வன்னி நிலம், வன்னி நீர், வன்னி மக்கள் என்று அனைத்தையும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு பேரினவாத அரசு விற்று வருகின்றது. வன்னியின் "அபிவிருத்தி", "வடக்கின் வசந்தம்" என்ற பெயரில, இவை அரங்கேறுகின்றது. மக்களின் சுதந்திரமான வாழ்வு, சுதந்திரமான உழைப்பு, சுதந்திரமான நடமாட்டம் என அனைத்தும், இனவாதிகளுடன் சேர்ந்து மண்ணை ஆக்கிரமிக்கும் பன்நாட்டு நிறுவனங்களால் "அபிவிருத்தி" என்ற பெயரில் பறிக்கும் கூட்டுச்சதி இங்கு அரங்கேறுகின்றது.

 

வன்னி இனி, வன்னி மக்களுக்கானதல்ல, அவை பன்நாட்டு நிறுவனங்களுக்கு சொந்தமானதாகின்றது. இதற்குப் பெயர் தான் "அபிவிருத்தி", "வடக்கின் வசந்தம்".

 

இதற்காக மக்களை வதைக்கும் ஒரு நாசிய இன முகாம்களில், தமிழ் மக்களை அடைத்து வைத்துள்ளனர். மிருகங்களை பழக்கும் அதே உத்தியை, இங்கு கையாளுகின்றனர். கையேந்த வைத்து, பண்ணை அடிமைகளாக, நாயிலும் கீழாக மக்களை நக்கி வாழவைக்க முனைகின்றனர். இந்த இன நாசிய அகதிமுகாமில் நடப்பது இதுதான்.

 

அங்கு வாழும் மக்களோ இதை சகித்துக்கொள்ள முடியாமல், இதற்கு எதிராக போராடத் தொடங்கியுள்ளனர். அண்மையில் மக்கள் தம் உற்றார் உறவினருடன் சேர்ந்தும், பழகியும்,  தம் மனித உணர்வுடன் வாழ முற்பட்டபோது அவர்கள் மேல் இனவாத இராணுவம் துப்பாக்கி சூட்டை நடத்தினர். இதில் இருவர் கொல்லப்பட்டதாக வெளியான தகவலை, சுதந்திரமாக  உறுதி செய்ய முடியவில்லை. அவ்வளவுக்கு கெடுபிடியுடன இனவழிப்பையே, இந்த சிங்கள பேரினவாத அரசு பன்நாட்டு நிறுவனங்களுக்காக அங்கு கட்டவிழ்த்து விட்டுள்ளது.

 

இந்த சம்பவத்தில் சிலர் காயமடைந்ததை உறுதிசெய்ய முடிகின்றது. மக்கள் இராணுவத்துக்கு எதிராக போராடியதுடன், இராணுவத்துக்கு எதிராக கல்லெறித் தாக்குதலை நடத்தினர். இராணுவமோ மேலே சுட்டது. பாலஸ்தீன அகதி வாழ்வின் நிலையில், இன்று வன்னிய நாசி முகாம் உள்ளது. மக்கள் இதற்கெதிராக கொந்தளித்தபடி, எதிர்வினையாற்றுகின்றனர். மக்கள் தங்களைப் பற்றியும், தங்கள் எதிர்காலம் பற்றியும் சிந்திக்க முற்படுகின்றனர்.

 

புலிகள் தங்கள் பரந்த பிரதேசத்தில் மக்களை அடைத்து வைத்திருந்ததை விட கேவலமாக, முட்கம்பிக்கு பின்னால் தாம் அடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டு இருப்பதை பார்த்து கொதிக்கின்றனர், கொதித்தெழ முனைகின்றனர். இது எதுவுமில்லை என்று சிலர் காட்டமுனைகின்றனர், எல்லாம் சுமுகமாகும் என்று, சிலர் சொல்ல முனைகின்றனர்.

 

ஆனால் மக்கள் அங்கு சுதந்திரமாக வாழமுடியாத நிலையை அடைந்துள்ளனர். இதனால் ஆங்காங்கே தள்ளுமுள்ளுகள். மக்கள் தப்பிசென்று வாழமுனையும் தனிமனித முயற்சிகள். சிறு போராட்டங்கள். தம் அதிருப்த்தியை அள்ளிவீசும் தூற்றல்கள். பேரினவாத இன நாசிய முகாமில், தாம் ஒரு மிருகங்கள் போல் வாழமுடியாது என்பதை மக்கள் தம் நடத்தைகள் மூலம் இன்று வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

உள்ளே எழும் மக்கள் கொந்தளிப்பை, புலிப் பூச்சாண்டி காட்டி ஒடுக்கமுடியாது திண்டாடுகின்றது பேரினவாதம்;. நரித்தனமாக இதை ஓடுக்க முனைகின்றது. கிராமசேவகர் மற்றும் ஆட்காட்டிகளைக்  கொண்டு, மக்களின் கொந்தளிப்பில்; முன்னிற்கக் கூடியவர்களை இனம் காண்கின்றது. அவர்களை தனியாக்கி இழுத்துச் செல்லுகின்றது பேரினவாதம்;. மறுபக்கத்தில் தமிழ் அரசியல் கட்சிகளை கொண்டு, மக்களின் சுதந்திர உணர்வை ஒடுக்க முனைகின்றது. "அபிவிருத்தி", "வடக்கின் வசந்தம்" என்று கூறி, வன்னி மண்ணை மக்களிடம் இருந்து அபகரிக்க, தமிழ் கட்சிகளை களத்தில் இறக்குகின்றது. 

 

வளம்கொழிக்கும் வன்னி மண்ணை, அபிவிருத்தியின் பெயரில் அன்னிய நிறுவனங்களுக்கு தாரைவார்க்க இந்த இனவாத அரச முனைகின்றது. தமிழ்க்கட்சிகள் அதற்கு ஓத்தூதுகின்றது.  இதற்கமையவே, வன்னிமக்களின் அகதி முகாமில், அவர்களின் மேல் ஒரு நரகல் வாழ்வு திணிக்கப்பட்டுள்ளது.  வன்னி மண்ணையும், வளமான வன்னியின் நீர் வளத்தையும், பன்நாட்டு நிறுவனத்துக்கு "வடக்கின் வசந்தத்தின்' பெயரில் விற்கின்றது. மக்களின் விருப்பங்களுக்கு மாறாகவே இது நிகழ்கின்றது. மக்களின் சுதந்திரம், ஜனநாயகம் எல்லாம் விலைபோகின்றது.  மக்களின் நிலத்தை அவர்களிடமிருந்து அபகரிக்கவும், அவர்களும் மறு குடியிருப்பின் பெயரில் லயன்களை உருவாக்கி அதில் மக்களை பண்ணை அடிமைகளாக வைத்திருக்கவும் 'வடக்கின் வசந்தம்" முனைகின்றது. இதற்கு அமைய லயன் வீடுகளை அமைக்கவும், அதில் வைத்து மக்களைச் சுரண்டவும் அரசு விரும்புகின்றது.

 

இந்தச் சுரண்டலுக்குரிய சூழலை உருவாக்கும் வரை, மக்களை அடைத்து வைத்திருப்பது அவசியமாகின்றது. அதற்கேற்ற நிலையில் மக்களை கையேந்தி வாழும் வண்ணம், மக்களை  அடிமைகளாக பண்படுத்த வேண்டியுள்ளது. மக்களின் சுதந்திரமான உழைப்புக்கு பதில், கையேந்தி வாழும் அடிமை நிலையை உருவாக்க வேண்டியுள்ளது. இந்த அடிமை உணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த, அகதி வாழ்வை பேரினவாதிகள் திட்டமிட்டு திணிக்கின்றனர்.    

 

ஒரு மிருகத்தை கூண்டில் அடைத்து வைத்து, நேரத்துக்கு நேரம் அரை குறை உணவை போட்டு பழக்குவது போல், வன்னிமக்களை அடிமைத்தனத்துக்கு பழக்குகின்றனர். பன்னாட்டு பண முதலைகளுக்கு அடிமைகளாக மக்களை வேலை செய்யவைக்க, அகதிமுகாம் வாழ்க்கை. இதற்கு அமைய தலை உயரத்தில் தகரக் கொட்டகை, மழை, வெயில் என எதையும் தாங்க முடியாத அவலத்தில், அந்த அடிமைகளின் கொட்டில் புலம்புகின்றது. ஆம் மக்கள் வாழ்வின் இந்த அனுபவத்தை சொல்லித் திட்டுகின்றனர். இதில் மனிதர்களை காயவிட்டு வரட்டி எடுக்கின்றது, சிங்கள இனவாத அரசு. மலசலகூடம், தண்ணீர் என்று எதையும் சுதந்திரமாக பெறமுடியாத ஆயிரம் தடைகளைப் போட்டு, மக்களை அடிமைகளாக பண்படுத்த முனைகின்றது. 

 

இப்படி மக்களை அடிமைகளாக, அடிமைப்படுத்தி நடத்தும் இந்த பேரினவாத சதி, வெறும் சிங்கள மேலாதிக்கம் மட்டுமல்ல. பன்னாட்ட நிறுவனங்களுக்காக மக்களை அடிமைகளாக  வேலை செய்ய வைக்கும், மூலதனத்தின் வக்கிரத்துடன் கூடியது.

 

இந்த நாசி முகாமில் வாழும் மக்கள் முன் தெரிவது, புதிது புதிதாக உருவாகும் அடிமை கொட்டில்கள் மேலும் பெருகி வருவதை தான். மக்கள் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இதைப் பார்க்கின்றனர். அடிமைக் கொட்டில்கள், மேலும் பலப்படுவதைப் பார்க்கின்றனர். தம்மைச் சுற்றி முட்கம்பிகள், மேலும்மேலும் பலம்பெற்று வருவதைப் பார்க்கின்றனர். புதிதுபுதிதாக கண்காணிப்பு வடிவங்கள் பெருகிவருவதைப் பார்க்கின்றனர். புதிய கட்டுப்பாடுகளை காண்கின்றனர்.

 

அப்பாவி மக்களை கைதியாக்கி வைத்துள்ள இனவெறி அரசு, தன் மூலதன நலனுக்கு ஏற்ப மக்களை சிறைக் கொட்டைகைளில் அடைத்து வைத்து வதைக்கின்றது. மக்கள் தம் எதிர்காலம் என்ன என்று கேள்வியை எழுப்பத் தொடங்கியுள்ளனர். அந்த மக்கள் இனி தமக்காக, தம் விடுதலைக்காக, போராடும் காலம் உருவாகி வருகின்றது.

 

வன்னியில் புலிகள் மக்களை தம் பணயக் கைதியாக்கிய பொழுது, அதை மக்கள் தகர்த்து வர காலமெடுத்தது. மீண்டும் மக்கள் இந்த முகாம்களில் இருந்து தம்மை விடுவிக்கும் போராட்டம், இனி தவிர்க்க முடியாத ஒரு கொதிநிலையை எட்டி வருகின்றது.

 

மக்களோ தம் சுதந்திரமான வாழ்வு, சுதந்திரமான உழைப்பு, சுதந்திரமாக நடமாடும் உரிமை மற்றும் சுதந்திரமாக தம் உறவுகளுடன் இணையவும் தடையாக உள்ள இந்த பேரினவாத அரசுக்கு எதிராக, தம்மைத் தாம் தமக்குள் அணிதிரட்டுகின்றனர். பன்நாட்டு முதலாளிகள் தம் மண்ணை, சிங்கள பேரினவாத அரசுடன் சேர்ந்து ஆக்கிரமிப்பதை அவர்கள் கண்கொண்டு காணும் நாள் வெகு தொலைவில் இல்லை. இதை அந்த மக்கள் எதிர்கொண்டு போராடும் நாள், வெகுதொலைவில் இல்லை. இன்று ஏற்பட்டுள்ள சர்வதேச அழுத்தங்களை சமாளிக்க, வன்னிமண்ணில் அவர்களுக்கு ஒரு பங்கு கொடுத்து, அந்த மக்களை கூடியொடுக்க முனைகின்றது இந்த பேரினவாத அரசு. மக்களோ இதை எதிர்த்துப் போராடுவார்கள். இதுதான் மனித வரலாறு.

 

பி.இராயகரன்
07.04.2009