உலகில் அமைதியையையும், ஜனநாயகத்தையும் நிலை நாட்டுவதற்காகவே அவதரித்திருப்பதாக கூறிக்கொள்ளும் சமாதான விரும்பிகளின் கூடாரமான‌ ஐ நா வின் யோக்கியதையை ஈழக்கவிஞர் சிவசேகரம் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே ஜனநாயகத்தால் போர்த்தப்பட்டுள்ள‌ அதனுடைய‌ வர்க்கச் சார்பை இந்த கவிதையினூடாக நமக்கு திரைவிலக்கி காட்டியுள்ளார்.


ஐக்கிய நாடுகள் சபையின் 50ம் ஆண்டு நிறைவையிட்டு இக்கவிதை எழுதப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் முதலாளித்துவ மூலதன சுரண்டல் எப்போதுமில்லாத‌ வகையில் மேலும் மேலும் கூடுதலாகி வரும் இந்த நாட்கள் மிகவும் முக்கியமானவை. முதலாளித்துவம் தனது அழிவு காலத்தை எட்டிவிட்டதை கடந்த பத்து மாதங்களில் தீவிரமாகியிருக்கும் இந்த‌ நெருக்கடி நிலையின் தள்ளாட்டம் முதலாளித்துவ சமூகத்தின் தோல்வியை உலகிற்கே அறிவித்திருக்கிறது.



ஐரோப்பா முழுமையுமே வர்க்க போராட்டத்தின் மிகவும் கொதி நிலை உலைக்க‌ளமாக மாறி சாம்பலாக்கிவிடும் அபாய நிலையிலிருக்கிறது கிழடு தட்டிவிட்ட‌ முதலாளித்துவம். பல கோடி இதயங்கள் நேசித்த,பல கோடி விழிகள் கண்ட‌ கனவான சோசலிச சமூகம் இளம் குருத்தாக உலகிற்கு புதிய நுழைவாயிலாக நம்மை வரித்துகொள்ள காத்திருக்கும் இந்த தருணத்திலும். தள்ளாடி,தள்ளாடி சுடுகாட்டிற்குள் விழப்போகும் கிழட்டு முதலாளித்துவத்தின்அல்லக்கை அமைப்பான‌ ஐ நா ஈழத்திற்காக எதையாவது செய்யும் என்று பெரும்பான்மையினர் கருதுகிறார்கள். தருணத்தின் பொருத்தம் கருதிவெளியிடப்படும் இந்த கவிதை அவர்களுக்குத் தான்.

சமாதானம் பற்றிய ஒரு அநீதிக் கதை

 

சமாதானம் பற்றிய ஒரு அநீதிக் கதை

 (ஐக்கிய நாடுகள் சபையின் 50ம் ஆண்டு நிறைவையிட்டு)

முதல் முதலாக
ஓநாய்கள் ஆட்டுக்குட்டிகளைக் கவர்ந்தபோது
சமாதான விரும்பிகள் ஒன்றுகூடி
ஏகமனதாக
ஓநாய்களைக் கண்டித்துத்
தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

 

 



ஓநாய்கள் மீண்டும் ஆட்டுக்குட்டிகளைக் கவர்ந்த
போது
சமாதான விரும்பிகள்
நீண்டநேரம் தம்முள் விவாதித்து
மீண்டும் ஏகமனதாக
ஓநாய்களைக் கண்டித்துத்
தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

ஓநாய்களும்
விடாது ஆட்டுக்குட்டிகளைக் கவர்ந்து வந்தன
சமாதான விரும்பிகளும்
தளராது
தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.

ஆடுகள் ஒன்றுதிரண்டு ஓநாய்களை எதிர்த்தபோது
சமாதான விரும்பிகள்
மீண்டுங் கூடிப்
போரை எதிர்த்துத்
தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

ஆடுகள் தமது கொம்புகளைப் பிரயோகித்ததில்
ஓநாய் ஒன்று கொல்லப்பட்ட போது
கொம்புகளாற் தாக்குவது
யுத்த விதிகட்கு முரணானது எனவும்
பற்களையும் நகங்களையும் விட வேறெதையும்
பாவிப்பது
அநாகரிகமானது எனவும்
சமாதான விரும்பிகள்
புதிய தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.


ஆடுகட்குப் பற்களாற் போர் புரியத் தெரியாததாலும்
தமது குளம்புகள் மொட்டையானவை என்பதாலும்
கொம்புகளாலேயே போரிட்டன
சமாதான விரும்பிகட்குப்
போரை நிறுத்த வழிதெரியாததாலும்
தீர்மானங்களை நிறைவேற்றுவதை விட
வேறேதும் இயலாததாலும்
ஆடுகளின் அநாகரிகமான போர்முறையைத்
தொடர்ந்துங் கண்டித்துத்
தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.

 

ஓநாய்கள்
சமாதானத்துக்கு உடன்படாவிட்டாலும்
ஆடுகள் அநாகரிகமானவை என்று கூறி
அவற்றை அண்டுவதை நிறுத்தின.

சமாதான விரும்பிகள்
ஆடுகளின் அநாகரிகமான நடத்தையை
இன்னமும் மன்னிக்க மறுக்கிறார்கள்
ஆயினும்
ஆடுகள் பாதுகாப்பாக உள்ளன.


சி. சிவசேகரம்