கடந்த 30 ஆண்டுகளில் தமிழ் பாசிச சிந்தனை முறை தன்வழியில் பேரினவாதத்தை ஒழித்துகட்டுவதாக கூறி அந்த பேரினவாதத்துக்கே அது இரையானது. அதேநேரம் அது தமிழ் பாசிசமல்லாத அனைத்து சமூக அரசியல் அடித்தளங்களையும் அழித்தது. இதன் மூலம் இன்று பேரினவாதம் தமிழினத்தின் வாழ்வுசார் கூறுகள் அனைத்தையும் சிதைத்தும் அழித்தும்  வருகின்றது.

 

இந்த நிலையில் இதை எதிர்கொள்வது என்பது எம்முன்னுள்ள மிகப்பெரிய இன்றைய அரசியல் சவால். இதை எப்படி எதிர்கொள்வது?

 

இன்றைய நிலையில் கடந்தகாலத்தில் தமிழ்மக்கள் கொண்டிருந்த தவறான தமிழ் பாசிச சிந்தனை முறையில் இருந்து வெளிவராமல் மாற்று சிந்தனை முறை ஒன்றை தமக்குள் உள்வாங்காமல் சிங்களப் பேரினவாத பாசிசத்தை இனி ஒருநாளும் எதிர்கொள்ள முடியாது.

    

கடந்தகால தமிழ் பாசிசம் தன் இனவிடுதலையாக காட்டிய தமிழீழத்தை அன்னிய உதவிகள் முதல் நவீன ஆயுதங்கள் மூலம் அதை அடையமுடியும் என்றனர். இது கடந்த 30 வருடத்தில் தோல்விபெற்று நிற்கின்றது. ஆனால் அந்த சிந்தனை முறை இன்னமும் முறியடிக்கப்படவில்லை. மாறாக பல வழியில் அவை தொடருகின்றது. மறுபக்கத்தில் இதில் நம்பிக்கை இழந்துவிடும் போக்கு அரசியலை துறந்தோடுதலாகவே நிகழ்கின்றது.

 

இந்த நிலையில் மாற்று சிந்தனை முறையும் இதை எதிர்கொள்ளும் மாற்று அரசியல் அடிப்படையும் பொதுவான அரசியல் தளத்தில் அறவே கிடையாது. சிந்தனை வறட்சியும் பிற்போக்குத்தனங்களும் தமிழினத்தில் தலைவிரித்தாடுகின்றது. இதுதான் இன்று தமிழினம் எதிர்கொள்ளும் சமூக எதார்த்தமும் மிகப்பெரிய சவாலுமாகும்.

 

இது மாற்றப்படாத வரை தமிழினத்துக்கு விடிவு கிடையாது. தமிழினம் தன்னைத்தான் ஒரு ஒடுக்கப்பட்ட ஒரு இனமாக உணர்ந்து அதற்காக தான் போராடாத வரை அதனால் தன் எதிரிக்கு எதிராக ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களை தன்னுடன் சேர்த்துக் கொண்டு முன்னேற முடியாது. அதுபோல் உலக ஒடுக்கப்பட்ட மக்களை தமக்கு ஆதரவாக அரவணைத்து செல்ல முடியாது.    

   

தமிழ் மக்கள் தங்களைத் தாம் விமர்சனம் சுயவிமர்சனம் செய்யாமல் தங்களை ஒடுக்கப்பட்ட மக்களாய் உணர்ந்து பாசிச வழியற்ற சிந்தனை ஊடாக ஆயுதபாணியாகாமல் தம் மீதான ஒடுக்குமுறையை இனி ஒருநாளும் எதிர்கொள்ளமுடியாது. இதுதான் இன்றைய எதார்த்தம் சார்ந்த உண்மை. சமூகம் மீது அக்கறை கொண்டோர் இதைப் புரிந்து கொண்டு இதை மாற்றியமைக்கும் வண்ணம்  செயலாற்றக் கோருகின்றோம்.

 

பி.இரயாகரன்
18.07.2009