுவிடம் சமர்ப்பிக்கும். இந்த அறிக்கை சாதகமாக இருப்பின் நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தகுதியினை வழங்கலாம் என மனிதவள மேம்பாட்டுத்துறைக்குப் பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைக்கும். இப் பரிந்துரையின்படி, மனிதவள மேம்பாட்டுத்துறை உத்தரவிடும்'' என்ற இந்தப் புதிய ஏற்பாட்டின்கீழ், ஏற்கெனவே நிராகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களுள் பெரும்பாலானவை நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களாக அங்கீகரிக்கப்பட்டன. "சூட்கேஸின் எடைக்குத் தகுந்தவாறு தகுதி தீர்மானிக்கப்பட்டதாக'' கல்வி வியாபாரிகளே நக்கல் அடிக்கும் அளவிற்கு, இந்த ஆய்வு கேவலமாக நடந்தது.

 

உதாரணத்திற்குச் சொன்னால், உ.பி. மாநிலம் காஜியாபாத்தில் இயங்கி வந்த சந்தோஷ் சர்வதேச மருத்துவக் கழகத்தை மருத்துவக் கல்வி நிறுவனமாக அங்கீகரிக்க இந்திய மருத்துவ கவுன்சில் மறுத்துவிட்டது. எனினும், இக்கல்வி நிறுவனம் தனது பெயரை மாற்றிக் கொண்டு, தன்னை நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கக் கோரி, பல்கலைக்கழக மானியக் குழுவிடம் விண்ணப்பித்தது. இக்கல்வி நிறுனத்திற்கு நேரடியாகச் சென்று ஆய்வு நடத்திய குழு, சில குறைபாடுகளைக் களைந்துவிட்டால், நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கலாம் எனப் பரிந்துரை செய்தது. ஆய்வு முடிந்த சில நாட்களிலேயே பல்கலைக்கழக மானியக் குழு குறிப்பிட்ட குறைபாடுகளைக் களைந்துவிட்டதாக அக்கல்வி நிறுவனம் பதில் அளித்தது.

 

இப்பதிலில் ஏதோ "மர்மம்' இருப்பதாகச் சந்தேகப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினர் பி.என். டான்டன், இக்கல்வி நிறுவனத்திற்குப் பல்கலைக்கழகத் தகுதி வழங்குவதை எதிர்த்தார். இதனால், அக்கல்வி நிறுவனத்திற்கு மற்றொரு ஆய்வுக் குழு அனுப்பப்பட்டது. அக்குழுவும் சாதகமான அறிக்கையைத் தரவே, அக்கல்வி நிறுவனத்திற்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தகுதி வழங்கப்பட்டது. இத்தகுதி வழங்கப்பட்ட சில நாட்களிலேயே அக்கல்வி நிறுவனத்தை இரகசியமாகப் படமெடுத்த ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம், அது ஒரு "டப்பா'' பல்கலைக்கழகம் என அம்பலப்படுத்தியது. பி.என். டான்டன் நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தகுதியை நீக்க வேண்டும் எனக் கோரியதை, பல்கலைக்கழக மானியக் குழுவின் மற்ற உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டதால், இப்பொழுது அக்கல்வி நிறுவனம் சந்தோஷ் பல்கலைக்கழகம் என்ற பெயரில் அமோகமாக கல்லா கட்டி வருகிறது.

 

···

 

தனியார் பல்கலைக்கழகங்கள் புற்றீசல்களாய்ப் பெருகி, உயர் கல்வித் துறையை ஆக்கிரமித்து வருவதில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. நாடெங்கிலும் உள்ள 86 தனியார் பல்கலைக்கழகங்களுள் 29 பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில்தான் உள்ளன; தமிழகத்தைச் சேர்ந்த 39 உயர்கல்வி நிறுவனங்கள், தங்களைப் பல்கலைக்கழகங்களாக அங்கீகரிக்கக் கோரி விண்ணப்பித்துள்ளன. தமிழகத்தையடுத்து, மகாராஷ்டிராவில் 21 தனியார் பல்கலைக்கழகங்களும் கர்நாடகா மாநிலத்தில் 15 தனியார் பல்கலைக்கழகங்களும், இயங்கி வருகின்றன.

 

 தற்பொழுது தமிழகத்தில் பல்கலைக்கழகம் என்ற தகுதியோடு கடைவிரித்துவரும், தி.க.வீரமணியின் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி; சென்னைக்கு அருகில் பாடூரில் அமைந்துள்ள இந்துஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி; சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி; சென்னை ஆவடிக்கு அருகில் அமைந்துள்ள வேல்டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட பல பொறியியல் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களாக அங்கீகரிக்கப்படத் தகுதியற்றவை எனப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆய்வுக் குழுக்களால் நிராகரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

 

"தங்களைக் கேட்காமலேயே பல்கலைக்கழக மானியக் குழு தனியார் கல்வி நிறுவனங்களுக்குப் பல்கலைக்கழகத் தகுதி வழங்கி விடுவதாகத் தமிழ்நாடு உள்ளிட்டு பல்வேறு மாநில அரசுகள் குறைபட்டுக் கொள்கின்றன. இந்தப் புலம்பல், கொள்ளையில் தங்களுக்குப் பங்கு கிடைக்கவில்லை என்ற ஆதங்கமே தவிர, வேறில்லை.

 

உத்திரப்பிரதேச மாநிலத்தில் இயங்கி வரும் சாரதா பல்கலைக்கழகத்திற்கு, அத்தகுதியினை வழங்கப் பல்கலைக்கழக மானியக் குழு மறுத்துவிட்டது. ஆனால் அக்கல்வி நிறுவனமோ உத்திரப்பிரதேச மாநில அரசிற்குக் கொடுக்க வேண்டியதை கொடுத்ததும், அம்மாநில அரசு தனியாக ஒரு சட்டம் போட்டு, அக்கல்வி நிறுவனத்தை அரசுதனியார் பல்கலைக்கழகமாக அங்கீகரித்தது. மாநில அரசின் அங்கீகாரம் கிடைத்துவிட்டதைக் காரணமாகக் காட்டி, பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரத்தையும் பெற்று விட்டது, அக்கல்வி நிறுவனம்.

 

சட்டீஸ்கர் மாநில அரசு, ஒரேயொரு சட்டத்தின் மூலம், 97 தனியார் கல்வி நிறுவனங்களை அரசுதனியார் பல்கலைக்கழகங்களாக அங்கீகரித்தது. இதற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அச்சட்டமும், அக்கல்வி நிறுவனங்களின் பல்கலைக்கழகத் தகுதியும் 2004ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டன. எனினும், உச்சநீதி மன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட லவ்லி தொழிற்கல்வி பல்கலைக்கழகம், பஞ்சாப் மாநில அரசின் மூலம் அரசுதனியார் பல்கலைக்கழகம் என்ற தகுதியை மீண்டும் பெற்று, அம்மாநிலத்தில் லவ்லி பல்கலைக்கழகம் என்ற புதுப்பெயரில் இயங்கி வருவது தனிக்கதை.

 

சென்னையைச் சேர்ந்த இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி, தனக்குப் பல்கலைக்கழகத் தகுதி வழங்கக் கோரிக் கொடுத்த விண்ணப்பம், பல்கலைக்கழக மானியக் குழு நியமித்த ஆய்வுக் கமிட்டியால் நிராகரிக்கப்பட்டது. அக்கல்லூரி இதற்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது. இவ்வழக்கில் பல்கலைக்கழக மானியக் குழு, பல்கலைக்கழகத் தகுதி கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்களை வடிகட்ட ஆய்வுக் கமிட்டியை நியமித்தது சட்டபடி செல்லாது என அதிரடியாகத் தீர்ப்பளித்தது, சென்னை உயர்நீதி மன்றம். பிறகு, இந்தத் தீர்ப்பைக் காரணம் காட்டி, அக்கல்லூரியைப் பல்கலைக்கழகமாக அங்கீகரித்தது, பல்கலைக்கழக மானியக் குழு. தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அவற்றின் தகுதிக்கு மீறிச் சலுகை காட்டுவதில், மைய அரசு, மாநில அரசு, நீதிமன்றம், பல்கலைக்கழக மானியக் குழு ஆகிய அரசு உறுப்புகள் ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல என்பதைத்தான் இவை எடுத்துக்காட்டுகின்றன.

 

···

 

உயர்கல்வித் துறையில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் இந்த உள்ளடி வேலைகள், ஊழல்கள், சட்டவிரோதச் சலுகைகள் அனைத்தும் அம்பலமாகிவிட்ட நிலையில், தனியார் உயர் கல்வி நிறுவனங்களுக்குப் பல்கலைக்கழக மானியக் குழு மூலம், பல்கலைக்கழகத் தகுதி வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழக மானியக் குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் யஷ்பால் தலைமையில், உயர்கல்வித் துறையைப் புனரமைக்க கமிட்டியொன்றும் அமைக்கப்பட்டது.

 

தனியார் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்த இக்கமிட்டி "இத்தனியார் பல்கலைக்கழகங்களினால் உயர்கல்வித் துறைக்கு எந்தப் பயனும் கிட்டவில்லை; அவைகளுக்கு அந்த நோக்கமும் இல்லை; மாணவர்கள்தான் ஏமாற்றப்பட்டுள்ளனர்'' என வெளிப்படையாகவே குற்றஞ்சுமத்தியுள்ளது. நியாயமாகப் பார்த்தால், கல்லாப் பெட்டியை நிரப்புவதில் மட்டுமே வேகமாக இருக்கும் அனைத்துத் தனியார் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என இக்கமிட்டி பரிந்துரைத்திருக்க வேண்டு ம். ஆனால், இக்கமிட்டியோ, தனியார் பல்கலைக்கழகங்கள் தங்களின் தரத்தை உயர்த்திக் கொள்ள, அவற்றுக்கு மூன்று வருடகால அவகாசம் கொடுக்கலாம் எனப் பரிந்துரைத்துள்ளது.

 

இந்த யஷ்பால் கமிட்டியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் கற்றறிந்த அறிஞர்கள் அல்லவா? அதனால்தான் தனியார் கல்வி வியாபாரிகளுக்கு "கல்லாப் பெட்டிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதேசமயம், தரத்தையும் புறக்கணித்து விடாதீர்கள்'' என அறிவுரை செய்துள்ளனர். நாய் வாலை நிமித்திவிட முடியும் என்று நம்மையும் நம்பச் சொல்கிறார்கள், இந்த அறிஞர் பெருமக்கள்.

 

ஆனால், மன்மோகன் சிங்கின் நெருங்கிய நண்பரும், தேசிய அறிவுசார் கழகத்தின் தலைவருமான சாம் பித்ரோடாவிற்கு, யஷ்பால் கமிட்டியைப் போன்று மூட நம்பிக்கைகள் எல்லாம் கிடையாது. உயர் கல்வித் துறையில் நிலவும் அத்துணை குழப்பங்களுக்கும், தரமற்ற போக்குக்கும் அரசும், அதனின் சட்டதிட்டங்களும்தான் காரணம் எனச் சாடுகிறார், இவர். "உயர்கல்வித் துறையைத் தனியாருக்கும், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றித் திறந்துவிட வேண்டும்'' என சாம் பித்ரோடா தலைமையில் உள்ள தேசிய அறிவுசார் கழகம் அரசுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறது.

 

"இந்திய மாணவர்களுள் வெறும் 8 சதவீதம் பேர்தான் உயர்கல்வி கற்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். இந்த எண்ணிக்கையை 11 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்றால் கூட, 1,500 பல்கலைக்கழகங்கள் தேவை. தனியாரின் பங்களிப்பின்றி இந்த இலக்கை எட்ட முடியாது'' எனப் புள்ளி விவரங்களை எடுத்துப் போட்டு பயமுறுத்துகிறது, சாம் பித்ரோடா கும்பல்.

 

தற்பொழுது மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராகியுள்ள கபில் சிபல், சாம் பித்ரோடாவின் மனசாட்சியைப் போல்தான் பேசுகிறார். அது மட்டுமின்றி, "10ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வை மாணவர்கள் விரும்பினால் மட்டும் எழுதலாம்; கல்லூரியில் நுழைவதற்கு அகில இந்திய அளவில் ஒரு பொதுத் தேர்வு நடத்துவதை உருவாக்க வேண்டும்'' என அவர் கூறி வரும் ஆலோசனைகள், கல்வித்துறையில் மாநில அரசுகளுக்குரிய அதிகாரங்களைப் பிடுங்கிவிடும் நோக்கம் கொண்ட தாகும்.

 

"உயர்கல்வியில் சீர்திருத்தங்கள் வேண்டும்'' என மன்மோகன் சிங் கும்பல் போடும் கூப்பாடு, அத்துறையைத் தனியாரின் கொள்ளைக்குத் தடையின்றித் திறந்துவிட வேண்டும் என்பது தவிர வேறில்லை. இவர்கள் திணிக்க விரும்பும் சீர்திருத்தத்தின்படி, தனியார் பல்கலைக்கழகங்கள் தரமுள்ளவையாக மாறிவிடலாம்; புகழ்பெற்ற ஐரோப்பிய, அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் கடை திறக்கலாம். ஆனால், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு இத்தகைய "தரமான'' உயர்கல்விக் கூடங்களை / பல்கலைக்கழகங்களை எட்டிப் பார்க்கக்கூட வாய்ப்புக் கிட்டுமா என்பதுதான் விவாதத்துக்கு உரியது!

 

· செல்வம்