முதலில் நமது வாழ்த்துக்களை சொல்லிக்கொள்வோம். மதுரையில் பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. இனிப்புகள் வழங்கப்படுகின்றன. மதுரை அமர்க்களப்படுகிறதாம்.

மதுரையை ‘கூடல் மாநகரம்’. கோவில் மாநகரம்’ என்றும், அந்த மண்ணை அன்னை மீனாட்சி ஆள்கிறாள் என்பார்கள். அதெல்லாம் பக்தியில் திளைப்பவர்களும், அரசியல் வாடை சிறிதும் இல்லாத பாமர ஜனங்கள் சொல்வது. மதுரையை ‘அண்ணன்’ ஆள ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிவிட்டன.

 

 

அதனால் தான் தேர்தலில் ஜெயித்து, மந்திரி பதவி கிடைத்ததும், ‘அண்ணனின்’ அன்பு தம்பிகள் மதுரையை ‘அழகிரியார் மாவட்டமாக’அறிவித்து போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள்.

 

பிரதமரும், சோனியாவும் ‘திறமையான’ ஆட்களுக்கு தான் மந்திரி பதவி கொடுத்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இந்த வார்த்தை யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ! ‘அஞ்சாநெஞ்சன்’ அழகிரிக்கு கச்சிதமாய் பொருந்தும். கேபினட் மந்திரி பதவி இப்பொழுது தந்ததற்காக வாழ்த்துக்களை சொல்வதை விட, தாமதமாய் தந்ததற்காக நாம் கண்டனம் தான் தெரிவிக்க வேண்டும்.

 

ஓட்டு சீட்டு அரசியலுக்கு எப்பேர்ப்பட்ட திறமையானவர் ‘அண்ணன்’ அழகிரி. காண்டிராக்டா? கட்ட பஞ்சாயத்தா? அடிதடியா? கொலையா? தேர்தலில் ஜெயிக்க வேண்டுமா? – இப்படி வார்த்தைகளில் ‘அண்ணன்’ அழகிரியின் அருமை பெருமைகளை விளக்குவது அவரை சிறுமைப்படுத்துவதாகும். மதுரையில் அவரின்றி ஓர் அணுவும் அசையாது. அவ்வளவு தான். எதிர்கட்சிகள் இன்றைக்கும் அவரை ‘ரவுடி’ என்று தான் அழைக்கின்றனர்.

 

“அழகிரிக்கு சொத்து பிரச்சனையில்லை. அதிகாரத்தை நிறைய ருசித்தவர் (!). ஆகவே, ஓட்டு சீட்டு அரசியல்வாதிக்கே உரிய முதிர்ச்சி பெற்று, திருந்திவிடுவார்’ – என தினமணி தலையங்கம் எழுதுகிறது.

 

திருமாவளவன் முன்பு தேர்தல் புறக்கணிப்பில் இருக்கும் பொழுது “வாய் வழியாக அமிர்தமே உள்ளே போனாலும், வெளியே வரும் பொழுது .வி.....யாக வரும்”. அது போல தான், எவ்வளவு நல்லவராக இருந்தாலும் இந்த சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் பங்கேற்றால் கழிசடையாக தான் உருமாறிப்போவார்” என்றார்.

 

‘அண்ணன்’ அழகிரியோ உள்ளே போகும் பொழுதே, வி....யாக தான் உள்ளே போகிறார். தினமணி நம்பட்டும்.

 

அண்ணனுக்கு கேபினட், தம்பிக்கு துணை முதல்வர். மற்றவர்களுக்கும் உரிய, உயரிய பதவிகள். இனி, கருணாநிதி தன் மீளாத் தூக்கத்தை நிம்மதியாக துவங்குவார்.

 

ஆனால், நிம்மதியை காவு கேட்கும் டிராகுலாக்களை மக்கள் தான் எப்படி சமாளிக்க போகிறார்களோ!