ஈழப்போருக்கு பின்னான இலங்கையில், பெரும்பகுதி உழைக்கும் மக்கள், இன அடையாளப்படுத்தப்பட்ட அரசியலில், சிறுபான்மையாகவும் பெரும்பான்மையாகவும் பிளவுபட்டுக்கிடக்கும் இன்றைய சூழலில், இலங்கையில் சிறுபான்மை இனங்களே கிடையாதென்றும், "நாம் அனைவரும் இலங்கையர்களே"என்றும், மகிந்தாவிடும் குரலில் மாறிவரும் பொருளாதாரச் சூழலில் இலங்கையை முற்றுகையிடும் அந்நியப் பொருளாதார ஆர்வங்கள் இருக்கக் காணக்கடவது.

 

 

இவை, இன்றைய ஆசிய மூலதனத்தோடான உறவில் பின்னிப்பிணைந்து இலங்கையிலுள்ள இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தமது இலக்குக்கேற்பச் சொல்லுகின்றன அன்று, காலனித்துவக் காலக்கட்டத்தில்-இலங்கையின் சமூக வளர்ச்சிக்காலக் கட்டத்தை மறுத்து, முரண்பாடுகளை மழுங்கடித்த காலனித்துவம்,இலங்கையில் தீடீர் முதலாளித்துவத்தைத் தோற்றுவித்து அதையே அரச முதலாளியமாக விட்டுவைத்துச் சென்றது.அதன் மீள் வருகையில் நவ காலனித்துவம் தொடர்ந்து இருப்புக்குள்ளாகியது.இதுவே,இப்போதும் இலங்கையின் பொருளாதார முரண்பாடுகளால் வளர்வுறும் சமூக வளர்ச்சிப்பாதையில் இனங்கள் உதிர்ந்து"இலங்கையர்கள்"எனும் கோசம் வலுப்பெறுவதற்கு முன்பே சமூக வளர்சியை மறுத்தபடி, அதன் இயல்பான வளர்ச்சிக்குக் குறுக்கே நின்றகொண்டும், திடீர்"இலங்கையர்கள்"எனும் தேசிய இன அடையாளத்தை, முழுமொத்த இலங்கை வாழ் இனக் குழுமத்துக்கும் பொருத்திவைத்துத் தமது நிதியாதாரத்தை இலங்கையில் பெருக்கும் பெரு முயற்சியில் மகிந்தாவினது குரலாக அனைவருக்குமான இலங்கை என்கிறது.இது சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு மிகச் சாதகமான குறுகிய இலாபங்களை வழங்கிக்கொள்வதால் இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களை ஒட்ட மொட்டையடித்து அவ்வினங்களைப் பெரும்பான்மைச் சிங்கள ஆதிக்கத்துள் உள்வாங்கி அழிப்பதற்கு மிக நேர்த்தியான சூழலை உருவாக்குகிறது.

 

உலக ஏகாதிபத்தியங்கள் தமது பொருளாதார மற்றும் புவிகோள அரசியல் ஆதாயங்களுக்காகப் பொது அமைப்புகள் எனும் வடிவில் "அரசுசாரா"அமைப்புகளை உருவாக்கி வைத்து அவற்றை இயக்குவதுபோன்று, இன்றைய இலங்கை புலிகள் அழிப்புக்குப் பின் இலங்கைத் தேசத்தில் சிறுபான்மை இனங்களை ஒட்ட மொட்டையடிக்க இத்தகைய "அரசுசாரா"அமைப்புகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து இயக்கத் தக்கபடிஉள்ளுர் அமைப்புகளைத் தோற்றுகிறது.இது மிகவும் ஆபத்தானவொரு மேற்குலக ஏகாதிபத்தியங்களின் அரசியல் வியூகத்தின் தொடர்ச்சியாக நம்முன் கொணரப்படுகிறது.இங்கே,இலங்கை அரசானது தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை மையப்படுத்தபட்ட இலக்குக்கமைய முன்நகர்த்துவதற்கு இத்தகைய அமைப்புளது ஒத்துழைப்புகளுடாகப் பொதுக் கருத்தை ஏற்படுத்தி, அதையே மக்களுக்கு நன்மை பயப்பதாகவும் இவ்வமைப்புகளுடாகச் சொல்கிறது. இன்று, புலம் பெயர்ந்து மேற்குலகில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் இலங்கை அரசுக்குச் சார்பான அரசியலை முன்தள்ளும்-முன்னெடுக்கும் இக் குழுக்கள், பல்வேறு வடிவங்களில் தமது முகமூடியைத் தயார்ப்படுத்தி வைத்திருக்கிறது.இதுள் தலித்துக்களுக்காகக் குரல் கொடுக்கும் அமைப்புகளாகவிருந்தாலுஞ்சரி அல்லது வன்னி மக்களுக்கு உதவும் அமைப்புகளாகவிருந்தாலுஞ்சரி இவையாவும் இலங்கை அரசினது இன்றை இனவழிப்பு அரசியல் வியூகத்துக்கு வலுச் சேர்ப்பதற்கான கூறுகளாகவே இனம் காணத்தக்கன. 

"புலம்பெயர் வாழ் இலங்கையரின் ஒன்றுகூடல்" என்பதுகூட ஒரு கோணற்றனமான வாசகம்தாம்.புலம்பெயர் என்பது ஒரு நாடோ அல்லது தேசங்களையோ குறிப்பிட முடியுமா?அதற்குள் வாழவும் முடிகிறது?

 

தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் தேசங்களில் இத்தகைய தலைப்புகளில் நடாத்தும் "இலங்கையர்கள்"என்ன சொல்ல வருகிறார்கள் என்பது மிக அவசியமாக இனங்காணத்தக்கது!

 

இலங்கையைவிட்டுப் புலம்பெயர்ந்து மேற்குலகில் வாழும் இலங்கையர்களுக்குள் பற்பல கூறுகள்,பிளவுகள் இருக்கும்போது"இலங்கையர்கள்"எனும் பொது அடையாளம் அவசியமாக இருக்கிறதென்றால் பிறகெதற்குத்"தலித்துவ அடையாளம்",பிரதேச அடையாளம்,மதஞ்சார்ந்த குழும அடையாளம்?கலாச்சாரத் தேசியம் பேசுபவர்கள் எதற்காக"இலங்கையர்கள்" எனும் அடையாளத்துக்குள் ஒரு இனத்தின் தனித்துவத்தையும்,உரிமையையும் மறைப்பது?தமிழ்த் தேசிய இன அடையாளத்தை மறுபவர்கள் பின்பு தலித்துவ அடையாளத்தை எதற்காகத் தூக்கிப்பிடிப்பது?-மலையகத் தேசியத்தையும்,இஸ்லாமியத் தேசியத்தையும் பற்றிப் பேசுவது?ஒடுக்குமுறைகள் யாவும் ஒடுக்குமுறைகளாகவே இருக்கும்போது அதில் ஒரு கூறை முறைத்துவிட்டு மறுகூறைத் தூக்கிப்பிடித்து எந்தவுரிமையையும் பெற்றுவிட முடியாது.இத்தகைய நடாத்தையானது சிங்கள ஆளும் வர்க்கத்தினது கனவை நிறைவேற்றும் கயமைக்குப் பலியான அரசியல் வாழ்வாகும்.

 

இலங்கையர்களுக்கு இலங்கைத் தேசியம் என்ற அடையாளந்தாம் இருக்கமுடியும்.இதன் அடிப்படையில்தாம் சிங்கள இனவெறி அரசானது தமிழர்கள் என்பதற்காக அனைவரையும் இனவொடுக்குமுறைக்குள் உட்படுத்தியது.அங்கே, தலித்தோ அல்லது பிரதேசப் பிரஜைகளோ முதற்தெரிகளாகவும்-சிறப்பாகவும் பார்க்கப்படவில்லை.எனினும்,இந்தச் செயற்கையான"இலங்கையர்கள்"எனும் அடையாளத்துக்கூடாக இயங்கும் அரசியலை முன்னெடுக்கும் இந்த ஓடுகாலிக் கூட்டங்கள் இலங்கை அரசினது கைக்கூலிகளானவர்கள் என்பதை நாம் புரிந்தாகவேண்டும்.இவர்களுக்கு முகமூடி தயாரித்து,வால்கட்டி இயக்கும் இலங்கையின் இன்றைய தெரிவுக்கு உலக ஏகாதிபத்தியங்களது அதே பிழைப்புவாத அரச தந்திரமே வழிகாட்டுகிறது.உலக நாணய நிதியத்திடம் வட்டிக்குக் கடனைப்பெற்று, இத்தகைய அமைப்புகளையும் வளர்த்து இதன் பக்கத்துணையோடு இலங்கையின் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைத் திசை திருப்பித் தமது அதிகாரத்தைத் தொடர்ந்து பேணும் இலங்கைச் சிங்கள ஆளும்வர்க்கமானது மிகவும் அபாயகரமான அரசியல் சூழ்ச்சியல் சிறுபான்மை இனங்களை வீழ்த்தி வேட்டையாடுகிறது.

 

2

தினமும் வறுமையோடும் வேலைப் பளுவோடும் ஜந்திரமாக வேலைவேண்டிப் பாவிக்கப்படும் ஒரு கருவியாகவே உலகத்தில் உழைக்கும் மனிதரை இன்றைய பொருளாதார அமைப்பு-உலக ஏகாதிபத்தியத் தொழிலகங்கள் உருவாக்கி வைத்து அடிமையாக்கியுள்ளது.இது ஒருவகையில் மறைமுகமான அடிமையுடமைச் சமுதாயமாகவே இருக்கிறது.இந்தச் சமுதாயத்தில் உலக நாணய நிதியம்-உலக வங்கிகள் யாவும் இவ்வடிமைச் சமுதாயத்தைத் தொடர்ந்து இருத்தி வைக்கும் மேற்காணும் தொழிற்கழகங்களது எடுபிடிகளாகவே இருக்கின்றபோது,அரேபிய எண்ணை வயல்களைத் தமது குடும்பச் சொத்தாக்கிய அரேபிய நிலப்பிரபுக்களின் பதுக்கற் பணமோ"எண்ணை டொலர்களாக"இவ் நாணய நிதியத்திடமும்,உலக வங்கியிடம் முடங்கிக்கிடக்க, இதன் ஆதிக்கம் மேற்குலகப் பொருளாதார நலன்களைச் சுற்றிய வியூகமாக விரிகிறது.

 

இலங்கையினது மக்கள்கூட்டம்,இலங்கைப் பாசிச அரச ஜந்திரத்துக்குள் தொடர்ந்து மாட்டப்பட்டிருப்பதற்காக வழங்கப்படும் கடன் நிதிகள் திட்டமிடப்பட்ட இனவழிப்புக்கும் அதுசார்ந்த முரண்பாடுகளுக்கும் பாவிக்கப்படும்போது குடிசார் உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் ஒரு அரசாகவே இலங்கை தொடர்ந்திருக்கும்.இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை வெறும் பயங்கரவாதமாகக் காட்டும் சிங்கள ஆளும் வர்க்கத்து அபாயகரமான அரசியலின் விளைவால்,அவை கொண்டுள்ள பொருளாதார ஆதிக்கமானது இனங்களுக்கிடையிலான முதலாளித்துவ வளர்ச்சியை மட்டுப்படுத்தி இலங்கையை மேலும் உரிமைகளற்ற தேசமாகவே சிறுபான்மை இனங்களுக்கு விட்டுவைக்கும்.இதனால், தமிழ்,முஸ்லீம் மற்றும் மலையகத் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலமானது தத் தமது அரசியல்-பொருளியல் அபிலாசைகளோடு தனித்துவமான தேசிய முன்மொழிவுகளைக் கோரிக் கொண்டே இருக்கப் போகிறது.

 

இந்த முன் மொழிவுகள் இனத்துவ அடையாளத்தை மையப்படுத்திய பேரெழிச்சியாக மாறுந் தறுவாயில் இலங்கையில் பிரிவினை அரசியல் நிலவரம் செறிவேற்றப்படுகிறது.இந்தச் செறிவேற்றலைச் செய்து முடிக்கும் இனவொடுக்குமுறையானது அப்பாவி மக்களை அழித்துத் துவசம் செய்யும்போது அங்கே அவர்களின் அத்துமீறிய வன்முறைகளைக் கோரி நிற்கிறது.இது தனக்கேற்படும் அழிவுகளுக்கான அத்துமீறிய எதிர்ப்புப் போராட்டமாக விரியும்.இந்த எதிர்ப்பு வன்முறையாக விரிந்து ஆயுதத்தை ஏந்தும்போது அங்கே மீளவும் பிரபாகரன்கள் உருவாவது தவிர்க்க முடியாத வினையாகிறது.இதைக் குறித்தான அரசியலை மையப்படுத்துகிற சிங்கள ஆளும்வர்கத்தின் தெரிவானது இலங்கையைப் புரட்சிகரச் சக்திகள் அரசியல்ரீதியாகக் கைப்பற்றதாவொரு சூழலை நோக்கியதாகும்.

 

இலங்கைத் தேசத்தின் பாரிய பின்னடைவாக தமிழ்த் தேசிய இனத்தைக் கணித்திருக்கும் சிங்கள ஆளும் வர்க்கத்தின் பொருளாதார அறிவானது அந்நிய சக்திகளிடம் கண்டுண்டு கிடக்கும் தமது இழிநிலையை உதாசீனப்படுத்தப்படுகிறது.இன முரண்பாட்டைத் தொடர்ந்து யுத்தங்களால் கூர்மைப்படுத்தி இனச் சுத்திகரிப்பை மெல்ல செய்த இந்த ஆளும் வர்க்கமானது, இலங்கையின் இறைமையை எப்போதோ அந்நிய எஜமானர்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டது.இதுதாம் இன்றைய அனைத்து முரண்பாட்டையும் சிக்கலுக்குள் மாட்டி மேற்குலக நிதி ஆளுமையுடைய நாடுகளால் தமிழ்பேசும் மக்களுக்கு விடிவு வரும் என்பதாகவும் இன்னொரு பொய்மையை அவிழ்த்துவிட்டுத் தப்பிக்கிறது.

 

தென்கிழக்காசியாவில் பேரளவில் தன்னிறைவானவொரு அரசாக இலங்கை மிளிரக்கூடிய அரிய வாய்ப்புகளை-வளங்களை இலங்கை கொண்டுள்ளது.அதன் சனத்தொகையும் வளமும் இதை மெல்லச் சாத்தியப் படுத்தியிருக்கும்.எனினும் அடாப்பிடியான இனவொடுக்குமுறையைக் கடைப்பிடிக்கும் சிங்கள ஆளும் வர்கத்தை உசுப்பிவிடும் இந்திய-அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசியல் நலன்கள் இலங்கையைப் படுகுழியில் தள்ளி அதன் வலுவான வளர்ச்சியை,தேசியவொருமைப்பாட்டைத் தொடர்ந்து உடைத்தெறிந்து,இனப்படுகொலையைச் சமீபம்வரை நடாத்தியது.இந்த நிலையில்,மேலும் சர்வதேச நாணய நிதியமும் மற்றும் உலக வங்கியும் அதன் எஜமானர்களும் நமது மக்களுக்கும்,அவர்களது விடிவுக்கும் தார்மீக ரீதிய உதவுவதாகக் கருத்துக்கட்டும் சந்தர்ப்பாவதமானது இலங்கைச் சிறுபான்மை இனங்களை ஏமாற்றுஞ் சதி நிறைந்தது.

இவ்வண்ணமேதாம் இன்றைக்குப் புலம் பெயர்ந்து மேற்குலகில் வாழும் மக்களுக்குள் உருவாக்கப்படும் திடீர் அமைப்புகள்-குழுக்கள் யாவும் இத்தகைய அந்நியச் சக்திகளுக்குச் சோரம்போன இலங்கைச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் கைக்கூலிகள்.இவர்கள் சிங்கள அரசினது பாசிச அரசியலைக் கேள்விக்குட்படுத்தாமல்-இனவழிப்பை இனங் காட்டாமல்-தமிழ்தேசிய இனத்துக்கு எதிராகச் செயற்படுத்தப்படும் திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தாமல், வன்னியில் வதங்கும் மக்களுக்கு உதவுவதற்காவும்,தலித்துக்களின் விடிவுக்காகக் குரல் கொடுப்பதென்பதும் வடிகட்டிய அயோக்கியத்தனத்தின் அரசியலே.

இத்தகைய குழுக்கள் யாவும்"பொதுவமைப்புகள்-அரசுசாரத் தன்னார்வ அமைப்புகள்"எனும் போர்வையில் இலங்கைச் சிங்கள ஆளும் வர்க்கத்தினது எடுபிடி அமைப்புகள்-கட்சிகள் என்பது உண்மை.இதை, நாம் இனங்கண்டாக வேண்டும்.இலங்கையில் புரட்சிகரமான அரசியலை முன்னெடுப்பதற்கான முட்டுகட்டைகளில் முதன்மையான தடைக்கற்கள் இத்தகைய கைக்கூலிக் குழுக்கள் என்பதை முதலில் வரையறுக்க வேண்டும்.

 

ப.வி.ஸ்ரீரங்கன்
02.08.09