உடல் அசைவை, உடலின் மொழியாக்கியவன் மைக்கேல் ஜாக்சன். இந்த திறமையை கடைவிரித்து, நுகர்வாக விற்றது அமெரிக்கா ஏகாதிபத்தியம். அவனின் வேகமான அசைவை, மாறி வந்த உலக ஒழுங்குக்கு ஏற்ப அமெரிக்கா வடித்தெடுத்தது. இப்படி மைக்கேல் ஜாக்சன் அமெரிக்காவின் கதாநாயகனானான். இதனால் பணத்தில் மிதக்கத் தொடங்கியவன், அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் துணையுடன் உலகப் புகழ் பெற்றான்.

 

இதன் மூலம் உழைக்கும் மனித வர்க்கத்தின் போராடும் ஆற்றல் சீரழிக்கப்பட்டது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் துணையுடன், அதை தன் உடலுக்குள் அவன் வடியவிட்டான். அமெரிக்க ஏகாதிபத்தியம் மனிதர்களின் ஆற்றல்களையும் திறமைகளையும் மக்கள் நலனுக்காக அல்லாது, மக்களை சுரண்டிச் சூறையாடும் வண்ணம் அவைகளை தெரிந்தெடுத்து முன்னுக்குத் தள்ளியது. இக்காலத்தில் தான் பொப் மாலி மக்கள் பற்றி பாடிய பாடல்கள் புகழ்பெற்று இருந்தது. இது ஏகாதிபத்திய நலனுக்கு எதிரானதாக இருந்தது.

 

இந்த இடத்தில் தான் மைக்கேல் ஜாக்சனை ஏகாதிபத்தியங்கள் உலகுக்கு அறிமுகம் செய்து வைத்;தது. மக்களுக்காகவல்லாத பாடல்கள், நடனங்கள் என்று, ஒரு சீரழிவை இசை உலகில் மைக்கேல் ஜாக்சன் மூலம் ஏகாதிபத்தியங்கள் புகுத்தியது. மைக்கேல் ஜாக்சனிடம் இருந்த திறமையான வேகமான உடல் அசைவைக் கொண்டு, அமெரிக்க ஏகாதிபத்தியம் இசை உலகத்தை தனக்கு ஏற்ப சீரழிய வைத்தது.

 

மனித வாழ்வுக்கும், மனித உழைப்புக்கும் அன்னியமான வகையில், இசையை வெறும் நுகர்வாக்கியது. இதன் மூலம் இசையையும் நடனத்தையும் சந்தைப் பொருளாக்கி, அற்பமான கற்பனையில் கனவுலகில் மனிதனை நீட்டிப் படுக்கக் கோரியது. போதை வஸ்துகள் மனிதசிந்தனையை எப்படி சுயமற்றதாக்குகின்றதோ, அதையே மைக்கேல் ஜாக்சனின் இசையும் நடனமும் செய்தது.

 

மனிதகுலத்தை இசை மற்றும் நடனம் மூலமான போதைக்குள் ஆழ்த்தி, அதை நுகர்வு வெறிக்குள் தள்ளினர். மனிதனின் உழைப்பையும், அவனின் ஓய்வையும், அற்ப சேமிப்பையும், இசைக்குள் கிறுங்கி அழிய வைத்து, நடனத்துக்குள் மயங்க வைத்துச் சூறையாடினர், சுரண்டினர்.

 

இப்படி சுரண்டிய, தனிமனிதர்களோ வீங்குகின்றனர். இப்படி மக்கள் பணம், மைக்கேல் ஜாக்சனிடம் மலையாக குவிந்தது. இதன் மூலம் இந்த சீரழிவுவாதி தன் தனிமனித வக்கிரங்களை எல்லாம், சமூக வக்கிரமாக்கி விடுகின்றான். இதில் குறிப்பாகவும், எடுப்பாகவும்

 

1. தன் வக்கிரத்துக்கு ஏற்ப தோலின் நிறத்தையே மாற்றினான்

 

2. இயற்கையை மறுக்கும் ஒரினச்சேர்க்கையை தன் பாலியலாக கையாண்டு, அதற்கு சிறுவர்களையே பலியிட்டான்.

 

3. பணக்காரனுக்குரிய அனைத்து மனிதவிரோத வக்கிரத்தையும், தன் சொந்த வாழ்வாக்கினான்.  

                       
 
தனிமனித திறமைக்கு பின், அவனின் வாழ்வு இதற்குள் முடங்கியது. அவன் தன் தோல் பற்றி கொண்ட இழிவு, கறுப்பினமக்கள் மேலான அவனின் சொந்த இழிவான கண்ணோட்டமாகவே அவனோடு வாழ்ந்தது. அதுவே இசையாக, நடனமாக, எல்லாமாக மாறியது. இது அவனைச் சுற்றி வினோதமான பழக்கவழக்கமாக மாறியது. 

 

கறுப்பு மனிதன், அதைத் தீர்மானிக்கும் தோல் மீதான மைக்கேல் ஜாக்சன் வெறுப்பு எப்படிப்பட்டது. வெள்ளை நிறம் மீதான, வெள்ளைத் தோல் மீதான, மதிப்பு சார்ந்தது. கறுப்பு என்பது இழிவானது, தாழ்வானது, அசிங்கமானது என்று மைக்கேல் ஜாக்சன் கருதினான்.  இந்த சிந்தனை வெள்ளை மேலாதிக்கவாதிகளின் அதிகாரத்ததைச் சார்ந்தது. இதையே  மைக்கேல் ஜாக்சன், தன் இசை மூலம், நடனம் மூலம், நுகர்வுச் சந்தையில் பரப்பினான்.

 

கறுப்பு மீதான வெள்ளையின அதிகாரத்தையும், அது செய்யும் இழிவையும் எதிர்த்து, கறுப்பாக மைக்கேல் ஜாக்சன் குரல் கொடுக்கவில்லை. கறுப்பின மக்களை, கறுப்புத் தோலை போற்றி, அதற்காக பாடவில்லை, நடனமாடவில்லை.

 

மாறாக தன் தோலின் நிறத்தை மாற்றுவதன் மூலம், கறுப்பு மீதான இழிவை அகற்றமுடியும் என்ற எல்லைக்குள், தன் மனித கேவலங்களுடன் வக்கிரமடைந்தான். சமூகம் மீதான இழிவை எதிர்த்து, பாடல் மூலம் பதிலடி கொடுக்கவில்லை. தன் தோலை அறுவைச் சிகிச்சைக்கு உள்ளாக்கியதன் மூலம், அந்த தோலுக்குரிய சமூக இழிவை தன் சொந்த செயலால் மீள உலகறியச் செய்தான்.

 

இதன் மூலம் கறுப்பு என்பது இழிவு, இது தான் மைக்கேல் ஜாக்சன் சொன்ன செய்தி. இதை மாற்ற, தோலை அறுவைசிகிச்சை மூலம் மாற்றுங்கள். இதைத்தான் கறுப்பின மக்களுக்கு இந்த சீரழிவுவாதி சொன்ன மையச் செய்தி.

 

இதன் மூலம் ஒவ்வொரு தனிமனிதனும் தன் உடல் சார்ந்த ஒன்றை இழிவாகவோ, அழகற்றதாகவோ கருதினால், அறுவைச் சிகிச்சை மூலம் செயற்கையாக மாற்றி  போலியாக வாழ முடியும் என்ற செய்தியை எடுத்துச்சென்றான். அதாவது மற்றவன் பார்வை பற்றி தன் சொந்த போலிப் பார்வை மூலம் அளந்து, அதுவே உலகப்பார்வையாக கருதக் கோரினான். இதையே தன் இசை நடனம் மூலம் திணித்தான்.

 

இன்று பெண்கள் தம் மார்பகத்தை எடுப்பாக காட்டவும், பெண்ணின் பின்புறத்தை, முகத்தை அழகுபடுத்தவும், இதுபோன்று நடக்கும் போலியான உடல் மாற்று முறைகள், இந்த சீரழிவுவாதியான மைக்கேல் ஜாக்சன் வழியில் முன்னேறியது. போலியான தன் உலகை நோக்கி, மனிதர்கள் வாழ்தலையும், வாழ வைத்தலுக்கும் மைக்கேல் ஜாக்சன் இசையும் நடனமும் உதவியது. அதை அவனே முன்னின்று செய்த ஒரு போலி.

 

மக்களை இசை நடனம் மூலம் ஏமாற்றிக் குவித்த பணம், அதற்கேற்ற அவன் கொண்ட இழிவான சீரழிவு வாழ்வு தான், அவன் வாழ்வு. மனிதகுலத்தையும், அதன் இயற்கையையும், எள்ளி நகையாடிய ஏகாதிபத்திய தொழுநோய் தான் இந்த மைக்கேல் ஜாக்சன்.

 


பி.இரயாகரன்
02.07.2009